Tags

,

9

             “Some of us think holding on makes us strong; but sometimes it is letting go.”

        Herman Hesse

 

பத்து நாட்களில் என்ன நடந்து விட முடியும். என்ன வேண்டுமானாலும் நடந்து விட முடியும். எனக்கு நடந்தது போல.

பகலிலேயே நான் கனவுகள் கண்டு கொண்டிருந்த காலம் இது. வந்தனாவை அன்று சந்தித்திருந்ததும் ஒரு பகல் கனவாக இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.

ஆனால் அது கனவில்லை.

வெயில் நேரத்து மழை போல, என்றோ  சிறு வயதில் ஒரு மாலை நேரத்தில் தலையில் நச் நச்சென்று குட்டிப் பெய்த ஆலங்கட்டி போல , சிறுவர் மலரில் நான் படித்த ஒரு தேவதைக் கதை போல நம்புவதற்குக் கடினமாக இருந்தாலும் அவள் என் முன் நிஜமாகவே நின்று கொண்டிருந்தாள்.

நான் ஊமை மொழி பழகிக் கொண்டிருந்தேன். வெண்ணிலா தான் எனை அசைத்து சுய நினைவுக்குக் கொண்டு வந்தாள். அதற்குள் என் அலுவலகத் தளம் வந்திருந்தது.

வந்தனாவும் எங்களுடன் இறங்கிக் கொண்டாள்.

“ஹலோ .. ” மூன்றாவது முறையாக அவள் சொன்னாள்.

“ஹாய் “ என்றேன். அதற்கு மேல் என்ன சொல்வதென்று தெரியவில்லை.

“ஹலோ என்ன நடக்குது இங்க ..? ” வெண்ணிலா இடையே புகுந்தாள்.

“வெண்ணிலா .. இவ.. இவங்க வந்தனா .. என் காலேஜ் மேட் .. ”

“என்னப்பா மரியாதை எல்லாம் அதிகமா இருக்கு .. ” சொல்லிக்கொண்டே வெண்ணிலாவிற்குக் கை கொடுத்தாள்.

“ஹாய் ஐ’ம் வெண்ணிலா .. ” வந்தனா இவள் யார் என்பது போல் என்னைப் பார்த்தாள். வெண்ணிலாவும் நீயே சொல்லேன் பார்ப்போம், என்பது போல என்னைப் பார்த்தாள். எனக்கு எங்கே பார்ப்பதென்று தெரியவில்லை. மனதிற்குள் நூறு முறை தோன்றியது , சொல்லடா இவளைத்தான் நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று. வார்த்தைகள் தான் ஒத்துழைக்கவில்லை.

பேசியிருக்க வேண்டிய இடம் அது. நான் பேசவில்லை.

வெண்ணிலாவே “அவர் என் பாஸ் ” என்றாள்.

“பிரபு , ப்ரீயா இருக்கியா .. ஏதாவது பேசலாம் … ரொம்ப நாளாச்சில்ல பார்த்து .. ”

“இல்ல .. எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு .. நாம இன்னொரு நாள் பேசலாமே .. ” அவள் முகம் சட்டென்று சுருங்கியது.

“பாஸ் பொய் சொல்றாரு .. ஒரு வேலையும் கிடையாது .. ரொம்ப நாள் கழிச்சு காலேஜ் பிரெண்ட பார்த்திருக்கீங்க .. நான் வேலை பார்த்துக்கிறேன் .. நீங்க போய் பேசிட்டு வாங்க .. ” நேரம் பார்த்து வெண்ணிலாவும் காலை வாரினாள்.

மீண்டும் லிப்டில் வந்தனாவுடன் கீழே இறங்கிச் செல்கையில் என் மனதில் ஒன்றே ஒன்று தான் ஓடிக் கொண்டிருந்தது. “இவள் எங்கிருந்து வந்தாள் .. இப்பொழுது நான் என்ன செய்யப் போகிறேன் ..???”

“அழகா தான் இருக்கா உன் ஆளு … ஆல் த பெஸ்ட் ..” வெண்ணிலா குறுஞ்செய்தி அனுப்பினாள்.

வந்தனாவிடம் ஒரு நிமிடம் என்று கேட்டு விட்டு , கொஞ்சம் பின் தங்கி வெண்ணிலாவை அழைத்தேன்.

“ஹேய் , என்னடி நெனச்சிட்டு இருக்க மனசில .. இப்போ எதுக்கு மாட்டி விட்ட  … நான் என்ன பண்றது ..?”

“ஏன்டா , பயந்து சாகற ..? சும்மா போய் பேசேன் .. ”

“என்ன பேசறது ?”

“மெயில் படிச்சாளான்னு கேளு .. அடுத்த தடவை அவளை நேர்ல பார்த்தா , ஐ லவ் யூ சொல்வேன்னு அன்னிக்கு சொன்னேல .. இப்போ சொல்லு .. ”

“ஒனக்கு எல்லாமே விளையாட்டு தானா .. சீரியஸாவே இருக்க மாட்டியா ..?”

“ஐம் வெரி சீரியஸ் .. நீ அவ கிட்ட சொல்லு .. எப்படியும் மாட்டேன்னு தான சொல்லப் போறா .. உனக்கும் .. நமக்கும் அதானே வேணும் .. யாருக்கும் எந்த …ஹார்ட் பீலிங்கும் கிடையாது … ”

“என்னால முடியாது .. ஐ லவ் யூ , எல்லார்கிட்டயும் எல்லாம் சொல்ல முடியாது .. சொல்லனும்ன்னா இப்போ உன்கிட்ட சொல்றேன் .. ஐ லவ் யூ .. ”

“டேய் .. சும்மா நடிக்காதடா .. எவ்ளோ டைம் அவகிட்ட சொல்லணும்ன்னு ஆசைப்பட்டிருக்க .. நிறைவேறாத ஆசையோட செத்துப் போனா பேயா ஆயிடுவாங்களாம் .. நீ இப்போவே பேய் மாதிரி தான் படுத்தற .. நெஜமாவே பேய் ஆயிட்டேன்னா யார் தாங்கறது .. ?  ” சிரித்தாள்.

“எனக்கு பயமாயிருக்கு .. நான் மாட்டேன் ..”

“ஏன் அவ ஓகே சொல்லிடுவாளோன்னு பயப்படறியா? ”

“ச்சே ச்சே .. அதெல்லாம் சத்தியமா நடக்காது ..  ஏன் தேவை இல்லாம பேர கெடுத்துக்கணும்ன்னு தான் பக்கறேன் .. 

“சரி ..  நீ அவ கிட்ட சொல்லிட்டு நல்ல நியூஸோட வா .. நான் இன்னைக்கு ஐ லவ் யூ சொல்றேன் .. ”

அதற்கு மேல் நான் என்ன பேச ?

“சரி ஓகே .. நான் சொல்றேன் .. ஆனா நீயும் அங்கே இருக்கணும் .. கூட வந்து உட்கார வேணாம் .. தூரமா எங்கயாவது உட்கார்ந்துக்கோ … ஏமாத்தலாம்ன்னு நினைக்காத .. நீ வந்த பிறகு தான் நான் பேசவே ஆரம்பிப்பேன் .. லைன்லையே இரு .. கட் பண்ணிடாத …”

எதிரே வந்தனாவும் அவளைச் சுற்றி என் பழைய நினைவுகளும் படர்ந்திருந்தாலும்  , என் கண்கள் வெண்ணிலாவையே தேடிக் கொண்டிருந்தன. வந்தனாவின் பின்னால், தூரத்தில் அவள் வந்தமர்ந்தவுடன் தான் எனக்குப் புன்னகையே வந்தது.

“ஏன் சிரிக்கற .. ? ”

“இத்தனை வருஷம் கழிச்சு உன்னைப் பார்ப்பேன்னு நெனைக்கல .. ”

“நானும்தாம்பா  .. எப்படி இருக்க ? ”

“நல்லா இருக்கேன் .. நீ ? ”

“முன்னாடி தான இருக்கேன் .. நீயே பார்த்து சொல்லேன் .. ”

அவள் நிறையவே மாறியிருந்தாள். அதிகம் பேசினாள். நிறையவே புன்னகைத்தாள். எப்பொழுதும் ஏற்றி வாரியிருக்கும் முடிகளுக்குச் சுதந்திரம் தந்து காற்றில் பறக்க விட்டிருந்தாள். சுரிதார் தவிர எதுவும் அணிந்திராதவள் ஜீன்சும் சட்டையும் அணிந்து டாம்பாய் போல இருந்தாள். புதிதாக கண்மையும் , ஐ லைனரும் .. நிறையவே மாறியிருக்கிறாள்.

நானும் கூடத் தான் நிறைய மாறியிருக்கிறேன். அவள் புகைப்படம் பார்த்துக் கொண்டே இரவுகளைக் கழித்தவன் , அவள் முன் இருந்தும் , என் மனம் முழுக்க வெண்ணிலா வெண்ணிலா என்றே சொல்லிக் கொண்டிருந்தது. வெண்ணிலாவைப் பார்த்து, சொல்லித்தான் ஆக வேண்டுமா என ஜாடையில் கேட்டேன். கொன்று விடுவேன் என்று மிரட்டினாள்.

மீண்டும் வந்தனாவைப் பார்த்தேன். இன்னமும் கருப்பு நிற உடைகளைத் தான் அணிகிறாள். தட்டையான புருவங்களுக்கு மத்தியில் வைத்திடும் குட்டிப் பொட்டினை மாற்றவில்லை. கழுத்திலோ , காதிலோ எந்த நகைகளையும் காணோம். நிமிடத்திற்கு ஒருமுறை உதட்டினை ஈரப் படுத்திக் கொண்டே தான் இருக்கிறாள்.  வார்த்தைகளின் விகுதிகளுடன் ‘ப்பா’ சேர்த்து தான் பேசுகிறாள். அவள் இன்னும் மாறவேயில்லை.

நான் நிஜமாகவே மாறிவிட்டேனா ? ஏன் என் இதயம் இத்தனை வருடங்கள் தாண்டியும் இப்படித் துடிக்கிறது? ஏன் வார்த்தைகள் குளறுகிறது எவ்வளவோ பேச வேண்டும் என்று தோன்றினாலும்.? ஏன் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்க்கத் தோன்றுகிறது? எதற்கித்தனை குறு குறுப்பு ?

நான் பேசியிருக்கக் கூடாத இடம் அது. ஆனால் பேசினேன்.

“இன்னும் அப்படியே .. இன்னும் அழகா இருக்க .. ”

“அவ்ளோ தானா .. இல்ல வேற ஏதாவது சொல்லனுமா ?”

நான் சொல்லவேண்டுமா அவசியம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவளே பேசினாள்.

“உன் மெயில்ஸ் எல்லாம் படிச்சேன் .. ”

ஒரு மின்னஞ்சல் தானே அனுப்பினேன். இவள் என்ன எல்லா மின்னஞ்சல்களையும் படித்தேன் என்கிறாள்?

“முகவரி தொலைத்த கடிதங்கள் .. பேரே ரொம்ப அழகா இருந்தது .. இன்பாக்ட் முதல் லெட்டர் படிக்கும் போது கோபமா வந்தது .. இவனும் இப்படித்தானான்னு ..  ஆனா மொத்தமா இருபத்தேழு லெட்டர்சையும் பாக்கும் போது .. தெரியல .. உன்ன பாக்கனும்னு தோணுச்சு .. பேசணும் போல இருந்தது ..  யூ ஆர் டிப்ஃபரண்ட் .. காலேஜ்லயே தெரியும் எனக்கு .. எல்லாருக்கும் வர அட்ராக்ஷன் ..  காலேஜ் முடிஞ்சா சுத்தமா மறந்திடுவன்னு நெனச்சேன் .. நாலு வருஷம் தாண்டியும் கொஞ்சம் கூட மாறலை நீ .. உன்ன மிஸ் பண்ணனுமான்னு யோசிச்சேன் .. ”

மூச்சு விடாமல் பேசினாள். எனக்கு மூச்சு வாங்கியது.

முகவரி தொலைத்த கடிதங்கள் , கல்லூரியில் அவளுக்காக எழுதியவை. கடைசி வரை அவளுக்கு அனுப்பப் போவதில்லை என்று தெரிந்தே அந்தப் பெயரை வைத்திருந்தேன். நான் நிச்சயமாக கடிதங்களை அவளுக்கு அனுப்பவும் இல்லை. பின் எப்படி படித்தாள் இவள் ? எனக்கு அதிர்சியாகத் தான் இருந்தது.

“உனக்காத் தான் இந்த பிராஞ்ச்சுக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டு வந்தேன் ..   ” எனக்கு கொஞ்சமாக நான் ஒரு எலி போல வெண்ணிலாவின் பொறியில் மாட்டியிருப்பது புரிந்தது.  ஓ .. ஓ .. வெண்ணிலா பெண்ணே .. என்ன காரியம் செய்திருக்கிறாய் ? எதற்காக ?

“இல்ல வந்தனா .. நெஜமா என்ன நடந்ததுன்னா .. ”

“நீ எதுவும் சொல்ல வேண்டாம் .. நானே சொல்றேன் .. ஐ லவ் யூ டூ ..”

எல்லாம் நாசமாய் போனது. ஆத்திரமாக வந்தது.

“உனக்கு இன்னொரு ஷாக் வேற இருக்கு ..  என் அப்பா ஏற்கனவே உன் அப்பா கிட்ட பேசிட்டாரு .. எல்லாருக்கும் ஓகே ..  ஸோ உன் லெட்டர்ல சொல்லிருந்த மாதிரியே , இதுவரை யாரும் பார்த்திராத அந்த கடற்கரையில சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம் .. ” சொல்லி விட்டு , என் வேலை முடிந்தது , நீ எங்காவது போய் முட்டிக் கொள் என்பது போல எழுந்து போய்விட்டாள்.

வெண்ணிலா அழைப்பைத் துண்டித்திருந்தாள். அவளையும் காணவில்லை.  

நேரே மொட்டை மாடிக்குச் சென்றேன். அவளை அழைத்தேன்.

“டெர்ரெஸ்க்கு வா பேசணும் … ”

“கொஞ்சம் வேலை இருக்கு பிரபு .. ” அவள் குரலில் சுரத்தில்லை.

“இப்போ வரப் போறியா இல்லையா ? ”  

“இப்போ ஏன் கத்தற ..   .. நான் வரேன் .. அஞ்சு நிமிஷத்துல .. ” அடிக்குரலில் சொன்னாள்.

எனது அலுவலகத்தின் மொட்டை மாடியில் இருந்தோம். வானம் முழுதும் நிலா அடைத்திருந்தது. அவளைத் தழுவிய காற்று வேண்டா வெறுப்பாக என்னையும் மோதிச் சென்றது.

“இன்னும் எவ்ளோ நேரம் தான் பேசாமயே நிக்க போற? ” அவள் கிளம்புவது போல திரும்பினாள்.

நான் மெளனமாக நின்றிருந்தேன். மெளனமாக மட்டுமே நின்றிருந்தேன். எவ்வளவு முயன்றும் என்னால் எதையும் பேச முடியவில்லை. வாயைத் திறக்க முயன்றேன். ஒரு வார்த்தையும் வரவில்லை.

கடைசியில் மிகவும் பிரயாசைப் பட்டு வாயைத் திறந்தேன்.

“ஏன் வெண்ணிலா இப்படிப் பண்ண ?”

அவள் எதுவும் பேசவில்லை.

“நீதான ..  நீதான எல்லா மெயில்சையும் அவளுக்கு அனுப்பினது …? ”

“உன் வீட்டு அட்ரெஸ் கூட நான் தான் கொடுத்தேன் .. ஸோ .. கூடிய சீக்கிரம் கல்யாணம் ஆகப் போகுது … கங்கிராட்ஸ் பாஸ்  ..” அவள் கைகளைக் கட்டிக்கொண்டு வெகு சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்தாள்.

நான் மீண்டும் அதையே கேட்டேன்.

“ஏன் வெண்ணிலா இப்படிப் பண்ண ?”

“ஏன்னா உனக்கு அவள தான் பிடிச்சிருக்கு .. ”

“யார் சொன்னா ? ”

“யார் சொல்லணும் ? ”

“நான் .. ”

“நீ தான் சொன்ன .. ”

“இங்க பாரு .. நான் உன்கிட்ட எதையும் மறைக்கக் கூடாதுன்னு தான் சொன்னேன் .. காலேஜ்ல அவளை லவ் பண்ணது என்னமோ உண்மை தான் .. அவ கூட இருந்தா லைப் சந்தோஷமா இருக்கும்ன்னு நெறைய தடவ கனவு கண்டிருக்கிறேன் .. இல்லைன்னு சொல்லல ..  ஆனா அப்போ என் வாழ்கைல நீ இல்ல .. இப்போ நீ .. நீ மட்டும் தான் இருக்க ..  எனக்கு நீ தான் வேணும் .. நீ மட்டும் போதும் .. ”

“உனக்கு அவ தான் வேணும் .. ”

“எனக்கென்ன வேணும்ன்னு எனக்குத் தெரியாதா ? ”

“ஆமா .. உனக்கென்ன வேணும்ன்னு உனக்குத் தெரியாது .. வேணாம்டா என்ன அழ வைக்காத ..” அவள் குரல் உடைய ஆரம்பித்திருந்தது. என்னுடையதும் தான்.

“புரியுது வெண்ணிலா .. நீயும் கடைசில எல்லா பொண்ணுங்க மாதிரின்னு காட்டிடேல .. என்ன பார்த்தா ஹாண்டி ஹாப்டு மாதிரி தெரியுதுல ..  துரு பிடிச்ச ஒரு செகன்ட் ஹாண்ட்  பைக் மாதிரி தான இப்போ நான் .. ”

அவ்வளவு நேர பொறுமையும் போயிருந்தது அவளுக்கு. வெடித்துக் கத்தத் துவங்கியிருந்தாள்.

“உன் மனசில அவ இல்லன்னு சொல்றியா இப்போ ? ”

“ஆமா .. ”

“அப்போ ஏன் லிப்ட்ல  அவளைப் பார்த்தப்போ பேச்சில்லாம நின்ன ..? அந்த ஸ்மைல்கு என்ன அர்த்தம் …? ஏன் நான் யாருன்னு கேட்டப்போ உன் கேர்ள் பிரெண்ட்ன்னு இன்ட்ரொட்யூஸ் பண்ணல ..?  ஏன் நீ அனுப்பின மெயில்ஸ் பத்தி பேசினப்போ , எதையுமே நான் அனுப்பலைன்னு அவ கிட்ட சொல்லல ..? கடைசில எங்கேஜ்மண்ட் பத்தி பேசினாலே .. அப்போ கூட எதுவும் பேசாம சும்மா தானடா இருந்த .. இப்போ வந்து எல்லாத்தையும் என்கிட்ட கேளு .. ”

அவள் கேட்ட எந்த ‘ஏன்’களுக்கும் என்னிடம் பதில் இல்லை.

“ஏன்னா , இன்னும் உன் மனசில அவ இருக்காடா …”

“இல்லடா .. ”

“சரி .. உன் பேவரைட் கலர் என்ன ..?”

“பிளாக் .. ”

“பொய் சொல்லாத .. ப்ளூ .. அவளுக்குப் ப்ளாக் பிடிக்கும் .. உனக்கும் பிடிக்குது .. நீ அவளோட இம்ப்ரின்ட் இப்போ .. உன் பாஸ் வோர்ட் என்ன ? ஏதாவது ஒன்னு சொல்லு .. எல்லாமே அவ பேர் தான?  .. சரி அவ்வளவு ஏன் .. உன் பர்த் டே ராத்திரி ஏன் கூட தனியா இருந்தியே .. என்ன பண்னேனு ஞாபாகம் இருக்கா … ”

“ ஐ நோ .. ஐ வாமிட்டட் .. ”

“வாந்தி மட்டும் எடுக்கல .. ” அவள் பார்வையில் அப்படி ஒரு வெறுப்பை நான் அதுவரை பார்த்ததே இல்லை. 

“ஏதாவது தப்பா நடந்துகிட்டேனா .. ?”

“ஆமாடா .. தப்பா தான் நடந்தது ..  ஒரு ராத்திரி .. என் பெட்ரூம் .. உன் மனசுக்குப் பிடிச்ச பொண்ணு நான் .. இங்க…  தொடர தூரத்துல இருந்தோம் .. நீ என்ன பண்ண தெரியுமா ? என் மடில படுத்திட்டு ரெண்டு மணி நேரம் அழுதிட்டு இருந்த .. வந்தனா பேரை சொல்லி .. ” அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த அழுகை வெளியே வந்தது.

அவளைச் சமாதானப் படுத்த அருகே சென்றேன்.

“தொடாத ..  எல்லா நைட்டும் என் கூட தனியா இருக்கும் போது , அவளை நெனச்சிட்டு தான் என்கூட இருக்கறேன்னு எனக்குத் தோணாதா ? ”

கோபமா , ஆச்சர்யமா , இயலாமையா ? எதுவென்று தெரியவில்லை. என்னால் எதுவும் பேச முடியவில்லை. அப்படி ஒரு வார்த்தைகளை நான் அவளிடம் எதிர் பார்க்கவில்லை. இனிமேல் எப்படி புரிய வைப்பது இவளுக்கு , உள்ளிருக்கும் ஆற்றாமையும் வலியும் வேறு .. இவள் மேல் இருக்கும் காதல் வேறென்று .. மனதில் இருக்கும் காயங்களை இவளில்லாமல் வேறு யாரிடம் அழுது தீர்த்திருக்க முடியும் என்னால் என்று எப்படி சொல்லுவேன் இவளிடம் ? நம்பிக்கை போன பின்பு என்ன சொல்லி என்ன ? காதலைச் சொல்லியா புரிய வைப்பது. என் கண்களில் வழிந்து கொண்டிருக்கும் கண்ணீரால் புரிய வைக்க முடியாததை எந்த வார்த்தைகளால் விளக்க முடியும்…

 நான் செய்த ஒரே தவறு வந்தனாவின் ஞாபங்களைக் கழற்றி எறியாமல் கூடவே வைத்துக் கொண்டிருந்தது. விபத்திற்குப் பின்பு கூடவே ஒட்டிக்கொண்டுவிடும் தழும்புகளைப் போல ..  என்னை அப்படியே ஏற்றுக் கொள்வாள் என்ற நம்பிக்கையில் தானே.  நம்பிக்கை போய்விட்டதே இப்பொழுது .. காதல் ?

வேறெதுவும் சொல்ல முடியவில்லை என்னால்.

“ஐ லவ் யூ வெண்ணிலா … ”

அழுத கண்களைத் துடைத்துக் கொண்டாள். மூக்கை உறிந்து கொண்டே , வழக்கம் போலவே கைகளை என் முன் நீட்டினாள்.

“ இது நான் .. இது வந்தனா .. நீ ஏற்கனவே வந்தனாவ ச்சூஸ் பண்ணிட்ட பிரபு  .. “ அடக்க முடியாமல் என்னைக் கட்டிக் கொண்டு அழுதாள்.

“நான் போறேன் பிரபு .. உன் வாழ்க்கைல நான் வரவே மாட்டேன் .. ” என் உதட்டில் அழுந்த முத்தமிட்டு விட்டுச் சென்று விட்டாள் என் வானின் ஒரே வெண்ணிலா.

அது தான் அவள் எனக்குத் தந்த கடைசி முத்தம். 

       தொடரும்

 

——————————————————————————————————————————-