Tags

,

8

He felt now that he was not simply close to her, but that he did not know where he ended and she began. 

       Leo Tolstoy

சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது.

இத்தனை நாட்களுக்குப் பிறகு என்னிடம் இருப்பது இந்த இனிமையான நினைவுகளும் , வாசனை நாட்களும் , அவள் உதட்டு ஈர ஞாபகங்களும் மட்டுமே.

அழுது அழுது கண்ணீர் எப்பொழுதோ வற்றிப்போயாகிவிட்டது.  தினமும் உண்பது போல வலியையும் ஒரு அன்றாடச் செயலாக உட்கொள்ளப் பழகி நாட்களாகிறது.

இரவுகள் என் எதிரிகள். என் எல்லா இன்பங்களுக்கும் சாட்சியாக இருந்த இரவுகள். என்னைக் குற்றவாளிக் கூண்டில் நிற்க வைத்து கேள்வி கேட்டுக் கொல்லும் அதே இரவுகள். என் உறக்கம் திருடிக் கொண்ட வெண்ணிற இரவுகள். அழியாத மச்சம் போல எனைச் சுற்றிலும் கவிந்திருக்கும் என் எல்லா நினைவுகளையும் போலவே இந்த இரவுகளையும் அறவே வெறுக்கிறேன்.

நன்றாக நினைவிருக்கிறது அந்த இரவு.

மே மாதம் . 29 ம் நாள் …

வழக்கம் போல நான் வீட்டுக்குள் நுழையவும் அவள் என்னை அழைக்கவும் சரியாக இருந்தது.

“என்னடா பண்ற ?”

“உன்ன தான் நெனச்சிட்டு இருக்கேன் ..”

“சும்மா பொய் சொல்லாதடா ..”

“கரெக்டா கண்டு பிடிச்சிட்ட ..  டிரஸ்  சேஞ் பண்ணட்டு இருக்கேன்னு சொல்ல ஒரு மாதிரி இருந்தது .. “

“அதான பார்த்தேன் .. சரி அப்படியே உன்கிட்ட இருக்கறதிலேயே சுமாரான ஒரு டிரெஸ்ஸ எடுத்துப் போட்டு சீக்கிரம் ரெடி ஆகு பார்ப்போம் ..”

“இந்த ராத்திரில ரெடி ஆகி என்ன பண்ணப் போறேன் .. ”

கொஞ்சம் நேரம் இடைவெளியில் , பதில் வந்தது.

“அம்மாவும் அப்பாவும் ஊருக்குப் போயிருக்காங்க .. வீட்ல தனியா தான் இருக்கேன் ..”

“ஓ தனியா இருக்க பயமா இருக்கா … நாம ஃபோன் பேசிட்டே இருக்கலாம் … நீ அப்படியே தூங்கிடு ..”

 

“உன்னை வந்தனா லவ் பண்ண மாட்டேன்னு சொன்னதில தப்பே இல்ல…” அடிக்கடி வந்தனாவைப் பற்றி விளையாட்டாக நாங்கள் பேசிக்கொள்ளத் துவங்கியிருந்தோம். விளையாட்டாக .. அப்படித் தான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.

இன்னும் கொஞ்சம் இடைவெளி விட்டு , இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து மீண்டும் சொன்னாள் “அம்மாவும் அப்பாவும் ஊருக்குப் போயிருக்காங்க .. வீட்ல தனியா தான் இருக்கேன் ..”

“ச்சே .. நான் இவ்ளோ மக்கா .. சார் இன்னும் பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன் .. ”

“என் வீடு தெரியுமா ? அட்ரெஸ் வேணாமா ..?”

“உன் வீட்டு அட்ரஸ் மட்டுமில்ல .. உன் ஏரியா ப்ளூ ப்ரிண்டே என்கிட்டே இருக்கு .. நீ ப்ராஜெக்ட்ல ஜாயின் பண்ண அடுத்த நாளே சென்சஸ் எடுத்தாச்சு .. ”

“திருட்டுப் பய நீ .. ஆனா இப்பவே சொல்லிறேன் .. வீட்டுக்கு வந்து நல்ல பிள்ளையா நடந்துக்கணும் … இல்லன்னா வரவே வராத .. ”

“சொல்லிட்டேல .. எவ்ளோ சமத்துப் பிள்ளையா நடந்துக்கறேன்னு மட்டும் பாரு .. ஆனா என்ன, என் கை என் அளவுக்கு நல்ல பிள்ளை இல்ல..  சொன்ன பேச்சே கேக்காது .. ட்ரை பண்றேன் .. ”

சிரித்தாள்.

போகும் வழியில் சாலை விளக்குகள் எல்லாமே அவளைப் போலவே புன்னகைத்துக் கொண்டிருந்தன. அந்த புன்னகை ஞாபகத்தை நீட்டிக் கொண்டே அடுத்த அரை மணி நேரத்தில் அவள் வீட்டு அழைப்பு மணியைக் கொஞ்சிக் கொண்டிருந்தேன்.. அட , அழைப்பு மணியும்  அவளைப் போலவே சிரித்தது.

கதவைத் திறந்தவள் ஹமாம் விளம்பர மாடல் போல தலையில் துண்டு எல்லாம் கட்டிக் கொண்டிருந்தாள்.

“நைட் டிரெஸ்ஸா .. வெரி நைஸ் ..  

“குளிக்கப் போயிட்டு இருந்தேன் .. சீக்கிரம் வந்திட்ட …” கதவில் சாய்ந்து கொண்டே சொன்னாள். முதலில் இந்தக் கதவை கழற்றி எறிந்துவிட்டு நான் நின்று கொள்ள வேண்டும். நான் மட்டுமே நின்று கொள்ள வேண்டும்.

“இப்போ எதுக்கு இளிக்கற ..?”

“நாலு தடவை க்ளோசப் போட்டு பள்ளு தேச்சேன் .. எதாவது ச்சேஞ் தெரியுதா ?”

“அடி வாங்காம , ஒழுங்கா உள்ள வா .. ”

ஒவ்வொரு அறையாகக் காட்டிக் கொண்டே வந்தாள்.

“இது தான் என் ரூம் .. கல்யாணத்துக்குப் பிறகு , இந்த ரூம மட்டும் அப்படியே நம்ம வீட்டுக்கு எடுத்துட்டுப் போய்டணும் .. நீயும் இதுல தான் இருக்கணும் ..  உனக்குப் பிடிசிருக்குல .. ?”

அப்படி ஒரு அறையையும் அறையில் அவளையும் எப்படிப் பிடிக்காமல் போகும்?

அறையின் ஒரு சுவர் அலமாரி முழுக்கப் புத்தகங்கள் தான் இருந்தன.

“அப்பா நெறைய புக்ஸ் படிப்பாங்க .. அப்படியே எனக்கும் பழகிடுச்சு .. ” கையில் கால்வின் அண்ட் ஹோப்ஸ் புத்தகத்தைக் கொடுத்துவிட்டு குளிக்கச் சென்று விட்டாள். நான் கதவைக் கொஞ்ச நேரம் ஏக்கமாகப் பார்த்துவிட்டு புத்தகத்தைப் புரட்டத் துவங்கினேன்.

“வெண்ணிலா ..!”

“என்னடா ? ” உள்ளிருந்து குரல் கொடுத்தாள்.

“நீ தான் விசில் அடிக்கறியா ?”

“இல்ல .. அது பக்கத்து வீட்டுக் குக்கர் .. ”

மீண்டும் கொஞ்ச நேரம் சும்மா இருந்துவிட்டு .. “வெண்ணிலா ..!”

“என்ன்ன்ன்டா ..!”

“இல்ல .. இந்த காமிக் ஸ்டிரிப் எனக்குப் புரியல .. ” புத்தகத்தை மூடி வைத்து நீண்ட நேரம் ஆகியிருந்தது.

“வந்து சொல்றேன் .. அஞ்சு நிமிஷம் ..”

இரண்டு நிமிடங்களுக்கு மேல் என்னால் தாக்குப் பிடிக்கவில்லை. புத்தகத்தை  எடுத்து புத்தக அலமாரியில் வைத்துவிட்டு , அதன் கீழேயே தரையில் உட்கார்ந்து கொண்டேன்.

மீண்டும் “வெண்ணிலா … ” என்றேன் ..

“அடி தான் வாங்கப் போற .. இப்போ என்ன தான் உன் பிரச்சனை .. ?”

“இல்ல .. நானும் குளிக்க மறந்துட்டேன் .. ”

கதவைத் திறந்து இடுப்பில் கைகளை வைத்தபடி , புருவத்தை உயர்த்தி புன்னகைத்தபடி சொன்னாள்.

“இப்போ போய் குளி … தனியா … ” சின்ரெல்லா உடையில் இருந்தாள். அந்த இரவு மொத்தமும் திடீரென்று அவள் ஆடை நிறத்தில் வெண்ணிறமானது போல் தோன்றியது.

விசிலடித்தேன்.

“ஏன்டா விசில் அடிக்கற .. ?”

“நான் இல்ல .. அது பக்கத்து வீட்டுக் குக்கர் ..” தலை துவட்டிக் கொண்டிருந்த துவாலையை மேலே எறிந்தாள். சட்டென்று நனைந்து போனேன்.

“இப்போ எதுக்கு இந்த காஸ்ட்யூம் ச்சேஞ் .. நாம டூயட் பாடப் போறோமா ?”

“ஆமா .. ” அந்த கள்ளத் தனமான புன்னகையில் என் இதயத் துடிப்பு தாறுமாறாய் எகிறிக் கொண்டிருந்தது. தரை மொத்தமும் படர்ந்திருந்த அவள் ஆடையை இரண்டு கைகளாலும் தூக்கியபடி , பூச்செடி ஒன்று மிதந்து வருவது போல எனை நோக்கி வந்தாள்.

என்னருகிலேயே உட்கார்ந்துகொண்டாள்.

“இப்போ ஏன் இவ்ளோ பக்கத்துல உட்கார்ந்திருக்க .. ”

“ஏ ஸி ரொம்ப அதிகமா இருக்கு .. உனக்குக் குளிரல ..” சுருண்டிருந்த அவள் தலை முடிகளில் இருந்து கசிந்த நீர் அவள் கழுத்துப் பகுதியை ஈரமாக்கிக் கொண்டிருந்தது. எனக்கு நா வறண்டு போனது.

“எனக்கு பயங்கரமா வேர்க்குது .. ” என் கைகளை அடித்தேன்.

“என்னாச்சு .. ? ஏன் அடிச்சுக்கற ..? ”

“ஒண்ணுமில்லையே … நீ போட்ருக்க டிரஸ் வெல்வெட்டா இல்லா பிளவர் மேட் ஆன்னு செக் பண்ணி பார்க்கச் சொல்லிச்சு .. அதெல்லாம் தப்புன்னு கைகிட்ட சொல்லிட்டு இருந்தேன் ..”

புன்னகைத்தாள். எப்படி அன்றே நான் பைத்தியமாகாமல் இருந்தேனோ !

“கண்ணை மூடு ..”

“எ .. எதுக்கு ?”

“சொன்னா தான் செய்வியா ? ” நிச்சயமாய் அது வெறும் குரல் இல்லை . என் பேச்சைக் கேட்காமல் கண்கள் தானே மூடிக் கொண்டன.

இருண்ட இமைகளுக்குள் மஞ்சள் வெளிச்சத்தில் அவள் மட்டுமே தெரிந்தாள்.

“அஞ்சு வரைக்கும் எண்ணு இப்போ ..”

“எ .. எதுக்கு ?”

“சொன்னா தான் செய்வியா ? ”

நான் வேறொன்று தான் கேட்க நினைத்தேன். ஆனால் உதடுகள் ஐந்து என்றன.

“நான்கு ..”

அவள் வாசனையாக இருந்தாள்.

“மூன்று”

அவள் இன்னும் வாசனையாக இருந்தாள்.

“இரண்டு”

ஐயோ இன்னும் ஒரு எண்ணிக்கை இருக்கிறதே எண்ணி முடிக்க.

“ஒன்று .. ” ஹப்பாட. முடிந்தது. வினாடிகள் காத்திருந்தேன். யுகங்கள் கழிந்தன. ஆனால் ஒன்றுமே நடக்க வில்லை.

கண்களை மெல்லத் திறந்தேன்.

என் எதிரே அமர்ந்திருந்தாள். கண்கள் லேசாக நனைந்திருந்தன.

“ஹாப்பி பர்த்டே பிரபு .. ” என்னை கட்டி அனைத்துக் கொண்டாள்.

பதிலாக என்னிடம் இருந்து ஒரு பெருமூச்சே வந்தது. என் அசட்டுத் தனத்தை நினைத்துச் சிரித்துக் கொண்டேன்.

“ஏன்டா சிரிக்கற ? ”

“நான் வேறென்னமோ எதிர் பார்த்தேன் .. என் பர்த் டே எனக்கு மறந்து போய் ரொம்ப நாள் ஆகுது .. என்னை அழ வைக்காத .. ”

எனைத் தோளில் சாய்த்துக் கொண்டு தலையை வருடிக் கொடுத்தாள். “ட்ரஸ்ட் மீ .. இந்த நாள் நமக்கு ரொம்ப ஸ்பெஷலா இருக்கப் போகுது …”

“பார்ட்டி டைம் .. ” அலமாரியைத் திறந்து பரிசுப் பொட்டலத்தை நீட்டினாள். அது ஒரு புத்தகம். நான் முதல் முறை அவளை நூலகத்தில் பார்த்த பொழுது அவள் படித்துக் கொண்டிருந்த புத்தகம். பி.எஸ். ஐ லவ் யூ .

கட்டிலின் மேலே இருந்த ரிமோட்டை எடுத்து ஏதோ ஒரு பக்கம் நீட்டி அழுத்தினாள். என்ரிக்கே இக்லியாசின் , குட் ஐ ஹேவ் திஸ் கிஸ் ஃபார் எவர் பாடல்  பாடத் துவங்கியது.

“ஹேய் ..நடு ராத்திரி இது .. இப்போ போய் பாட்டுப் போடற .. பக்கத்து வீட்ல இருந்து வந்து ஒதைக்கப் போறாங்க … ”

“அஞ்சு மீட்டர் ஸரௌண்டிங்ல மட்டும் தான் இந்தப் பாட்டுக் கேக்கும் .. கன்வர்ஜென்ஸ் டெக்னிக் ..” கொஞ்சம் எட்டிப் போய் நின்று பார்த்தேன். பாடல் கேட்கவில்லை.

“என்ன நெனச்ச என்னைப் பத்தி ..  ரேங்க் ஹோல்டர் நான் .. ”

“இப்படி ஒரு புத்திசாலிப் பொண்ணுக்கு இப்படி ஒரு மக்குப் பையனா ..  நீ வேணும்ன்னா H ப்ளஸ் O2 என்னன்னு கேளு .. குவாட்டர்ன்னு தான் சொல்வேன் .. ”

“ஹேய் வெயிட் .. நீ தண்ணி அடிப்பேல ..  டிரிங்க்ஸ் இல்லாம பர்த் டே பார்ட்டியா .. அப்பாவோட கலெக்க்ஷன்ல எதாவது இருக்கன்னு பார்க்கறேன் .. ” எழுந்து வெளியே சென்றாள்.

நான் ஏதோ விளையாட்டுக்குச் சொல்கிறாள் என்று நினைத்தேன். திரும்பி கைகளில் பாட்டிலுடன் வந்தாள்.

“ட டா .. கிளாஸ் , ஐஸ் கியுப்ஸ் எல்லாம் ரெடி”

“ச்சே ச்சே .. இதெல்லாம் வேண்டாம்.. ”

“ரொம்ப நல்ல பையன் மாதிரி நடிக்காத .. இது உன்னோட நாள் .. நான் எதுவும் சொல்ல மாட்டேன் …”

“அதுக்காக சொல்லல .. இது என் பிராண்ட் இல்ல ..”

சியர்ஸ்.

அத்தோடு நான் நிறுத்தியிருக்க வேண்டும். எனக்குப் பேசிக் கொண்டே இருக்க வேண்டும் போல இருந்தது. நான் பேசிக் கொண்டே இருந்தேன். என்னென்னமோ. அவள் மாறாத புன்னகையுடன் , பேசக் கற்றுக் கொண்டிருக்கும் குழந்தையை ஆசையாய் அம்மா பார்த்துக் கொண்டிருப்பது போல என்னைப ரசித்துக் கொண்டிருந்தாள்.

“உன் பிராண்ட் இல்லாமையே மூணு ரவுண்டு ஆச்சு இது வரைக்கும் மிஸ்டர் நல்ல பையன் ..”

“இது தான் லாஸ்ட் .. நமக்கு கொழந்தை பொறந்ததும் இத நான் விட்ருவேன் .. ப்ராமிஸ் ..”

“அதுக்குள்ள கொழந்தையா ? விட்டா பேரே வச்சிருவ போல .. ”

“வச்சாச்சு .. வ .. வந்தனா .. ஆ ஆ ஆ ” கிள்ளியிருந்தாள்.

“நீ திருந்தவே மாட்ட .. ஏண்டா அவ்ளோ லவ் பண்ணியா நீ அவள ..”

“அதெல்லாம் அப்போ .. ”

“இவ்ளோ நல்ல பையன ஏன் வேணாம்ன்னு சொன்னா அவ ? பாரு, பால் சப்டறா மாதிரி எவ்ளோ அழகா சாப்ட்டு இருக்க .. நாலாவது ரவுண்ட் இது .. ” மடேர் என்று மண்டையில் கையில் வைத்திருந்த புத்தகத்தால் அடித்தாள்.

“உன் அப்பா கேக் மாட்டாரா பாட்டில் எங்க் போச்சுன்னு ..”

“அதெல்லாம் தண்ணி ஊத்தி வச்சுக்கலாம் .. நீ பேச்ச மாத்தாத .. ஏன் வேணாம்ன்னு சொன்னா ..”

“அவ்  எங்க வேணா சொன்னா .. நான் தான் அவ் கிட்ட சொல்லவே இல்லியே .. ”

“என்னது ? சொல்லவே இல்லியா .. ”

“ஆமா ..”

“அடத் தூ பரோபோஸ் பண்ணாமே இவ்ளோ பீலிங் ஆ  .. நீயா எனக்கு பட்டாசு எல்லாம் வெடிச்சு ஐ லவ் யூ சொன்னது ..”

“ஹி ஹி ..”

“டேய் இப்போவே வாய் கொளருது .. குடிச்சது போதும் ..“

“இது தான் லாஸ்ட் .. தண்ணி ஊத்தி வச்சு உன் அப்பாவ ஏமாத்திரலாம்”

“கொண்டு வந்து கொடுத்தது ஏன் தப்பு .. ”

“அவ என்னை வேணாம்ன்னு சொல்லிட்டா .. சியர்ஸ் ..”

“நீ சொல்லிருக்கனும்டா ..”

“எப்படியும் வேணாம்ன்னு தான் சொல்வான்னு தெரியும் .. எதுக்கு சொல்லணும் .. ”

“ஒரு வேளை ஃபியூசர்ல…  ஒரு வேளை சொல்லிருக்கலாமோன்னு உனக்குத் தோணுச்சுன்னா .. இப்போ இல்ல .. உனக்கும் எனக்கும் வயசாகி, ஒருத்தர ஒருத்தர் பிடிச்சுகிட்டு பார்க் ல வாக் போகும் போது .. சொல்லு தோணுச்சுன்னா , என்னாகும் .. நாம வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லாம போய்டாது ..?”

சில கேள்விகள் நம்மிடம் ஏன் கேட்கப்படுகின்றன என்பது நமக்கே தெரியாது. ஒருவேளை வெகுகாலமாக நமக்கு நாமே கேட்டுக்கொள்ள விருப்பப் பட்டிருந்த கேள்வியாகக் கூட அது இருக்கலாம். அதற்கான பதிலும் நமக்கு நாமே சொல்லிக் கொள்வதாக இருக்கலாம்.

“அதெல்லாம் தோணாது .. நீ இன்னொரு கிளாஸ் ஊத்து ..”

“இல்லடா .. இத இன்னைக்கே முடிச்சிடலாம் .. அவ வேணாம்ன்னு தான சொல்லப் போற .. அப்படி சொல்லிட்டா ஸ்டோரி ஓவர் .. அதுக்கு நீ மொதல்ல சொல்லணும் …  இப்போவே சொல்லு .. ”

“இப்போ எப்படி சொல்றது ..  அவ தான் ஆஸ்திரேலியால இல்ல இருக்கா .. என்கிட்ட ஃபோன் நம்பர் எல்லாம் இல்ல ..  ?”

“மெயில் ஐடி இருக்கா .. ”

“இருக்கணும் .. ”

“இருக்கா இல்லியா .. ? ” கிள்ளினாள்.

“கிள்ளாத .. வலிக்குது .. இருக்கு இருக்கு .. ”

மடி கணினியை எடுத்து வந்து ஜிமெயிலைத் திறந்தாள்.

“இந்தா லாக் இன் பண்ணு .. ”

என் கைகள் கன்னா பின்னா என்று நடுங்கிக் கொண்டிருந்தன.

“கிளாஸ மட்டும் சரியா பிடிச்சிருக்க .. பாஸ்வோர்ட் சொல்லு .. நானே மெயில் அனுப்பறேன் .. ”

சொன்னேன்.

“அடப்பாவி பாஸ்வோர்டும் அவ பேரா .. எனக்கு ஏன் இப்போ கோபம் வர மாட்டேங்குது .. ச்சே ..”

அவளே மடலைத் தயார் செய்தாள். “மெயில்ல அனுப்பறா மாதிரி கேவலமான ப்ரோபோசல் எதுவுமே கிடையாது .. சத்தியமா உனக்கு நோ தான் .. ”

நான் நிறைய குடித்திருந்திருக்க வேண்டும்.

”வெண்ணிலா .. கொஞ்ச நேரம் உன் மடில படுத்துகவா .. ?”

கால்களை நீட்டிக் கொண்டு மடியில் சாய்த்துக் கொண்டாள்.

“ஐ லவ் யூ ..”

நெற்றியில் முத்தமிட்டாள்.

“ஆப்ஷன் கேக்கல ..? ”

“எதுக்குடா கேட்டுகிட்டு .. நீ என்ன கேக்கப் போறேன்னு எனக்கே தெரியும் .. அதான் கேக்காமயே குடுத்திட்டேன் .. இன்னைக்கு உன்கிட்ட சொல்லலாம்ன்னு தான் பார்த்தேன் .. ஆனா சொன்னா புரிஞ்சிக்கிற நிலைமைல நீ இல்ல .. இப்போ தூங்கு காலைல பேசிக்கலாம்…”  தலையை வருடிக் கொடுத்துக் கொண்டே இருந்தாள்.

நான் அழத் துவங்கியிருந்தேன்.

“அவ ஏன் என்னை வேணாம்ன்னு சொன்னா ?”

அதன் பிறகு நடந்த எதுவும் எனக்கு நினைவில்லை. ஒரு கனவு போலத் தான் ஞாபகமிருக்கிறது.

நான் கிணற்றில் விழுந்திருந்தேன். யார் யாரோ குதித்து என்னை மேலே ஏற்றிக் கொண்டு வந்தார்கள். என் சிறு வயது வீட்டுத் திண்ணையில் படுக்க வைக்கப் பட்டிருந்தேன். அம்மா வாந்தி எடு என்றாள். வாஸ் பேசின் முழுவதும் நிரம்பி வழிந்தது.  அடை மழை பெய்தது. என் உடைகளைக் களைந்து அம்மா என்னைப் படுக்கையில் படுக்க வைத்தாள். கண்களைத் திறக்க முடியவில்லை. மெதுவாகத் திறந்து பார்த்தேன். நெற்றியில் முத்தமிட்டுவிட்டு வெண்ணிலா விளக்கணைத்து விட்டுச் சென்றாள்.

காலை எழுந்த பொழுது தலை பயங்கரமாக வலித்தது. எழுந்திருக்கும் பொழுது மணி ஒன்று.

வெண்ணிலா கிளம்பி கழுத்தில் அடையாள அட்டை எல்லாம் மாட்டிக் கொண்டு படுக்கையின் அருகிலேயே உட்கார்ந்திருந்தாள்.

“குட் மார்னிங் .. சார் ஒரு வழியா எழுந்தாச்சா .. ?”

“ஹேய் .. குட் மார்னிங் .. என் டிரஸ் எல்லாம் எங்க .. ?”

“குப்பைத் தொட்டில இருக்கு .. ஏண்டா அவ்ளோ வாந்தியா எடுப்ப .. ”

“ஹேய் சாரி .. இனிமே குடிக்க மாட்டேன் .. ” அந்த சூழ்நிலை எனக்கு ஒரு சங்கடத்தையும் தரவில்லை. மாறாக எங்கள் வாழ்கையை நாங்கள் துவங்கிவிட்டது போன்ற ஒரு மனநிலையே என்னிடம் இருந்தது.

“இட்ஸ் ஓகே .. போய் குளிச்சிட்டு வா .. புது டிரஸ் வாங்கி வச்சிருக்கேன் .. ஹாப்பி பர்த் டே ..”

அடுத்த ஒரு மாதத்தை என்னால் மறக்கவே முடியாது.  வெண்ணிலா என்னைக் கண்களுக்குள் வைத்துப் பார்த்துக் கொண்டாள். அவளுடன் இருக்கப் போகும் கடைசி மாதம் அது என்று எனக்கு அப்பொழுது தெரியாது.

லிப்டில் நாங்கள் இருவர் மட்டுமே இருந்தோம். வழக்கம் போல சீண்டிக் கொண்டு விளையாடிக் கொண்டு.

மிகச் சாதரணமாக வெண்ணிலா கேட்டாள்.

“மெயில் அனுப்பினியே அவளுக்கு .. ஒரு வேளை அவ ஓகே ன்னு சொல்லிட்டா என்ன பண்ணுவ .. ”

‘”ஓகே வா ..? அவளா ..? மெயில் நேரா ஸ்பாம்கு போயிருக்கும் .. சத்தியமா ரிப்ளை வரப்  போறதில்ல  

“ஒருவேளை இப்போ அவ உன் முன்னாடி வந்து நின்னா என்ன பண்ணுவ ? ”

“என்னாச்சு உனக்கு இன்னிக்கு .. காமிக்ஸ் படிக்கறத கம்மி பண்ணு முதல்ல .. ”

பதினோராவது மாடியில் எங்களது அலுவலகம்.

ஒன்பதாவது மாடியில் லிப்ட்  யாருடைய அழைப்புக்காகவோ நின்றது.

திறந்த கதவின் பின்னே வந்தனா நின்று கொண்டிருந்தாள்.

அடுத்த பத்தாவது நாளில் எனக்கும் வந்தனாவிற்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.

       தொடரும்

——————————————————————————————————————————-