Tags

இரவினைக் கொல் …

 

வார்த்தைகள் எல்லாம் சிதறிப் போய் , உள்ளிருந்து உடைத்துக் கொண்டு , கண்கள் கிழிந்து போகும் படி கண்ணீர் பீரிட்டு வருகையில் எப்படி உனக்குக் கடிதம் எழுதுவதுஇருந்தும் இந்த இரவில் உனக்குக் கடிதம் எழுதித் தான் ஆக வேண்டும்.

வெளிர் நீல வானத்தில் மறைந்து கொள்ள மேகமில்லாமல் நிலா அழுவதைப் பார்த்து விட்ட பிறகு  , என் பெயர் எழுதிய நட்சத்திரமொன்று வெடித்துச் சிதறி விண்ணில் சரிவதை நேர் கொண்டு விட்ட பிறகு , தனியே ஒரு பறவை உறக்கம் கொள்ளாது அகாலத்தில் ஓலமிட்டபடி பாதை தெரியாமல் தவித்துப் பறப்பதற்கு சாட்சியாகி விட்ட பிறகு எப்படி உனக்குக் கடிதம் எழுதாமல் இருக்க முடியும்?

நீ கடைசியாய் எனக்கு இட்டுத் தந்த கையொப்பம் என் விரல்களில் ஏறி விளையாடியபடி இருக்கிறது. இன்னொரு புறம் புகைப்படத்திலிருந்து இறங்கிவந்து விடும்படி இறைஞ்சிக் கொண்டிருக்கும் என்னைப் பார்த்து நீ சிரித்துக் கொண்டிருக்கிறாய். போதுமென கண்கள் பொத்திக் கொண்டு வீடு தாண்டி ஓடி வந்தால், இலைகள் எல்லாம் உதிர்ந்து போன கிளைகள் வழி என்னைப் பார்த்துக்கொண்டிருக்கும் நிலா , பொம்மை போல உறங்கிக் கொண்டிருக்கும் உன்னையும் சாளரத்துக் கம்பிகள் வழி பார்த்துக் கொண்டிருக்குமா என நினைக்கச் சொல்லுகிறது. எப்படி உனக்குக் கடிதம் எழுதாமல் இருக்க முடியும்?

நாளையும் இதே போல ஒரு இரவும் நிலவும் உண்டு எனத் தெரிந்து விட்ட பிறகும் எப்படி உனக்குக் கடிதம் எழுதாமல் இருக்க முடியும்?

வேண்டுமானால் எழுதிய கடிதங்கள் அத்தனையும் கிழித்தெறியத் தயார். ஒன்று மட்டும் செய். எப்படியாவது எனக்கான இரவுகளைக் கொன்று விட வழி சொல். நீ இல்லாமல் வெறும் இரவுகளை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறேன் நான் ?

 

———————————————————————–