Tags
காதல் தேவதை
அது ஒரு காலம். கைகளில் கவிதைகளோ கண்களில் காதலோ இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்த காலம். எப்படியாவது காதல் தேவதையைச் சந்தித்து ஒரு காதலியை யாசித்து விடும் கனவு மட்டுமே இருந்தது.
காதலைத் தேடி நான் வெளியே சென்றுவிட்டிருந்த ஒருநாளின் மாலையில் காதல் தேவதை என்னைத் தேடி வீட்டிற்கு வந்திருந்திருக்கிறாள். எதற்காக என்று தெரியவில்லை கொஞ்ச நேரம் காத்து கூட இருந்திருக்கிறாள். நெடு நேரம் பூட்டிய கதவும், சாவி பிரிந்து மௌனித்திருந்த பூட்டும் அவளுக்குச் சலிப்பைத் தந்திருக்கக் கூடும். மாலை மட்டும் பூக்கும் அந்தப் பூவைக் கிள்ளி நொடியில் உன்னைச் செய்து விட்டு, தான் வந்து போனதன் அடையாளமாய் வாசலில் உன்னையும், வானத்தில் நிலவையும் நிறுத்திப் போயிருந்திருகிறாள்.
காதல் தேவதையே கவனித்திருந்திருக்கமட்டாள் வானத்திலும் வாசலிலும் ஒரே அடையாளத்தை விட்டுப் போயிருப்பதை. என் வாசல் வானமாகிவிட்டதா இல்லை வானம் என் வாசலுக்கு வந்துவிட்டதா எனக் குழம்பிப் போய் தான் முதலில் உன்னைப் பார்த்தேன் நான். எனக்கான முதல் கவிதையைச் சந்தித்தது கூட அன்று தான்.
மீட்டப்படாத இசைக் குறிப்புகள், சந்தித்துப் பழக்கமில்லை எனக்கு. உன் ஒவ்வொரு அசைவிலும் காற்றில் எழுதப் பட்டுக் கொண்டிருந்த புதிய இசைக் குறிப்புகள் தொல்லை செய்துகொண்டே குழப்பவும் செய்தன என்னை. இருந்தும் பார்த்ததுமே பிடித்துப் போன உன்னை என்ன செய்வதென்று மட்டும் புரியவில்லை.
காதல் செய்தேன்.
காதல் தேவதை வந்து போன கதையைச் சொன்னாய். அதில் நான் தாமதமாய் வந்ததற்காய் மகிழ்வதற்கான காரணங்கள் நிறைய இருந்தது. ஏன் காதல் தேவதையைக் காக்க வைத்தாய் எனக் கேட்டாய் ? ஒரு வேளை உனக்காக இருக்கலாம் என்ற பதிலே தோன்றியது. காதல் தேவதையைக் காக்க வைக்கலாமா என்றாய் ? ஏன் கூடாதென நீ கேள்வி கேட்ட தொனியின் அழகிற்காகவே பதில் சொல்லத் துணிந்தேன்.
உன் ஒவ்வொரு வார்த்தைகளின் பிறப்பிடமும், சென்று முடியும் முகவரியும் புன்னகையாகவே இருக்க வேறென்ன செய்வது நான், சத்தமில்லாமல் ரகசியமாய் ,அவற்றைச் சேகரித்து வைப்பதைத் தவிர.
எப்படி உன்னை என் எல்லாம் என்று முடிவு செய்ய முடிந்தது என்ற கேள்விக்கான பதில் இன்றும் என்னிடம் இல்லை. எல்லாமாகவும் தோன்றினாய். எதுவும் இல்லாத ஒன்றாகவும் இருந்தாய். எனினும் எப்பொழுதும் உன்னுடனிருக்க மனம் ப்ரியப்பட்டது.
இடியோடு கூடிய மழையோடு முத்தமொன்றையும் நாம் பரிமாறிக் கொண்ட அந்த இரவின் அடுத்த நாளில் தான் நீ காணாமல் போயிருந்தாய். காதல் தேவதை திரும்பி வந்திருந்தாள்.
உன்னைப் பற்றிக் கேட்டதற்கு, தானே வந்துவிட்ட பிறகு வந்து போன அடையாளம் எதற்கு என்றாள். அவளிடம் எப்படிச் சொல்ல நீ தான் எனது அடையாளம் என்பதை.
எதற்காக என்னைத் தேடிக் கொண்டிருந்தாய் எனக் கேட்டு ஓயாமல் பேசியபடி இருக்கும் காதல் தேவதையிடம், அவளைப் போய் விடச் சொல்லி விட்டு, சொல்லிக் கொள்ளாமலே சென்று விட்ட உன்னை இரண்டு அறைகள் தந்து உடனே அனுப்புமாறு கேட்கும் வார்த்தைகள் இதயத்திற்கும் உதடுகளுக்கும் இடையே உழன்று கொண்டிருக்கின்றன.
—————————————————————-
ஏதோ புரிந்த மாதிரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு!!!!!!!!!!
LikeLike
”தானே வந்துவிட்ட பிறகு வந்து போன அடையாளம் எதற்கு” அருமையான வரிகள் நண்பா .
” நன்று” உன் எழுத்துக்கு
தொடர்ந்து எழுது விடாமல்
LikeLike
காதல ஓவியம் !!!
LikeLike
”தானே வந்துவிட்ட பிறகு வந்து போன அடையாளம் எதற்கு ” அருமையான வரிகள்
எழுது தொடர்ந்து விடாமல்
LikeLike
// ஏதோ புரிந்த மாதிரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு!!!!!!!!!! //
Mission completed சரவணா 🙂
LikeLike
நிச்சயமாக அருள் 🙂
LikeLike
ரேவதி !!!
நெஜமாவே நல்லா இருக்கோ ! comment எல்லாம் வந்திருக்கு 😉
LikeLike
நட்பை கொண்டாடுவோருக்கு …
நல் வாழ்த்துகள்(aug 1st sunday )u & ur frinds
சமீப காலத்தில் நம்மிடையே அரிதாகி வரும் வாழ்வியல் கலைகளில்
கடிதம் எழுதுவதும் ஒன்று.
கைபேசி யுகத்தில் அதன் தேவையற்றிருகிறது
மின்னஞ்சலோ, குறும் செய்தியோ , எழுத்துக்கள் வெளிபடுத்தும் வசீகரம்
சொல்வதில் கிடைபதில்லை. .
கணினியோ, காகிதமோ..
கடிதங்கள் அதன்
அழகியலை விட்டு விலகுவது இல்லை..
ஆதலினால் எதன் பொருட்டும் நீங்கள் கடிதம் எழுதுவதை
நிறுத்துவதற்கு அனுமதி இல்லை ..
நீங்கள் முகவரியை
தொலைத்துவிட்ட பிறகும்…
மிக சரியாக வந்து சேர்ந்து விடுகிறது, முகம் தெரியாத பலரிடமும் உங்கள் கடிதங்கள் . ஆனாலும் நீங்கள் தொலைத்த
முகவரிக்குரியவரை ….
….ஏதேனும் பேருந்து நிறுத்தத்தில் , ரயில் நிலையங்களில், வணிக வளாகத்தில் , கல்லூரி வாசல்களில்….
என எதிர்படும் எல்லா முகங்களிலும்
தேடத்தொடங்கிவிட்டேன்.. நான் ..
பிறகு உங்கள் பட்டாம் பூச்சிகளுக்கு பரிசு..
இன்று நட்பாகி இருக்கிறது .
அயல் மகரந்த சேர்க்கை செவ்வனே நடப்பதாக…
LikeLike
நண்பர்கள் தின வாழ்த்துகள் 🙂 உங்களுக்காவேனும் அடுத்த கடிதம் விரைவில் ..
LikeLike
// நீங்கள் முகவரியை
தொலைத்துவிட்ட பிறகும்…
மிக சரியாக வந்து சேர்ந்து விடுகிறது, முகம் தெரியாத பலரிடமும் உங்கள் கடிதங்கள் . ஆனாலும் நீங்கள் தொலைத்த
முகவரிக்குரியவரை ….
….ஏதேனும் பேருந்து நிறுத்தத்தில் , ரயில் நிலையங்களில், வணிக வளாகத்தில் , கல்லூரி வாசல்களில்….
என எதிர்படும் எல்லா முகங்களிலும்
தேடத்தொடங்கிவிட்டேன்.. நான் ..//
அழகாக இருக்கிறது 🙂
LikeLike