Tags

,

6

 

As we grow older together, as we continue to change with age, There is one thing that will never change. . . I will always keep falling in love with you.

                                                                                                – Karen Clodfelder

 

கையை அறுத்துக் கொள்வதையும்  , சிவப்பு நிற திரவம் டியுப்களின் வழியாக இறங்குவதைப் பார்த்து ஐ.ஸி.யூ விற்கு வெளியிலிருந்து வாய் பொத்தியபடி அழுதுகொண்டிருப்பதையும் சினிமாவில் மட்டும் தான் பார்த்திருக்கிறேன்.

மருத்துவமனை என்றுமே எனக்குப் பிடிக்காத ஒன்று. அங்கே சதா யாரேனும் அழுதபடியே இருக்கின்றார்கள். கடைசியாக என்னிடம் அழுது முடித்தது மன்சூரின் அம்மா.

“நேத்து நைட் கூட காலைல சீக்கிரம் எழுப்பும்மா .. டான்ஸ் ப்ராக்டிஸ் இருக்குன்னு சொன்னானே .. பாவிப் பய இப்படி பண்ணிக்கிட்டேனே … ” அவரிடம் என்ன சொல்லுவது என்று தெரியவில்லை.

அவர்கள் யாருக்கும் அவன் ஏன் அப்படிச் செய்து கொண்டான் என்பதற்கான உண்மையான காரணம் தெரியாது. நானும் ஒரு வகையில் காரணம் என்ற எண்ணம் ஏனோ அங்கிருந்து என்னை உடனடியாக எழுந்து போகச் சொல்லித் துரத்திக் கொண்டிருந்தது.

வெண்ணிலா இரவு அங்கேயே தங்கிக் கொள்ளப் போவதாச் சொல்லிவிட்டாள்.

கையை அறுத்துக் கொள்ளுவதென்றால் எவ்வளவு காதல் இருக்க வேண்டும். அடுத்த ஜென்மத்தில் வேண்டுமானால் மன்சூர் கழுதையாகப் பிறக்கட்டும். இந்த ஜென்மத்தில் நான் தான் கழுதை போல.

ஒரு கத்தியைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டு தடவிப் பார்த்தேன். பயமாக இருந்தது. தூர எறிந்துவிட்டுப் படுத்துக்கொண்டேன்.

அடுத்த நாள் மீண்டும் மருத்துவமனைக்குச் சென்றேன். அபாய நிலை தாண்டி இருந்தான். ஆனால் கண்கள் திறக்க வில்லை. வெண்ணிலா இரண்டொரு வார்த்தைகள் மட்டும் தான் பேசினாள். இரண்டு நாட்கள் விடுப்பு வேண்டும் என்றாள்.

அடுத்த இரண்டு நாட்கள் அவளிடம் ஒருமுறை கூட பேசவில்லை. எந்த குறுஞ்செய்திக்கு அவள் பதிலும் அனுப்ப வில்லை. நான் மனதளவில் தயாராகத் துவங்கினேன்.

புதன் கிழமையும் அவள் அலுவலகம் வரவில்லை. ஸ்ரீரங்கத்தில் இருக்கும் அவளது பாட்டி வீட்டிற்கு இன்னமும் மூன்று நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு சென்றுவிட்டாள்.

ஆனால் புதன் கிழமை மன்சூர் அலுவலகத்திற்கு வந்தான்.

தற்கொலை செய்ய முயன்றவன் கண்களில் எவ்வளவு அவமானமும் மனதில் எவ்வளவு தன்னிரக்கமும் இருக்கும் என்று அப்பொழுது தெரியாது எனக்கு.

“வெண்ணிலா லீவ் ” என்றேன். அவன் அருகில் வந்து நின்றதுமே. சொன்னதற்குப் பிறகே அப்படி சொல்லியிருக்கக் கூடாது என்று புரிந்தது.

“த் .. தெரியும் .. நான் உங்களைப் பார்க்கத் தான் வந்தேன் ..”

இருவரும் கீழே காண்டீனுக்குச் சென்றோம். கொஞ்சம் நேரம் இரண்டு பேருமே பேசவில்லை.

“ஸாரி ” அவன் கண்கள் கீழேயே நிலை குத்தியிருந்தன. அதன் பிறகு அவன் பேசிய ஐந்து நிமிடங்களும்.

“வெண்ணிலா தான் எனக்கு ஒரே பிரெண்ட் காலேஜ்ல ..  இந்த டான்ஸ் , கம்பெனி எல்லாமே அவளால தான் .. கடைசி வரைக்கும் அவ கூட இருந்தா நல்லா இருக்கும்ன்னு தோணிச்சு .. அதான் கேட்டேன் .. அவ பொறுமையா தான் பதில் சொன்னா .. நான் தான் முட்டாள் தனமா …”

ஏன் இதெல்லாம் என்னிடம் சொல்கிறான் என்பது அதுவரையிலும் புரியாமலேயே இருந்தது. ஆனால் பேசுவது அவனுக்குத் தேவையானதாக இருந்திருக்கிறது. நான் மௌனித்திருந்தேன்.

“இப்போ ஒரு நல்ல பிரெண்டையும் இழந்திட்டேன் .. இனிமே என்ன பார்க்கவே மாட்டேன்னு சொல்லிட்டுப் போய்ட்டா … ”

சொல்லிவிட்டு என்னைப் பார்த்தான். எனக்கு என்ன சொல்லுவதென்று தெரியவில்லை. ஆனாலும் இது நான் பேசுவதற்கான தருணம்.

“கொஞ்ச நாள்ல சரி ஆகிடுவா .. நான் வேணும்னா ..” நான் முடிக்கும் முன்பே தலையாட்டினான்.

“இல்ல சார் .. வெண்ணிலா இனிமே என்னைப் பார்க்கவே மாட்டா .. அவ பிடிவாதம் எனக்குத் தெரியும் .. நான் பண்ணின தப்புக்கு இது தான் தண்டனை .. நான் கிளம்பறேன் ”

எழுந்துவிட்டான்.

என்ன நினைத்தானோ திரும்பி வந்து என்னையே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தான்.

“அவளுக்கு உங்களைத் தான் பிடிச்சிருக்கு .. அவளே சொன்னா ”

தோற்றவனுக்காக வருத்தப்படுவதா இல்லை , என்னை மீறி வரும் புன்னகையை கட்டுப்படுத்துவதா எனத் தெரியாத மனநிலையில் இருந்தேன். நான் இவ்வளவு பெரிய சுயநலம் பிடித்தவனா ?

அதன் பிறகு மன்சூரை இரண்டொரு அலுவலக நடன நிகழ்ச்சிகளில் பார்த்ததோடு சரி. கடைசியாக இரண்டு வாரத்திற்கு முன்பு நான் கையை அறுத்துக்கொண்டு மருத்துவமனையில் படுத்திருந்த பொழுது எனை வந்து சந்தித்தான். அவன் தந்த அறை இன்னமும் கன்னத்திலே இருக்கிறது.

“என்னது நீங்க சூ-சைட் அட்டெம்ப்ட் பண்ணீங்களா .. ? 

இடது புறங்கையை அவர்களிடம் நீட்டினேன். நான் எழுதிய காதல் கவிதை அதில் தழும்பாக ஓடிக்கொண்டிருந்தது.

“ரெண்டு நாள் சீரியஸா இருந்தேன். அறுக்கும் போது நான் சாக மாட்டேன்னு தெரியும் .. ஆனா ஏன்னு தெரியல அப்படி, பண்ணிக்கனும்னு தோணிச்சு 

சில நிமிடங்கள் இறுக்கமாக நகர்ந்தன அவளின் வருகைக்காகக் காத்திருந்த அந்த ஒரு வாரத்தைப் போல.

மீண்டும் அடுத்த திங்கட்கிழமை அவளைப் பார்த்த பொழுது மிக இயல்பாக இருந்தாள். வெண்ணிலாவிடம் நான் புரிந்து கொள்ளவே முடியாத ஒன்று இது. மிகச் சாதாரணமாக எல்லாவற்றையும் வேண்டாம் போ என அவளால் உதறிவிட  முடிந்திருக்கிறது. என்னை உட்பட.

மன்சூர் பற்றி அவள் மறுபடியும் பேச விரும்பவே இல்லை. அவள் எப்பொழுதும் போலவே இருந்தாள். எனக்கு தான் மன்சூர்  சொன்னது காதிலேயே கேட்டுக் கொண்டிருந்தது.

“அவளுக்கு உங்களைத் தான் பிடிச்சிருக்கு .. அவளே சொன்னா ”

எப்பொழுது அவளிடம் நான் சொல்லப் போகிறேன். இந்த ஊரின் எந்த ஒரு இடத்திலும் என்னால் முடியாது என்று தோன்றியது. எல்லா இடங்களிலும் எங்களுக்குக்கான நினைவுகள் இருந்தன. எல்லா நினைவுகளிலும் இப்பொழுது மன்சூரும் எனது குற்ற உணர்வும் சேர்ந்து படிந்திருந்தார்கள்.

எனக்குப் புதிதாக ஒரு உலகம் தேவைப்பட்டது . எங்களுக்கு அறிமுகமில்லாத ஒரு இடம். எங்களை அறிமுகமில்லாத ஒரு இடம்.

ஹைதராபாத்.

அந்த பயிற்சி அவளுக்குத் தேவை இல்லாத ஒன்று. இருந்தும் அவளை எனது ப்ராஜெக்டில் இருந்து தேர்ந்தெடுத்து ஹைதராபாதில் உள்ள எனது அலுவலகத்தின் கிளைக்கு அனுப்பி வைத்தேன்.

நானும் கூட வருகிறேன் என்று சொன்னதற்கு அவள் எதுவுமே சொல்லவில்லை. பழைய குதூகலத்திற்கு அவள் திரும்பி நீண்ட நாட்கள் ஆகியிருந்தன. நானுமே கூட கொஞ்சம் கொஞ்சம்.

காலம் எல்லாவற்றையும் மறக்கவும் மன்னிக்கவும் நம்மைப் பழக்கிவிடுகிறது.

காலை பதினோரு மணிக்கெல்லாம் அவளுக்கு பயிற்சி வகுப்பு முடிந்து விட்டது.

ஐமாக்ஸில் படம் பார்த்து விட்டு வெளியே வந்த போது மணி ஐந்து . லும்பினி பூங்காவில் லேசர் காட்சி ஆரம்பிக்க இன்னமும் ஒன்னரை மணி நேரம் இருந்தது. கொஞ்ச நேரம் ஹுசைன் சாகர் ஏரியை ஒட்டி இருந்த சாலையில் நடந்து கொண்டிருந்தோம். 

அந்த பொன்னிறமான மாலையும் கொஞ்சமே தூறுவது போலிருந்த சூழலும் .. அதுவும் பக்கத்தில் என் நேசத்திற்குரிய பெண் கைகளைக்கொர்த்துக் கொண்டு …  என்னமோ என்னைப் புன்னகைத்துக் கொண்டே இருக்கச் செய்தது. ஏதோ பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்ததாகக் கூட நினைவு.

“என்ன பாட்டு பாடற ? ”

“தெரியல .. சும்மா .. ”

“ஏன் சிரிச்சிட்டே இருக்க .. உன் பார்வையே சரியில்லையே இன்னைக்கு .. ”

“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லையே ” கண்களை என்னால் அடக்கவே முடியவில்லை.

“இன்னும் எவ்ளோ தூரம் இப்படியே நடக்கப் போறோம் ? ”

ஈட் ஸ்ட்ரீட்டில் இருந்த ஒரு உணவகத்தில் அமர்ந்திருந்தோம். நான் அந்த இடத்தைத் தேர்வு செய்திருந்ததில் எந்தத் தவறும் இல்லை. ஹுசைன் சாகர் ஏரியின் ஒரு புறத்தில் மரப்பலகைகளில் அமைந்திருந்தது அந்த உணவகம். கால்களுக்குக் கீழே தண்ணீர் வந்து மோதும் சப்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. மொத்த இடமுமே நனைந்திருந்தது அழகாக இருந்தது. ஏரியின் எதிர்புறத்தில் லும்பினி பூங்கா. ஏரியின் நடுவே புத்தர் புன்னகைத்துக் கொண்டிருந்தார்.

மனதிற்குள் அவரிடம் மெதுவாகச் சொல்லிக் கொண்டேன். “இன்று என் அன்பைச் சொல்லப் போகிறேன் .. நீங்கள் தான் அதற்கு சாட்சி …”

இரவு கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையும் அணைக்கத் துவங்கியிருந்தது. ஏரியும் ஏரி சார்ந்த எல்லாமுமே மஞ்சள் வெளிச்சத்தில் மின்னிக் கொண்டிருந்தன.

அவள் மஞ்சள் நிற புத்தரை விட அழகாக இருந்தாள். என் கண்களை எடுக்கவே முடியவில்லை.

“என்ன பாக்கற ?”

“இந்த ப்ளூ கலர் ஸாரில நீ ரொம்ப அழகா இருக்க .. “

“இதுக்கு நான் என்ன பதில் சொல்லணும்னு எதிர் பாக்கற?”

நான் சிரித்தேன். ஐயோ உன்னை புடவை கட்டிக் கொண்டு இருக்கிறதே என்று தபு ஷங்கர் எழுதியது நினைவுக்கு வந்தது. கல்லூரி இரண்டாம் வருடத்தில் படித்தது. இத்தனை வருடங்கள் கழித்து நினைவுக்கு வந்தது ஆச்சர்யம் தான்.

“என்ன திடீர்னு இன்னைக்கு ஸாரி ..”

“நீ சும்மா பாடிட்டே இருக்கறா மாதிரி .. சும்மா சும்மா என்னையே பார்த்திட்டு இருக்கறா மாதிரி .. நானும் சும்மா பொடவை கட்டிட்டு வந்திருக்கேன் .. ”

இருவரும் கொஞ்ச நேரம் புன்னகைத்துக் கொண்டிருந்தோம். இருவருக்கும் என்ன நடக்கப் போகிறதென்று தெரியும். எதற்காக நாங்கள் அங்கே இருக்கிறோம் என்பதும் தெரியும். யாருக்கும் எதுவும் ஆச்சர்யகரமாக இருக்கப் போவதில்லை. இருவருக்குமே தெரிந்த ஒன்றை, இதுவரை பார்வைகளால் மட்டுமே பரிமாறிக் கொண்டிருந்த ஒன்றை இன்று வார்த்தைகளால் சொல்லிக் கொள்ளப் போகிறோம். அவ்வளவு தான்.

இருந்தும் எதுவும் தெரியாதது போல என் எதிரே உட்கார்ந்திருந்தாள். நானும் எதிர்பாராத ஒரு தருணத்தை எதிர்பார்த்திருப்பவனைப் போலத் தவித்துக் கொண்டிருந்தேன்.

நான் ஆச்சர்யப்படுத்தப் போகிறேன் . அவள் ஆச்சர்யப்படப் போகிறாள்.

இந்தக் காதலில் தான் பொய்களும் போலி பாவனைகளும் எவ்வளவு அழகு.

“ஆர்டர் ப்ளீஸ் .. ” சிப்பந்தி மேஜையில் மெனுவை வைத்துவிட்டு எட்ட நின்று கொண்டான். அவள் பக்கம் அதைத் தள்ளினேன்.

“என்ன சொல்லட்டும் ?”

“எனக்கெதுவும் வேண்டாம் .. உனக்கு மட்டும் சொல்லிக்கோ ”

“என்னை சாப்ட்டது போதும் .. ஒழுங்கா  ஆர்டர் பண்ணு … ”

அவள் சொன்னதையே எனக்கும் சேர்த்துச் சொன்னேன். சிப்பந்தி வெல்கம் டிரிங் ஏதாவது ஆர்டர் செய்து கொள்ளலாம் என்றான்.

அவளது உடையின் நிறத்தில் ப்ளூ பிரேசர்ஸ் ஆர்டர் செய்ததாள் இருவருக்கும்.  நீல நிறத்தில் ஏதோ கொழ கொழவென்று வந்தது.

“கை குடேன் .. ”

“ஏன் ஜோசியம் பார்க்கப் போறியா ?”

“ச்சே ச்சே .. அதெல்லாம் ரொம்ப பழைய டிரிக் .. நான் நெஜத்தையே சொல்வேன் .. எனக்கு சும்மா பிடிச்சிருக்கணும் போல இருக்கு .. ”

“சும்மா … ? ஹ்ம்ம் ”என்னை நோக்கிக் கைகளை நகர்த்தினாள். கை நடுங்கிக் கொண்டிருந்தது. அளவெடுப்பது போல எனது கையை மேலே வைத்தேன். கை நடுங்கிக் கொண்டிருந்தது. கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன.

“உனக்கு தெரியாத விஷயம் ஒண்ணு இருக்குன்னு சொன்னேனே .. என்னைப் பத்தி .. இப்போ சொல்லவா ..? ” அவளது  வளையல்கள் என்னால் சப்தமிட்டுக் கொண்டிருந்தன.

“ஹ்ம்ம் .. ”

“ஒரு நிமிஷம் .. செல்போன் சைலென்ட்ல இருக்கா ?”

முறைத்தாள்.

அவள் கண்களையே பார்த்தேன். முதல் முறையாக அவள் கண்களில் அவ்வளவு ஆசையைப் பார்த்தது அப்பொழுது தான். நான் எரிந்து போயிருக்க வேண்டும்.

“அது என்னன்னா … ”

இந்த முறை எனது செல்போன் அலாரம் அடித்தது. விருட்டென்று கைகளை எடுத்துக் கொண்டு எழுந்து சென்று விட்டாள். ஏரிக்கும் உணவக எல்லைக்கும் இடையில் இருந்த தடுப்புக் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு புத்தர் சிலையைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தவள் அருகில் சென்றேன்.

“என்ன மெசேஜ் ..?”

“மெசேஜ் இல்ல .. அலாரம் .. ”

ஒரு மாதிரியாகப் பார்த்தாள். “இப்போ எதுக்கு அலாரம் ?”

“ஃபைவ்  

“ஃபோர் ”

“இப்போ எதுக்கு எண்ணிட்டு இருக்க …? ”

“த்ரீ ..”

“டூ ..”

“இப்போ சொல்லப் போறியா இல்லையா ..? ”

“ஒன் ..” அவளை லும்பினி பூங்காவை நோக்கித் திருப்பினேன்.

லேசர் காட்சி ஆரம்பிக்கும் முன் லும்பினி பூங்காவில் இருந்து வான வேடிக்கை துவங்கியது.

புத்தரின் தலைக்கு மேலே வெடித்த ஒரு பட்டாசு அழகாகப் படம் வரைந்தது ,வெண்ணிலா ஐ லவ் யூ என்று.

“வெண்ணிலா , நான் உன்னைக் காதலிக்கிறேன் .. .. எப்போ உன் கிட்ட முதல் தடவையா ஃபோன்ல  பேசினேனோ அப்போ இருந்து .. எப்போ உன்ன லைப்ரைரில பார்த்தேனோ அப்போ இருந்து .. இந்த நொடி .. இந்த அழகான தருணம் எனக்கு எப்பவும் வேணும் .. எப்பவும் உன் கூட இருக்கணும் .. ” கையை நீட்டினேன்.

அவள் கண்களில் நிஜமாகவே ஆச்சர்யம் தெரிந்தது.

“கையை பிடிக்கறதுக்கு முன்னாடி யோசிச்சுகோ பிரபு .. இப்போ பிடிச்சேன்னா எப்பவுமே விட முடியாது  

“எப்பவும் விட மாட்டேன் ..”

கைகளைக் கொடுத்தாள்.

“இப்போ எப்படித் தெரியுமா இருக்கு .. உன்னை அப்படியே கட்டிப் பிடிக்கணும் போல ..”

“அப்போ எதுக்காகக் காத்திருக்க …”

அந்த சில வினாடிகள் எங்களைச் சுற்றிலும் இருந்த எல்லாமே , எல்லாருமே மறைந்து போனார்கள். நாங்கள் இருவர் மட்டுமே இருந்தோம். எத்தனை யுகங்கள் என்று தெரியவில்லை.

இன்னொரு பட்டாசு வெடித்த போது புத்தர் புன்னகைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தோம்.

“நீ இன்னும் பதில் சொல்லல .. “

“என்ன சொல்லணும் ?”

“லவ் யூ டூ ?!”

“சொல்லி தான் தெரியனுமா ?”

“ஏன் இப்போ நான் சொல்லலியா ?”

அப்பொழுதிலிருந்து தான் அவள் அந்த விளையாட்டை ஆரம்பித்தாள். எனக்கு முன்னாள் இரண்டு கைகளை நீட்டி அதில் ஒன்றை தேர்வு செய்யச் செய்யும் விளையாட்டை.

“என்ன இது ? ” எனக்கு முன்பு இரண்டு உள்ளங்கைகளையும் மூடியபடி நீட்டினாள்.

“இதுல லவ் யூ டூ  .. இதுல ஃபர்ஸ்ட் கிஸ் .. என்ன வேணும் ?”  புருவங்களை உயர்த்தியபடி கேட்டாள்.

“ஓ நீ அப்படி வரியா ? ” சிரித்தபடி நான் தேர்வு செய்தேன்.

முத்தமிட்டாள்….டேன் ………….டோம் …………………………………………………………….

நான் தேர்வு செய்த உள்ளங்கை எவ்வளவு பெரிய தவறான ஒரு முடிவு என எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.

அந்த முதல் முத்ததிலிருந்து . மூன்று மாதங்களுக்கு முன்பு அவள் தந்த கடைசி முத்தம் வரை ஒரு முறை கூட அவள் என்னைக் காதலிப்பதாகச்  சொல்லவேயில்லை.

       தொடரும்

——————————————————————————————————————————