Tags

5

“I was half in love with her by the time we sat down.  That’s the thing about girls.  Every time they do something pretty, even if they’re not much to look at, or even if they’re sort of stupid, you fall half in love with them, and then you never know where the hell you are.“

       J.D. Salinger

 

என் இனிய நண்பர்களே , இந்த நான்கு அத்யாயங்களைப் படித்துவிட்டு வெண்ணிலாவைப் பற்றி நீங்கள் எதையாவது உருவகப்படுத்தியிருந்தால் , அதை நீங்கள் மாற்றிக் கொள்ளவேண்டிய தருணமிது.

வெண்ணிலா கணிக்கப்படவே முடியாதவள்.

ஒரே நேரத்தில் தண்ணீரைப் போல எனக்குள் விழுந்து என்னை நிறைக்கவும் , நெருப்பைப் போல என்னை இழுத்தணைத்து உருக்கி அவளாக வார்க்கவும் முடிந்திருந்தது.

நான் ஓவியனா இல்லை அவள் வண்ணங்கள் குழைத்துப் பூசி விளையாடும் கிறுக்கலோவியமா ? புரியாமல் ஒன்பதாவது வானத்தில் மிதந்தலைந்த நாட்கள் அவை.

சென்னையின் அதே அங்காடித் தெருக்கள், கடற்கரைச் சாலைகள், மொட்டை மாடி நட்சத்திரங்கள் , அதே எரிபொருள் நிரப்பும் கடைகள் , அதே உணவகங்கள் .. ஆனால் எல்லாமே வேறொரு பரிமாணங்கள் காட்டின.

இது வரையிலும் நான் கேட்காத பேசாத வார்த்தைகளோ அல்ல .. ஆனால் அவளிடம் பேசும் பொழுதும் , அவள் பேசிக் கேட்கும்போழுதும் வேறென்னன்னவோ சொல்லின அதே வார்த்தைகள்.

அவளைப் பற்றி நினைப்பதே  கூட கவிதையாகத்தான் இருந்தது.

அவளைப் பொறுத்த வரையில் நாங்களிருவரும் குரு ரம்யா உடன் செல்கிறோம். ஆனால் உண்மையில் எங்கள் இருவருடன் தான் அவர்கள் வந்தார்கள்.

நாட்கள் செல்லச் செல்ல அவளிடமான எனது அணுகுமுறைகளில் நிறைய மாற்றம் தெரிந்தது. அதை அவள் கவனிக்கவே செய்தாள் . என் மீதான அவள் பார்வையில் நிறையவே மாற்றம் தெரிந்தது. அதை நானும் கவனிக்கவே செய்தேன்.

உறவுகளின் நெருக்கமே உரிமைகள் தருவதிலும் , எடுத்துக் கொள்வதிலும் என புரியவந்த நாட்கள்.

அது ஒரு சனிகிழமை.

இதற்கு மேல் தாங்க முடியாது எனும்படி என் விரல்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. அனிச்சையாய் அலைபேசியை எடுத்தேன். அவளை அழைத்தேன்.

“ஹ்ம்ம் .. சொல்லுடா .. சீக்கிரம் எழுந்திட்ட போல ..” மூன்று வயது சின்னப் பெண், முதல் முறையாக என்னை டா என்று சொன்ன பொழுது ஒரு மாதிரி தான் இருந்தது. ஆனால் அடுத்தடுத்த தடவைகளில் என் வயது குறைந்து கொண்டே போவது எனக்கே தெரிந்தது.

“ஆமா .. இப்போ தான் குரு கால் பண்ணான் .. லஞ்ச்கு கிரிம்சன் சக்ரா போலாமான்னு கேட்டான் .. நீ ப்ரீ தான .. ”

“ஹேய் உனக்குக் கொஞ்சமாவது அறிவு இருக்கா .. அவங்கள தனியா விடேன் இன்னைக்காவது 

“க்கும் .. நானும் அதையே தாம்ப்பா சொன்னேன் .. உனக்கு தான் ரம்யாவத் தெரியும்ல .. தனியான்னா அவன் கூட வர மாட்டேங்கறாளாம்  .. குரு பாவம் இல்ல ” இந்த பாவம் எல்லாம் என்னை நிச்சயமாக சும்மா விடாது.

“அம்மா நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்குப் போகனும்ன்னு சொன்னாங்க ..”

“ஹேய் .. தனியா போனா போர் அடிக்கும்ப்பா .. ப்ளீஸ் வாயேன் ..”

“ஓஹோ .. அப்போ உனக்கு போர் அடிக்குதுன்னு தான் என்ன கூப்டியா .. டீம்ல வேற பொண்ணுங்களே இல்லியா .. ஏன் அந்த ப்ரீத்தியக் கூப்ட வேண்டியது தான ..”

“அட ஆமாம் இல்ல .. நல்ல யோசனை .. சரி நீ அம்மா கூட நங்கநல்லூர் போய் புளியோதரை சாப்டு .. நான் ப்ரீதியவே கூப்ட்டு போறேன் ” போனை வைத்துவிட்டு அவசரமாக குருவுக்கும் ரம்யாவிற்கும் குறுஞ்செய்தி அனுப்பினேன்.

இரண்டாவது நிமிடத்தில் மறுபடியும் அவளே அழைத்தாள்.

“டேய் நான் தான் .. எதுக்கு ஃபோன வச்சிட்ட ”

“ப்ரீதிக்குக் கால் பண்ணத் தான் ”

“அவ உனக்கு வைக்கற சூப்பையும் சேர்த்துக் குடிச்சிடுவா .. யோசிச்சுப் பார்த்தேன் .. தனியா போனா நீயும் பாவம் தான் .. ஸோ .. ”

“ஸோ ?”

“டேய் .. மாட்டேன்னா விட்டிடுவியா ..? திருப்பி எல்லாம் கூப்பிட மாட்டியா ?”

சிரித்துக் கொண்டே,”கிரிம்சன் சக்ரா , ஒன் ஓ க்ளாக்கு வந்திரு ..”                                                   

“நான் இன்னும் வரேன்னே சொல்லல ..”                  

“ஸாரி நீயா .. நான் ப்ரீதிகிட்ட பேசற நியாபகத்துல உன்கிட்ட சொலிட்டேன் ..அங்க ஆஞ்சநேயர் வேற வெயிட்டிங் உனக்கு.. நீ கிளம்பு  

“அந்தாள நாளைக்கு ராமாயணம் சீரியல்லையே பாத்துக்கறேன் .. ஆனா மவனே நேரல பார்க்கும் போது செத்த நீ ”

வெண்ணிலாவிடம் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் ஒரு மணி என்றாள் ஒன்று முப்பதுக்காவது வந்துவிடுவாள். இப்பொழுதெல்லாம் நானே ஒரு அரை மணி நேரம் முன்கூட்டியே சொல்லிவிடுவது. இல்லையென்றால் ஆர்டர் ப்ளீஸ் என வந்து நிற்கும் சர்வரிடம் அரை மணி நேரமும் பிரெண்ட் வராங்க என்றே சொல்லி இளிப்பது ரொம்பவே கஷ்டம்.

வெளிர் நீல நிறத்தில் வெள்ளைப் பூக்கள் பூக்க வாசனையான ஆடையுடன் ஸ்கூட்டியில் இருந்து இறங்கினாள். எனை நோக்கி நடந்துவருகையில் காற்றில் பறக்கும் அவள் துப்பட்டாவிற்குத் தான் என்ன ஒரு கர்வம். ரொம்ப நாட்களாகவே அந்த துப்பட்டா மேல் ஒரு கண் எனக்கு.

“இந்த டிரஸ் உனக்கு ரொம்ப அழகா இருக்கு .. ”

“அப்போ நான் அழகா இல்லையா ?”

பூக்கள் சேர்த்துப் போர்த்திய பட்டாம்பூச்சி போலிருக்கிறாய் என சொல்லவேண்டும் போல் இருந்தது. சிரித்து மட்டும் வைத்தேன்.

“எங்க அவங்க ரெண்டு பேரும் ..”

“குருவோட  ஒண்ணு விட்ட சித்தப்பா பைக்ல இருந்து விழுந்திட்டாராம் ..  இங்க தான் பக்கத்துல மலர் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிருக்காங்க ..  அவனால வர முடியல .. நான் உன்கிட்ட வரேன்னு சொல்லிட்டதால வந்துட்டேன் ..”

“குருவோட .. ஒன்னுவிட்ட சித்தப்பாவா … ” அவள் நம்பவில்லை என்பது அவள் சிரித்ததிலிருந்தே தெரிந்தது.

“உள்ள போலாமா .. ரொம்ப பசிக்குது ..”

“காலைல சாப்டியா?”

“எங்க ? வழக்கம் போல எழுந்ததே லேட் .. ”

“எத்தனை தடவ சொன்னாலும் நீ கேக்க மாட்ட .. அல்செர் வந்தா தான் தெரியும் உனக்கு ” தலையில் குட்ட வந்தாள். துப்பட்டாவின் அதே கர்வத்தில் நானும் இருந்தேன்.

க்ரிம்சன் சக்ராவின் ஒரே ஒரு தனிமையான அறையை இரண்டு வாரங்களுக்கு முன்பே பதிவு செய்து வைத்திருந்தேன். மெழுகுவர்த்தி வெளிச்சம் மட்டுமே. அத்தனை விதமான பூக்களும் உள்ளே பூத்திருந்தன. இரண்டே இரண்டு நாற்காலிகள் மட்டுமே போடப் பட்டிருந்தன.

உள்ளே நுழைந்தவள் ஆச்சர்யமாகப் பார்த்தாள்.

“இல்ல நான் வந்ததுமே ரெண்டு பேர் தான்னு சொன்னேன் .. வெளிய ஃபோர் சீடட் டேபிள வேஸ்ட் பண்ண முடியாது .. இங்க ஒரே ஒரு டூ சீடட் டேபிள் தான் இருக்கு .. நீங்க வேணா உள்ள போரீங்களான்னு கேட்டான் .. அவன பார்க்கவே பாவமா இருந்தது .. ஓகே சொல்லிட்டேன் ”

“சனிக்கிழமையும் அதுவும் , கிரிம்சன் சக்ராவுல இந்த கப்பிள் ரூம் மட்டும் தான் ஃப்ரீயா இருக்குன்னு அவன் சொன்னான் ?”

“ஹோ இதுதான் கப்பிள் ரூமா ..அடடா என்ன ஏமாத்திட்டானே .. நான் வேணும்னா வேணாம்ன்னு சொல்லிட்டா ..” எனக்கே சிரிப்பை அடக்க முடியவில்லை. எவ்வளவு தான் பொய் சொல்வது.. .

“மத்தியானம் ரெண்டு மணிக்கு கேண்டில்…  கொஞ்சமே ஓவரா தெரியல .. ” ஏதோ வாயில் வராத பதார்த்தங்களை வழக்கம் போல அவளே ஆர்டர் செய்தாள்.

“பவர் சேவிங் .. இந்த ஹோட்டல்ல லைட் எல்லாம் போட மாட்டாங்க .. மெழுகுவர்த்தி மட்டும் தான் .. ஆனா ஏசி மட்டும் போடுவாங்க .. ஹி ஹி .. ஈகோ பிரெண்ட்லி ”

“நாளைக்காவது பொய் சொல்றதுக்கு லீவ் விடுவியா ?”

“என்ன சொல்ற நீ ? பொய்யா ? என்ன டிஷ் அது .. இங்க கெடைக்குமா என்ன ?”

“சரி ரம்யா ஏன் வரல .. அவங்க ஒன்னு விட்ட சித்தப்பாவுக்கும் அடி பட்டிடுச்சா ? ” உதடுகளைச் சுளித்தபடி கேட்டாள். “இனிமே வெளிய போகணும்ன்னா நேராவே கூப்டு .. குருவோட ஒன்னுவிட்ட சித்தப்பாவ எல்லாம் கொல்லாத  .. ”

“என்ன சொல்றப்பா நீ ? எனக்கு ஒண்ணுமே புரியல ..” மேஜை மேல் இருந்த ஒரு பூவை எடுத்து மேலே எறிந்தாள்.

“எல்லாம் தெரியும் .. ரம்யா சொல்லிட்டா … ”

“என்னது ரம்யா சொல்லிட்டாளா ? ”

“ஆமா ..”

“என்ன சொன்னா ?”

“எல்லாத்தையும் தான் ..” அவள் விரல்கள் ஸ்பூனோடும் ஃபோர்கோடும் விளையாடிக் கொண்டிருந்தன.

“எல்லாத்தையும் சொல்லிட்டாளா ? ”

“ஆமா ..அந்த டீம் டீடெயில்ஸ் டெலீட் பண்ணது .. மன்சூருக்கு மெயில் பண்ணது … பேஸ் புக் .. டெஸ்டி மோனி எல்லாம் தான் சொன்னா.. பாவம்டா மன்சூர் ..  தெனமும் சீரிஸா ப்ராக்டிஸ் பண்ணிட்டு இருக்கான் .. 

மெழுகுவர்த்தி பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தது. அவள் கண்களை கவனித்தேன். அதில் கோபமில்லை. குறும்பு கொப்பளித்தது.

“ அவ்ளோ தான் சொன்னாளா .. வேற எதுவும் சொல்லலியா ,, ”

“இல் .. இல்லையே .. ” அவள் கண்கள் என்னைச் சந்திக்கவில்லை. “ஏன் வேற எதாவது வேற இருக்கா .. ”

“இல்ல அவ்ளோ தான் ” என் குரலின் ஏமாற்றம் எனக்கே தெரிந்தது. அவள் சிரித்தது போல் இருந்தது.

சரி என்னைப் பத்தி என்னெல்லாம் தெரிஞ்சிகிட்ட சொல்லு பாப்போம்

பதினைந்து நிமிடங்கள் சிரத்தை எடுத்து ஐ அம் வெண்ணிலா வில் ஆரம்பித்து , அவளுக்கு வெஸ்டர்னை விட கிளாசிகல் அழகாக வருகிறது என்பது வரை  என்னால் முடிந்த அளவு கதை வசனத்துடன் சொன்னேன்.

சிரித்தாள்.

“நாட் பாட் .. ஆனா என்னைப் பத்தி நீ தெரிஞ்சிக்க வேண்டியது இன்னும் நெறையவே இருக்கு .. ”

“ஹான் .. இன்னொன்னும் இருக்கு ..  உன்னால பேஸ் பார்த்தே என்ன ஸோடியாக் சைன்ன்னு கெஸ் பண்ண முடியுமாமே .. எங்க என்னோடத கெஸ் பண்ணு பாப்போம் .. ”

என் முகத்தை அப்படியும் இப்படியும் பார்த்தவள் “ஹ்ம்ம் .. லெட் மீ கெஸ் .. ஜெமினி ” என்றாள்.

“ஹேய் .. எப்படிப்பா .. சான்சே இல்ல .. ”

“ரொம்ப பிளாட் ஆகிடாத .. உன் பர்த் டே மே-ல தான .. டீம் டீடைல்ஸ் யார் ஓபன் பண்ணாலும் ஓபன் ஆகும்  

“அப்போ நீயும் என்னைப் பத்தி என்கொயரி பண்ணிருக்க ”

“ஆமாம் .. ” அவளுக்குக்காக மகிழ்ச்சியாக கரைந்து போயிருந்த ஸ்ட்ராபெரிகளை சிப்பிக் கொண்டே தலை அசைத்தாள்.

“ஹோ அப்படியா .. சரி என்ன தெரிஞ்சிகிட்ட சொல்லு கேப்போம் .. ”

ஊர், குடும்பம் விவரங்கள் எல்லாம் என் வீட்டு ரேஷன் கார்ட் தவிர்த்து டீம் டீடைல்ஸிலும் இருப்பதால் சாதாரணமாகத் தான் கேட்டுக் கொண்டிருந்தேன். பிடித்த நிறத்தில் ஆரம்பித்த பொழுதுதான் கொஞ்சம் சுவாரசியம் தலை தூக்கியது. நம்மைப் பற்றி நமக்குப் பிடித்தவர்கள் சொல்லிக் கேட்பதயுப் போல சுகமான ஒன்று ஏதேனும் இருக்கிறதா என்ன !

“எப்படிப்பா இதெல்லாம்  …? ”

“ச்சுப் … ஃப்ளோவ கெடுக்காத ”

வாயில் விரலால் ஜிப் போட்டுக் கட்டினேன்.

“படிச்சது எல்லாம் திருச்சில .. கெமிக்கல் இன்ஜினியரிங் ஒழுங்கா படிக்காததால எல்லாரையும் மாதிரி ஐ டி ல குப்பை கொட்டிட்டு இருக்க ..  

“அதெல்லாம் ஒழுங்கா தான் படிச்சேன் .. ”

“ச்சுப் .. நடுல பேசாதன்னு சொன்னேன்ல டா .. சும்மா இல்லன்னா எதுவும் சொல்ல மாட்டேன் ..”

“சரி சரி .. இனிமே வாயே திறக்கல .. நீ கண்டின்யூ பண்ணு ”

“பாஸ்கட் பால் கொஞ்சம் ஆடுவ ..  ஸ்கூல , காலேஜ்ல நாடகம் எல்லாம் நெறைய போட்ருக்க .. ஆனா எல்லாமே பிஹைன்ட் த ஸ்க்ரீன் தான் ..  வீடியோல உன் வாய்ஸ் நல்லாவே இருந்தது .. ”

“வீடியோ ? எனக்கு மன்சூர்ன்னு எல்லாம் ஒரு பிரெண்ட் கிடையாது .. ”

“யூ டியுப் …. நீங்க இன்னும் வளரணும் தம்பி .. ”

“இதுக்கு மேலயுமா .. நீங்க மேல சொல்லுங்க ..”

“இன்னும் கேள் ..  தபு சங்கர் கவிதைகள் பிடிக்கும் .. பாக் ல கொடைய வசிகிட்டே மழை பிடிக்கும்னு பொய் சொல்ற ஆள் .. சென்னைல பிடிச்ச இடம் பெசண்ட் நகர் பீச் அப்பறமா சிட்டி சென்டர் .. வெள்ளக் காரா தொர .. இங்க்லீஷ் கெட்ட வார்த்தை தான் பேசுவாராம் .. அதுக்கு அர்த்தமாவது தெரியுமாடா உனக்கு ..?”

இந்தக் கேள்விக்கு வேறென்ன பதில் சொல்லுவது. “டாமன் இட்”

சிரித்தாள்.

 “ஹான் .. இன்னொரு முக்கியமான விஷயம் .. இன்ட்ரெஸ்டிங் பார்ட் … காலேஜ் ஒரு பொண்ணு பின்னாடி சுத்தி தர்ம அடி வாங்கிருக்க .. கரெக்டா .. ?” காலரைத் தூக்கி விட்டுக் கொண்டாள்.

“பின்னாடி சுத்தின தென்னவோ உண்மை தான் .. ஆனா அடி எல்லாம் வாங்கல ”

இதெல்லாம் எப்படித் தெரிந்து கொண்டாள் என்ற கேள்வி என்னுள் எழவில்லை .. இருந்த சிந்தனை எல்லாம் ஒன்றே ஒன்று தான் … இதை விட என்னைப் பற்றி யாரும் நன்றாக தெரிந்து வைக்க முடியாது. எனக்கு சில வினாடிகள் பேச்சே வரவில்லை.

“எல்லாம் சரி தான் .. ஆனா உனக்குத் தெரியாத விஷயமும் ஒண்ணு இருக்கு .. ”

“அப்படியா என்ன ? ” அவளுக்கு அதுவும் தெரியும் என்பது கண்களிலேயே தெரிந்தது. நீங்கள் என்னை நம்பித் தான் ஆகவேண்டும். அறை நிரம்பிய இருட்டில் , மங்கிய மஞ்சள் நிற மெழுகுவர்த்தி போன்ற ரொமாண்டிக்கான இன்னொன்று இருக்கவே முடியாது.

“அது என்னன்னா .. ” எனது வலது கரத்தினை எடுத்து அவள் கையின் மேல் வைத்தேன். தொலைவிலேயே நின்று கொண்டு தொல்லை செய்யாமல் இருக்கும் சிப்பந்தியே நீ வாழி!

கரத்தினைப் பற்றியதற்கு அவள் ஒன்றும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. எதோ ஒரு மார்கழி அதிகாலையில் கிணற்றில் நீரிறைத்துத் தலையிலூற்றியது போன்ற ஜில்லிப்பு.

அவள் கண்களைப் பார்த்தேன். சில வினாடிகள் எடுத்துக் கொண்டு சொன்னாள் . “ஹ்ம்ம் .. சொல்லு ”

பீப் பீப். அவளது செல்ஃபோன் குறுஞ்செய்தி கொண்டு வந்திருக்கிறேன் என்றது.

“மெசேஜ் வந்திருக்கு .. ”

“தெரியாதா எனக்கு ? நீ சொல்லு .. ” நான் சொல்லியிருக்க வேண்டும்.

“இல்ல .. நீ மொதல்ல பாரு .. ஏதாவது முக்கியமா இருக்கப் போகுது  ” மடையா , இதை விட ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைக்கவே போவதில்லை உனக்கு.

“கைய எடுகறியா அப்போ ”

“ஓ ஸாரி .. ”

“நீ இன்னும் எடுக்கவே இல்ல .. ”

“நான் என்ன பண்ண .. அது என் பேச்சை கேக்க மாட்டேங்குது ” சிரித்துக் கொண்டே எடுத்தேன். சிரித்துக் கொண்டே எடுத்தாள் .

“டாம்ன் இட் ..  ” செல் போனை கோபமாக தொம் என்று மேஜையில் போட்டாள்.

“இதென்ன என்கிட்டே இருந்து தொத்திகிச்சா ..  என்னாச்சு .. ” அவள் முகம் மொத்தமாக சுருங்கிப் போயிருந்தது.

“ஒண்ணும் இல்ல .. பில் செட்டில் பண்ணிட்டு வா .. கெளம்பலாம் மொதல்ல.. மலர் ஹாஸ்பிடல் போகணும் .. 

“குருவோட ஒண்ணு விட்ட சித்தப்பாவ பாக்கவா .. ”

“உனக்கு எல்லாமே வெளையாட்டு தான் .. சீரியஸாவே இருக்க மாட்டியா ? 

“என்னாச்சு .. யாரு …? ”

“மன்சூர் .. நேத்து எனக்கு ப்ரோபோஸ் பண்ணினான் .. முடியாதுன்னு ரொம்ப பொறுமையா தான் சொன்னேன் .. கேக்காம திரும்ப திரும்ப அதையே சொல்லிட்டு இருந்தான் … திட்டிடேன் .. முட்டாள் .. கைய அறுத்துகிட்டானாம் …   ” அழத் துவங்கினாள்.

       தொடரும்

——————————————————————————————————————————-