Tags
எனக்கு அவ்வளவாகக் கதை எழுதிப் பரிட்சயம் கிடையாது . இருந்தாலும் கதை போல் எழுதுவதற்கு அவ்வளவு பரிட்சயம் தேவையும் கிடையாது. ”சிறுகதை எழுதுவது எப்படி ? ” என்று இணையத்தில் தேடினால் பக்கம் பக்கமாக வருகிறது. உள்ளே சுண்டி இழுக்கும் ஒரு துவக்கம் .. பின் இயல்பான கதை ஓட்டம் .. அந்தக் கந்தாயம் எப்படி இருக்குமென்று தெரியவில்லை. அப்புறம் ஒரு திடுக்கிடும் திருப்பத்துடன் கூடிய முடிவு வேண்டுமாம். அங்கு தான் உண்மையான கதையே தொடங்க வேண்டுமாம். அப்புறம் எப்படி அது முடிவு ஆகும் என்று தெரியவில்லை. இவை எவையும் இல்லையென்றாலும் , நீங்கள் இதெல்லாம் ஒரு கதையா என்று சட்டைக் காலரைப் பிடித்தாலும் கூட எனக்குக் கவலையில்லை. ஏனெனில் இந்தக் கதை எழுதப்படும் நோக்கமே வேறு. இந்தக் கதையில் தான் என் பிரச்சனைக்குத் தீர்வு இருக்கிறது.
இப்ப உன் பிரச்சனை தான் என்ன என்கிறீர்களா..? எல்லாவற்றுக்கும் இணையத்தில் தேடும் பழக்கம் தான் என் பிரச்சனையே. சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால் கொஞ்சம் கடினம் தான். உங்களுக்கு அவ்வளவு அவசரமென்றால் இப்போதைக்கு இதை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். பிரியங்கா நாளைக்கே விவாகரத்து நோட்டீஸ் அனுப்புவதாகச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறாள். இந்தப் பிரச்சனையில் இன்னொரு பிரச்சனை என்னவென்றால் எங்களுக்குத் இன்னும் திருமணமே ஆகவில்லை.
சரி கதையுடைய முதல் வரிக்கு இப்பொழுதாவது வந்துவிடுகிறேன். மணி அப்பொழுது நள்ளிரவு இரண்டாவது இருக்கும். பேய் கதைக்கும் பவுர்ணமிக்கும் என்ன தொடர்பென்று சத்தியமாக எனக்குத் தெரியாது. ஆனால் அன்று பவுர்ணமி. அம்சமாக ஒரு பேய் படம் பார்த்து விட்டு மிரண்டு போய் உட்கார்ந்திருந்தேன். இன்னமும் கொஞ்சம் போதை ஏற்றிக் கொள்ளலாமே என்று , கூகிள் இல் கோஸ்ட்ஸ் என்று உள்ளிட்டேன் . சில மைக்ரோ வினாடிகளிலேயே லட்சக்கணக்கான பக்கங்களை வாரிக் கொண்டுவந்து போட்டிருந்தது . நமக்கெதற்கு அத்தனை பக்கங்கள். முதல் மூன்று தாண்டினாலே அதிகம் தான்.
முதல் பக்கத்தில் இரண்டு மூன்று தளங்களில் பேய்கள் இருக்கின்றதா என்று அமெரிக்காவின் சில வேலை இல்லாதவர்கள் போட்டிருந்த கட்டுரைகள் , நடுவிலேயே எழுந்து சென்று ஜன்னலைச் சாத்திவிட்டு வரும் அளவிற்கு பயங்கரமாகவே இருந்தன. இரண்டாவது பக்கத்தில் முதலாவதாக வந்த தளத்தின் பெயர் கொஞ்சம் வித்தியாசமாகவே இருந்தது. டபிள்யு டபிள்யு டபிள்யு.கெட்அகோஸ்ட்.காம். உள்ளே நுழைந்தேன்.
ஆவிகளின் அங்கீகரிக்கப்பட்ட தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம். கையில் பூச்செண்டுடன் ஒரு குட்டிப் பேய் சொல்லிவிட்டுப் போனது. நிறைய படங்கள் இருந்தன. எங்களது விற்பனைப் பொருட்களைக் கிளிக் செய்தேன். பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தில் ஒரு பெண் இருந்தாள். சரி பெண் ஆவி . அப்படித்தான் போட்டிருந்தது, கீழே “வயது பதினெட்டு . நான் வேண்டுமா” என்றிருந்தது. சரிதான் . பெண் வேண்டுமா என்பதற்குப் பதில் பேய் வேண்டுமா என்கிறார்கள். கொஞ்சம் புதிய உத்தி போலும்.
தப்பான பெயர், தொலைபேசி எண் கொடுத்து விட்டு கொஞ்ச நேரம் லைவ் சாட்டில் கடலை போடலாம். நன்றாகவே பொழுது போகும். அது பெண்ணாகத் தான் இருக்கவேண்டும் என்பது ஒன்றும் அவசியமில்லையே. வாத்ஸ்யாயனரே கற்பனை மட்டும் போதும் என்று தானே சொல்லியிருக்கிறார். புகைப்படத்தில் என் கண்ணுக்கெட்டிய வரை ஆடை என்கிற வஸ்துவைக் காணவில்லை. ஸூம் பண்ணிப் பார்த்தும் வேலைக்காகவில்லை. புகைப்படத்தை அழுத்தினேன்.
விண்ணப்பப் படிவம் போன்ற ஒன்று வந்தது, ஆவி குறித்த விவரணைகள் உள்ளிடக் கேட்டு. இதையா இவ்வளவு நேரம் படித்துக் கொண்டிருந்தோம் என்று இப்பொழுது நீங்கள் தலையில் அடித்துக் கொள்வதைப் போலத்தான் நானும் அடித்துக் கொண்டேன். அந்தப் பக்கத்தை மூடுவதற்கு எந்த பொத்தானும் இல்லை. எந்தக் குறுக்கு வழி விசைகளும் வேலை செய்யவில்லை.
போச்சு வைரஸ் போல. ஜொள்ளு விட்டாய் அல்லவா. வேண்டும் உனக்கு . தலையில் அடித்துக் கொண்டே விவரங்களை நிரப்பத் துவங்கினேன். பதினாறு வயதில் , நிலா வண்ணத்தில் அணிச்சம் பூ தேகத்துடன் , அச்சம், மடம் , நாணம் , பயிற்புடன் , மூங்கிலை ஒத்தத் தோள்களுடன் , முந்தாநாள் படித்த குறுந்தொகையின் பெண்ணொருத்திக்குச் சொல்லப்பட்ட உவமைகளுடன் , 36-28-36 அளவுகளுடன் … அதையும் இணையத்தில் தான் எடுத்தேன் .. ஒரு சரித்திர காலப் பேயை ஆர்டர் செய்தேன். பின் இது போன்ற ஒரு பெண்ணை இப்பொழுது எங்கே தேட முடியும்.
அடுத்த பக்கம் செல்வதற்கான பொத்தான் ஒன்றை அதே குட்டிப் பேய் வந்து அந்தப் பக்கத்தில் வைத்து விட்டுப் போனது. சரியான தள வடிவமைப்பு. அந்தப் பொத்தானுக்கான பக்கத்தில் எனது பெயர் , கடனட்டை எண் போன்ற விவரங்கள் கேட்கப்பட்டிருந்தன. ஹப்பாடா .. ஏதோ பெயர் , எண்களைக் கொடுத்துவிட்டு தப்பித்து விடலாம். குழோத்துங்கச் சோழன் என்று சிரித்துக் கொண்டே பெயரை அடித்தேன். நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். ஸ்ரீமான் சீனுவாசன் என்று என் பெயர் தான் அதில் இருந்தது. இதயத் துடிப்பு அதிகரிக்கத் துவங்கியது. என்னால் அதை அழிக்க முடியவில்லை.
இரண்டு முறை வந்து விட்டுப் போன குட்டிப் பேய் இம்முறை வந்து பேய்களை ஏமாற்ற முயற்சிக்காதே என்று திட்டி விட்டுப் போனது. இது ஏதோ வைரஸ் இல்லை. வசமாக மாட்டியிருக்கிறேன். என் தொலைபேசி எண்ணுக்குப் பதில் எனது மானேஜருடைய எண்களைக் கொடுத்தேன். சந்தேகத்திற்கு இடமில்லாமல் என்னுடைய எண்கள் தான் திரையில் இருந்தது.
இனிமேல் நீ எதையும் உள்ளிடத் தேவை இல்லை. நாங்களே பார்த்துக் கொள்கிறோம். மறுபடியும் திட்டிவிட்டுப் போனது. எனது கடனட்டை எண்களுக்கான பெட்டி அடுத்து. என்ன எண்களை உள்ளிடலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோதே அது நடந்தது. நான் எனது கைகளைக் கட்டிக் கொண்டு தான் இருந்தேன். விசைப் பலகை என்னிடம் இருந்து காத தூரத்தில் இருந்தது. ஆனால் அந்தப் பெட்டிகளில் எனது எண்கள் உள்ளிடப் பட்டுக் கொண்டிருந்தன. கடனட்டையின் எக்ஸ்பயரி தேதியிலிருந்து , சிவிவி எண்ணிலிருந்து எல்லாமே.
போச்சு எல்லாமே போச்சு. நானூற்று ஐம்பது டாலர்கள் போயே போச்சு. ஒரு டாலர் இஸ் ஈக்குவல் டு நாற்பத்தி ஒன்பது ருப்பியா … அப்போ நானூற்று ஐம்பது டாலர்கள் இஸ் ஈக்குவல் டு … ஐயையோ .. போச்சே ..
உங்களது ஆர்டருக்கு நன்றி. அடுத்த பௌர்ணமிக்குள் பெட்டி வந்து சேரும் . கூடவே ஆர்டர் எண்ணுடன் கூடிய ஒரு ரசீதும் வந்தது. மூங்கில் தோள்களுக்கு இவ்வளவு , முப்பத்தாருக்கு இவ்வளவு என்று பிரித்து விலை போடப்பட்டிருந்தது. ஷிப்பிங் சார்ஜ் வேறு.
நன்றாக ஏமாற்றப் பட்டிருக்கிறேன் . படுக்கையில் சாய்ந்தேன். சைபர் கிரைமில் புகார் செய்யலாமா? என்னவென்று சொல்வது .. ஒரு பெண் புகைப்படத்தைப் பார்த்து ஜொள்ளு விட்டுக் கொண்டு உள்ளே போனேன் என்றா? ஒரு வேலை நிஜமாகவே ஆவி பிடித்த இணைய தளமாக இருக்குமோ ?
***************
“எவளாவது சட்ட கூட போடாமா , பல்ல இழிச்சிட்டு போஸ் குடுத்திருப்பா .. நீயும் முழுசா பாக்கலாமேன்னு போயிருப்ப ” நீங்கள் இது வரை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த சின்னச் சின்ன கண்கள் கொண்ட , வலது புருவத்திற்கு சற்றே மேலே பொட்டு மச்சம் கொண்ட , போனி டெயில் போட்டிருக்கும் வாசனையான பிரியங்கா என் முன்னால். ஆவலாக எதிர்பார்க்காமல் போயிருந்தாலும் பாதகமில்லை.
இந்த ஒரு விசயத்தில் நான் கொடுத்துவைத்தவன். பிரியங்காவைப் போல் என்னைப் புரிந்து வைத்திருப்பவர்கள் யாரேனும் இருப்பது கடினம் தான். அதற்காக ஒத்துக் கொள்ளவா முடியும்.
“என்னடா பிரியா குட்டி .. உன்னைத் தவிர வேற ஏதாவது பொண்ண நெனச்சாவது பார்ப்பேனா ? ”
“குட்டின்ன பள்ளப் பேத்திருவேன் .. வாய மூடு .. பொய் சொல்லி பொய் சொல்லி அழுகிடப் போகுது .. என் கூட உட்கார்ந்திட்டே அந்த கார்னர் டேபிள்ல உட்கார்ந்திருக்கிற பொண்ணோட இடுப்ப தான பார்த்திட்டு இருக்க ..”
ஆவிகளின் அங்கீகரிக்கப் பட்ட தளத்தையும் நானூற்று ஐம்பது டாலர்களையும் மறந்தே போனேன்.
***************
அன்று அலுவலகம் முடித்து வீட்டிற்கு வந்த போது கதவில் ரெட் டார்ட் கொரியரின் காகிதம் ஒன்று ஓட்டப் பட்டிருந்தது , எனக்கு ஏதோ பெட்டி வந்திருப்பதாகவும் , வந்த நேரத்தில் நான் வீட்டில் இல்லாமல் போய் விட்டதாகவும் . தொலைபேசியில் அழைத்தேன். திட்டிக் கொண்டே வந்து ஒரு பெரிய பெட்டியை இறக்கிவிட்டுப் போனார்கள்.
அது ஒரு சவப்பெட்டி. மேலே ஸ்ரீமான் சீனுவாசனுக்கு பெனிசிலவேனியாவிலிருந்து என்றிருந்தது. அவசர அவசரமாகப் பெட்டியிலிருந்த ஆணிகளைப் பிடுங்கிவிட்டுப் பெட்டியைத் திறந்தேன். மகத நாட்டு இளவரசி பவளக்கொடி என்று சொல்லிவிட்டு உள்ளே ஒருத்தி படுத்திருந்தாள். தான் ஒரு பேய் என்று வேறு சொல்லிக் கொண்டாள். வேகமாக வெளியே ஓடிப் போய் வானத்தைப் பார்த்தேன். பவுர்ணமி. அய்யா இப்பொழுதாவது யாராவது சொல்லுங்களேன் பேய்களுக்கும் பவுர்ணமிக்கும் என்ன சம்பந்தமென்று.
*****
மொத்தமாக மூன்று மணி நேரம் ஆனது அவள் பெண்ணல்ல என்பதை ஒத்துக் கொள்வதற்கு . கொஞ்சம் பயம் போய்விட்டது. சும்மா சொல்லக்கூடாது , அழகாகவே இருந்தால் பவளக்கொடி. என்ன 28 க்கு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது போல் தோன்றியது. பேய் எப்படி இருந்தால் என்ன? எனக்குள் மெதுவாக இது யாரோ பக்கத்து வீட்டுக்கு வந்த பெண் , இன்னமும் கொஞ்ச நேரத்தில் போய் விடுவாள் என்று மந்திரம் போல் அடிக்கடி சொல்லிக் கொண்டேன்.
“நீங்கள் மிகவும் மாறி விட்டீர்கள் , அன்பரே !”
சரித்திர காலத்துப் பேயை ஆர்டர் செய்ததற்கு .. என்னத்தைச் சொல்ல . ஒரேர் உழவனார் அவளது அப்பாவின் அவைப் புலவாராம். அவள் பேசுவது புரிந்தாலும் பழைய கருப்பு வெள்ளை படம் பார்ப்பது போல் இருந்தது. 401 காதல் கவிதைகளை டப்பா அடித்திருப்பவள் மாதிரியே இருந்தது அவள் சொன்ன அத்தனை விவரங்களும் , பேச்சும் .
“நினைவிருக்கிறதா , உங்களுக்கும் எனக்கும் காந்தர்வ விவாகம் நடந்த அன்று இரவு .. ”
“இது வேறையா ? ”
“இப்பொழுதல்ல .. ஆறு ஜென்மங்களுக்கு முன்னால் .. உங்கள் பெயர் மணி மாறன் .. அவைப் புலவரின் பிரதான சீடன் .. “
மணி மாறனா ? ஏதோ சிறுவர் மலர் நீதிக் கதைகளில் வரும் ஞானபழம் ஒன்றின் பெயர் மாதிரி இருக்கிறது. “அப்புறம் ?”
“ அன்றைக்கும் இதே போல முழு நிலவு .. ”
“அன்னைக்குமா … ” இனி கொஞ்ச நாளைக்கு நிலாவே பார்க்கக் கூடாது.
“பெண் கொடுக்காவிட்டால் மடலேறிவிடுவேன் என்று அப்பாவிடம் வீர சபதம் எடுத்துக் கொண்டீர்கள் …. ? ” வில் போன்ற புருவம் பார்ப்பதற்கு ஒன்று அவ்வளவு நன்றாக இல்லை. நல்லவேளை , வாள் போன்ற கண்கள் கேட்டதற்கு வாளை வைத்து அனுப்பாமல் விட்டார்கள்.
“ஹ்ம்ம் ..? மடலேறியா செத்துப் போனேன் நான் ? ஆஹா காதலுக்காக உயிர் நீத்த என்னை ஒரு புலவன் கூடவா பாட்டில் வடிக்க வில்லை .. என்னே தமிழுக்கு நேர்ந்த அவமானம் .. !”
“மண்ணாங்கட்டி .. அப்பாவிடம் கோவித்து விட்டு , போகிற வழியில் புல் தடுக்கி கீழே விழுந்தல்லவா செத்துவைத்தீர்கள் .. ”
“ ஓ அப்போ நான் தானா அந்த புல் தடுக்கி பயில்வான் .. இதுக்கு நீ இந்த பிளாஷ் பாக் சொல்லாமலேயே இருந்திருக்கலாம் .
“கல கல கல கல கல கல கல கல ” .
அப்படித்தான் சிரித்து வைத்தாள் . முத்துப் போன்ற பற்கள என்று எவானவது இனி உவமை சொன்னால் அவன் பற்களைப் பேத்துக் கையில் கொடுத்துவிடுவேன்.
“மரகத நாட்டு இளவரசியே .. சிரித்தது போதும் ., பக்கத்து அறையில் உங்கள் படுக்கை இருக்கிறது .. போர்வை கூட இருக்கிறது .. பொத்திக் கொண்டு படும். ”
“இன்னமும் உங்கள் குறும்பு மட்டும் போகவில்லை .. கல கல கல கல கல கல கல கல” மறு படியும் சிரித்துவிட்டு போய் சவப்பெட்டியில் போய் படுத்துவிட்டாள்… விட்டது .. விட்டாள் . ஏதோ ஒன்று .
காலையில் எழுந்து இதற்கு ஒரு வழி செய்ய வேண்டும். என்ன வகையான ஏமாற்று வேலை இது என்று தெரியவில்லை. அறிவியல் புனைகதைகளில் வருவது போல் முப்பரிமாண வித்தைகள் வந்துவிட்டதா என்ன .. இல்லை நிஜமாகவே பேய் தானா. மை டியர் பவளக்கொடி , தயவு செய்து காலையில் எழும் பொழுது கனவில் வந்தவளாக இருந்துவிட்டுப் போ. தூங்கிப் போனேன்.
எனது பாத்ரூமில் பவளக் கொடி குளித்துக் கொண்டிருந்தாள். மெல்ல நட்டுகளைக் கழற்றி கதவைத் திறந்து எட்டிப் பார்த்தேன்.
“திருட்டுப் புலவரே ! இங்கென்ன வேலை உமக்கு .. இது அந்தப் புரம் தெரியாதோ ! ”
என் முகம் கோபமாக மாறியது . எனது கைகளில் அளவெடுக்கும் டேப் ஒன்று முளைத்தது. “உன் கம்பெனி மேல் நம்பிக்கை இல்லை .. அளந்து பார்க்க வந்தேன் ” என்றேன் ..
“மணிமாறா ! அந்தப்புரத்தில் உனக்கென்ன வேலை .. சிக்கினாய் கையும் அளவுமாக .. ” என் டேப்பைப் பிடுங்கிக் கொண்டார் அவள் அப்பா . குளியலறை அரசவையின் ஓரத்திற்குத் தூக்கிச் செல்லப்பட்டது.
“மகேந்திரா .. பெண் கொடுப்பாயா மாட்டாயா .. மறுத்தால் மடலேருவேன் .. ”
“போகும் வழியில் புல் முளைக்காத இடமாக பார்த்துப் போங்கள் புலவரே ! ”
அரசவையில் எல்லாரும் சிரித்தார்கள்.
“புல் தடுக்கி புலவன் .. ”
“டவுன் .. டவுன் ..”
“புல் தடுக்கி புலவன் .. ”
“டவுன் .. டவுன் ..”
அந்தப்புர நந்தவனத்தில் பூக்களுக்கு நடுவே படுக்கையில் இருந்தேன். பக்கத்தில் பழங்களும் , ஊதுவர்த்தியும் புகைந்து கொண்டிருந்தது. காலியான சொம்பு ஒன்றிலிருந்து மீந்திருந்த பால் சொட்டிக் கொண்டிருந்தது. மார் கச்சையை இறுகக் கட்டியிருந்த சேடிப் பெண்கள் மயிலிறகால் விசிறிக் கொண்டிருந்தார்கள் . என் மேலே பவளக்கொடி படர்ந்திருந்தாள். அவள் கைகளில் திராட்சைக் குலை ஒன்று வாய் வரை வந்து போய் விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தது.
“பவளக் கொடி .. ”
“ம்ம்ம் .. சொல்லுங்கள் மாறரே !”
“பிரஞ்சு தெரியுமா உனக்கு .. ”
“திராட்சையை விட நன்றாக இருக்குமா அது ? ”
“பிரஞ்சு முத்தமாவது தெரியுமா ? ”
“ம்ம்ஹ்ம்ம் ..”
“சொல்லித் தரட்டா … ? ”
“ம்ம்ம் ..”
“அருகில் வா கண்ணே .. ”
என் உதட்டுக்கு மிக அருகில் இருந்தாள் கொடி .. இடைவெளிகள் இம்மி இம்மியாக குறைந்து கொண்டே வந்தது ..
“அடப் பாவி .. நல்லா இருப்பியா நீ .. நான் ஒருத்தி இருக்கும் போதே , இங்க எவ கூடயோ படுத்திட்டு இருக்கியே .. அய்யோ ஐயோ .. ” மடேர் மடேர் என்று என் தலையில் அடி விழுந்தது. கண்களைக் கசக்கிக் கொண்டு எழுந்தேன். பிரியங்கா கைகளில் மாற்றுச் சாவியுடன் நின்று கொண்டிருந்தாள். எனக்கருகே பவளக்கொடி படுத்திருந்தாள்.
“அப்போ அது கனவில்லையா ! ” தலை லேசாக வலித்தது. சுற்றிலும் சேடிப் பெண்களைக் காணோம்.
“சேடிப் பெண்ணே உனக்கென்ன வேலை இங்கே … ? ராஜாவும் ராணியும் உல்லாசமாக இருப்பது தெரியவில்லையா உனக்கு .. போ வெளியே .. ”
“நீ யாருடி என்ன வெளியே போகச் சொல்றதுக்கு .. .. யாருடா இவ .. ”
“பிரியங்கா .. நீ எப்போ வந்த .. ”
“ஏன் வந்தேன்னு கேக்கறியா ? ”
“இல்ல .. எப்போ வந்தேன்னு தான கேட்டேன் .. “
“ கிண்டலா .. ? இவ யாருன்னு இப்போ தெரிஞ்சாகனும் எனக்கு .. ”
“ஐயோ .. மாறா .. பரத்தமை ஒழுக்கம் பூண்டு சோரம் போனாயே .. தாதியே நான் என்ன செய்வேன் ..! ” புடவையை சரி செய்து கொண்டு பக்கத்து அறைக்கு ஓடிப்போனாள் பவளக் கொடி.
“ஏய் அது என் சாரி .. குடுத்திட்டுப் போடி ”
“நெக்லஸ் கூட உன்னது தாம்மா .. எல்லாத்தையும் வாங்கிக் கொடுத்திடறேன் .. கொஞ்சம் பொறுமையா உட்கார் .. .. ”
சுத்தமாக இருபத்தேழு நிமிடங்கள் எடுத்து அத்தனை கதையையும் சொல்லி முடித்தேன். நடுவே ஏழு முறை தலையில் குட்டு விழுந்தது. முத்தம் கொடுத்த போது மட்டும் வாங்கிக் கொண்டேனல்லவா ..
“எப்டிறா இப்படி எல்லாம் கதை சொல்ற .. பெனிசிலவேனியாவுக்கும் , பவளகொடிக்கும் என்னடா சம்பந்தம் .. ”
“நம்ம ஊரு வேப்ப மரத்துக்கு அவங்க ராயல்டி வாங்கி வெச்சுகலியா .. அது மாதிரி தாம்மா இதுவும் ”
“ம் .. நான் நம்பறேன் .. அவ ஒரு பேய் .. நீ ஆர்டர் பண்ணதால அனுப்பி வச்சிருக்காங்க .. ” மூக்கை உறிஞ்சிக் கொண்டாள்.
“சமத்து ..” சொல்லி முடிப்பதற்குள் நாலு சாத்து விழுந்தது.
“இதெல்லாம் ஓவர் .. ஏன் இப்படி அடிக்கற ? ”
பக்கத்து அறைக்குப் போய் பவளக்கொடியின் முடியைப் பிடித்து இழுத்து வந்தாள். ஐயோ பேய் கூட எதற்கு வம்பு. ஒன்று கிடக்க ஒன்று ஆகி விடப் போகிறது.
“சொல்லுடி .. எந்த ஊரு .. ”
“மரகத நாடு .. ”
“ஆந்திராவா .. கேரளாவா .. ?”
“அப்போ ஸ்டேட் எல்லாம் பிரிச்சிருக்க மாட்டாங்க ப்ரியா .. ”
“நீ சும்மா இருடா .. நீ சொல்லுடி .. எவ்ளோ கொடுத்தான் .. ?”
“பரத்தை என்கிறாயா என்னை .. இந்தக்கணமே என் உயிர் போயிருக்கக் கூடாதா(!) . .. எங்கள் இருவருக்கும் காந்தர்வ விவாகம் ஆகிவிட்டது .. ” என்னைப் பார்த்தாள்.
“என்னடா சொல்றா .. காந்தர்வ விவாகம்ன்னா .. ? ” ப்ரியாவும் என்னைப் பார்த்தாள்.
“அது கிட்டத் தட்ட ரெஜிஸ்ட்டர் மேரேஜ் மாதிரி .. ”
“அடப்பாவி .. கல்யாணமே முடிஞ்சிருச்சா ? ”
“ஆமா .. ஐயோ இல்ல . இப்போ இல்ல .. ஆறு ஜென்மத்துக்கு முன்னாடி .. ”
“டாடி ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ ” சாவியை என் மேல் எரிந்து விட்டு போய் விட்டாள்.
***************
“மிஸ்டர் சீனு .. நீங்க இப்படி பண்ணிருக்ககூடாது .. ”
“இல்லைங்க மாமா .. ”
“க்கும் ” கனைத்தார்.
“சாரி மிஸ்டர் முரளி .. நான் என்ன சொல்ல வரேன்னா ” டேய் .. எல்லாரும் ரொம்ப பண்றீங்க. மவனுங்களா கல்யாணம் மட்டும் முடியட்டும்.
“தப்பு பண்றது சகஜம் .. ஆனா அதை ஒத்துக்கணும் .. பொய் சொல்லக் கூடாது .. ”
“நீங்க சொல்றது சரி தான் மிஸ்டர் முரளி .. நான் உண்மைய சொல்லிடறேன் .. ” உங்ககிட்ட எல்லாம் உண்மை பேசினா சரி பட்டு வரமாட்டீங்கடா …
“அந்தப் பொண்ணு பேய் எல்லாம் கிடையாது .. ”
நான் சொல்லல என்பது போல் அவரது மகளைப் பார்த்தார்.
“அப்பாவுக்கு தெரிஞ்ச பொண்ணு .. வாழ்ந்து கெட்ட குடும்பம் .. ராணி மாதிரி வாழ்ந்த பொண்ணு .. ஒரு ஆச்சிடன்ட்ல எல்லாமே போயிடுச்சு .. அதுல சித்த சுவாதீனம் இல்லாம போயிடுச்சு அந்தப் பொண்ணுக்கு .. ” மிகவும் உருக்கமாக இருந்தது எனது பேச்சு. மேலே என்பது போல பார்த்தார்.
“சத்தியமா .. ப்ரியா நீ கூட பார்த்தேலே .. ”
“க்கும் ”
“மிஸ் பிரியங்கா , நீங்க கூட பார்த்தீங்கள்ள .. அந்தப் பொண்ணோட பேச்சு வித்யாசமா இருந்தது இல்ல .. ”
“ஆமாம் பா .. ” அப்பா அருகில் போய் நின்று கொண்டாள். குயின் பாக்கெட் பண்ணியாச்சு. பாலோ தான் இனி. இந்த கல்லுளி மங்கன் நம்புவதாக இல்லை.
“மெண்டல் சரி .. அவளுக்கு உன் வீட்ல என்ன வேலை .. ? ”
“ஹி .. ஹி .. அது வந்து …. ம்ம்ம்ம் .. ஆங் .. அவ ஹாஸ்பிடல இருந்து தப்பிச்சிட்டா .. அவ பையில இருந்த அட்ரெஸ் பார்த்திட்டு ஒரு போலீஸ்காரன் கொண்டு வந்து விட்டு போய்ட்டான் .. ம்ம்ம் .. ” முகத்தை பரிதாபமாக வைத்துக் கொண்டேன்.
அவர் நம்புவதாக இல்லை.
“அவ தன்ன தானே இளவரசின்னு நெனச்சிட்டு இருக்கா .. அவ முன்னாடியே பைத்தியம்ன்னு சொன்னா இன்னும் அதிகமா பாதிச்சிடும்ன்னு … .. ”
“போதும் மிஸ்டர் சீனு .. புரியுது .. சீக்கிரம் அவள ஹாஸ்பிடலுக்கு அனுப்பப் பாருங்க .. ”
“கண்டிப்பா .. ஹி ஹி .. ”
அப்பாவின் பின்னால் நின்று கொண்டு ஃபோன் செய்வதாக சிரித்துக் கொண்டே சைகை செய்தாள் பிரியங்கா .
*********************
வீட்டுக்கு ஓடி வந்ததும் முதல் வேலையாக அந்த இணைய தளத்தை திறந்தேன்.
“மீண்டும் வருக .. என்ன பிரச்சனையை .. ? ” லைவ் சாட் ஓடியது அந்த தளத்தின் உதவிப் பக்கத்தில்.
“உங்கள் பொருள் எனக்கு வேண்டாம் .. திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள் .. ”
“மன்னிக்க ஒருமுறை விற்ற பொருள் விற்றது தான் .. ”
“எனக்கு பணம் திரும்பவும் வேண்டாம் .. திரும்ப எடுத்துக் கொண்டால் போதும் ..”
“எங்கள் சட்ட திட்டங்கள் அதற்கு ஒத்துக் கொள்ளாது .. இனாமாக நாங்கள் பணம் பெறுவதில்லை ..”
நாசமாகப் போக .. “வேறென்ன தான் செய்ய முடியும் ..? ”
“வேண்டுமானால் இந்தப் பொருளுக்குப் பதில் இன்னொன்றை மாற்றிக் கொள்ள முடியும் .. ஒரே ஒருமுறை மட்டும் தான் … மாற்றிக் கொள்ளுகிறீர்களா ? ”
“சரி .. ” மறுபடியும் அதே விண்ணப்பப் படிவம்.
“ஆணா .. பெண்ணா ? ”
மறுபடியும் பெண் என்று சொல்லி அளவு கொடுப்பதற்கு நான் என்ன பைத்தியமா?
“ஆண்”
“நன்றி”
எனது கணிப்பொறியின் திரையில் கொசுவிரட்டிச் சுருள் போல சுழல் தோன்றியது. அறையில் ஒளிந்திருந்த பவளக் கொடி “அடுத்த ஜென்மத்தில் மீண்டும் சந்திப்போம்” டா டா காட்டிக் கொண்டே உள்ளே போய் விட்டாள். பின்னாலேயே அவளின் சவப்பெட்டியும்.
“உங்களுக்கான மாற்றுப் பொருள் இன்னமும் பத்து வினாடிகளில் வந்து சேரும் . நன்றி ” காலிங் பெல் சப்தம் கேட்டது.
ஓடிச் சென்று திறந்தேன். யாருமில்லை. கீழே ஒரு பெட்டி இருந்தது. “ஸ்ரீமான் சீனுவாசனுக்கு பெனிசிலவேனியாவிலிருந்து” அதே கிறுக்கலான கையெழுத்து. கொஞ்சம் சின்ன பெட்டியாக இருந்தது. வேகமாகத் திறந்தேன்.
உள்ளே .. அந்தக் கொடுமையை எப்படிச் சொல்ல. மரகத நாட்டு இளவரசி போய் , குழோத்துங்க பட்டாச்சார்யா பெயர் ஒட்டியபடி சிரித்துக் கொண்டிருந்தார் பொக்கை வாயோடு.
அதென்ன குழோததுங்க பட்டாச்சார்யா? அதற்கு அவர் சொன்ன பதில் கேட்டு தலை குழம்பிப் போனது ..
“ங்கே … ங்கே.. ங்கே … ங்கே.. ங்கே … ங்கே..” ங்கே … ங்கே..” திருவாளர் குழோததுங்க பட்டாச்சார்யா எட்டு மாதங்களே நிரம்பிய பாலகப் பேய்.
******
பவளக்கொடியே பரவாயில்லை . பட்டாச்சார்யா சரியாக ஒரு மணி நேரத்துக்கு தலா மூன்று முறை உச்சாவும் , ஒரு முறை காக்காவும் போய் கொண்டிருந்தான் எதையுமே சாப்பிடாமல். இதுவரை நான்கு பாக்கெட் ஹக்கீஸ் காலியாகிவிட்டது.
அது படுக்கையில் கொஞ்ச நேரத்திருக்கு முன்னாடி போயிருந்ததை மும்முரமாக துடைத்துக் கொண்டிருந்தேன்.தொலைபேசி அழைத்தது.
“ஹலோ யாரு .. ”
“நான்தாண்டா ப்ரியா .. ”
“எந்தப் ப்ரியா ? ”
“பிரியங்கா டா .. எத்தன ப்ரியா தெரியும் உனக்கு .. ”
“ஹே பிரியங்கா .. நீ தான்னு தெரியாதா எனக்கு .. சொல்லுடா ..”
“எங்கயாவது வெளிய போலாமா .. ”
“இல்லடா .. நான் கொஞ்சம் வெளில பிஸியா இருக்கேன் .. ஆபீஸ் வொர்க் .. ”
“டேய் போய் சொல்லாதா .. உள்ள டிவி சத்தம் கேக்குது .. உன் ஃபிளாட்டுக்கு வெளிய தான் நிக்கறேன் .. கதவத் தொற .. பகல்லயே தண்ணியா .. ”
அய்யயோ .. இவள் ஏன் இப்பொழுது வந்தாள். படுக்கையைச் சுற்றி இருந்த எல்லாவற்றையும் கட்டிலுக்குக் கீழே தூக்கிப் போட்டேன். ங்கே ங்கே என்று என்னைப் பார்த்துக் கொண்டிருந்தது குழோத்துங்கோ . அதன் வாயில் பிளாஸ்டிக் நிப்பிள் ஒன்றைத் தூக்கி வைத்து அலமாரியில் பூட்டி வைத்தேன். கையைக் கழுவி விட்டு , கதவைத் திறந்தேன்.
“ஏன்டா , கதவைத் தொறக்க இவ்ளோ நேரமா .. ஏன் மரம் மாதிரி நிக்கிற .. தள்ளு ..”
“ஒன்னுமில்லடா .. இந்திரலோகத்து சுந்தரிகள்ன்னு ஒரு கதை எழுதிட்டு இருந்தேன் .. அதான் லேட் …. ”
“இந்திரலோகத்து சுந்தாரிகளா .. இது ஏதோ பன்னெண்டு மணி மலையாளப் படப் பேரு மாதிரி இல்ல இருக்கு .. அந்த மாதிரிப் படம் எல்லாமா பாக்கற ? ” சிரித்தாள்.
“கரெக்ட்டு .. அது மாதிரி ஒரு படம் பார்த்திட்டு கதாநாயகன் அவ காதலி கிட்ட மாட்டிகிறான் .. அது தான் கதை .. மாட்டிகிட்டேன் “ படுக்கை அறைக் கதவருகில் இருந்தாள்.
கையைப் பிடித்து , “இங்க சோஃபாலையே உட்காரலாமே .. நல்லா இருக்கும் .. ”
“ஏன் நான் உள்ள போகக் கூடாதா .. நான் பெட் ரூமுக்கு தான் போவேன் .. ”
தலையெழுத்து என்ன செய்ய .. பின்னாலேயே போனேன். உள்ளே போனதும் நேராக படுக்கையில் தள்ளினாள். அருகில் வந்தாள்.
“சாரிடா .. நடந்தது தெரியாமா உன்ன தப்பா நினச்சுட்டேன் .. பிராயச்சித்தமா என்ன பண்ணப் போறேன் தெரியுமா .. ”
“என்ன .. என்ன பண்ணப்போற ..? ”
“என்ன டா .. ஒரு ரொமாண்டிக் ஃபீலே இல்லாம இப்படி கேக்கற .. சிரிச்சிட்டே கேளு ”
“ஹி .. ஹி .. என்ன பண்ணப் போற .. ”
“நூறு முத்தம் கொடுக்கப் போறேன் ”
“முத்தமா .. என்னது முத்தமாஆஆ … சூப்பர் .. கொடு .. கொடு .. ”
“கண்ணை மூடு .. ”
வசதியாக சாய்ந்து கொண்டு கண்களை மூடிக் கொண்டேன். ரொம்ப நேரமாக எதுவுமே நடக்கவில்லை. ஒரு கண்ணை மட்டும் திறந்து பார்த்தேன்.படுக்கையின் ஏதோ ஒரு பிரதேசத்தை தொட்டு முகர்ந்து கொண்டிருந்தாள்.
“அய்யே பெட்லயேவா இன்னமும் போயிட்டு இருக்க .. கருமம் .. தொடைக்க எதாவது இருக்கா .. ” அறை முழுவதும் பார்த்தாள் . மூலையில் ஹக்கீசின் உறை இருந்தது.
“இதெல்லாமா யூஸ் பண்ற ? “ என்ன சொல்வதென்று தெரியாமல் திரு திரு வென்று விழித்தேன் .
“குவ்வாஆஆஆஆஆஆஆஆஆஆ …. ” அலமாரியில் இருந்து சப்தம் வந்தது.
எல்லாம் முடிந்து போயிற்று.
“அடப்பாவி , அதுக்குள்ள கொழந்தையே பொறந்திடுச்சா ? ”
“அதுக்குள்ள எப்படிமா பொறக்கும் .. இது வேற .. ”
“ச்சீ .. கைய விடு .. ”
“இரு இரு .. எல்லாத்தையும் தெளிவா சொல்றேன் … அதுக்குள்ள போனா எப்படி .. நூறு முத்தம்ன்னு சொன்ன .. ஒரு பத்தாவது குடுத்திட்டு போயேன் ”
“குடுக்கறேன் .. குடுக்கறேன் .. வீட்டுக்குப் போனதும் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பறேன் .. ”
“அப்படியெல்லாம் அனுப்ப முடியாது .. ”
“ஏன்டா ? ”
“நமக்கு தான் கல்யாணமே ஆகலியா .. ”
என்னையே பார்த்தாள்.
“ஓ நோ .. மறுபடியுமா ! ” சொல்லி முடிக்கும் முன்பே பளாரென்று அறை விழுந்தது.
“டாடி ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ” .
******
எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தும் குலோத்துங்குவை மாற்றவோ திரும்பப் பெற்றுக் கொள்ளவோ மறுத்து விட்டார்கள். ஆனால் வேறு ஒரு உபாயம் சொன்னார்கள். கதை எழுதச் சொல்லி. எழுதியாயிற்று.
இதை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் வேளையில் , உங்கள் கணிப்பொறியின் ஐ.பி முகவரியின் மூலம் உங்களின் விவரங்கள் சேகரிக்கப் பட்டிருக்கும். உங்களில் ஒருவரை குலுக்கல் முறையில் தேர்வு செய்து , அந்த அதிர்ஷ்ட்டசாலிக்கு வலுகட்டாயமாக குலோத்துங்கோ புத்தாண்டு பரிசாக அனுப்பிவைக்கப் படுவார்.
மன்னிக்க. எனக்கு வேறு வழி தெரியவில்லை.நாளை காலை எழும்போது உங்கள் படுக்கை நனைந்திருந்தால் உங்களை நீங்களே சந்தேகப் பட்டுக் கொள்ளவேண்டாம். அது குழோததுங்க பட்டாச்சார்யாவாகக் கூட இருக்கலாம்.
புத்தாண்டு வாழ்த்துகள்.
**************
ஹா ஹா ஹா.. 🙂
பின்னிட்ட போ.. அடுத்தடுத்த படைப்புகள் ரொம்ப spontaneous-ஆ வருது உனக்கு..
புத்தாண்டு வாழ்த்துகள் 🙂
LikeLike
🙂 🙂 😉
LikeLike
very nice thambi 😉 keep it up 😉
-priyamudan
sEral
LikeLike
buhahahahhahaha
chanceless poo!! 😉
LikeLike
Iruvarukkum nandri 🙂 comments pakkarathukku evlo nalla irukku ..
yaaraachchum comment podungalen pa …
LikeLike
Rejo, Really you have great talent in writing.
Please keep on wrting. Still Pattampoochi kadhalan not yet moving from my heart. Harini tone is keep on ringing on my heart. Wish you all the best for your forth coming days.
LikeLike
Hi Guna ,
I’m so happy to see your comment 🙂 Thanks a lot ..
By the way , “Yaar sir antha figure ??” 😉
LikeLike
i got this link through my friend, who is ur friend…
Nice story, superba irunthathu…
i enjoyed lot…. pavalakodi super….
LikeLike
Nandri Bharathi 🙂
LikeLike
Ohh… Super… Great imagination…
LikeLike
Ha ha ha… nice one da… keep writing…
LikeLike