Tags
1
“Love does not begin and end the way we seem to think it does. Love is a battle, love is a war; love is a growing up. “
— James Baldwin
நின்று கொண்டிருந்த ரயிலொன்றின் புகையினூடே அவள் உருவம் ஒரு முறை தோன்றி மறைந்து போனது. சக்கரம் நின்ற பிறகு முழு ஒரு ருபாய் நாணயத்தைப் போடவும். சிகப்பு வெள்ளைச் சக்கரம் சுற்றி நின்றது. ஒரு ரூபாய் நாணயம் ஒரு நொடியில் அவளைப் பார்த்த கணத்தில் நான் தொலைந்தது போலவே தொலைந்து போனது.
“ஹேய் நீ கொஞ்சம் சதை போட்டன்னு நெனைக்கறேன் “
“எங்க ?” இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு கேட்டாள்.
“அங்கயே தான் “
“கெட்ட பையன் நீ .. அங்க எல்லாம் ஏன் பாக்கற?” கோபம் போன்ற கோபமில்லா பார்வை பார்த்தாள்.
“என் தப்பு இதுல என்ன இருக்கு .. நியாயமா பார்த்தா பொடவை கட்டின உன்னை நீயே தான் திட்டிக்கணும்“
“திட்டறேன் .. திட்டறேன் .. நான் ஒன்னும் வெயிட் போடல .. அதே அம்பத்தாறு தான் “
“நாலு கிலோ கூடிருக்க ..” இறக்கி விட மனமில்லாமல் தூக்கியபடியே நின்றிருந்தேன்.
“ச்சீ .. கீழ இறக்கிவிடு .. “
வாக்குவாதத்தின் முடிவில் கிண்டி ரயில் நிலையத்தின் எடை பார்க்கும் இயந்திரத்தின் அருகில் இருந்தோம். என் பையில் இருந்து ஒரு ருபாய் நாணயத்தை எடுத்துப் போட்டாள். எனது மனதைப் போடவே ஒரு முறை துடித்து அச்சிடப்பட்ட அட்டையைத் துப்பியது அது. அட்டையை எடுத்துப் பார்த்தவள் கைகளுக்குள் ஒளித்துக் கொண்டாள்.
“இப்போ எதுக்கு மறைக்கற .. ஒழுங்கா காட்டு ..”
“ம்ம்ஹீம் .. மாட்டேன் … உன் மேல உனக்கே நம்பிக்கை இல்லியா .. “
“கண்ணா பின்னான்னு காட்டிருச்சோ ..? “
“நீ மட்டும் என்ன .. நீயும் தான் வெயிட் போட்ட ..”
“அப்படியா … எவ்ளோன்னு சொல்லு பாப்போம் .. ” கைகள் இரண்டையும் விரித்துக் கொண்டு சொன்னேன்.
மேலும் கீழும் பார்த்தவள் “தொண்ணூறு” என்றாள்.
“இது போங்கு.. ஒழுங்கா தூக்கிப் பார்த்து சொல்லு ..”
“ஆஹா .. ஆசை தான் .. ஒழுங்கா மெஷின் மேல ஏறி நில்லு ” இது போன்ற பாவனைகளை எல்லாம் எந்த தேவதையிடமிருந்து கற்றுக் கொள்ளுகிறாளோ !
என்னைப் போலவே ஏமாற்றத்துடன் பெருமூச்சுவிட்டது இயந்திரம்.
“பயணிகள் கவனத்திற்கு…ஹைதராபாத் செல்லும் … ஹைதராபாத்……எக்ஸ்பிரஸ்….இன்னும் …..சற்று நேரத்தில்…. இரண்டாவது …..நடைமேடையில்….. இருந்து ……புறப்படும்.” ஹிந்திக்குத் தாவியது இயந்திரப் பெண்குரல்.
எனது பெட்டியில் ஏறிக் கொண்டு கதவின் பின்புறம் ஆர்வமாகப் பார்த்தேன். அவள் ஒளிந்திருக்கவில்லை. எனது கம்பார்ட்மெண்டில் ஒரு தம்பதியினரும் அவர்களது குழந்தையும் உட்கார்ந்திருந்தார்கள். எனைப் பார்த்ததும் புன்னகைத்தார்கள்.
“எஸ் ஃபிப்டீன் ? ” என்றேன் .
“வெண்ணிலா ! இங்க வந்து உட்காரு .. அது அங்கிள் இடம் .. “
“மாட்டேன் .. ஜன்னல் சீட் எனக்கு தான் வேணும் .. ” எல்லா வெண்ணிலாக்களுக்குமே ஜன்னலோர இருக்கை பிடிக்குமோ .. !
“பரவா இல்லைங்க … நான் இங்கயே உட்கார்ந்துகறேன் .. “
“தேங்க்ஸ் அங்கிள் .. ஐ அம் வெண்ணிலா … “
வெண்ணிலா … வெண்ணிலா . முதல் முறை இந்தப் பேரைக் கேட்க எவ்வளவு காத்திருக்க வேண்டியிருந்தது.
“கியூட் நேம் .. நான் பிரபு ..”
“அப்போ நான் கியூட் ஆ இல்லியா “
“ஹய்யோ .. குட்டி ஏஞ்சல் மாதிரி இருக்க .. ” இந்த வெண்ணிலாக்களுக்குத் தான் எத்தனை முகங்கள்.
“ஹலோ பிரபு .. நான் கார்த்திக் .. இந்த வாலோட அப்பா .. இவ ஹரிணி .. இந்த குட்டி ஏஞ்சலோட ஒரிஜினல் வெர்ஷன் “
கொஞ்ச நேரத்தில் வேலை , சொந்த ஊர் என்று சகலத்தையும் பேச ஆரம்பித்துவிட்டோம். அவர்களின் அன்யோன்யம் மிகவும் பிடித்திருந்தது. பொறாமைப் படவைத்தது. இந்நேரம் எங்களுக்கும் ஒரு குட்டி வெண்ணிலா இருந்திருக்கக் கூடும்.
எல்லா வெண்ணிலாக்களுக்குமே தூங்குவதற்கு தேவதைக் கதைகள் தேவைப்படுகின்றது. அவர்களைப் பற்றிய கதைகளை அவர்களே கேட்பதற்குத் தான் எத்தனை ஆர்வம் !
” ஒரு அழகான இளவரசி இருந்தாளாம் . அவளோட சித்தி ரொம்ப கொடுமைகாரியாம் .. அவ கிட்ட ஒரு மாயக் கண்ணாடி இருந்ததாம் “
“ஸ்னோ வைட் கதை .. ஏற்கனவே சொல்லிட்ட ..”
“சின்ரெல்லா வும் சொல்லியாச்சு ..”
“கடைசில அந்த இளவரசி ஜடைய வெட்டிறுவாங்க தானே .. இதுவும் தெரியும் .. “
“எத்தன தடவ தான் பிநோலோப் கதையவே சொல்லுவா …”
ஹரிணி களைத்துப் போயிருந்தாள்.
“அவ்ளோ தான் போ .. இதுக்கு மேல எந்த கதையுமே கிடையாது … “
“ஹ்ம்ம் .. எனக்கு கதை கேக்கலைன்னா தூக்கம் வராது .. அப்பா நீயாவது சொல்லு “
“நானா .. எனக்கு தெரிஞ்ச ஒரே தேவதை உங்க அம்மா தான் .. அந்த கதையையும் நெறைய தடவ சொல்லியாச்சு “
நான் சிரித்தேன்.
“அங்கிள் .. உங்களுக்கு எதாவது தேவதை கதை தெரியுமா ?”
சில கேள்விகள் நம்மிடம் ஏன் கேட்கப்படுகின்றன என்பது நமக்கே தெரியாது. ஒருவேளை வெகுகாலமாக நமக்கு நாமே கேட்டுக்கொள்ள விருப்பப் பட்டிருந்த கேள்வியாகக் கூட அது இருக்கலாம். அதற்கான பதிலும் நமக்கு நாமே சொல்லிக் கொள்வதாக இருக்கலாம்.
அந்தக் குழந்தை பெயர் வெண்ணிலா என்பதாலா இல்லை கார்த்திக் ஹரிணி எங்களை நினைவூட்டியதாலா இல்லை யாரிடமாவது கொட்டித் தீர்க்க வேண்டும் என்ற வெகுகால மன அழுத்தமோ என்னைக் கதை சொல்லத் தலை ஆட்டச் செய்தது.
எத்தனை கேள்விகள் வெண்ணிலாக்களிடம் !
“நீங்க பாத்திருகீங்களா அந்த ஏஞ்சல?”
“இந்தக் கதைல வர இளவரசனே நான் தான் ..”
“ஹை ..! அந்த ஏஞ்சலுக்கு விங்க்ஸ் இருந்ததா ..?”
“இல்ல ஆனா அவ நடக்கும் போது துப்பட்டா அழகா காத்துல பறக்கும் ..”
“மந்திரக்கோல் ?”
“அதுக்கு பதிலா ஒரு அழகான செல் போன் எப்பவுமே அவ கைல இருக்கும் .. “
” வைட் அண்ட் வைட் டிரஸ் ?”
“நான் முதல் தடவ பார்த்தப்போ அவ நீல கலர் சுரிதார் போட்ருந்தா ? “
“இது எதுவுமே இல்லாம எப்படி தேவதைன்னு சொல்றீங்க ?”
“நீயே பார்த்திட்டு சொல்லேன் … ? ” பர்சில் இருந்த புகைப்படத்தைக் காட்டினேன்.
“ஹய்யோ .. தேவதை மாதிரி இருக்காங்க …”
“சொன்னேன் ல … “
“அவங்க பேர் என்ன ?”
“வெண்ணிலா “
காத்திக்கும் ஹரிணியும் ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். மந்திரவாதி வந்து இளவரசியைத் தூக்கிச் செல்லும் முன்னமே சின்ன வெண்ணிலா தூங்கியிருந்தாள்.
–தொடரும்
வாவ்.. அருமையான தொடக்கம்.. நீண்ட நாள் கழித்து எழுதுவதான தயக்கம் எங்கயும் தெரியல.. இப்பதான் திரும்பவும் ஃபார்முக்கு வந்திருக்க நீ.. 🙂
—-
அப்படியே படமா எடுக்கலாம்னு படுது. 😉
—
தொடர்ந்து வரட்டும்
LikeLike
வெண்ணிலா நாட்கள் 🙂 வேறென்ன சொல்ல ..
வழக்கம் போல நீ என்ன சொல்லப் போறியோன்னு தான் பார்த்திட்டு இருந்தேன் .. உன் comment பார்க்க ரொம்ப உற்சாகமா இருக்கு .. 🙂
அடுத்த வியாழன் அடுத்த பகுதி …
LikeLike
Story is superb…
LikeLike
Impressive ..
edharathamana varikal .
சில கேள்விகள் நம்மிடம் ஏன் கேட்கப்படுகின்றன என்பது நமக்கே தெரியாது. ஒருவேளை வெகுகாலமாக நமக்கு நாமே கேட்டுக்கொள்ள விருப்பப் பட்டிருந்த கேள்வியாகக் கூட அது இருக்கலாம். அதற்கான பதிலும் நமக்கு நாமே சொல்லிக் கொள்வதாக இருக்கலாம்.
LikeLike
Thanks Bro 🙂
LikeLike