Tags
அழுது கொண்டிருந்தான் ஆதாம்
இறைவன் காலடியில் …
என்னால் தானே இவ்வளவும் !
அவள் மீது கொண்ட நேசத்தால்
ஆப்பிள் கடிக்கப்போய் நாசமல்லவா இன்று …
அறிவைக் கொடுத்திருக்கலாம் ஆப்பிள்
அறிவியலையும் வளர்த்திருக்கலாம் !
ஆனால் அதன் குட்டிகள்
குடித்துக் கொண்டிருக்கும் தாய்ப்பால் குருதியல்லவா?
என்னால் உண்டான நரகத்தை
காண விரும்பவில்லை
நான் மட்டும் சொர்க்கத்தில் இருந்துகொண்டு
என்னைத் தொலைத்து விடு எங்கேனும் – இல்லை
சூன்யத்திலாவது புதைத்து விடு
விளையாட்டைத் தொடங்குவோமா
மீண்டும் ? இறைவன்.
ஆயிரம் மின்னல்கள்
ஒருசேர ஜனித்து மடிந்தன
ஆதாமின் கண்களில் .
ஆடப்போகும் பரமபதத்தில்
இம்முறை ஏணிகளில்லை,
சர்ப்பம் மட்டும் ஒன்றேயொன்று
முடிந்து போன ஆட்டத்தின் ஆறுதல் பரிசாக
தழும்புகள் உனக்கு மட்டும்
கூட்டைக் கிழித்துச் சிறகுவிரிக்கும்
பட்டுப்பூச்சி போல் பழையநினைவுகள் இன்றி
புதிதாகவே படைக்கப் படுவாள் ஏவாள்
இது ஒத்திகைதான்.
எல்லாமும் சரியாக நடந்தால்
ஒத்திகை நிஜமாகும் , நிஜம் ஒத்திகையாகும்.
என்ன சம்மதமா ?
முட்டாளாக மாட்டேன் மீண்டும் ஒருமுறை
தலையசைத்தான்
கடிகாரமுள் திசைமாற்றிச் சுற்றத் தொடங்கியது.
கடல் கொண்ட அனைத்தும்
கரை சேர்ந்தன பத்திரமாக
ஹேராம் என்றதும்
காந்தியின் உடல் துளைத்த குண்டுகள்
கோட்சேவின் துப்பாக்கி புகுந்தன மீண்டும்
தாஜ்மகாலை இடித்துவிட்டு
ஷாஜஹானைக் கட்டிக்கொண்டாள் மும்தாஜ்
போதிமரத்தைப் புறக்கணித்து
புத்தன் அரண்மனை ஏகினான்
கர்ணன் தான் ஈந்த
கவச குண்டலங்களைத்
திரும்பப் பிடுங்கிக் கொண்டான்
ஆதிமனிதன்
ஆடைதுறந்து அம்மணமானான்
இன்னும் பின்னால் ….
மனித குலமே இல்லா
புது உலகம் படைக்கப்பட்டது.
முட்டை உடைத்துப்
பிரசவித்தார் ஆதாமை.
தவழ்வதற்குப் பதில்
ஓடத்தொடங்கினான் ஆதாம்
இவரை விட்டால்தானே – என்
இடுப்பை உடைப்பார்
அவள் கழுத்தை அறுப்பாள்
கண்மண் தெரியாமல் ஓடியவனை
இடைமறித்தார் இறைவன்
இது முறையல்ல
அவளையும் படைப்பது என் பொறுப்பு
ஆப்பிள் தடுப்பது உன் பொறுப்பு
அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே
மீண்டுமொருமுறை இடுப்பொடிக்கப்பட்டான்
ஏவாள் உயிர் செதுக்கப்பெற்றாள்
அன்பே! என்றாள்
பற்றிக்கொண்டு வந்தது இவனுக்கு
போய்விட்டார் இறைவன்.
விட்டுப்போய் விட்டாயா?
விட்டுப்போகிறேன் நானுமிவளை
வேகமாக நடக்கத் தொடங்கினான்
பின்னாலேயே ஓடிவந்தாள்
காலில் ஏதோ இடற அழத் தொடங்கினாள்
காதலில் இடறினான் அவன்
காலங்காலமாய்
பெண் கண்ணீரில் ஆண் கரைய
ஆதி ஆதாரமானான்
முள்ளுக்காக வெறுத்து
ரோஜாவை நசுக்குவதா ?
இவள் என்னிலிருந்து உடைக்கப்பட்டவள்.
எனக்காகவே படைக்கப்பட்டவள்
காதலால் கட்டிப்போட்டால்
ஆப்பிள் மரத்துடன் என்ன வேலை இவளுக்கு ?
பாதியல்ல இவளுக்கு
முழுவதையும் தருவேன்
முடிவு செய்தவன் கண்கள்
அனிச்சையாய் தேடின சர்ப்பத்தை,
காயத்தில் முத்தமிட்டான்
அழகாகக் கண்ணடித்தாள்
அங்கே அவர்களுக்கான குட்டி உலகத்தில்
வசந்தகால மொன்று பூப்பெய்தியது.
பின்னொரு நாள்
அவள் மடியில் ஆதாம்.
ஆப்பிளைப் பற்றி மறந்துவிட்டிருந்தான்
மெல்ல இதழ் பிரித்தாள்
எனக்காக எது வேண்டுமானாலும் செய்வீர்களா ?
ஆதாம் திடுக்கிட்டு விழித்துக் கொண்டான்
அதே கேள்வி
ஆப்பிள் கொடுத்து இனி அடம் பிடிப்பாள்
எச்சரிக்கை ! சிரித்து வைத்தான்.
தென்றல் மெல்ல
போர்வையால் மூடியது
சதித்திட்டம் தீட்டினர் சர்ப்பமும் ஏவாளும்
ஆப்பிள் அறுத்த கத்தியால்
அவள் ஆதாமைக் குத்தினாள்
அலறி எழுந்தான்
அருகில் புன்னகையுடன் ஏவாள்.
நுரையீரல் முழுவதையும்
ஒருமுறை நிரப்பி
அவசரமாய் காலி செய்தான்
ஆண்டவன் சர்ப்பத்தை
மறந்து விட்டான் போல
இனியும் அஞ்ச வேண்டாம்
காதல் கொஞ்சம் செய்வோம்.
காதலியைக் கொஞ்சச் செய்வோம்
கண்களால் அளக்கத் தொடங்கினான்.
அவள் அழகிய
கேசம் கலைக்கும் காற்றை
அடிக்கலாமா என யோசித்தான்
அவள் பிறைக்கண் பார்வையில்
ஒளிபெற்றுக் கொண்டிருந்தான்
மாலைச் சூரியன்
கொஞ்சம் குனிந்தாள்
அவள் நாசிக்குள் சென்று திரும்பிய காற்று
அவள் இதயத்தில்
எனக்கும் இடம் கொடு என
நெருப்பால் சுட்டது நெற்றியில்
அவள் உதடுகள் எடுத்துக்கொள்ளேன்
எனக் கெஞ்சிக் கொண்டிருந்தது
நமக்கேன் வம்பு என
அவன் உதடுகளும் சமாதான ஒப்பந்ததில்
கையொப்பமிடச் செல்ல
அவள் ஏதோ மென்று கொண்டிருந்தாள்
மெல்வதென்ன மேகத்தையா?
எனக்கும் தாகந்தான்
இதழ் மாற்ற மாட்டாயா ?
முகம் முழுக்க
மருதாணி பூக்கச் சொன்னாள்
உங்கள் இதயத்தைத்தான் மெல்கிறேன்.
அய்யோ !
உலகம் என்னை
இதயமில்லாதவன் என கேலிபேசுமே !
சீக்கிரம் கொடுத்துவிடு உன் இதயத்தையாவது
போதை தலைக்கேறப் புலம்பினான்
உதட்டால் ஊட்டினாள்
சொல்ல மறந்து விட்டேன்
உங்கள் இதயம் காய்த்த மரத்தை
ஒரு சர்ப்பம் தான் காட்டியது
காதில் விழுமுன்பே
கடித்துத் தொலைத்தான்.
இறைவன் சிரித்துக் கொண்டிருந்தார் !
பக்கத்து நாற்காலியில்
ஆப்பிள் சாப்பிட்டபடியிருந்தது சர்ப்பம்
அழுது கொண்டிருந்தான் ஆதாம்
இறைவன் காலடியில் …
———————————————————————————————–
அடடே!
வெற்றி பெற வாழ்த்துகள் தம்பி…
இப்போ புரியுதா? உனக்கேன் அந்த பெருஞ்சிரிப்பென்று…. 🙂
-ப்ரியமுடன்
சேரல்
LikeLike
//தாஜ்மகாலை இடித்துவிட்டு
ஷாஜஹானைக் கட்டிக்கொண்டாள் மும்தாஜ்//
🙂
LikeLike
வாழ்த்துகள் டா.. 🙂
LikeLike
பொருத்தமான படம்.. 🙂
LikeLike
ஆதாம் காலத்துக் காட்சிகள் அப்பட்டமாகக் கண்முன் விரிகிறது. காதலும் அதன் கண்கட்டு வித்தையும் புரிகிறது 🙂
சிறப்பான கவிதை. வெற்றி பெற வாழ்த்துக்கள் !
LikeLike
வெற்றி பெற வாழ்த்துகள்
LikeLike
நன்றி சேரல் அண்ணா 🙂
நன்றி பாலா 🙂
LikeLike
// இப்போ புரியுதா? உனக்கேன் அந்த பெருஞ்சிரிப்பென்று…. 🙂 //
🙂
LikeLike
நன்றி அரவிந்தன் 🙂
நன்றி சக்தி 🙂
LikeLike
வாழ்த்துக்கள் ரெஜோ.. அருமை
LikeLike
நன்றி உழவன் 🙂
LikeLike
உண்மையிலேயே, பின்னோக்கிப் பயணித்தது இதயம்….
நன்றி… வாழ்த்துகள்…. வளர்க….
LikeLike
நன்றி தமிழ் மகள் 🙂
LikeLike
சொல்ல வார்த்தைகள் இல்லை வாசா…
காலங்கடந்த வாசிப்பென்றாலும் என்றும் இனிமையாய்…
LikeLike