Tags


And think not you can Direct the course of love, For love, If it finds you worthy, Directs your course.
                                                                                                 Kahlil Gibran

 

அந்த இரவு என்னால் நிச்சயமாக மறக்க முடியாதது.

கண்கள் மூடிக்கொண்டு படிக்க முடிகிற ஒரே புத்தகம் கனவு தானே. எத்தனையோ காட்சிகள் என்னறையின் இருளின் ஊடாக கண்களில் விரிந்து கொண்டிருந்தன. எல்லா காட்சிகளிலும் நானும் வெண்ணிலாவும். இடங்களும் பொருட்களும் ஏவல்களும் மாறினாலும் எல்லாவற்றிலும் நானும் வெண்ணிலாவும் மட்டும்.

எனது அலுவலகத்தின் மொட்டை மாடியில் இருந்தோம். வானம் முழுதும் நிலா அடைத்திருந்தது. அவளைத் தழுவிய காற்று வேண்டா வெறுப்பாக என்னையும் மோதிச் சென்றது.

“இன்னும் எவ்ளோ நேரம் தான் பேசாமயே நிக்க போற? ” அவள் கிளம்புவது போல திரும்பினாள்.

நான் மெளனமாக நின்றிருந்தேன். மெளனமாக மட்டுமே நின்றிருந்தேன். எவ்வளவு முயன்றும் என்னால் எதையும் பேச முடியவில்லை. வாயைத் திறக்க முயன்றேன். ஒரு வார்த்தையும் வரவில்லை.

கடைசியில் மிகவும் பிரயாசைப் பட்டு வாயைத் திறந்தேன்.

அவ்வளவு தான் கனவு கலைந்திருந்தது. வெகு நேரத்திற்கு அந்தக் கனவையே நினைத்துக் கொண்டிருந்தேன். ஏனோ மனது பாரமாக இருந்தது. நான் என்ன சொல்வதற்காகக் காத்திருந்தாள் அவள்? நான் ஏன் எதுவும் சொல்லாமல் நின்றுகொண்டிருந்தேன்? கடைசியில்  என்ன சொல்வதற்காக வாயைத் திறந்தேன்? நிறைய ஏன்கள் மனதை அழுத்திக் கொண்டிருந்தன.

ஆனால் இன்னும் கொஞ்ச நேரத்தில் அவளைப் பார்க்கப் போகிறோம் என்கிற எண்ணமே குளுகோன் – டி  குடித்தது போல் இருந்தது. கடைசியாக காலை ஆறு மணியை இதற்கு முன் எப்பொழுது பார்த்திருந்தேன் என்று சுத்தமாக நினைவில் இல்லை. அன்றைய ஆறு மணி ரம்யமாகவே இருந்தது. குளித்துக் கிளம்பி மறக்காமல் அடையாள அட்டையை எடுத்துக்கொண்டு வீட்டைப் பூட்டிய பொழுது மணி ஏழு நாற்பது. டிராபிக் அந்த நேரத்திலும் நிறையவே இருந்தது. கிண்டியிலிருந்து மத்திய கைலாஷ் வருவதற்குள்ளாகவே மணி எட்டைத் தாண்டியிருந்தது.

வண்டியைப் பார்க் செய்துகொண்டிருக்கும் போது மல்லிகாவிடம் இருந்து அழைப்பு வந்தது.

“ஹ்ம்ம் .. சொல்லுங்க மல்லிகா ”

“எங்கடா இருக்க ?”

“ஆபீஸ் வந்தாச்சு .. கீழ பார்கிங் ல இருக்கேன் ”

“ரொம்ப நல்லதா போச்சு .. அப்படியே வண்டிய எடுத்திட்டு சிறுசேரி ஆபீஸ் போய்டு .. கிளைன்ட் மீட்டிங் இருக்கு .. நான் ரெண்டு நாள் வர மாட்டேன் .. ஸோ நீ தான் எனக்குப் பதிலா அட்டெண்ட் பண்ற .. ”

“ஒன்னும் பிரச்சனை இல்ல ..எவ்ளோ நேரம் மீட்டிங் இருக்கும் ?”

“சுமார் நாற்பத்தெட்டு மணி நேரம்.. இன்னைக்கும் நாளைக்கும் .. ரெண்டு நாள் முழுக்க நீ அங்க தான் இருக்கணும் ..”

“என்னது ரெண்டு நாள் முழுக்கவா ?”

“ஆமா .. எண்டா பதர்ற ? ஒன்னும் பிரச்சனை இல்லைன்னு சொன்ன …”

“இல்ல நீங்க வேற இருக்கமாடீங்க .. வெண்ணிலாவுக்கு நாளைக்கு கிளைன்ட் இண்டர்வியூ வேற இருக்கு ..ட்ரைனிங் வேற தரணும் ..”

“குரு கிட்ட பேசிட்டேன் .. அதெல்லாம் அவன் பார்த்துப்பான் .. நீ வழக்கம் போல கர்ச்சீப் எடுத்து தொடச்சிட்டு சிறுசேரி போய் சேரு .. நியாயமா இப்படி உனக்கொரு வாய்ப்பு குடுத்ததுக்கு நீ எனக்கு தேங்க்ஸ் சொல்லணும் ..”

“ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்பத் தேங்க்ஸ் மல்லிகா .. நீங்க எனக்கு பண்ண உதவிய எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறக்கவே மாட்டேன்”

அடுத்த ஒருமணி நேரத்தில் சிறுசேரியில் இருந்தேன்.

“வெயிட் .. வெயிட் .. வெயிட் .. குரு யாரு ” ஹரிணி கேட்டார். கார்த்திக் என்னைப் பார்த்து சிரித்தார். நான் பரவாயில்லை எனும்படி தலையசைத்தேன்.

குரு.

அவன் என் நண்பனா இல்லை எதிரியா என்று எனக்கு இதுவரை புரிந்ததில்லை. எனக்கு இரண்டு மாதங்கள் ஜுனியர். அதுவரையிலுமே இரண்டு முறை அவனது வாய்ப்புகளை எல்லாம் நான் பறித்துவிட்டதாக மல்லிகாவிடம் புகார் செய்திருந்தான். அலுவல் குறித்தது தவிர நாங்கள்  இருவரும் எதுவும் பேசிக் கொள்வதில்லை. டீம் மீட்டிங்கில் நான் சொல்லும் எதற்கும் கண்களை மூடிக் கொண்டு மாற்றுக் கருத்து சொல்பவன். வெண்ணிலாவிடம் பழகுவதற்கு கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பு போன கவலையை விட இவன் ட்ரைனிங் கொடுத்து அவள் தேற வேண்டுமே என்ற கவலையே அதிகம் இருந்தது.

அமெரிக்காவில் இருந்து வந்திருந்த ஒரு வயதான வெள்ளைக் கும்பலுக்கு சாம்பிராணி புகை போட்டு ஒரு மிகப் பெரிய குல்லாவை மாட்ட வேண்டிய பொறுப்பு இருந்தது. அந்தக் குல்லாவை போட வேண்டிய குழுவில் நானும் ஒருவன். அந்த இரண்டு நாட்கள் வேறெதையும் யோசிப்பதற்கு கூட நேரம் இல்லை. வெண்ணிலா பற்றி வேறு யாரிடமும் கேட்கவும் முடியாது. மல்லிகாவிடம் கேட்டால் கேலி செய்தே சாகடித்துவிடுவார். குருவிடம் கேட்க இஷ்டம் இல்லை எனக்கு.

இரண்டு நாட்கள் பேசோ பேசென்று பேசி, அவர்களுக்கு குளிர் ஜுரம் வர வைத்து, வெற்றிகரமாக குல்லாவை மாட்டி அவர்களை விமானத்தில் ஏற்றி சயோனாரா சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்த போது நள்ளிரவைத் தாண்டியிருந்தது. அன்றைய மாலையில் வெண்ணிலாவிற்கு நேர்முகத் தேர்வு நடந்திருக்கும். அவள் தேர்வானாளா இல்லையா என்று ஒரே கவலையாக இருந்தது. ஒருவேளை நான் இனி அவளைப் பார்க்க முடியாமலேயே கூட நேரலாம் என்ற எண்ணமே தூங்கவிடாமல் செய்தது. எதாவது தவறாக நடந்தால் குருவைக் கொன்று விடுவது என்று முடிவு செய்துவிட்டு , எப்படிக் கொலை செய்யலாம் என யோசிக்கும் முன்பே தூங்கிப் போனேன்.

குருவுக்கு ஆயுள் கெட்டி.

மறுநாள் நான் அலுவலகம் சென்ற பொழுது வெண்ணிலா, குருவின் கியூபில் உட்கார்ந்திருந்தாள். ஒருவேளை இன்னமும் இண்டர்வியூ முடியவில்லையோ. மிகவும் இயல்பாக குருவின் கணினியைப் பார்த்தேன். யெஸ். மனதிற்குள் குதித்துக் கொண்டேன். குரு எங்களது ப்ராஜெக்ட்டின் செயல்பாடுகள் பற்றிய வரைபடத்தை வைத்து விளக்கிக் கொண்டிருந்தான். கிட்டத் தட்ட குருவிற்கு நெஞ்சுவலி வந்திருக்க வேண்டும். நான் அவனைப் பார்த்து புன்னகைத்தேன். அவனும் பதிலுக்கு புன்னகைத்தான். வெண்ணிலா கணினியை விட்டுக் கண்களை எடுக்கவே இல்லை.

வழியில் வழக்கம் போல ரம்யா குட் மார்னிங் என்றாள் மதியம் ஒரு மணிக்கு.

எனது இடத்திற்குச் சென்றேன். மல்லிகாவிடம் கேட்டு உறுதி செய்து கொள்ளவேண்டும் வெண்ணிலா தேர்வாகிவிட்டாளா என்பதை. ஆனால் அதற்கு முன்பு இரண்டு நாட்கள் நடந்த மீட்டிங் பற்றியும் எங்களுக்கு வரப்போகும் லாபத்தைப் பற்றியும் , எப்படி அவர்களின் நாற்காலிகளின் கீழ் திறமையாகக் குழி பறித்தேன் எனவும் விளக்கிவிட்டு கொஞ்சம் கூட சந்தேகமே வராமல் இயல்பாகக் கேட்டேன் மல்லிகாவிடம் ,

“அப்பறம் .. என்னாச்சு இண்டர்வியூ ?”

மல்லிகா கொஞ்ச நேரம் பார்த்தார் , பின் வழக்கம் போலக் கைக் குட்டையை எடுத்து நீட்டினார்.

“இனிமே உனக்கு அடிக்கடி குடுக்க வேண்டியிருக்கும் ன்னு நெனைக்கறேன் .. ஒரு குட் நியூஸ் , ஒரு பாட் நியூஸ் .. எத மொதல்ல சொல்ல ..”

“”குட் நியூசையே சொல்லுங்க “

“அவ செலக்ட் ஆகிட்டா .. கிளைன்ட்ஸ் எல்லாம் பயங்கர இம்ப்ரெஸ்டு “

அசுவாரசியமாக “ ஓ ! நல்லது .. கெட்ட நியூஸ் என்ன ?” என்றேன்.

“அவள குருவோட மாட்யூல்ல போட்ருக்கேன் ..”

“என்னது அவன் மாட்யூல்லயா .. வெளையாடறீங்களா .. ரெசுயூமே எல்லாம் நாங்க எவாலுவேட் பண்ணுவோம் .. ரிசோர்ஸ் அவன் டீம்கா .. நான் ஒத்துக்க மாட்டேன் .. ” அப்படி தான் நான் சொல்லியிருக்க வேண்டும்.

“இதுல கெட்ட நியூஸ் என்ன இருக்கு .. எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல .. எல்லாமே நம்ம டீம் தான .. ” மிக நல்ல நல்லவன் போல பணிவாக சொன்னேன்.

“ஸோ ! உனக்கு எந்த பிரச்னையும் இல்ல …”

உதடுகளைப் பிதுக்கித் தோள்களைக் குலுக்கினேன்.

“குரு !” மல்லிகா அருகே வந்தான்.

“பிரபுகிட்ட பேசிட்டேன் .. அவனுக்கு எந்த பிரச்னையும் இல்லையாம் .. வெண்ணிலா உன் மாட்யூல்லயே வேலை செய்யட்டும் ..”

இப்பொழுது எனக்கு நெஞ்சுவலி வந்தது. குரு என்னைப் பார்த்துப் புன்னகைத்தான்.

குரு போன பின்பு மல்லிகாவிடம் கேட்டேன்.

“நீங்க இப்போ தான் இத முடிவே பண்ணீங்களா ..”

“ஆமா .. உன்கிட்ட சும்மா தான் சொன்னேன் .. ஏற்கனவே முடிவு பண்ணியாச்சுன்னு ..”

“உங்க கர்ஃசீப் கிடைக்குமா ?”

மல்லிகா அடக்க முடியாமல் சிரித்துவிட்டார்.

அடுத்த சில வினாடிகளிலேயே ஜேம்ஸ் பான்ட் வேலையை ஆரம்பித்திருந்தேன்.

நமக்குப் பிடித்த பெண்ணைச் சந்தித்த பின்பு எந்த ஆணும் பண்ணக் கூடிய விஷயம் எது ?

“அந்தப் பொண்ணப் பத்தி தெரிஞ்சிகறது .. கொறஞ்ச பட்சம் என்ன பெயர் ? செல்ஃபோன் .. அட்ரெஸ் … ”

“கரெக்ட் கார்த்திக் .. பேர் , செல்ஃபோன் நம்பர் எல்லாம் அவ ரெஸ்யூமே லேயே இருந்தது … அட்ரெஸ் மட்டும் தான் தெரியணும்  .. ”

ஒரு காமன் ஃபோல்டரில்  எங்களுடைய டீமின் அத்தனை பேரின் விவரங்களும் அடங்கிய எக்ஸ்செல் ஷீட் இருக்கிறது. அதைப் பராமரிக்க வேண்டிய வேலை ரம்யாவினுடையது. டீமில் சேர்ந்து இரண்டு  மாதங்கள் தான் ஆகிறது. இன்னும் கல்லூரி ஞாபகம் போல. ராகிங் செய்யாமலேயே ஒரு சீனியருக்குரிய அத்தனை மரியாதைகளையும் கேட்காமலேயே செய்பவள். சொல்லி சொல்லி இப்பொழுது தான் கை கட்டுவதையே நிறுத்தியிருக்கிறாள்.

எக்ஸ்செல் ஷீட்டைத் திறந்து பார்த்தேன். பாவி மகள் அத்தனை பேரின்  விவரங்களையும் சரியாய் அடித்து வைத்திருந்தாள். இன்று தான் சேர்ந்திருந்ததால் வெண்ணிலாவுடையது மட்டும் இல்லை. அது ஏன் இல்லை எனக் கேட்க முடியாது. ரேண்டமாக ஒரு நான்கு பேரின் விபரங்களை அதில் அழித்தேன்.

ரம்யாவை எனது இடத்திருக்கு வருமாறு சேம்டைமில் பிங் செய்தேன்.

“சேம்டைம்ன்னா ? “

“ கிட்டத்தட்ட கூகிள் சாட் மாதிரி .. எங்க ஆபீஸ் குள்ள எல்லார் கூடவும் பேசிக்கலாம் “

“ ஓ! நாங்க மெசெஞ்சர் யூஸ் பண்றோம் .. ”

“கிட்டத்தட்ட அதே மாதிரி தான் ”

ரம்யா வந்தாள்.

“சார் ” . ஹ்ம்ம் .. அவள் என்னை அப்படி அழைப்பது தான் பழக்கம்.

“டீம் டீடைல்ஸ் ஷீட் எல்லாம் யார் பாத்துக்கறது …?”

“நான் தான் சார் .. எதாவது பிரச்சனையா ?”

“என்ன வேலை பண்ணிருக்க … பாரு பாதி பேர் டீடைல்ஸ் காணோம் ..” இன்னும் ஒரு முறை முறைத்திருந்தால் அழுதிருப்பாள்.

“இல்லைங்க சார் .. நேத்து கூட பார்த்தேன் … சரியா தான் இருந்தது .. யாரோ இப்போ தான் டெலீட் பண்ணிருக்காங்க ..  லாஸ்ட் மாடிஃபைடு டேட் பார்த்தா தெரிஞ்சிரும் ..” பாவி.

“இப்போ கடைசியா நான் தான் பார்த்தேன் .. என் பேர் தான் காட்டும் .. அப்போ நான் தான் பண்ணேன்னு சொல்றீங்களா ..”

“ஹய்யோ நான் அப்படி சொல்லல சார் .. இன்னும் அஞ்சு நிமிஷத்துல எல்லாரோடதும் இருக்கும் ”

“குட் .. யாரையும் மிஸ் பண்ணிடாதீங்க .. முக்கியமா நியூ ஜாய்னீஸ் .. ”

“கண்டிப்பா சார் ..”

சொன்னது போலவே செய்திருந்தாள். சீட்டின் கடைசி வரியில் இருந்தது வெண்ணிலாவின் விவரங்கள். எனக்குத் தேவையானது இரண்டே இரண்டு .. பிறந்த நாள் ..  என்னைவிட மூன்று வயது சின்னப் பெண்.  இருப்பது நான் இருக்குமிடத்திலிருந்து கொஞ்சம் பக்கம் தான்.

“குட் ஜாப் ரம்யா ” அவளுக்கு பிங் செய்தேன். நான்கைந்து ஸ்மைலிகளை பதிலுக்கு அனுப்பினாள்.

ஒரு வாரம் எப்படிப் போனதென்றே தெரியவில்லை. குருவைத் தவிர்த்து வேறு யாரிடமும் அவள் பேசிப் பார்க்கவில்லை நான். இத்தனைக்கும் டீமில் இருந்த பெண்களிடம் கூட பேசுவதில்லை. மல்லிகா கூட “என்னடா உன் ஆளு காஃபி குடிக்கக் கூப்டா கூட வர மாட்டேங்கறா .. ஓவர் ஹெட்வெயிட் போல ” என்றிருந்தார். நல்ல பெண் . நான் கூப்பிட்ட பொழுது மட்டும் தான் வருவதில்லை என்று நினைத்திருந்தேன் . யார் காஃபி குடிக்கக் கூப்பிட்டாலும் போவதில்லை என யாருக்கோ சத்தியம் செய்திருப்பாள் போல. மீதமிருந்த காஃபி செடிகளும் இப்பொழுது இறந்திருக்கும்.

அன்று மாலை எதிர் பார்க்காத ஆளிடம் இருந்து பிங் வந்திருந்தது. குரு. பிரபு உன்னிடம் தனியாக பேச வேண்டும் . நேரமிருக்கும் பொழுது சொல்லவும் என்று. என்ன குண்டைத் தூக்கிப் போடப் போகிறானோ. வா போகலாம் என பதில் அனுப்பினேன்.

மீட்டிங் ரூம்.

யார் முதலில் பேசுவது என இருவருமே மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தோம்.

குருவே நேராக விஷயத்திற்கு வந்தான்.

“பிரபு , உனக்கு வெண்ணிலாவ பிடிச்சிருக்கா ?”

       தொடரும்

——————————————————————————————————————————