Tags

,

7

 

“May I print a kiss on your lips?” I said, and she nodded her full permission: So we went to press and I rather guess we printed a full edition.

       Joseph Lilienthal

மணி பத்து ஆகியிருந்தது. கம்பார்ட்மென்டில் எல்லாரும் விளக்கை அணைக்கத் துவங்கியிருந்தார்கள் . காலையில் பேசிக் கொள்ளலாம் என நாங்களும் தூங்கச் சென்றோம்.

எனக்கு தான் தூக்கம் வரவில்லை. எழுந்து சென்று கதவைத் திறந்து வைத்து நின்று கொண்டேன். வெளிச்சப் புள்ளிகளும் , இருளும் மாறி மாறி கடந்து போய்க்கொண்டிருந்தன.

எங்கோ தூரத்தில் மழைபெய்து கொண்டிருக்க வேண்டும். முகத்தில் ஈரக்காற்று படுகையில் அவள் தொலைதூரத்தில் உதடுகளைக் குவிப்பதாகத் தோன்றியது.

முத்தத்தின் மேல் ஏன் எனக்கு அத்தனை பைத்தியம் என்று தெரியவில்லை. ஒருவேளை காத்திருந்த அத்தனை வருடத்து முத்தங்களையும் மொத்தமாக வாங்கித் தீர்த்து விடும் வேகமா எனத் தெரியவில்லை.

வாங்கும் பொழுதே கொடுக்கவும் , கொடுக்கும் பொழுதே எடுத்துக் கொள்ளவும் முடிகின்ற ஒன்று முத்தங்கள் மட்டும் தானே.

நான் ஒவ்வொரு முறை அவளைக் காதலிப்பதாகச் சொல்லிய போதும், எனக்கு முன்னால் அவள் நீட்டிய  இரண்டு கைகளிலும் முத்தங்கள் ஒளித்து வைத்ததையே, நான் சலிக்காமல் எடுத்துக் கொண்டிருந்தேன். என் கன்னப் பைகள் முத்தங்கள் கொள்ளாமல் போன பின்பும் அவள் உதடுகள் கொண்டே உள்ளே திணித்துக் கொண்டிருந்தேன். கடைசி ஆசை என்னவென்று கேட்கப்பட்ட ஒரு ரோஹி இறப்பதற்கு முதல் இரவு எல்லாப் பதார்த்தங்களையும் தின்று தீர்ப்பது போல நான் முத்தங்கள் தின்றுகொண்டிருந்தேன். ஆசை மட்டும் தீரவே இல்லை.

அவள் தனது காதலைச் சொல்வதற்கு தகுதியான ஒரு நாளைத் தேர்வு செய்துவிட்டு அதற்காத்தான் காத்துக் கொண்டிருந்தாள் என அப்பொழுது தெரியாது எனக்கு.

ஒன்றுமில்லாத உலகத்தில் மின்னலுடன் மழை பெய்து ஆழி சூழ்ந்து குளிர்ந்த பின்பு , ஒரு செல் உயிரி அமீபா ஆகி , அது வளர்ந்து வால் முளைத்து , அதுவும் ஒட்ட நறுக்கப் பட்டு மனிதனானதற்குள் ஏகப்பட்ட பரிணாம நிலைகள் இருப்பது போலவே, அவள் முத்தம் தர அனுமதி தந்து பின்பு ஒரு நாள் இரவு என்னை வீட்டுக்கு வரச் சொன்னதற்குள்ளும் சில பரிணாம நிலைகள் இருந்தன.

காதலைச் சொல்வதற்கு முன்பு அவள் நடந்து கொண்டதற்கும், சொன்னதற்குப் பின்பு அவள் என் மேல் எடுத்துக் கொண்ட உரிமையிலும்  தெரிந்த வித்தியாசத்தில் ஆரம்பித்தது அமீபா நிலை. நூறு சதவீதம் நான் அவளின் கண்காணிப்பிலேயே இருந்தேன். அது சரி, அவளைத் தவிர யார் என்னைப் பார்த்துக் கொள்வது? அவள் சொன்னது தான் இது. அத்தனை வருடங்கள் நான் காத்திருந்தும் அப்படி ஒருத்திக்காகத் தானே. சிறுநீர் கழிக்கச் சென்றதைக் கூட குறுஞ்செய்தியில் தெரிவித்து விட்டுச் சென்ற நாட்கள் அவள்.

இம்சை. இருந்தும் ஆனந்த அவஸ்தை.

நமக்கே நமக்கென்று ஒரு உயிர் துடித்துக் கொண்டிருக்கிறது என்ற உணர்வைப் போல அழகான ஒன்று எதுவுமே கிடையாது. முதல் குழந்தையாகப் பிறந்து , தம்பியோ தங்கையோ பிறக்கும் வரை அம்மாவிடம் இருந்து கிடைக்கும் உணர்வைப் போல. நான் மீண்டும் குழந்தையானேன். எனை  மறுபடியும் அவள் வளர்க்கத் துவங்கினாள்.

இருவருக்கும் பரஸ்பரம் என்னென்ன விருப்பு வெறுப்புகள் என்று தெரிந்து கொள்ள அதிகபட்சம் இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகவில்லை.  அவளுக்கு நடனம் பிடிக்கும் என்பதை மட்டும் தெரிந்து கொள்ள எனக்கு ஆன முதல் மாதத்தை நினைத்துக் கொண்டேன்.

செல்போனுடனேயே காலம் கழிந்த நாட்கள் அவை. அருகருகே இருந்த பொழுதும் கூட குறுஞ்செய்திகள் அனுப்பிக் கள்ளப்பார்வை பார்த்திருந்தோம்.

வேளச்சேரி பேருந்து நிலையத்தில் அவளை இறக்கிவிட்டதும் என் தலைக் கவசத்திற்குள் ப்ளூ டூத்  ஹெட் செட் போயிருக்கும். அவள் கை செல்போனுடன் காதிற்குப் போயிருக்கும். ஒரு முறை பேச எதுவுமில்லாமல் சிக்னல் விழ மீதமிருந்த எண்களை எல்லாம் எண்ணிக் கொண்டிருந்தோம்.

எத்தனையோ இரவுகள் அலைபேசி மட்டும் விழித்திருக்க நாங்கள் உறங்கியிருக்கிறோம்.

நிலவின் நேரம் இரவு தான் என்பதாலோ என்னவோ, இரவு மட்டும் நான் கேட்டதுமே கொஞ்சமும் மறுக்காமல் முத்தங்கள் தந்துவிடுவாள். குறுஞ்செய்திகளின் எண்ணிக்கைக்குக் கட்டுப்பாடு விதித்தது போல எங்களின் முத்தங்களுக்கு அலை பேசி சேவை வழங்குவோர் கட்டுப்பாடு விதிக்க முடியவில்லை. நூறு முத்தங்கள் எல்லாம் தொடர்ந்து வாங்கியிருக்கிறேன்.

”தொலைபேசியில் எல்லாம் முத்தம் தராதே .. அது உன் முத்தத்தை எல்லாம் எடுத்துக் கொண்டு வெறும் சத்தத்தையே தருகிறது” மீண்டும் மீண்டும் தபூ சங்கர் வரிகள் நினைவுக்கு வந்து கொண்டே இருந்தத , நான் மறக்க நினைக்கின்ற நாட்களுக்குள் இருந்து.

பின்பு ஒரு நாள் அதை உணர்ந்தோம். எல்லாரும் எங்களைக் கவனித்துக் கொண்டிருப்பதை.

அடுத்த பரிணாம நிலை. எங்களுக்குள் எதுவுமில்லை என கட்டாயப் ப்ரகனப் படுத்த ஆரம்பித்தது அப்பொழுது தான்.

“குரு கிட்ட சொல்லிட்டியா ?”

“எதை ?”

“நாம லவ் பண்றதை ..”

பேஸ்புக் யோசனை தந்ததே அவன் தான். இருந்தும் அதற்கு என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் குத்துமதிப்பாகத் தலையாட்டி வைத்தேன். அது அவளுக்கு இல்லை என்பதைப் போல தெரிந்திருக்க வேண்டும்.

“பொய்யா சொல்ற .. என்கிட்டே ரம்யா வந்து கேக்கறா .. ஏன் சொல்லலைன்னு ?”

வெண்ணிலாவிடம் ஒரு நல்ல பழக்கம் இருந்தது. எவ்வளவு முத்தம் தருகிறாளோ அந்த அளவுக்கு கிள்ளுகளும் உண்டு. முகம் சிரித்துக் கொண்டே இருக்கும். கை சத்தமே இல்லாமல் தொடையிலோ , கையிலோ கிள்ளியிருக்கும். கத்தக் கூட முடியாது.

அதற்கு முன்பு வரை ஊருக்கே தெரியும் படி தான் எல்லா இடங்களுக்கும் போய் கொண்டிருந்தோம். சாப்பிடப் போவதற்குக் கூட சைகைகள் பேச ஆரம்பித்தோம். எங்களுக்கென்று ஒரு ரகசிய இடம் கூட கண்டு பிடித்து வைத்திருந்தோம். கட்டிடத்தின் மொட்டைமாடி. மாடியின் ஒரு ஓரத்தில் ஜிம் மட்டுமே இருந்தது. பெரும்பாலான நேரம் காற்று மட்டுமே பயிற்சி செய்து கொண்டிருக்கும்.

“நீயும் வெண்ணிலாவும் லவ் பண்றீங்கலாமே! ”

“ டேய் பிரபு சொல்லவே இல்லை பாத்தியா ?”

“எப்படிரா …?”

“டேய் உண்மைய சொல்லு .. ”

சகல தரப்புகளிலும் வந்த எல்லாக் கேள்விகளுக்கும் இல்லை இல்லை என உரக்கத் தலையாட்டிக் கொண்டிருந்தேன்.

“வெண்ணிலா , நாம ஏன் இல்லைன்னு சொல்லணும் .. ” ஒருவழியாக அவளிடம் கேட்டு விட்டேன்.

மொட்டை மாடியில் சில் என்று காற்று வீசிக் கொண்டிருந்தது. காற்று விளையாடிக் கொண்டிருந்த தலை முடியைச் சரி செய்து கொண்டே சொன்னாள் “ஏன்னா நீ தான் என்ன லவ் பண்றேன்னு சொல்லிருக்க .. நான் இன்னும் சொல்லலியே …”

அன்று விளையாட்டாகத் தான் சொன்னாள். ஆனால் அதே இடத்தில் இன்னொரு நாள் அவள் அதையே திருப்பிச் சொன்னது விளையாட்டிற்காய் இல்லை.

“ஆஹா, இப்படி வேற ஒரு நெனப்பிருக்கா .. நீ இப்போவே சொல்லு .. ஐ லவ் யூ  

சிரித்துக் கொண்டே என் முன் மறுபடியும் கைகளை நீட்டினாள்.

“ இங்க முத்தம் எப்படிக் கொடுப்ப ..”

“உனக்கு சலிக்கவே சலிக்காதா ? ”

“அதுக்குள்ளவா .. நான் என்னென்னமோ யோசனை வச்சிருக்கேன் .. ”

“என்ன யோசனை ?”

“உனக்கு ஒரு பிக்கி பேங்க் வாங்கித் தரலாம்ன்னு இருக்கேன் .. நீ டெய்லி வீட்டுக்குப் போனதும் அதுல முத்தமா சேர்த்து வை .. ஒரு நாள் உனக்குத் தெரியாம அதை நான் ஒடச்சு நீ சேர்த்து வச்சதெல்லாம் திருடிக்கறேன் .. ”

“நல்லா பேசற …”

“நீ பேச்ச மாத்தாத .. எங்க என் முத்தம் ? ”

“இங்கயேவா .. ஜிம்முக்கு உள்ள இருந்து யாராவது பார்த்ததா நல்லாத் தெரியும் ..”

“அது என் கவலை இல்ல .. நீ என்ன வேணும்ன்னு கேட்ட .. நான் பதில் சொல்லியாச்சு .. நீ கேக்கறதுக்கு முன்னாடியே யோசிசிருக்கணும் .. ”

காற்றின் திசையில் என்னை நிறுத்தி வைத்துக் கொண்டு உதடுகள் குவித்தாள். ஈரமான காற்று என் கன்னங்கள் தீண்டியது.

ரயில் தடதடவென ஓடிக் கொண்டிருந்தது. இந்த இரவில் நான் தனியாகச் சிரித்துக் கொண்டிருப்பதை யாரும் கவனிக்கப் போவதில்லை.

ஒரு பெரியவர் மிகவும் குளிருவதால் கதவைப் பூட்டச் சொல்லிக் கேட்டுக் கொண்டார். கதவைப் பூட்டிவிட்டு கண்ணாடி முன்பு நின்று கொண்டேன்.

“கண்ணாடில என்ன பாக்கற .. ? ”

“இல்ல ..  காதோரத்துல லேசா நரைச்ச முடி இருக்கறா மாதிரி தெரியுது .. ”

“வயசாயிடுச்சுன்னா அப்படித்தான் .. அங்கிள் ”

“அப்படியா சொல்ற .. அப்போ வா சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம் .. ”

“போய் பண்ணிக்கோ ..  என்னை ஏன் கூப்பிடற .. நான் ஒண்ணும் உன்னை லவ் பண்ணலியே ”

அடுத்த இரண்டாவது நிமிடத்தில் என் முத்தங்களின் வரவுப் புத்தகத்தில் கணக்கொன்று கூடியிருந்தது.

கொஞ்ச நாட்களில் எங்களின் சோ கால்டு ரகசிய உறவு சலித்துப் போனது. “ஆமாங்க நாங்க லவ் பண்றோம்” என்கிற பரிணாம நிலைக்குள் நுழைந்திருந்தோம்.

என் நண்பர்கள் தான் பாவம். எங்களின் சேட்டைகள் கண்டு வெறுத்துப் போனார்கள். லூ , லாவெட்டரி போன்ற என் வார்த்தைப் பிரயோகங்களைக் கண்டு ஞே என்று விழிக்க ஆரம்பித்திருந்தனர். கையேந்தி பவன்களில் திஸ்யூ பேப்பர் கேட்ட என்னை அடிக்காமல் விட்டதே பெரிய விஷயம்.

முற்றிலுமாக எல்லாரையுமே புறக்கணிக்கத் துவங்கியிருந்த நாட்கள் அவை. என் உலகம் அவளாலும் அவளின் வாசனைகளாலும் மட்டுமே நிரம்பியிருந்தன.

யாருமேயில்லாத ஒரு கனவு தேசத்தில் நாங்கள் குடி புகுந்திருந்தோம். எதிகாலம் பற்றிய ஆசைகளும் கற்பனைகளும் மட்டுமே நிரம்பியிருந்தன அந்த தேசத்தில்.

அநேகமாக எல்லா நாட்களுமே பெசண்ட் நகர் கடற்கரைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தோம். அங்கே ஸ்கேட்டிங் பழகும் சிறு குழந்தைகளைக் காண அவளுக்கு மிகவும் பிடிக்கும். எங்கே இருந்தாலும் நான் அவளைத் தான் பார்த்திருக்கப் போகிறேன். அதனால் அவளுடன் இருந்த எல்லா இடங்களுமே எனக்குப் பிடித்திருந்தன.

அந்த ஏப்ரல் மாத ஞாயிற்றுக் கிழமை நன்றாக நினைவிருக்கிறது. எல்லாமே நன்றாகப் போய் கொண்டிருந்த என் வாழ்கை தலை கீழாகத் திரும்ப ஆரம்பித்தது அன்றிலிருந்து தான்.

மணலில் நடந்து கொண்டிருந்தோம். அவள் கடலைப் பார்த்தபடி நடந்து கொண்டிருந்தாள். நான் அவளைப் பார்த்தபடி கடலுக்கு முதுகு காட்டியபடி நடந்து கொண்டிருந்தேன்.

“கீழ விழுந்திடப் போற .. ஒழுங்க திரும்பி நட ..”

“ எனக்குப் பின்னால ஏதாவது இருந்தா பார்த்து சொல்லத் தான் நீ இருக்கியே “

சொல்லி வாயை மூடும் முன்பு மணலில் கால் இடறிக் கீழே விழுந்தேன்.

“அடிப்பாவி , இவ்ளோ நம்பிக்கையா சொன்னேன் .. பின்னாடி பள்ளம் இருக்குன்னு சொல்லிருக்கக் கூடாது ..?” தூக்கி விடச் சொல்லி கையை நீட்டினேன்.

அவள் தூக்கி விடுவதற்குப் பதில் என் அருகில் அமர்ந்தாள். “என்னடா பண்ண , நீ முன்னாடி இருக்கும் போது வேற எதுவும் தெரிய மாட்டேங்குது ..”

எனக்கு சில நிமிடங்கள் தலையில் அடித்தது போல் இருந்தது. இவளின் இத்தனை காதலுக்கும் நான் தகுதியானவன் தானா. என் மனதின் பாரத்தை எப்பொழுது இறக்கி வைக்கப் போகிறேன். அப்பொழுதே சொல்லி விடுவது என்று முடிவு செய்தேன்.

“வெண்ணிலா .. உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் .. ” எப்படி எடுத்துக் கொள்வாளோ என்று பயமாக இருந்தது. இருந்தாலும் சொல்லி விட வேண்டும் என்ற மன உந்துதல் மட்டும் அதிகமாகவே இருந்தது.

“ஹ்ம்ம் .. சொல்லுடா ..” அவள் கடலை வெறித்தபடியே அசுவாரசியமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“வந்தனான்னு … ”

“என்ன ? ” திரும்பிப் பார்த்தாள்.

“வந்தனான்னு ஒரு பொண்ணு காலேஜ்ல .. ”

“அதான் தெரியுமே .. நீ சைட் அடிச்சிட்டு இருந்த பொண்ணு .. அதுக்கென்ன இப்போ ?” அவள் மிக சாதாரணமாகக் கேட்டாள்.

“சைட் இல்ல .. கொஞ்சம் சீரியஸா தான் ”

“சீரியஸ்னா .. ?”

அவள் விளையாட்டாகப் பேச ஆரம்பித்தது எனக்கும் வசதியாகப் போனது.

“காலேஜ் முடிச்சு ஒரு வருஷத்துக்கு தாடி வச்சிருந்தேன் .. ”

“உனக்குக் கொடுத்த சம்பளத்துல ரேசர் வாங்க பட்ஜெட் இருந்திருக்காது .. அதுக்கு இப்படி ஒரு ரீசனா ? ”

“உன்கிட்ட சொல்லாம ரொம்ப கில்டியா இருந்தது ..  கோபப்படுவேன்னு நெனச்சேன் .. ”

“நான் எதுக்கு கோபப்படப் போறேன் .. அந்தப் பொண்ணுக்குக் கொடுத்து வச்சது அவ்ளோ தான் .. ” முகம் தான் சிரித்தபடியே பேசிக் கொண்டிருந்தது. கை வழக்கம் போல கிள்ளத் துவங்கியிருந்தது.

“ராஸ்கல் .. எவ்ளோ தைரியம் இருந்தா என்கிட்டே இன்னொரு பொண்ண பத்தி சொல்லுவ” கிள்ளி முடித்து அவளே சோர்ந்து போய் உட்கார்ந்துவிட்டாள்.

“ஸாரி .. ”

“பொழச்சு போ .. “

சிரித்தேன்.

“பொண்ணு எந்த ஊரு ..?”

“பாண்டிச்சேரி .. ”

“ஓசில சரக்கு கெடைக்கும்ன்னு ட்ரை பண்ணியோ …?”

“ச்சே ச்சே ..  நல்லவன் மாதிரியே நடிக்காதடா .. எங்க இருக்கா இப்போ ..? ”

“ஆஸ்திரேலியா போயிருக்காளாம் .. ”

மறுபடியும் அடி வாங்கினேன்.

“இன்னும் பாலோ பண்ணிட்டு தான் இருக்கியா அப்போ ?“

“இல்ல இல்ல .. லாஸ்ட் வீக் காலேஜ் பசங்க எல்லாம் மீட் பண்ணப்போ என் பிரெண்ட் சொன்னான் .. ”

“ஹ்ம்ம் .. அழகா இருப்பாளோ .. ”

கஷ்டமான கேள்வி.

“இங்க பாரு .. நீ சும்மா சும்மா அடிச்சேன்ன அப்பறம் நான் எதுவும் சொல்ல மாட்டேன் .. ”

“சரி சரி .. அடிக்கல .. அடிக்கல .. என் செல்லம் .. இப்போ சொல்லு .. அழகா இருப்பாளா ?”

ஈ என்று இழித்தேன். சந்தேகத்திற்கு இடமில்லாமல் அடி விழுந்தது .

“ஒரு மைனஸ் பாயின்ட் கூட கிடையாத அவ கிட்ட .. ?”

நீண்ட வினாடிகள் யோசித்துக் கொண்டே இருந்தேன். இந்த முறை எங்கே அடி விழும் என .

“ஒன்னே ஒண்ணு ?”

தயங்கித் தயங்கி “உயரம் கொஞ்சம் கம்மி .. ” என்றேன்.

“பன மரத்துல பாதி இருக்கற உன் பக்கத்துல எல்லா  பொண்ணுங்களுமே உயரம் கம்மியா தாண்டா தெரிவாங்க .. நானே அப்படித் தான் தெரிவேன் .. ”

“ச்சே ச்சே .. நீ பெர்பெக்ட் ஹெய்ட் .. ”

“பெர்ஃபெக்ட் ஹெய்ட்ன்னா ? ”

“வெரி குட் .. இப்படித் தான் கேள்வி கேக்கணும் .. ” எழுந்து நின்று கைகளில் இருந்த மணலைத் தட்டி விட்டுக் கொண்டேன்.

“எந்திரி .. ”

“எதுக்குடா ?”

“உனக்கு இப்போ சொல்லனுமா வேணாமா ?”

எழுந்து அவளும் நீண்ட நேரமாய் ஒட்டிக்கொண்டிருந்த மணலைத் துரத்திவிட்டாள்.

“கணக்கு நல்லா வருமா ?”

“பிளஸ் டூ ல செண்டம் ..”

“ஓகே ஓகே ..  என் உயரம் என்ன ?”

“180 செமீ .. ”

“சரியான பதில் ” கால்களைக் கொஞ்சமாக அகட்டி வைத்துக் கொண்டேன் .

“இப்போ ? ”

“177 செமீ ..”

“மறுபடியும் சரியான பதில் .. அடுத்த கேள்வி .. இப்போ உன் உயரம் என்ன ? ”

“170 செமீ .. ”

“அது செருப்போட .. செருப்பில்லாம சொல்லு .. ”

“167  செமீ ” முறைத்த படியே சொன்னாள்.

“வாத்தியார் மேல கோபப்படக் கூடாது ..  என்  தோள் மேல ரெண்டு கையையும் வை ”

குதிகால்களை உயர்த்தி தோள்களின் மீது தொங்கினாள்.

“இப்போ  உன் ஹெய்ட் ..”

“171 செமீ .. ”

தலையை மெல்லச் சாய்த்தேன்.

“இப்போ என் ஹெய்ட் ?”

“173 செமீ ”  அலைகளின் இரைச்சலைத் தாண்டியும் அவள் குரல் எனக்கு மிக அருகே கேட்டது.

“எவ்ளோ கேப் இருக்கு .. ?”

“2 செ மீ .. 

”கணக்குல பெரிய ஆள் தான் நீ .. ” அவள் இடை வளைத்து மேலே தூக்கினேன்.

“இப்போ ?”

“மீட்டிங் பாயின்ட் ..” இந்த முறை அவள் உதடுகள் தாண்டிய காற்று என் செவிக்கு  ஒலியைக் கடத்தும் முன்பே என் உதடுகளை எட்டியிருந்தது.

இதழ் பிரித்ததும் சொன்னாள்.

“பெர்ஃபெக்ட் ஹெயிட்”

       தொடரும்

——————————————————————————————————————————-