Tags

 

நான் களைத்திருக்கிறேன்

 

அதிகம் பயணித்திருக்கவில்லை
பயண நோக்கமே புரியாதிருக்கையில்
பயண தூரம் ஒரு பொருட்டல்ல
கணக்கு வைத்திருப்பதும்  ஒரு கணக்கல்ல

 

பாதி தூரம் இலக்கில்லாமல்
அலைந்திருந்திருக்கிறேன்
பாதைகள் மாறி மாறித் தொலைந்திருக்கிறேன்
ஆரம்பித்த இடைத்தையே சந்தித்துச்
சலித்திருக்கிறேன்

 

பாதிப் பொழுதுகளை உறங்கிக்
கழித்திருக்கிறேன்
அநேகநேரம் பேசியபடியே இருந்திருக்கிறேன்
கேட்பவர்கள் இருக்கிறார்களா என்பது
பற்றிய அக்கறையே இன்றி ..

கேட்பவர்கள் இல்லாமல் வார்த்தைகள்
செலவழிப்பது வீண் என்று
மௌனமாக மட்டுமே நகரும்
இந்நாட்கள் பார்கையில் புரிகிறது

இரவெல்லாம் தெருக்கள் தோறும்
குளிர்காற்றோடு
இதுகாறும் நான் பேசித் தீர்த்த
வறட்டு வார்த்தைகள் பெய்து
அதிகரிக்கின்றன
எனைச் சுற்றிலும் வெற்றிடங்களை ..

இன்னும் எத்தனை தூரம்
என்பது பற்றிய பிரக்ஞை
அகன்றாகிவிட்டது ..

ஏனெனில் என் பயணம் பற்றிய கேள்விகளுக்கு
யாரிடமும் பதிலிருக்கப்போவதில்லை
என்னிடமே இல்லையென்கையில்

நான் களைத்திருக்கிறேன்

இருந்தும்
எனக்கு முன்பு  பாதைகள் இருக்கும்வரை
எல்லைகள் பற்றிய எண்ணங்களின்றி
நான் பயணித்திருக்கப் போகிறேன் .

——————————————————————