Tags

அம்மாவும் நீயும் …

 

 

 

உன்னைப் பற்றி நிறைய சொல்லியிருக்கிறேன் அம்மாவிடம். எப்பொழுதும் உன் பெயரைச் சரிகமபதநி எனச் சங்கீதமாய் சுரம் பிரித்துச் சொல்வதிலிருந்து தொடங்கும் அது. கூடவே உன் பெயரோடு என் பெயரை இணைத்துச் சொல்லுவாள் அவள்.

 

எல்லாமே விளையாட்டு தான் அவளுக்கு. என் கவிதைகள் எப்பொழுதுமே அவளுக்குக் கேலிப்பொருட்கள்.

 

உன் கண்கள் பற்றிச் சொல்ல வாளும், வேலும், மீனும் போதுமா என்பாள். உன் முகம் பற்றிப் பேச நிலா தாண்டி போகமாட்டாயா என சொல்லிச் சிரிப்பாள். எப்பொழுதும் தொங்கும் காதணி , சிரிக்கும் கொலுசுகள் ஏன் எனக் கேட்பாள். எனக்குப் போட்டியாய் உன் பின்னே சுற்றி வரும் பட்டாம்பூச்சிகளைப் பிழைத்துப் போகும்படி விட்டு விடச் சிபாரிசு செய்வாள்.

 

என் கவிதைகள் எதுவுமே தன்னைப் போலில்லாத பொழுது , நான் எப்பொழுதும் உன்னை அவள் போலவே இருப்பதாகச் சொல்லுவது ஏன் எனக் கேட்டு நகைப்பாள்.

 

எல்லாமே விளையாட்டு தான் அவளுக்கு.

 

அதனால் தான் உன்னைப் பற்றியும் , என் காதல் பற்றியும் நான் சொல்லியதை ஒரு போதும் நம்பியதேயில்லை அவள். மிகவும் பிரயாசைப் பட்டு உன் பெயரை நான் உச்சரிக்கும் தருணம் தான் என் நடிப்பின் உச்சம் என்பாள்.

 

அவளைப் போலவே இருப்பதால் தான் என்னவோ , உனக்கும் என் காதல் தெரிவதே இல்லையா ?

 

———————————————————–