Tags

4

Do you want me to tell you something really subversive? Love is everything it’s cracked up to be. That’s why people are so cynical about it. It really is worth fighting for, being brave for, risking everything for. And the trouble is, if you don’t risk anything, you risk even more.

                                                                                                            Erica Mann Jong

குரு.

சண்டாளன். இதுவரை என்னைத் திட்டுவதற்காகவும், புகார் செய்வதற்காகவும் மட்டுமே வாயைத் திறப்பவன் , என்னைப் பார்த்ததும் நரசிமராவ் முகமூடி எடுத்து மாட்டிக் கொள்பவன், எதற்காக என்னைத் தனியாகக் கூப்பிட்டு வெண்ணிலா பற்றி பேசுகிறான் ? ஒரு வேளை அவளுக்கும் தெரிந்து போயிருக்குமோ ? எல்லாருமா என்னை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் ?  என்னென்னவோ கேள்விகள் தோன்றினாலும் முதலில் தோன்றியது இது தான்.

“என்னது குருவும் வெண்ணிலாவ லவ் பண்ணானா ? ” கார்த்திக்கும் ஹரிணியும் ஒருசேரக் கேட்டார்கள்.

அந்த நினைப்பில் எனக்குக் கொஞ்சம் வியர்க்கக் கூடச் செய்ததாக நியாபகம்.

ச்சே ச்சே அப்படியெல்லாம் இருக்காது என என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டு ஒரு மாதிரி ஆமாம் என்பது போல் தலையசைத்தேன்.

“குட் சாய்ஸ் .. நல்ல பொண்ணு .. ” நெஞ்சில் பாலை வார்த்தான் . அப்பொழுது இவனுக்கு வெண்ணிலா பற்றிய கவலை இல்லை என்றால் ஏன் என்னிடம் தேவை இல்லாத உரையாடல்? அவனே தொடரட்டும் என்று மெளனமாக இருந்தேன்.

“அட்ரெஸ் தவிர அவளைப் பத்தி உனக்கு என்ன தெரியும் ..? ”

அட்ரெஸ்? இந்த விஷயம் எல்லாம் இவனுக்கு எப்படித் தெரிந்தது? மானமே போச்சு.

“எங்க தெரிஞ்சிகறது ? அவ தான் யார் கூடவும் எதுவும் பேச மாட்டேங்கறாளே .. உன்னைத்  தவிர ..”

“ச்சில்  .. விட்டா அடிச்சிருவ போல ..” அவன் சிரித்தது எனக்கு எரிச்சலாக வந்தது. என் சொந்த விஷயம். உனக்கென்ன , போய் வேலையைப் பார் என்று சொல்ல வேண்டும் போல் இருந்தது. சொல்லியும் இருப்பேன். அவன் அடுத்து அப்படி சொல்லியிருக்காவிட்டால் ..

“ கவலைப் படாத .. நான் ஹெல்ப் பண்றேன் .. ”

“நீ எனகென்ன ஹெல்ப் பண்ண முடியும் ? மொதல்ல நீ எனக்கு எதுக்காக ஹெல்ப் பண்ணனும்? உனக்கு தான் என்ன சுத்தமா பிடிக்காதே … ”

“உண்மை தான் .. உனக்கு தெரியாத விஷயம் நெறைய இருக்கு .. உன்ன நான் ரொம்பவே அட்மையர் பண்றேன் .. அதே சமயம் உன்ன  மாதிரி செல்ஃபிஷ் ஆன ஆள நான் பார்த்ததே இல்ல .. என்னோட நெறைய வாய்ப்புகள நீ எடுத்திட்டு இருக்க .. ஆனா என்ன செய்ய .. உனக்கு ஹெல்ப் பண்ண சொல்லி ஆர்டர் .. ”

“என்னது ? என்னை நீ அட்மையர் பண்றியா ?…  எனக்கு ஹெல்ப் பண்ண சொல்லி ஆர்டர் வேறையா … யார் .. யார்க்கிட்ட இருந்து …”

கொஞ்ச நேரம் பார்த்தவன் “ மத்தியானம் எல்லாம் குட் மார்னிங் சொல்லும் போது சிரிப்பு வரல உனக்கு ?”

“ரம்யா ?”

ஆம் எனத் தலை அசைத்தான்.

ரம்யா எதற்காக எனக்காக சிபாரிசு செய்ய வேண்டும். அதுவும் இவனிடம் . அடப்பாவிங்களா .. இந்தக் கதை எத்தனை நாளாய்…

“நீங்க ரெண்டு பேரும் ?”

மறுபடியும் ஆம் என்று தலை அசைத்தான்.

“ஒரு நாளைக்கு இவ்ளோ ஷாக்ஸ் ரொம்பவே அதிகம் … காஃபி குடிக்கப் போலாமா ..?”

பின் என்ன.. அடுத்த பத்து நிமிடங்களில் குரு எனக்கு லவ் குரு ஆகியிருந்தான். அனுபவஸ்தான் இல்லையா.

“ஸாரி ரம்யா .. உங்கள மெரட்டனும்ன்னு எல்லாம் பிளான் பண்ணி எதுவும் பண்ணல .. நீங்களா தான் ”

“ப ..ப் பரவா இல்லைங்க  சார் ”

“இனிமே என்ன சார் .. அதான் எல்லாம் முடிஞ்சு போச்சே ” குருவைப் பார்த்த படி சொன்னேன். அவன் சிரித்தான்.

“பரவா இல்லங்க சார் .. நான் சார்ன்னே கூப்டறனே ” நான் மறுபடியும் குருவைப் பார்த்தேன்.

“ஒரு விஷயம்தாண்டா புரியலை .. உன்ன பார்த்து ஏன் இவ்ளோ பயப்படறா ..?”

“ரொம்ப வார்ற பாத்தியா .. சரி உங்க கதைக்கு வருவோம் .. இந்த ரெண்டு மாசத்துல எப்படி …”

“இங்க இல்ல .. காலேஜ்ல இருந்தே .. எனக்கு ஜூனியர் இவ ..”

“வெயிட் .. எனக்கு இப்போ நியாபகம் வருது .. இவ ரெஸ்யுமே நம்ம ப்ராஜெக்ட்கு  ப்ரோபோஸ் பண்ணாதே நீதானே .. அடப்பாவி உன்னப் போய் நல்லவன்னு நம்பினேன் பாரு .. ”

அடுத்த சில நிமிடங்களில் ஆபரேஷன் வெண்ணிலா ஆரம்பமாகியது.

குரு நான் நினைத்து போல அல்ல. நிஜமாகவே லவ் குரு தான்.  ஒரே ஒரு வார்த்தை தான் சொன்னான். அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் கூட தந்திராத கீதா உபதேசம்.

பேஸ் புக்.

அவளது ஜிமெயில் ஐடி என்னிடமிருந்தது. அதை வைத்துத் தேடினேன். அவளைப் பற்றிய ப்ரோஃபைல் பகுதியே வண்ணமயமாக இருந்தது. அவளுடைய நண்பர்கள் பட்டியலில் தேடினேன். அதில் எனது நிறுவனத்திலேயே வேலை பார்ப்பவர்கள் கொஞ்சம் பேர் இருந்தனர். என்ன செய்ய ஒன்னரை லட்சம் பேர் வேலை செய்யும் நிறுவனமல்லவா எங்களுடையது. கும்பலில் கல் எறிந்தால் அது நிச்சயம் என் சக அன்பர்கள் மேல் விழுவதற்கான நிகழ்தகவு அதிகமே .

ஆனால் அவர்களில் யாருமே என்னுடைய அலுவலகம் கிடையாது. எல்லாருக்கும் நண்பர் கோரிக்கை அனுப்பி வைத்தேன். எல்லாருடைய தகவல்களும் வெகு சீக்கிரம் கிடைத்தது. அதில் சிலரை விலக்கி சிலரை மட்டும் பொறுக்கி கடைசியில் ஒரே ஒருவனை மட்டும் தேர்வு செய்தேன்.

மன்சூர்.

காரணம். வெண்ணிலாவும் அவனும் ஒரே பாட்ச் .. இருவருமே தங்களது விருப்பத்தில் நடனத்தைக் குறிப்பிட்டிருந்தார்கள். எங்கள் அலுவலகத்தில் நடனத்துக்கென்று இருந்த கிளப்பின் பொறுப்பாளர் எனக்குத் தெரிந்தவன்.

ராஜ்.

ராஜ் அடுத்த நாள் தற்செயலாக அனுப்புவது போல மன்சூருக்கு மின்னஞ்சல் அனுப்பினான். உங்களுக்கு நடனமாட விருப்பமா ? எனில் இதற்கு முன்பு தாங்கள் ஆடிய நடனத்தை மாதிரிக்கு குறுந்தட்டில் பதிவு செய்து வரவும். கல்லூரி விழாக்களில் ஆடிய நடனம் எனில் நலம். அந்த அஞ்சலின் சாராம்சம் இதுதான்.  

மன்சூருக்கு நடனத்தின் மேல் என்ன ஆர்வமோ எழவோ எனக்குத் தெரியாது. ஆனால் அடுத்த நாள் இரவு என்  மடிணியில் அவனது கல்லூரி விழாவில் ஒரு ஓரத்தில் நின்று அவன் ஆடிய நடனம் ஓடிக கொண்டிருந்தது. அதிலும் அவன் மொத்தமாய் அவுட் ஆப் போகஸ் வேறு. என்ன செய்ய, நாங்கள் கேட்டது கல்லூரி விழாவின் ஒளி நாடா தானே.

என் யூகம் சரி தான். கிளாசிகல் , வெஸ்டர்ன் என எல்லாவற்றிலும் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தாள் வெண்ணிலா. கேமரா மொத்தமும் அவளையே தொடர்ந்து கொண்டிருந்தது . அதைப் படம் பிடித்தவனைத் சபிப்பதா இல்ல வாழ்த்துவதா என்றே புரியவில்லை.

அன்று இரவு முழுவதும் எத்தனை முறை அதை ஓட விட்டிருப்பேன் என்று தெரியவில்லை. அவளா இவள். முகம் முழுக்க அபிநயங்களும் , உதடுகள் முழுக்க புன்னகையுமாக இந்த ஒளிப்படத்தில் ஆடிக் கொண்டிருப்பவளா நான்கு வார்த்தைகளுக்கு மேல் எதுவும் பேசாமல் , கொடுத்த வேலையை மட்டும் செய்துவிட்டு ஒரு இயந்திரப்பதுமை போல அலுவலகத்தில் நான் பார்த்துக் கொண்டிருப்பவள்.

அவளது ஆர்குட் பகுதியில் அவளது நண்பர்கள் எழுதியிருந்த டெஸ்டிமோனியும் அவளைப் பற்றிப் புறம் சொன்னது. அவளைப் போல இனிமையாகப் பழகுபவர்களை யாரும் பார்க்க முடியாது .. வாய் திறந்தாள் ஓயாமல் பேசுபவள் .. நிறைய ஆச்சர்யங்கள் அளிப்பவள் .. அழகாக ஆடுவாள்  .. இன்னும் நிறைய ..

இவர்கள் அத்தனை பேரும் சொல்வது உண்மையென்றால் , வெண்ணிலா ஏன் இப்பொழுது பேசாமடந்தையாக நடிக்க வேண்டும். கொஞ்சம் கோபம் கூட வந்தது.

அடுத்த நாள் ராஜைப் பார்க்க எனது அலுவலகத்திற்கு வந்திருந்தான் மன்சூர். அப்படியே வெண்ணிலாவைப் பார்க்கவும்.

அவனைப் பாய்ந்து ஓடிக் கட்டிப் பிடிக்காத குறை தான். அவள் முதல் முறையாக முற்பத்து இரண்டு பற்களையும் காட்டி நான் பார்த்தது அப்பொழுது தான். அதில் ஒன்று தெற்றுப் பல் வேறு.

என்னிடமே வந்து அரை மணி நேரத்திற்கு அனுமதி வாங்கிவிட்டு மன்சூருடன் காண்டீன் சென்றாள். பின் எனக்கு மட்டும் என்ன வேலை அங்கே. குருவையும் , ரம்யாவையும் கூட்டிக் கொண்டு பின்னாடியே சென்றேன்.

சொன்னால் நம்ப மாட்டீர்கள். அவள் காப்பி குடித்துக் கொண்டிருந்தாள். ஐயோ செடிகளே அநியாயமாக இறந்து போனீர்களே. இல்லை உங்களுக்கு உண்மை தெரிந்து ஒவ்வொரு முறையும் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தீர்களா ?

“ஏன்டா குரு ? இந்த ஸ்பிலிட் பெர்சனாலிட்டி ன்னு எல்லாம் சொல்றாங்களே .. அது மாதிரி எதுனாவது கண்றாவியா இருக்குமோ .. இவ விசில் எல்லாம் அடிப்பன்னு கேள்விப் பட்டப்போ நான் நம்பல … ஆனா இப்போ கேளு .. இவ விசில் என்ன , விட்டா பல்டியே அடிப்பா ..”

அவள் வாயை மூடவே இல்லை. காற்றில் கவிதைகளாகக் கிறுக்கித் தள்ளிக் கொண்டிருந்தாள். புன்னைகை ஒரு இஞ்ச் கூட குறையவே இல்லை. அடுத்த ஜென்மத்தில் மன்சூர் கழுதையாகப் பிறக்க.

“குரு இப்போ நான் என்ன பண்றது …?”

“அவ கூட நீ பேச ஆரம்பிக்கணும் ..”

“எப்படி .. அவ என் டீம் கூட இல்ல ..”

“மல்லிகா ஆன் சைட் போய் ரெண்டு வாரம் ஆகுது .. இப்போ லீட் யாரு  ..? ”

“நான் தான் .. அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ..?”

“டீம் ல எல்லார் கூடவும் ஒன் ஆன் ஒன் மீட்டிங் வச்சியா இது வரைக்கும் ..”

“செம ஐடியா .. உனக்கு மட்டும் எப்படி டா இதெல்லாம் தோணுது ..?”

“இதுல ஒரு ஆச்சர்யமும் இல்ல .. உன்ன விட எல்லா விதத்திலையும் லீட் பொஷிஷனுக்கு தகுதியானவன்  நான் தான் .. ஒரு ரெண்டு மாச முன்னாடி வந்ததால என் இடத்துல நீ இருக்க  ” சலித்துக் கொண்டான் குரு.

அன்றோடு வெண்ணிலா பணியில் சேர்ந்து ஒரு மாதம் ஆகியிருந்தது. மற்ற எல்லாருக்கும் ஒப்புக்கு மீட்டிங் வைத்துவிட்டு வெண்ணிலாவின் முறைக்காகக் காத்திருந்தேன்.

வெண்ணிலா வந்தாள்.

நன்றாக நினைவிருக்கிறது, அன்று அவள் வெள்ளை நிற சுரிதாரில் சில்வர் நிற நிலாக்கள் நிறைய மிதக்கும் பால்வீதி போல உள்ளே நுழைந்தாள். அந்த வீதிகள் மொத்தமும் அலைந்து திரிந்து தொலைந்து போக யத்தனித்த மனதை மிகவும் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டேன்.

அன்று என்னிடம் எந்தத் தடுமாற்றமும் இல்லை. உண்மையில் நிறைய கோபம் இருந்தது.

என்னுடைய முதல் கேள்வியே இப்படித் தான் இருந்தது.

“என்ன பிரச்சனை உங்களுக்கு .. ? இந்த ப்ராஜெக்ட் பிடிக்கலன்னா முதல் நாள் நான் உங்க கிட்ட கேட்டப்போவே சொல்லியிருக்கலாமே..   

அவள் அதை எதிர்பார்த்திருக்கவில்லை.

“அப்…படி…யெல்லாம் எதுவும் இல்லையே ..”

“நீங்க நடந்துகறதெல்லாம் பார்த்தா அப்படித் தெரியலையே ..டீம்ல யார் கூடவும் பேசறதில்ல .. மல்லிகா ட்ரீட்க்கும் வரல .. டீம் லஞ்ச் வரதில்ல .. நீங்க சிரிச்சு கூட நான் பார்த்ததில்லையே .. லுக் .. உங்க வேலைல நான் எந்த தப்பும் சொல்லல .. ஆனா இந்த பீல்ட்ல டீம் வொர்க் ரொம்பவே முக்கியம் ..”

அவள் எதுவும் பேசவில்லை.

“சரி இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க .. நம்ம டீம் ல மொத்தம் எத்தனை பேர் ? ”

“பதினொன்னு .. இல்ல இல்ல பன்னெண்டு”

“தப்பு பதினாலு பேர் .. ”

“எத்தனை பொண்ணுங்க இருக்காங்கன்னாவது தெரியுமா ?”

“தெரியாது … ”

“மொத்தம் உங்க அப்ளிகேஷன் இல்லாம நம்ம ப்ராஜெக்ட்ல எத்தனை அப்ளிகேஷன்ஸ் இருக்குன்னு தெரியுமா ? ”

“த் .. தெரியாது ..”

“லீட் நான் ..என்னோட எக்ஸ்டென்ஷன் நம்பர் தெரியுமா ..”

இல்லை என்பதை தலை அசைத்தாள். தலையைக் குனிந்திருந்தாள்.

“என்னையாவது தெரியுமா ..?” என் குரல் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்திருந்தது எனக்கே தெரிந்தது.

“தெரிஞ்சு என்ன பண்ணப் போறேன் ..” அவள் கண்களில் லேசாக கண்ணீர் துளிக்கத் தொடங்கியது.

“ஐ பெக் யுவர் பார்டன் ..”

“எல்லாரையும் தெரிஞ்சு என்ன பண்ண போறேன் ..” அவள் விசும்பத் துவங்கினாள்.

நான் கொஞ்ச நேரம் பொறுமையாக இருந்தேன். மீட்டிங் அறையின் கதவின் மையத்தில் ஒரு கண்ணாடி ஜன்னல் இருக்கிறது. அதன் வழியாக குரு என்னாயிற்று என சைகை செய்தான். நான் பார்த்துக் கொள்கிறேன் என பதில் சைகை செய்தேன்.

“பாருங்க வெண்ணிலா .. நீங்க அழணும்கறதுக்காக நான் கேக்கலை .. உங்களுக்கு எதோ பிரச்சனைன்னு மட்டும் தெரியுது .. ஏதாவது நீங்க ஷேர் பண்ணனும்னு நெனசீங்கன்னா என்கிட்டே சொல்லலாம் .. ஒரு லீட் ஆ அது என் கடமையும் கூட ”

அவள் என்னிடம் சொல்லுவாள் என்று எந்த நம்பிக்கையில் கேட்டேன் என்று தெரியவில்லை. ஆனால் அவள் சொன்னாள். காரணம் மிகவும் சில்லி .. அப்பொழுது நான் அப்படித் தான் நினைத்தேன்.

கண்களைத் துடைத்துக் கொண்டாள். இது தான் நீ கடைசி முறை அழுவது என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.

“இப்போ நீங்க பாக்கறா மாதிரி எல்லாம் நான் இல்ல .. நான் ரொம்ப ஜோவியலான பொண்ணு தான் ..  ” அதான் தெரியுமே.

“எனக்கு பிரெண்ட்ஸ்னா அவ்ளோ பிடிக்கும் ”

“அதுல என்னங்க பிரச்சனை ..?”

“அது தான் பிரச்சனை ..” அழுது சிவந்திருந்த மூக்குநுனி அழகாக இருந்தது.

“எனக்கு காலேஜ் முடிஞ்சிருசுன்னு என்னால இன்னும் நம்பவே முடியல .. இப்பவும் காலைல எழுந்திருக்கும் போது முதல் விஷயமா பர்ஸ்ட் ஹவர் என்னனு தான் யோசிக்கத் தோணுது .. என் பிரெண்ட்ஸ ரொம்பவே மிஸ் பண்றேன் ..”

”அட இது தான் பிரச்சனையா .. வெரி யூஷுவல் .. நீங்களே பரவாயில்ல .. நான் காலேஜ் முடிஞ்ச பின்னாடி  ஒரு நாள் கைல தட்டை  எல்லாம் எடுத்துட்டு வாசலுக்கு வந்து மெஸ் எங்கன்னு தேடிட்டு இருந்தேன் .. ”

அவள் சிரித்தாள். இன்னும் கண்ணீர் இருக்குமோ என்ற சந்தேகத்தில் மீண்டும் கண்களைத் துடைத்துக்கொண்டாள். அந்தக் கைக்குட்டையை எப்படிக் களவாடுவது என யோசித்தன பொறாமை கொண்ட என் விரல்கள்.

“சரி அதுக்கும் நீங்க இங்க அமைதியா இருக்கறதுக்கும் என்ன சம்பந்தம் ? ”

“இங்க இருக்கற எல்லாரும் பேசற எதோ ஒரு விஷயம் , செய்யற எதோ ஒண்ணு என் காலேஜ் பிரெண்ட்ஸ நியாபகப் படுத்திருவாங்களோங்கற பயம் தான் .. முதல் நாள் ரம்யா எனக்கு ஹாய் சொன்னப்போ பத்து நிமிஷம் ரெஸ்ட் ரூம்ல போய் அழுதேன் தெரியுமா …  அவ அப்படியே என் பெஸ்ட் பிரெண்ட் தீப்தி மாதிரியே இருந்தா .. ” உண்மையான வெண்ணிலா கொஞ்சம் கொஞ்சமாக மேகத்தை விட்டு வெளியே வர ஆரம்பித்து இருந்தாள்.

“எனக்கு அழறது பிடிக்காது .. அதான் .. யார் கூடவும் பேசலைன்னா யாரும் நியாபகத்துக்கு வரமாட்டாங்க தானே .. அதான் நான் யார் கூடவும் பேசறதில்லைன்னு முடிவு பண்ணேன் .. 

அட இந்தக் குழந்தை பிறந்து எத்தனை மாதங்கள் தான் ஆகிறது.

“வ்வரே வா .. ஸோ நீங்க சொல்ல வரது  என்னன்னா உங்க பிரெண்ட்ஸ நியாபக் படுத்திருவோம்ங்கறத்தால  நீங்க எங்க யார் கூடவும் பேசறதில்ல .. 

“ஆமாம் ” ஐயோ அழகு.

“உங்களுக்கு அழறது பிடிக்காது ”

“ஆமாம் ”

“உங்க நண்பர்களோட நினைவுகள் உங்கள அழ வைக்குது ”

“ஆமா… இல்லை இல்லை .. அப்படியெல்லாம் இல்லை .. அதெப்படி என் பிரெண்ட்ஸ் என்ன அழ வைக்க முடியும் ..”

“அதே தான் .. கல்லூரி நினைவுகள் ரொம்பவே அழகானது .. அதால நம்மள அழ வைக்க முடியாது .. சந்தோசம் தான் தர முடியும் நியாபகத்துக்கு வரும் போதெல்லாம் … ஸோ ..”

“ஸோ ?”

“எவ்ளோக் கெவ்வளவு அத நெனச்சிட்டே இருக்க முடியுமோ அவ்ளோக்களவு அத நெனச்சிட்டே இருக்கனும் .. ஸோ ..”

“ஸோ ?”

“ அதுக்கு அத நியாபகப் படுத்தறோம்னு நம்பற எங்க கூட நீங்க பேசணும் எப்பவும் போல .. எனக்கென்னமோ நீங்க கதை சொல்றீங்களோன்னு தோணுது .. உங்களைப் பார்த்த ஜோவியலா எல்லாம் தெரியல .. ”

“இல்ல இல்ல .. நான் ரொம்பவே ஜோவியல் .. ”

“நெஜமா ..? நம்பலாமா ? ”

“ப்ராமிஸ் .. ” இதயத்தின் குறுக்கே சிலுவை பூட்டுக் கொண்டாள்.

குரு மீண்டும் எட்டிப் பார்த்தான். உள்ளே வரலாம் என சைகை செய்தேன்.

“வெண்ணிலா .. கொஞ்சம் கண்ணை மூடறீங்களா ..”

“ஏன் ?”

“ஜோவியல் பெர்சன்ஸ் எல்லாம் கண்ண மூட சொன்னதுமே மூடிருவாங்களாம் .. நீங்க பொய் சொல்றீங்க .. ”

“இல்ல இல்ல .. இதோ கண்ணை மூடிட்டேன் ..” கண்கள் மூடிய தேவதை சிலையை நான் இதுவரையிலும் பார்த்ததில்லை. இந்த கணத்தை உறைய வைக்கும் ரிமோட் யாரிடமிருக்கும் என யோசித்தேன்.

அவள் கண்களை மீண்டும் திறந்த பொழுது என் டீமின் அத்தனை பேரும் அவள் முன்னால் இருந்தார்கள். ரம்யாவின் கைகளில் ஃபயர் அலாரமிற்கு பயந்து போய் பற்ற வைக்கப் படாத மெழுகுவர்த்திகள் பூத்திருந்த கேக் இருந்தது.

“ஹாப்பி பர்த் டே வெண்ணிலா ” .

அன்று அவள் பிறந்தநாள்.

முதல் முறையாக என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

யாருக்கும் கேட்கா வண்ணம் மெல்லிய குரலில் “தேங்க்ஸ் பிரபு ” என்றாள். முதல் முறையாக என் பெயரை அவள் சொன்னது அப்பொழுது தான்.

இந்தக் காதலில் தான் எத்தனை முதல்கள்.

அன்றிலிருந்து சரியாக அறுபத்தி இரண்டாவது நாளில் முதன் முறையாக என் காதலைச் சொன்னேன் அவளிடம் .

       தொடரும் 

—————————————————————————————————————————-