Tags
கனவும் மழையும், ஒருவேளை நீயும் … ?
கனவு பற்றியோ , மழை பற்றியோ இல்லை உன்னைப் பற்றியோ மீண்டும் எழுதப்போவதில்லை என்று முடிவு செய்திருந்தேன் . எப்படி வருடும் கனவும், வருத்தும் மழையும் என் கண்களிலேயே ஒட்டிப்போய் விட்டனவோ ,அது போலவே நீயும்.
ஆனால் நிச்சயம் தெரியும் இது கனவென்று.
இரவா பகலா , விழிப்பா மயக்கமா எனத் தெரியாத மீள முடியாத தருணமொன்றின் வெகு ஆழத்தில் மூழ்கிய நிலையில் நான். உன் பெயரின் ஓங்காரம் மட்டும் இசையெனப் பெய்துகொண்டிருந்த என் செவிக்குள் மழை மெல்ல ஒழுகிக் கொண்டிருப்பதை உணர்ந்தபடி இருந்தேன். கடைசியாக வானவில் பார்த்தது என் நினைவில் இல்லை. மழையின் ஸ்பரிசம் கூட மறந்து தான் விட்டிருந்தேன். கடுங் கோடை மட்டுமே வெகுநாட்களாய் என்னைக் குடித்துக் கொண்டிருக்கையில் என்னை மறந்து போய் விட்டிருந்த மழையை எப்படி நம்ப முடியும் .
அதனால் நிச்சயம் தெரியும் இது கனவென்று.
உனக்கான கடிதங்களை மென்று மென்று விழுங்கி உடலின் ஏதோ ஒரு பகுதியில் , ஆலகால விஷமென பதுக்கிவிட்டிருந்த என் கண்களில் நீராய் தப்பியோடிக் கொண்டிருந்தன அவைகள். என் உயிர் வற்றிப் போய் பலநாட்களாகி இருக்கையில் எப்படி நம்புவது வழிவது வெறும் நீரென்று.
கண்களுக்கும் தெரியும் இதுவெறும் கனவென்று.
வெகு நாட்களாய் உனக்கென காத்திருந்து இற்றுப் போயிருந்த கதவில் , கேட்கும் வளையோசை உன்னுடையாதாக இருக்க வாய்ப்பில்லாத பொழுது , கதவு திறந்த என் முன் நிற்பது மட்டும் எப்படி நீயாக இருக்கமுடியும். வெகுநாட்களாய் நானே கூட உடனில்லாத நான் மட்டும் இருப்பது , சுற்றிலும் எதிரொலிக்கும் வெறுமைக்கும் தெரியும் என்பதால் , நீயில்லாத வீடென்று புலம் பெயர்ந்து கொண்டிருக்கும் சிலந்திகளுக்கும் தெரியும் ,இது கனவு மட்டுமேயென்று.
உடனிருக்கப் பிரியமின்றி கனவுகள் கூட பாதியில் சென்றுவிட்ட தருணத்தில் , இனியும் உறங்குவதில் அர்த்தமில்லையென விழித்திருந்தேன்.
வழக்கத்திற்கு மாறாக குளுமையை உணரமுடிந்தது என்னால். கண்கள் கூட சிவந்திருப்பதாய்த் தான் நம்ப வைக்க முயன்று கொண்டிருந்தது கண்ணாடி. கதவுகள் கூடத் திறந்து காற்றில் ஆடிக்கொண்டிருந்தன. வீதி முழுதும் நனைந்திருப்பதைக் கண்டேன். மழை பெய்து கொண்டிருக்கையில் உறங்கிக் கொண்டிருந்த என்னைக் கேலி செய்வது போலிருந்தது , இரவு முழுதும் சேகரித்து வைத்திருந்த மழையை உதிர்த்துக் கொண்டிருந்த சிட்டுக் குருவியின் செய்கை.
கதவருகே உடைந்து சிதறியிருந்த கண்ணாடித் துண்டுகளைக் கண்ட தருணத்தில் தான் , மார்பில் அடித்தபடி சகதியாகிப் போயிருந்த தெருவின் வழி ஓடத் துவங்கினேன் உன் கால் தடங்களைத் தேடியபடி.
——————————————————————-
ஒரு பெருமூச்சின் மொழிபெயர்ப்பாய் படர்கிறது இக்கடிதம்.. நன்று..
LikeLike
வெகுநாட்களுக்குப் பின் சென்னையில் மழை பெய்த காலையன்றே எழுதப்பட்டிருக்கவேண்டியது. எவ்வளவு உண்மை என்பது என்னிடம் மட்டும்.
LikeLike
நன்றுன்னா இனிமே இந்த மாதிரி எழுதாதன்னு தான அர்த்தம் ?? 😉
LikeLike
வழக்கம் போல அருமை…
அந்த நன்றுக்கு கண்டிப்பாக நீங்கள் நினைக்கும் அர்த்தம் இல்லை. நன்று…. 🙂
LikeLike
// அந்த நன்றுக்கு கண்டிப்பாக நீங்கள் நினைக்கும் அர்த்தம் இல்லை. நன்று…. 🙂 //
நன்றி நண்பரே 🙂
LikeLike