Tags

,

 

                 கிட்டத் தட்ட ஒன்னரை வருடங்களாகியிருக்கிறது , ஏற்கனவே எழுதப்பட்ட கதை ஒன்றை எழுதியவனே நினைத்தாலும் மாற்ற முடியாது என்பதைத் தெரிந்து கொள்ள , என்னை நானே மாற்றிக் கொள்ள முடியாது என்பதைப் புரிந்து கொள்ள . 

மோனாரிட்டா சென்ற வருடம் ஜனவரியில் பதிவிடப் பட்டு , ஒரே நாளில் மீண்டும் திருத்தி எழுதலாம் என நீக்கப்பட்டுவிட்ட கதை (??!) . என்னை நானே கொஞ்சமேனும் புரிந்து கொள்ள இந்த நாட்கள் இடம் தந்திருக்கின்றன. நன்றாக இருந்தால் என்ன , இல்லாவிட்டால் என்ன ? , இது என் கதை என்பதில் எந்தவிதப்  பொய்யும் இல்லையே . அதே போல எங்கும் வெறுமையும் வெற்றிடமுமே சந்திக்க நேர்ந்தாலும் இது என் வாழ்கை என்பது தானே நிதர்சனம் .

தேயும் நிலவை ரசிக்கும்  அதே மனதோடு ஓயும் இந்த வாழ்வையும் பார்க்கப் பழகவேண்டுமென்பது மட்டும் தெரிகிறது . விரக்தியா , வெறுமையா என்பது புரியவில்லை ஆனால் எனக்குப் பிடிக்கவில்லை என்பது மட்டும் தெரிகிறது. காயங்கள் ஆறும் , தழும்புகள் மறையக் கொஞ்ச நாட்களாகுமல்லவா?  அல்லது இந்தத் தழும்பு அப்படியே மாறாமல் நின்றும் போகலாம் . கோடையின் தனிமை போன்ற குரு யாருமேயில்லை.

எது எப்படி ஆயினும் இதுவும் கடந்து போகட்டும் .

கல்லூரி இரண்டாவது வருடத்தில்  கதை போல எழுதத் துவங்கிய காலத்தில் இருந்தே என்னுடன் இருந்து எல்லா இம்சைகளையும் சகித்து வரும் பாலாவிற்கு இந்த நூறாவது பதிவு .

 

 ————————————————————————

 

அண்ட் தென் தே லிவ்டு ஹேப்பிலி எவர் ஆஃப்டர் .

 

புத்தகத்தை மூடி மடியில் வைத்தேன் . எல்லா தேவதைக் கதைகளும் பெரும்பாலும் ஒரே மாதிரி தான் ஆரம்பிக்கின்றன . சூனியக்காரியோ , கொடுமைக்காரச் சித்தியோ , கிளியில் உயிர் உரித்து வைத்திருக்கும் மந்திரவாதியோ. தேவதைகளோ , ராஜகுமாரர்களோ தான் மாறுகிறார்கள் கதை மாறுவதில்லை . கதையின் முடிவில் முத்தமிடவும்  மறப்பதில்லை .

 

சென்னையிலிருந்து மதுரை  செல்லும் பாண்டியன் விரைவு ரயிலில் , சரியாக இரவு ஒன்பதரை மணிக்கு அவள் என்னை பார்த்துப்  புன்னகைத்த வினாடியில் இருந்து இந்தக் கதை தொடங்குகிறது . ஒரு வேளை தேவதைக் கதைகள் இது போலவும் தொடங்கக் கூடும் .

 

 

பாலத்தில் ஏறி பாண்டியன் நிற்கும் நடைமேடையை அடைந்த பொழுது நேரம் ஒன்பது தான் . எஸ் -12 . கடைசி பெட்டி . இன்னும் விளக்குகள் எதுவும் போட்டிருக்கவில்லை .எனது கம்பார்ட்மென்ட்டில் நான் மட்டும் தான் இருந்தேன் . கீழ் இருக்கை . ஜன்னலோரத்தில் உட்கார்ந்து கொண்டு பையை அருகிலேயே வைத்துக் கொண்டேன் . இன்று யாரும் வயதானவர்கள் வந்து தொலையக் கூடாது . இல்லை சைடு பெர்த் என்றாலும் , மாற்றிப் போய் தான் ஆக வேண்டும் .

 

இன்னும் அரைமணி நேரம் இருந்தது . ஈரம் பாய்ந்த தண்டவாளத்தின் வாசனையும் , ஜன்னல் கம்பியும் துருவாசமும் சேர்ந்து , ரயிலில் இருப்பதை அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தன . அருகில் இன்னொரு ரயில் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது .ஜன்னல் வழியாக , சில வினாடிகள் மட்டும் ஒரு பெண் வந்து போனாள் . எங்கிருப்பார்கள் தேவதைகள் . கூட்டமாகவா , இல்லை தனித்தனியாகக் கூடு கட்டிக் கொண்டா . இந்நேரம் யாரவது என்னை மாயக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருப்பார்களா . குழந்தையாக இருக்கையிலேயே தொலைந்து போனவன் இளவரசன் நீ , எனச் சொல்லி மறைந்து கிடக்கும் ராஜ்ஜியத்திற்கு என்னை அழைத்துச் சென்றுவிடுவார்களோ ?

 

கொஞ்சம் பசித்தது .வண்டி கிளம்பிய பிறகுதான் சாப்பாடு கொண்டு வருவார்கள் .கைக்கடிகாரத்தில் மணி பார்க்க முயற்சி செய்தேன் . இருட்டில் தெரியவில்லை . ஜன்னல் கம்பிக்கு வெளியே கைகளை நீட்டி , தூரத்தில் தெரிந்த கம்பத்து விளைக்கை துணைக்கழைத்துப் பார்த்தேன் . ஒன்பதரை .

 

“கியா மெய்ன் ரோஷினி கரூன் ?? “

 

குரல் கேட்டுத் திரும்பவும் விளக்கு எரியவும் சரியாக இருந்தது . மெல்ல இருளில் இருந்து ஒளிர்ந்து , பின் பிரகாசமாகத் தெரிந்தாள் அவள் . குளிருக்கான  மரூன் நிற ஜாக்கெட்டும் , நீல நிற ஜீன்சும் அணிந்திருந்தாள் . என்னை விட கொஞ்சமே முடி அதிகமாக இருந்தது . கற்றை கற்றையாக நெற்றியில் வகிடு பிரித்து வந்து விழுந்து கொண்டிருந்தது . மீதம்  தெரிந்த நெற்றி சரியாக வெட்டப்பட்ட ஒரு கேக் துண்டைப் போல இருந்தது .

 

விளக்கைப் போடட்டுமா என அவள் ஹிந்தியில் கேட்டது எனக்கு புரியவில்லை என நினைத்துக் கொண்டு சுவிட்சில் கை வைத்துக் காட்டினாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்த என்னை வினோதமாகப் பார்த்தாள் . பின் ஜன்னலை  நோக்கி விரல் நீட்டினாள். கையை வெளியே வைத்துக் கொண்டிருந்திருக்கிறேன். சரக்கென இழுத்துக் கொண்டதில் சிராய்த்துக் கொண்டது.கையைப் பிடித்துக் கொண்டேன் .சத்தமாக சிரித்துக் கொண்டே ஓடிவிட்டாள் .

 

அவமானமாக இருந்தது . கோபமும் எரிச்சலும் , வெட்கமும் ஒரு சேர வந்தது . திரும்பத் திரும்ப அவள் சிரித்தது உள்ளுக்குள்ளே ஓடிக் கொண்டேயிருந்தது . இதற்கு எதற்காக சிரிக்க வேண்டும் எனத் தோன்றியது .

 

திரும்ப அவளைப் பார்க்க வேண்டும் போல் இருந்த அடுத்த நொடியில் மீண்டும் வந்தாள் ஒரு பெரிய பெட்டியை இழுத்துக் கொண்டு . எனக்கு எதிரில் இருந்த இருக்கையில் உட்கார்ந்து கொண்டாள் . அவள் வந்ததைக் கண்டு கொள்ளாதது போல் ஜன்னல் பக்கம் பார்த்துக் கொண்டிருந்தேன் .இன்னமும் கூட என்னையே பார்த்து சிரித்துக் கொண்டிருப்பதாக இருந்தது .  

 

சாதாரணமாகப் பார்ப்பது போல் சுற்றிக் கொண்டு பார்த்தேன் . சம்மணமிட்டு நன்கு சாய்ந்து உட்கார்ந்து கொண்டு என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள் .கிட்டத் தட்ட ஒரு உறைந்து போன ஓவியம் போல் இருந்தாள் . எந்த ஒரு சலனமும் இல்லாமல் , நிலை குத்திய பார்வையோடு , உதட்டில் உறைந்து போன ஒரு வித இறுக்கத்தோடு , பார்த்துக் கொண்டேயிருந்தாள் .இரண்டு மூன்று முறை வேறெங்கோ பார்ப்பது போல் பார்த்து விட்டு , மீண்டும் பார்த்தேன் . நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும் ,என்னையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள்

 

கொஞ்சம் பயமாகக் கூட இருந்தது . இருந்தும் ஒரு அசட்டு தைரியம் . அவள் மட்டும் பார்க்கிறாள் நாமும் பார்ப்போம் என , நானும் நன்றாக உட்கார்ந்து கொண்டேன்  .ஏதோ இரண்டு சிறு குழந்தைகள் யார் முதலில் இமைக்கிறார்கள் பார்ப்போம் என விளையாடுவது போல் பார்த்துக் கொண்டிருந்தோம்  .

 

யாருக்கும் சட்டெனப் பிடித்துப் போகும் சற்றே நீள் வட்டமான முகம் கொஞ்சம் ஜன்னல் வழியே அவ்வப்போது வந்துகொண்டிருந்த மெல்லிய காற்றில் தலைமுடி மெல்ல ஆடிக் கொண்டிருந்தது .பூவிதழ்கள் ஏதாவது விழுந்தால் நிச்சயம் தடம் பதிந்து போகும் கன்னங்கள் . சின்ன நாசி .சின்னச் சின்ன வரிகள் கொண்ட உதடுகள் . மொத்த ஓவியத்திற்கே உயிர் தந்தது அவள் கண்கள் தான். அதற்குள் மெல்ல பிரகாசிப்பது போல் இருந்தது . அதற்குள் என்னைத் தேட வேண்டும் போல் இருந்தது .

 

 ஒரு பெண்ணை , புகைப்படம் தவிர்த்து இவ்வளவு உற்றுப் பார்ப்பது இது தான் முதல் முறை . எந்த தைரியம் என்று தெரியவில்லை . என்னால் அந்த முகத்திலிருந்து பார்வையை எடுக்க முடியவில்லை .

 

குளிருக்காக அவள் போட்டிருந்த  மரூன் நிற ஜாக்கெட்டின் , இடது பக்க மேற்புறத்தில் ‘எம்’ என எம்ரைடரி போடப்பட்டிருந்தது . கையை ஏய் என அடிப்பது போல் ஓங்கி விட்டு அருகிலிருந்த கைப்பையை மடியில் வைத்துக் கொண்டாள் .

 

நான் வேகமாக தலையை அசைத்து ‘எம்’ ஐக் காட்டினேன்.

 

ஓ ! என்றவள் ” யே கில்லுகா தோஃபா ”

 

புரியவில்லை என தலையை ஆட்டினேன் . தோ…ஃ.. பா .. என ஒவ்வொரு எழுத்தாகப் பிரித்துச் சொன்னாள் . ஏதோ ஒன்றாக இருந்து விட்டுப் போகிறது என நானும் பதிலுக்கு ஒரு ஓ சொல்லி விட்டு , விட்டு விட்டேன் .

 

ஏதேதோ பேசிக்கொண்டே போனாள் . ஒன்றும் புரியாவிட்டாலும் அவளது மிக மெலிதான குரலை சிரத்தையாக கவனித்துக் கொண்டிருந்தேன் .  யாருமே வராமல் போய் , இரவு முழுவது இப்படியே இவள் பேசுவதை கேட்டுக் கொண்டே இருக்கப் போகிறேனோ என்ற நினைப்பே இனிப்பாய் இருந்தது . இன்னும் ஐந்து நிமிடத்தில் வண்டி புறப்படப் போகிறது என மூன்று மொழிகளில் அறிவித்தார்கள் .

 

எங்கிருந்து தான் அவ்வளவு கூட்டம்  வந்தது எனத் தெரியவில்லை . தாத்தா , பாட்டி , அம்மா , அப்பா, அண்ணன் , தம்பி , தங்கை என யாஷ் சோப்ரா படத்தில் வரும் எல்லாக் குடும்பக் கதாப்பாத்திரங்களும் என் கம்பார்ட்மென்டில் இருந்தார்கள் . இருந்த எல்லோரையுமே அவளுக்கு தொடர்பு வைத்தே , இந்த உறவு என கற்பிதம் செய்து கொண்டேன்.

 

“குடியோ ! தும் யஹின் பர் ஹோ ..   ” எனத் திட்டும் தொனியில் சொல்லி  அவள் தலையில் குட்டியது ஒரு கிழவி . அவளை சுத்தமாகப் பிடிக்கவில்லை எனக்கு .” தாதிம்மா ” என உதட்டைச் சுழித்துக் கொண்டே தலையைத் தடவிக் கொண்டாள்.அது ரொம்ப பிடித்திருந்தது .எல்லாரும் கொண்டு வந்த பொதிகளை சரி பார்த்தார்கள் . அவளது நகல் போல் இருந்த இன்னொரு குட்டிப் பெண் ஒரு பையை கொடுத்து விட்டு அவளருகில் உட்கார்ந்து கொண்டாள் .

 

“தேங்க்ஸ் கில்லு” . கில்லு என இருமுறை என்னைப் பார்த்துக்கொண்டே அழுத்தமாக சொன்ன அவளை , கில்லு என்ற அந்த குட்டிப் பெண் வினோதமாகப் பார்த்தாள் .

 

மீண்டும் அந்த ‘எம்’ ஐப் பார்த்தேன் . புரிந்துகொண்டாய் எனச் சிரித்தாள் . ‘எம்’ என்னவாய் இருக்கக் கூடும் . அவள் இனிஷியல் .. இல்லை துவக்க எழுத்து .??

 

அப்பொழுது தான் கில்லு கொடுத்த பையில் கவனித்தேன் . எம் .. ஓ .. என் ..ஏ ..ஆர் ..ஐ ..டி .. ஏ .. என வரையப் பட்டிருந்தது . மோனாரிட்டா .. ஆ .. அது தான் அவள் பெயர் ..  ‘எம்’ …  எதையோ பெரிதாகக் கண்டுபிடித்து விட்டது போல் இருந்தது . சத்தமாக விசிலடிக்க வேண்டும் போலவும் இருந்தது . பெயரை உறுதி செய்துகொள்ள ரிசர்வேஷன் சார்ட்டை பார்க்க ஓடினேன் .வண்டி கிளம்பும் சமயத்தில் ஓடும் என்னைப் பார்த்து , என்ன நினைத்திருப்பார்கள் என கவலைப்படவில்லை  . வண்டி மெதுவாகவே நகர்ந்து கொண்டிருந்தாலும் , கீழே இறங்குமளவுக்கு எனக்கு தைரியமில்லை . மீண்டும் எனது இருக்கைக்கு திரும்பும் பொழுது தான் கவனித்தேன் . வண்டி முழுவதும் ஒரே முகங்கள் . மலை தேசத்தவர்கள் . ஒரு வேளை சுற்றுலாவிற்காக வந்திருக்கலாம் .

 

என்னிடத்திற்கு வந்த பொழுது பி.டி வாத்தியார் போல ஒருவர் , கையில் கட்டுக்கட்டாக பயணச் சீட்டுகளை வைத்து டிக் அடித்துக் கொண்டிருந்தார். நல்ல பிள்ளை போல உட்கார்ந்து கொண்டு , ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தேன் . ஏதோ ஒன்று உறுத்தவே திரும்பிப் பார்த்தேன் . யாரும் பார்க்காத படி மோனா , புருவங்களை மட்டும் தூக்கி , எங்கே போனாய் எனக் கேட்டாள் . தலையசைத்து விட்டு , சத்தமே வராமல் மோனாரிட்டா என்றேன் . அவள் ஆச்சர்யமாக எப்படி என்றாள் . அவள் பையில் எழுதியிருந்ததைக் காட்டினேன் . உதடுகள் நிறைய சிரித்தாள். அந்தக் கிழவி மட்டும் என்னை முறைத்துக் கொண்டேயிருந்தாள் .

 

கொஞ்ச நேரத்தில் டிடிஆர் வந்தார் . பத்து நிமிடத்தில் விளக்கணைத்து விட்டு எல்லாரும் படுக்கப் போகவேண்டும் என்றார்கள் . எனக்கு ஆத்திரமாக வந்தது . வழக்கம் போலவே , அந்தத் தாத்தா , என்னால் மேலே ஏற முடியாது என என்னை மிடில் பெர்த்துக்குப் போகக் சொன்னார் . இம்முறை சந்தோசமாகச் சென்றேன் . எதிர் புற மிடிலில் மோனாரிட்டா .

 

ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே படுத்துக் கொண்டிருந்தோம் . அவள் என்னைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டேயிருந்தாள் . எனக்குள் இனம் புரியாத உணர்வு .என்ன மாதிரியான உறவு இது . இந்த இரண்டு மணி நேரத்தில் பேசிய சில வார்த்தைகளிலும் , பரிமாறிய பார்வைகளிலும் எனக்குள் முழுவதும் நிறைந்திருந்தாள் . ஒருவேளை இவள் தான் எனக்கான தேவதை பெண்ணோ .. கேட்டு முடிக்கும் முன்பே மனது ஆமாம் என பதில் சொல்லிற்று .

 

மனது முழுக்க லேசாகி பறப்பது போல் இருந்தது . அவள் யார் , எங்கிருந்து வருகிறாள் , அடுத்து என்ன செய்யப் போகிறோம் எதுவும் தெரியாது . ஆனால் அவள் தான் என முடிவு செய்துவிட்டேன் . நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அழகான ஒரு பொம்மை போல தூங்கிப் போனாள் . எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன் எனத் தெரியவில்லை . நான் தூங்கியிருந்த அடுத்த வினாடியிலேயே என் கனவில் இறங்கியிருந்தாள் .

 

நான் ஒரு ராஜகுமாரனாக இருந்தேன் . ஒரு அழகான பிடரி கொண்ட வெள்ளைக் குதிரையில் காட்டிற்குள் சென்று கொண்டிருந்தேன் .என் தோள் மேல் ஒரு பேசும் கிளி  கஜல் கவிதைகள் சொல்லியபடியிருந்தது . எங்கோ தொலைவில் ஒரு அழகிய பாடல் கேட்டது . மலை உச்சியிலிருந்த குடிசையிலிருந்து வந்து கொண்டிருந்தது அது . அருகே சென்ற போது ஒரு விளக்கு மட்டும்  எரிந்து கொண்டிருந்தது .

 

ஜன்னல் வழி பார்த்த பொழுது மோனாரிட்டா பாடிக் கொண்டிருந்தாள் . என்னைப் பார்த்தவள் வாசலை நோக்கி சைகை செய்தாள் . அங்கே இரண்டு தலை கொண்ட ராட்சசி ஒருத்தி குறட்டையிலிருந்தாள். அந்த இரண்டு முகங்களில் ஒன்று அவளுடைய பாட்டி போல இருந்தது . பாடிக்கொண்டே தன்னைக் காப்பாற்றும்படி சைகை செய்தாள் .

 

 மலையிலிருந்து ராட்சசியை உருட்டிவிட்டு ,மோனாரிட்டாவைத் தூக்கி கொண்டு , வெகு தூரம் மனித நடமாட்டமே இல்லாத ஒரு அருவியை நோக்கிச் சென்று கொண்டிருந்தோம் .கனவு போலவேயில்லை .அந்த நெருக்கமும் , அந்த ஸ்பரிசமும் . என் அருகிலேயே அவள் இருப்பது போலவேயிருந்தது .குதிரையிலிருந்து இறங்கி , சரியாக முத்தம் கொடுக்கப் போகும் தருவாயில் ,விழிப்பு வந்துவிட்டது .

 

அவளும் விழித்தபடி தான் இருந்தாள் . உனக்கும் அதே கனவு வந்ததா எனக் கேட்க வேண்டும் போல் இருந்தது . தூங்கவில்லையா எனக் கேட்டாள் . இல்லை எனத் தலையசைத்தேன் .  திரும்பவும் தூங்கிப்போனேன் .

 

அடுத்த முறை விழித்த பொழுது , அவளைக் காணவில்லை . பாத்ரூம் போயிருக்கலாம் என நினைத்தேன்.வண்டி ஏதோ நிறுத்ததிலிருந்தது . கொஞ்ச நேரம் பார்த்தேன் .வண்டி கிளம்பிய பின்னும் காணவில்லை அவளை.  பயமாயிருந்தது .அவள் அம்மா அப்பா எல்லாரும் நிம்மதியாத் தூங்கிக் கொண்டிருந்தார்கள் . டேய் தூங்குமூஞ்சிகளா ! யாராவது எழுந்து பாருங்களேன் எனக் கத்தவேண்டும் போல் இருந்தது .யாரும் எழுந்திரிக்கவில்லை . நானே பார்க்கலாம் என இறங்கினேன் .

 

என் கம்பார்ட்மென்ட்டின் இரண்டு புறமிருந்த கழிவறைகளை ஒட்டித் தேடிப் பார்த்தேன் . காணவில்லை . இந்த இரவில் , ஸ்லீப்பர் கோச் அத்தனை கழிப்பறைகளையும் சோதனை போட்டுக் கொண்டிருப்பது முட்டாள் தனம் என்று தோன்றவில்லை .நேரம் ஆக ஆக பதட்டமாக இருந்தது . வழியில் வந்து போன ஏதோ ஒரு பெயர் தெரியா கடவுளிடம் வேண்டிக் கொண்டேன் . மீண்டும் ஒரு முறை என் கம்பார்ட்மென்டில் வந்து பார்த்தேன் . காணவில்லை . கண்ணோரத்தில் துளிர்ப்பதாய்க் கூட இருந்தது .

 

எனது கோச்சின் அடுத்து இன்ஜினை ஒட்டிய சமையலறை . அங்கே தேடிப் பார்க்கலாம் எனத் தோன்றியது . இரண்டு பெட்டிகளுக்கும் நடுவே முக்கால்வாசி மூடியிருந்த தடுப்பு ஒன்றுயிருந்தது . கொஞ்சநேரம் உள்ளே குனிந்து செல்லலாமா வேண்டாமா என நின்றேன் .

 

உள்ளே ஒரே இருட்டாக இருந்தது .வலதுபுறம் வளைந்து திரும்பியது .தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சென்றபொழுது சடாரென இழுக்கப்பட்டேன் . இழுக்கப்பட்ட வேகத்தில் , இழுத்தவளைக் கட்டிக் கொண்டேன் .

 

மீண்டும் அவளைப் பார்த்ததில் ஆனந்தமாக இருந்தது . கொஞ்சம் கோபம் கூட வந்தது . அவளை விலக்கிக் கொண்டு ,  ” இங்க என்ன பண்ணிட்டு இருக்க ” என்றேன் . உதடுகளில் விரல் வைத்து அழுத்தி , பின்னாலே வருமாறு சைகை செய்தாள் . நான் தயங்கி நிற்கவே , என் கைகளைப் பிடித்து இழுத்துக் கொண்டு நடந்தாள் . இப்படியே அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் எனத் தோன்றியது .

 

சமையலறையில் கொஞ்சம் பேர் படுத்திருந்தார்கள் . சத்தமிடாமல் அவர்களைத் தாண்டிக்கூட்டிச் சென்றாள் . அந்தப் பெட்டிக்கும் , இன்ஜின் பெட்டிக்கும் இடையே ஒரு சின்ன அறை இருந்தது . கொஞ்சமே கொஞ்சமாக மஞ்சள் வெளிச்சத்தைக் கொட்டிக் கொண்டு ஒரு விளக்கு மட்டுமே இருந்தது . இங்கே பார் எனக்  காட்டினாள் . ஒரு மூலையில் அழகாக இரண்டு குட்டிப் பூனைகள் தூங்கிக் கொண்டிருந்தன .

 

கோபத்தையும் மீறி எனக்கு புன்னகைக்கத் தோன்றியது . என் அழகிய பெண்ணே இதைப் பார்க்கவா அழைத்து வந்தாய் , என அவள் கன்னத்தில் செல்லமாகத் தட்ட வேண்டும் போல் இருந்தது . இரண்டு கைகளிலும் கைகளை வைத்துக் கொண்டு அதை பார்த்துக் கொண்டிருந்தாள். எதையும் ஆச்சர்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தது அவள் விழி .அவளையே ஆச்சர்யமாகப் பார்க்கச் சொல்லியது அவள் உடல் மொழி .

 

பூனைகளைப் பார்த்துக் கொண்டே அதற்கு எதிர்புறத்தில் போய் உட்கார்ந்து கொண்டாள். நடு ராத்திரியில் , ஏதோ ஒரு மூலையில் , மஞ்சள் வெளிச்சத்தில் , கால்களைக் கட்டிக் கொண்டு பூனைகள் பார்த்துக் கொண்டிருக்கும் இவளை என்னவென்று சொல்வது . எல்லாரும் தேடுவார்கள் வா என்றேன் . பூனைகள் பார்த்திருக்கலாம் வா என அவள் அருகில் இருந்த இடத்தை தட்டிக் காண்பித்தாள் .

 

அவள் ஒருத்திக்கான இடம் மட்டுமே அங்கே இருந்தது . என்னை நெருக்கிக் கொண்டு  உட்கார்ந்திருப்பதில் அவள் எவ்வித கூச்சமும் படவில்லை . எனக்கான அவள் என நான் நினைத்திருப்பது போலவே அவளும் நினைத்திருக்கலாம் என நினைத்துக் கொண்டேன் .

 

என் மனதை வெளிப்படுத்துவதற்கும் , அவளுடன் பழகுவதற்கும் இது ஒரு நல்ல வாய்ப்பு எனத் தோன்றியது . அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன் . பூனைகளிடமிருந்து பார்வையை என்னிடம் நகர்த்தினாள் .

 

“நாம் கயா ஹை துமாரா ?” என்றாள் . பேச வராவிட்டாலும் ,புரிந்து கொள்ளும் அளவாவது ஹிந்தி தெரிந்ததற்காக முதல் முறையாக சந்தோஷப்பட்டேன் .

 

சொன்னேன் . ஒருமுறை தனக்குள் சொல்லிப்பார்த்துக் கொண்டாள்.

 

“நீ எந்த ஊரு ” என்றேன் .

 

புரியவில்லை என்றாள். ஆங்கிலத்தில் ஒருமுறை சொல்லிப்பார்த்தேன் . அதுவும் புரியவில்லை . அதன் பிறகுதான் நாங்கள் சொற்களை ஒதுக்கி வைத்துக் கொண்டு சைகையில் பேசிக்கொள்ளத் துவங்கியது .

 

அவள் கைகளை எடுத்து வைத்துக் கொண்டேன் . ரேகைகளைக் காட்டிப் பார்க்கத் தெரியுமா எனக் கேட்டாள். கன்னி மேடு காசி மேடு என ஏதாவது கதை சொல்லலாமா என யோசித்தேன் . எனக்கு அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு இருப்பதே போதுமானதாயிருந்தது . நொடிக்கொருமுறை புன்னகைத்திருந்தாள் . பின்னொருநாளில் , ஒரு நாள் முழுவது அவள் அருகில் உட்கார்ந்து புன்னகைகளை எண்ண வேண்டும் என நினைத்துக் கொண்டேன் .

 

நீ அழகாக சிரிக்கிறாய் என்றேன் . அவள் பூனைகளைக் காட்டினாள் . என்ன பேசுகிறோம் என்று புரியாமல் பேசிக் கொண்டிருந்தாலும் , எனக்கு அது பிடித்திருந்தது . எனக்கு தெரிய வேண்டியதெல்லாம் அவளுக்கும் என்னைப் பிடித்திருக்கிறதா என்பதே .

 

அவள் மொத்தக் குடும்பத்தைப் பற்றி , அவள் மலை கிராமத்தைப் பற்றி , அவர்கள் வந்த இந்த புனித யாத்திரை பற்றி நிறைய பேசிக்கொண்டே இருந்தாள் . நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன் .

 

திடீரென எதையோ நினைத்து அழத் துவங்கினாள் . என்னால் அவள் அழுவதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை . என் தோள் மேல் சாய்ந்து அழும் அவள் இப்பொழுது  பாரமாகத் தெரிந்தாள். என் விரல்கள் அவள் கண்ணீர் சூடு தாங்க முடியாமல் தகித்தன .  அவளது உடைகளை விலக்கி , முதுகுப் புறம் காட்டினாள் . இன்னமும் ஆறாத நெருப்புக் காயங்கள் நீள் வாக்கில் இருந்தன . என்னால் அதை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை . அவளை அணைத்துக் கொண்டேன் . முன்னா , முன்னா , என சொல்லிக்கொண்டே வேறெதுவும் பேச முடியாமல் விம்மத் துவங்கினாள் . ஒரு குழந்தையென அவள் தலையைத் தடவிக் கொடுத்தேன் . பூக்குவியல் போன்ற இவளை எப்படிக் காயப்படுத்த முடிகிறது .

 

சில மணி நேரங்கள் முன் பார்த்துப் பழகிய ஒரு பெண்ணுடன் , இவ்வளவு நெருக்கமாக உட்கார்ந்து கொண்டு ஆறுதல் சொல்லிக் கொண்டிருப்பேன் என என்றுமே நினைத்ததேயில்லை. கொஞ்சமாக எதற்காக இந்தப் பயணம் என்று புரிந்தது  . இன்னொரு முறை இவளை அழவிட மாட்டேன் என நினைத்துக் கொண்டேன் .

 

 அழுகை கொஞ்சம் அடங்கியிருந்தது . அவள் முடிகளை விலக்கிவிட்டேன் . முகத்தை கைகளில் ஏந்திக் கொண்டு பார்த்தேன் . அவள் கண்களுக்குள் என்னைத் தேடிக் கண்டுபிடித்தேன் .  அழுது அழுது மூக்கு சிவந்திருந்து .உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டாள். இன்னொரு தருணத்திற்காக நான் காத்திருக்க விரும்பவில்லை . மெதுவாக அவளை முத்தமிடக் குனிந்தேன் .

 

பயணிக்கவேண்டிய தூரம் நீண்டதாக இருந்தது . வினாடிகள் ஒவ்வொன்றும் யுகங்களாக இருந்தன . என் கண்கள் தானாக மூடிக் கொண்டன . ஏன் இன்னமும் தாமத்தித்துக் கொண்டிருக்கிறேன் எனத் தெரியவில்லை . நான் எதிர் பாராத தருணத்தில் அவளே முத்தமிட்டாள் .

 

கண்கள் திறந்து அவளைப் பார்த்த போது , கள்ளமில்லாமல் சிரித்துக் கொண்டிருந்தாள் . “இப்பொழுதே என்னுடன் வந்துவிடு . அடுத்த நிறுத்தத்தில் இறங்கிவிடலாம் . ஸ்ரீரங்கத்தில் நிறையப் பேரைத் தெரியுமெனக்கு . காவேரிக் கரையோரத்திலேயே தங்கிக் கொள்ளலாம் . மலைக்கோட்டை எல்லாம் சுற்றிப்பார்க்கலாம் . வீட்டில் நிறைய பூனைகள் வளர்க்கலாம் . யாரும் உன்னை அடிக்க விட மாட்டேன் . என்னைத் திருமணம் செய்து கொள்வாயா .? “

 

அவள் எதுவும் பேசாமல் புன்னகைத்துக் கொண்டேயிருந்தாள் . தாலி கட்டிக் கொள்வது போல் , மோதிரம் மாற்றுவது போல் சைகை செய்து காட்டினேன் . வெட்கப்பட்டாள் . வெட்கம் மட்டும் எல்லா மொழிகளுக்கும் பொது போல .

 

இம்முறை சற்றே நீண்ட முத்தத்திற்கான முயற்சியில் இறங்கினேன் . பூவாசம் அவளிடமிருந்து . இலக்கிற்கு சில மைக்ரோ வினாடிகள் தொலைவே இருந்த பொழுது தோன்றியது , “அண்ட் தென் தே லிவ்டு ஹேப்பிலி எவர் ஆஃப்டர் .”

 

தலையில் மடார் என்று அடி விழுந்தது . கண்கள் இருண்டன . சில நேரத்திற்கு நடப்பது எதுவுமே புரியவில்லை . முத்தமிடும் முன்பு இவ்வளவு வலிக்குமா என்று தோன்றியது . பல திசைகளில் இருந்து சராமரியாக அடி விழுந்தது .

 

என் கண் முன்னாலேயே அவளை அடித்து இழுத்து பக்கத்து கம்பார்ட்மென்ட்டுக்கு அழைத்துச் சென்றார்கள் . என்னை இருக்கையில் உட்காரவைத்து இரண்டு பேர் பிடித்துக் கொண்டார்கள் . என் எதிரில் இருந்த கிழவி ஹிந்தி அல்லாத அவர்கள் வட்டார மொழியில் திட்டிக் கொண்டிருந்தாள் . காறி என் முகத்தில் உமிழ்ந்தாள் . துடைத்துக் கொள்ளக் கூட முடியாமல் என் முகமெங்கும் வழிந்து கொண்டிருந்தது .

 

ஆக்ரோஷமாக ஒருவன் ஓடி வந்து , மாறிமாறி என் கன்னங்களில் அறைந்தான் .

 

பின்னாலேயே ஓடி வந்த அவள் அம்மா , அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு ” முன்னா , உஸே ச்சோடுதோ ” எனக் கத்தினாள் .

 

முன்னா என்ற அந்தப் பெயர் எனக்குள் எப்படி வெறியைக் கிளப்பியது எனத் தெரியவில்லை . திமிறிக் கொண்டு எழுந்து , பலம் கொண்ட மட்டும் அவனை மிதித்தேன் . கீழே நிலைகுலைந்து விழுந்தான் .

 

“…..மவனே .. இன்னொரு தடவ அவ மேல கைய்ய வச்சுப் பாரு ” எனக் கத்தி விட்டு திரும்ப அடிக்கச் செல்வதற்குள் என்னைப் பிடித்துக் கொண்டார்கள் .எழுந்தவன் என் வயிற்றி ஓங்கி மிதித்தான் . கீழே விழுந்த என்னை மாறி மாறி விலாக்களில் மிதித்தான் . எனக்கு வலிக்கவில்லை . அவனை அடித்தது திருப்பதியாக இருந்தது .  என் வேலை , என் பெற்றோர் ,நண்பர்கள் எதுவும் என் கண்களில் தெரியவில்லை . அவளுக்காக கெஞ்சத் துவங்கினேன் .

 

எல்லாரையும் விலக்கிவிட்டு அவள் அம்மா என்னைத் தாங்கிப் பிடித்துக் கொண்டாள் . எல்லாரையும் அடுத்த கம்பார்ட்மென்ட்டுக்குப்  போகச் சொன்னார் . இன்னொருமுறை என்னை அறைந்து விட்டு ஏதோ திட்டிவிட்டுச் சென்றார்கள் .

 

என் அருகிலேயே உட்கார்ந்து கொண்டார் . என் நெற்றி , புறவாயில் கசிந்து கொண்டிருந்த ரத்தத்தை துடைத்து விட்டார் . வலிக்கிறதா என தான் கேட்டிருக்க வேண்டும் அவரது மொழியில் .

 

உங்கள் பெண்ணை மட்டும் கொடுத்து விடுங்கள் . நான் பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறேன் என்றேன் .அவருக்கு நிச்சயமாகப் புரிந்திருக்காது . வாயில் சேலைத் தலைப்பை வைத்துக் கொண்டு , அழத் துவங்கினார் . எனக்கும் அழுகை வந்தது . வாங்கிய அடிகளுக்கும் சேர்த்து அழுதேன் .

 

அதன் பின் அவர் பேசிய எதுவும் புரியவில்லை . இரண்டு கைகளையும் கூப்பி ஏதோ இறைஞ்சிக் கேட்டா படியே இருந்தார் . என் கையை எடுத்து அவர் தலையில் வைத்துக் கொண்டார் . அவளை விட்டு விடும் படிச் சொல்கிறார் என மட்டும் புரிந்தது . மௌனமாக தலையசைத்தேன் .

 

மறுபடியும் கைகூப்பினார் . அவளை அடிக்காதீர்கள் என சைகையில் சொன்னேன் . கொஞ்ச நேரம் என்னையே பார்த்து விட்டு என் கைகளில் முத்தம் தந்துவிட்டு சென்றுவிட்டார் .

 

மீண்டும் அந்த தடியர்கள் என்னை வந்து சூழ்ந்து கொண்டார்கள் .ஆனால் இம்முறை அடிக்கவில்லை . ஒரே ஒரு முறை மோனாவைப் பார்க்கவேண்டும் போல் இருந்தது .

 

மதுரை நிலையம் வந்திருந்தது . இறங்கும் சாக்கில் அவளைப் பார்க்கலாம் என எழுந்த பொழுது என்னைப் பிடித்து வைத்துக் கொண்டார்கள் . மீண்டும் திமிறும் அளவு உடலில் வலு இல்லாததால் அப்படியே இருந்தேன் .

 

வண்டி நின்று பத்து நிமிடங்கள் தாண்டியும் என்னை வெளியே விடவேயில்லை . ஏன் எனத் தெளிவாகப் புரிந்தது . இன்னொருமுறை நான் அவளைப் பார்க்கப் போவதில்லை என்ற நினைப்பு தாங்க முடியாததாக இருந்தது .ஒருவன் வந்து சைகை தந்தான் என்னை விட்டு விடும் படி . பின் எல்லாரும் சென்று விட்டார்கள் .

 

ரயிலில் இருந்து இறங்கி , நடை பாதை  இருக்கையில் அமர்ந்து கொண்டேன் .நடக்க முடியாமல் வலித்தது . எல்லாமே ஒரு கனவு மாதிரியே இருந்தது . எதற்காக இந்த மொத்த சந்திப்பும் எனத் தோன்றியது .

 

எங்கிருந்தோ வந்த என் பனிமலைப் பள்ளத்தாக்குப் பெண்ணே .. இந்த பத்து மணி நேரத்தை நான் மறக்கவே மாட்டேன் . பூப்பந்து போன்ற உன் ஸ்பரிசமும் , ஓடிக் கொண்டே இருக்கும் உன் கண்மணிகளும் , சிவந்த உன் மூக்கின் நுனிகளும் , வெது வெதுப்பான உன் உதடுகளும் , மஞ்சள் வெளிச்சத்தில் சிவந்த உன் வெட்க முகமும் , சட்டென முடிந்து போன முதல் முத்தமும் என்றும் என் நினைவில் இருக்கும் . குட்டி வெள்ளைப் பூனைகளைப் பார்க்கும் போதெல்லாம் என்னை நினைத்துக் கொள் .  எங்கோ மலைகளுக்குள் ஒளிந்திருக்கும் ,பாஷை புரியாத ,பெயர் தெரியாத உன் ஊரிற்கு நிச்சயம் ஒரு நாள் உன்னைத் தேடி வருவேன் . எனக்குள் உறுதியாகச் சொல்லிக் கொண்டேன் .

 

மோனாரிட்டா .. ஒருமுறை அவள் பெயரை மெல்ல உச்சரித்தேன் .

 

சற்று நேரத்திற்கெல்லாம் மழை பெய்யத் துவங்கியது .

 

 

—————————————————————————————————-