Tags

ஊதா நிறப் பூக்கள்

 

 

எனக்கு முன்பு தடதடத்துச் செல்லும் ரயிலில் கையசைத்தபடி சென்று கொண்டிருக்கும் நண்பனைப் பற்றியோ, சுற்றியிருப்பவர்கள் பற்றிய ப்ரக்ஞை எதுவுமில்லாமல் எனை ஆக்கியபடி யாருக்கும் கேட்காமல் செவி வழி உயிர் துளைத்துக் கொண்டிருக்கும் பாடல் பற்றியோ, அதைத் திருடிப் பார்த்த்துவிடும் காதலுடன் எனது உடல் துளைத்துக் கொண்டிருக்கும் பெங்களுருவின் குளிர் பற்றியோ உனக்குக் கடிதம் எழுதும் எண்ணம் துளியும் இல்லை அந்தப் பெண்ணையும் அவள் நண்பர்களையும் பார்க்கும் வரை.

எப்பொழுதும் எனக்குள்ளேயே இருக்கும் உனக்கான காத்திருப்போடு, எனக்கான  ரயிலுக்காகக் காத்திருக்கும் எண்ணம் மட்டுமே அதுவரையிருந்தது.

என்னையே தேடச் சொல்லித் தந்து கொண்டிருக்கும் இருள் ஒன்றும் எனக்குப் புதிதல்ல என்பதால் எனது ரயில் பெட்டியின் இருட்டு என்னை எதுவும் செய்துவிட வில்லை. இருளின் மௌனத்தில் இங்கும் ஒளிந்துகொள்ளலாம் என்ற நிம்மதி மட்டுமே இருந்தது எனது இருக்கைக்குச் செல்லும் வரை.

தன்னைத் தானே எரித்து உருகியபடி காதலின் முதல் பாடம் கற்றுத் தந்த மெழுகுவர்த்தியும் அதன் மஞ்சள் வெளிச்சமும் ரயிலில் புதிதெனக்கு. கைகளில் மெழுகுவர்த்தி பிடித்துக் கொண்டு கொஞ்ச நேரத்தில் உறங்கிவிடலாம் என அனுமதி கேட்ட அவளின் நண்பர்களோ, ஊதா நிறப் பூக்களைக் கைகளில் பற்றிய படி தொந்தரவிற்கு மன்னிப்புக் கேட்ட அந்தப் பெண்ணோ, அசிரத்தையாய் எனது பயணச் சீட்டில் கிறுக்கிக் கொடுத்த நடத்துனரோ எனது கண்களில் இல்லவே இல்லை அப்பொழுது.

முழுவதுமாய் கண்களை மறைத்துவிட்டிருந்தது எனக்கு அறிமுகமான உன் முதல் பிறந்தநாளின் ஞாபகங்கள்.

என்ன வேண்டும் எனக் கேட்ட என்னிடம், இதே போன்ற மஞ்சள் நிற மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் முகம் முழுக்க இனிப்புப் பூசிய புன்னகையுடன்  கேட்டாய் ஊதா நிறப் பூ ஒன்று கிடைக்குமா என்று. கல்லூரி முழுவதும் தேடியும் ஒரு ஊதா நிறப் பூ கூட கிடைக்கவில்லை அன்றெனக்கு. இன்றென் தோட்டம் முழுதும் ஊதா நிறப் பூக்கள். பிறந்த நாட்களும் இருக்கின்றன. வாங்கிக் கொள்ளத்தான் நீயில்லை.

ஒரு நிமிடம் ஒரு நிமிடம் என என்னிடம் கேட்டுக் கொண்டு உன் அலைபேசியின் வாழ்த்துகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தாய். ஏன் உனக்கு வாழ்த்துச் சொல்லுகிறார்கள் என்றேன். என் பிறந்த நாளுக்கு என்னை வாழ்த்தாமல் வேறு யாரை வாழ்த்துவதாம் என்றாய். வாழ்த்த வேண்டியது நீ பிறந்த நாளையல்லவா எனச் சிரித்து, நீ எவ்வளவு கேட்டும் அன்று முழுதும் உனக்கு வாழ்த்துச் சொல்லாமல் இருந்தேன்.

இப்பொழுதும் கூட உன் அலைபேசி வாழ்த்துகளைக் காதில் பாடியபடி இருக்கலாம். வாழ்த்தச் சொல்லும் ஆசையுடன் எனைக் கொன்று கொண்டிருக்கிறன உன் அலைபேசி எண்கள்.

வாழ்த்துவதற்கு உன் பிறந்தநாள் மட்டுமே என்னுடன் இருக்கிறது இன்று.

——————————————————————–