Tags

,

10

Love does nothing but make you weak! It turns you into an object of pity and derision–a mewling pathetic creature no more fit to live than a worm squirming on the pavement after a hard summer rain.
                                                                                                                    Teresa Medeiros

 

“என்ன சார் ? தூக்கம் வரலியா ?” கார்த்திக் நின்று கொண்டிருந்தார். ஆமாம் என்று தலை அசைத்தேன்.

“சிக்ரெட் ? ”

“இல்ல கார்த்திக் ..பழக்கம் இல்ல .. இங்க சிகரெட் பிடிகறது தப்பில்ல ..?”

“சும்மா ரெண்டு பஃப் … எனக்கும் தூக்கம் வரல .. உங்களைக் காணோம் .. இங்க தான்  இருப்பீங்கன்னு தோணுச்சு …”

எனக்கு லேசாக இருமல் வந்தது.

“சாரி பிரபு .. ” கீழே தூக்கி எறிந்தார் சிகிரெட் துண்டை.

“ஸோ ?  எதுக்காக ஹைதராபாத் .. ? ” அவர் பேச்சை மாற்ற விரும்பினார்.

“வெண்ணிலாவைப் பார்க்க .. ”

“மறுபடியும் ஏதாவது ட்ரைனிங்கா ? ”

“அவ என்னை விட்டு இங்க வந்து மூணு மாசம் ஆகுது”

எத்தனை முறை மனதிற்குள்ளே நினைத்துப் பொருமினாலும், பேசும் பொழுதே மனம் அமைதி கொள்கிறது. பேசத் தவறிய தருணங்களுக்கெல்லாம் சேர்த்துப் பேசுவது போலத் தோன்றியது. எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டே இருந்தார் கார்த்திக்.

“எப்படி வந்தனா கூட எங்கேஜ்மெண்ட்கு ஒத்துக்க முடிஞ்சது உங்களால ? ”

ஒரு தவறை இன்னொரு தவறின் மூலம் சரி செய்ய முடியாது. ஆனால் நான் செய்ய முயன்று தோற்றேன்.

“நான் போறேன் பிரபு .. உன் வாழ்க்கைல நான் வரவே மாட்டேன் .. ” அவள் சென்ற பின்பும் அவள் குரல் கேட்டுக் கொண்டே இருந்தது.  திமிர். அப்படி என்ன செய்து விட்டேன் என்று. திமிர். என் வெண்ணிலா தானே எங்கே போய் விடப் போகிறாள் என்று.

ஆனால் நான் கீழே இறங்கி அலுவலகம் சென்ற பொழுதே அவள் இல்லை. எனது இன்பாக்ஸ் இல் அவளது ராஜினாமா கடிதம் இருந்தது.  தொலைபேசியை எடுக்கவில்லை. வீட்டுக்குச் சென்றேன்.  அவளது அப்பா மட்டுமே இருந்தார்.  கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியிருந்தால் கூட மீண்டும் மீண்டும் போய் நின்றிருந்திருப்பேன். அந்தக் கிழவர் , என் அப்பா வயதுடையவர் அவர் பெண்ணுக்காகக் கை கூப்பினார். காதலில் மட்டும் பெற்றவர்கள் அழும் பொழுது அபத்தமாக இருக்கிறது. நான் இல்லாமலிருந்தால் தான் அவளுக்கு நிம்மதி என்றார். எனது திருமணத்திற்கு வாழ்த்துச் சொன்னார்.

கோபமாய் வந்தது.

நீ என்ன வேண்டாம் என்று என்னைச் சொல்லுவது ?  நீ இல்லையென்றால் என்னால் வாழவே முடியாதா ?  முடியும்.

வீட்டிற்குச் சென்ற பொழுது அப்பாவும் அம்மாவும் வந்திருந்தார்கள். பத்து நாட்களில் நிச்சயதார்த்தம் என்றார்கள். மகிழ்ச்சி தானே என அவர்களே கேட்டுவிட்டு , பதிலையும் அவர்களே உறுதி செய்து கொண்டார்கள்.  “உனக்கு என்ன வேணும்ன்னு எங்களுக்குத் தெரியாதாப்பா ” என மூச்சுக்கு முன்னூறு முறை கேட்பவர்களுக்குத் தெரியவில்லையா , என் கண்களின் கண்ணீர்?  காதலித்த பெண்ணுடன் நிச்சயதார்த்தம் , அந்த மகிழ்ச்சி கொஞ்சம் கூட இவனிடம் காணவில்லையே என ?

பெற்றவர்களுக்கு  நாம் குழந்தையாக இருக்கும் வரை மட்டுமே நம் தேவை தெரிகிறது. அதன் பிறகு தெரிந்தது போலக் காட்டிக் கொள்கிறார்கள். தெரிந்தாலும் தெரியாதது போல சில சமயம்.

தம்பி மட்டும் கேட்டான் , வெண்ணிலா பற்றி. பிறகு விட்டு விட்டான் , வழக்கம் போல நான் எதுவும் பேசாமல் இருந்ததால்.

குரு சொன்னதில் எந்த வித சந்தேகமும் இல்லை. நான் சுயநலவாதி தான்.

எப்படி அப்படி ஒரு கற்பிதத்திற்கு வந்தேன் எனத் தெரியவில்லை. என்னெதிரே சிரித்துக் கொண்டிருக்கும், இருவீட்டுப் பெரியவர்களும் தெரியவில்லை. எனக்குக் காதல் என்றால் என்ன எனவும் , கை பிடித்துக் கவிதை எழுதவும் கற்றுத் தந்த வந்தனாவின் மனது என்னவாகும் எனவும் யோசிக்கவில்லை.

என் இனிய வெண்ணிலா, நான் எதுவும் யாரிடமும் சொல்லப் போவதில்லை. இன்னமும் பத்து நாட்கள் இருக்கின்றன. உனக்கு நான் வேண்டும் எனில் நீயாக என்னைத் தேடி வா.

யோசித்துப் பார்கையில் , வீட்டில் உண்மையை சொல்லும் தைரியம் இல்லாமல் தான் அப்படி ஒரு எண்ணம் எனக்குத் தோன்றியிருக்கவேண்டும்.

தைரியமில்லாதவன் காதலிக்கக் கூடாது. பெற்றோரின் கண்ணீருக்கு அஞ்சுபவன் மனதில் கவிதைகள் பிறக்கக் கூடாது. ஒரே நேரத்தில் ஒருவன் கோழையாகவும் , நல்ல காதலனாகவும் இருக்க முடியாது.

நான் வெண்ணிலாவை இழந்து கொண்டே வந்தேன். அவளை அடையும் தகுதியையும் கூட.

எனக்கு நானே அந்நியமாகிப் போனேன். வேறு யாருக்கோ நிச்சயதார்த்தம் என்பது போலத் தோன்றியது. பத்து நாட்கள் பறந்து போனது.

வந்தனாவின் வீட்டிலேயே எளிமையாக நடந்தது நிச்சயதார்த்தம். அவளிடம் இருந்து குறுஞ்செய்தி வந்தது. “மாடி அறைக்கு வரவும்”

அவளது அறையில் அவள் மட்டுமே இருந்தாள். உள்ளே சென்றதும் கதவைச் சாத்தினாள்.

“ஏதாவது பிரச்சனையா பிரபு ?”

நான் எதுவும் பேசாமல் நின்றிருந்தேன்.

“உன்கிட்ட எந்த சந்தோசத்தையுமே காணோமே ..  எனக்கு எல்லாம் தெரியும் ..”

ஒரு கணம் திக் என்றிருந்தது.

“என்ன தெரியும் ..? ”

“அதான் லெட்டர்ல எழுதிருந்தியே .. வெயிட்டிங் பார் த பர்ஸ்ட் கிஸ் னு .. இனியும் உன்ன காக்க வைக்க விரும்பல .. ”

கடவுளே இவளை நான் காயப்படுத்தப் போகிறேன்.

சுவரில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள்.

கீழே இருக்கும் பெரியவர்கள் இன்னமும் எவ்வளவு நேரம் சிரித்துக் கொண்டிருக்கப் போகிறார்கள்.

“கிஸ் மீ ” என்றாள்.

“ஐ லவ் யூ வா ? கிஸ் ஆ ? ” எனக்கு வெண்ணிலா தெரிந்தாள்.

“வந்தனா .. ”

“ம் ” என்றாள் கண்களைத் திறக்காமலேயே.

உலகத்திலேயே மிக மோசமான கழுதையாக நடந்து கொண்டேன்.

“நான் வெண்ணிலாவ லவ் பண்றேன் .. இந்த கல்யாணம் நடக்கக் கூடாது .. ”

எல்லாரும் திட்டினார்கள். வந்தனா அழுதாள். அவளின் பெற்றோர்கள் சபித்தார்கள். முதல் முறையாக அப்பா என்னை அறைந்தார். நிச்சயதார்த்தம் முடிந்து போனது , எவ்வளவு சீக்கிரமாக ஆரம்பித்ததோ அவ்வளவு சீக்கிரமாக.

இப்பொழுதாவது சொன்னேனே என்ற நிம்மதி மட்டும் தான் என்னுள் இருந்தது. என்னைப் பற்றி வீட்டில் இருந்த பிம்பம் தகர்ந்து போனது குறித்த வருத்தம் கொஞ்சமும் இல்லை.

இனிமேல் என்னைக் கேட்க யாரும் இல்லை.  இன்னமும் தீர்க்க வேண்டிய கணக்கு ஒன்றே ஒன்று மட்டுமே. வந்தனா. நிச்சயம் அவள் என்னை மன்னிக்கப் போவதில்லை எனத் தெரிந்திருந்தும் நான் மன்னிப்புக் கேட்கச் சென்றேன்.

எதிர்பார்த்தது போலத் திட்ட எல்லாம் இல்லை. மாறாகப் புன்னகைத்தாள். எவ்வளவு பெரிய தண்டனை.

“தேங்க்ஸ் பிரபு .. இப்போவாவது சொன்னியே ” சிரித்தாள்.

இப்பொழுது எதை நிறுவ முயற்சிக்கிறாள்? நான் அவளைக் கல்லால் அடித்தேன் இருந்தும் வலிக்கவில்லை என்றா ? நான் அவள் வாழ்வில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றா ?  நான் அவளைப் பொறுத்த வரை , அவள் சீப்பில் சிக்கியிருப்பதற்குச் சமம் என்றா? உண்மையில் அவள் முன் நான் அது போலத் தான் உட்கார்ந்திருந்தேன்.

“ஸாரி வந்தனா .. ”

“எதுக்குப்பா பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிட்டு .. எப்போ அந்த லெட்டர்ஸ் எல்லாம் நீ அனுப்பலைன்னு தெரிஞ்சுதோ அப்போவே உன் மேல இருந்த காதல் போயிடுச்சு .. எப்போ பத்து நாள் எதுவும் சொல்லாம , நிச்சயதார்த்தம் முடிஞ்ச பின்னாடி நிறுத்தினியோ அப்போவே உன் மேல இருந்த மரியாதை போயிடுச்சு .. எனக்குக் கொஞ்சம் கூட தகுதி இல்லாதவன் நீ ..  

நான் மெளனமாக தண்டனையை வாங்கிக் கொண்டிருந்தேன்.

“இப்போ கூட நான் தான் சரி .. காலேஜ்ல உனக்கு என் மேல வந்தது வெறும் அட்ராக்ஷன் தான் .. காலேஜ் முடிஞ்சதுமே அதுவும் முடிஞ்சு போச்சு .. யூ ஆர் நோ டிஃப்பரண்ட் ”

உண்மை தான்.

“அப்படி ஒரு பொண்ண எப்படிப்பா போனா போன்னு சும்மா விட முடிஞ்சது .. உனக்கு என்ன வேணும்ன்னு உனக்கே தெரியல … ”

அவளிடம் பேசி முடித்து விட்டு திரும்பும் பொழுதே தோன்றியது. ஒரு காதல் கதையில் நிறைய பேர் காதலிக்கிறார்கள். சிலர் முட்டாள் தனமாக நடந்து கொள்கிறார்கள். காயப்படுத்துகிறார்கள். காயப்படுகிறார்கள். துரோகம் செய்கிறார்கள். பெற்றவர்கள் அழுவதைக் காட்டி உடன் அழுகிறார்கள். சிலர் தியாகம் செய்கிறார்கள். மீதமுள்ள இருவர் தான் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

என் கதையில் எல்லோரும் நல்லவர்கள். என்னைத் தவிர.

அன்றிலிருந்து என் வாழ்வு வெண்ணிலா மற்றும் அவளின் நினைவுகள் மட்டும் என்றாகிப் போனது.  

கடைசி முத்ததிற்கும் நான் கையை அறுத்துக் கொண்டதற்கும் இடையேயும் சில பரிணாம நிலைகள் இருந்தன.

மெளனமாக நான் ஏற்றுக் கொள்ளத் தொடங்கிய தண்டனைக் காலத்தில் தொடங்கியது அது. ரம்யா என்னிடம் பேசுவதையே நிறுத்தியிருந்தாள். நான் லீட் ஆக இருக்க மறுத்ததால் , குரு என் இடத்திற்கு வந்திருந்தான். அவனுக்கும் எனக்கும் இருந்த கொஞ்ச நஞ்ச பேச்சு வார்த்தையும் முடிந்து போயிருந்தது.

அலைபேசி போன்ற ஒரு எதிரி இருக்கவே முடியாது. கடந்த காலங்களை எல்லாம் குறுஞ்செய்திகளாக சேர்த்துவைத்து எனைக் கொன்று கொண்டிருந்தது.

நான்கு நண்பர்கள் ஒரே அறையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்போம். நன்றாகத் தான் போய்க் கொண்டிருக்கும். முதலில் ஒருவனுக்கு அழைப்பு வரும். எழுந்து செல்வான். கொஞ்ச நேரத்தில் இரண்டாமாவனும் எழுந்து செல்வான். மூன்றாமாவன் எங்கும் செல்ல மாட்டான். என்னிடம் பேசிக் கொண்டே குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டிருப்பான். திடீரென என்னைச் சுற்றி ஒரு வெறுமை சூழ்ந்து கொல்லும். அலைபேசியில் அத்தனை நண்பர்களின் எண்களும் இருக்கும் . யாருக்கும் அழைக்கத் தோன்றாது.

அவளின் எண்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்திருக்கிறேன்.

பின்பு ஒரு நாள் அதை உணர்ந்தேன். எல்லாரும் என்னை கவனித்துக் கொண்டிருப்பதை.

அப்படியெல்லாம் எதுவுமில்லையே என கடுமையாக நிறுவ நான் முயற்சித்தது அத்தனையும் தோல்வியிலேயே முடிந்தது.

காய்ச்சலில்லாமல் , அது இருப்பது போல நடிப்பது எளிது. ஆனால் இருக்கின்ற காய்ச்சலை மறைப்பது கடினம். எளிதாகக் காட்டிக் கொடுத்து விடும். விட்டது.

”ஆமாங்க அவ என்னை விட்டுப் போய்ட்டா … ”

அவள் வேளச்சேரியில் இல்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும். இருந்தும் கிண்டிக்கு வேளச்சேரி வழியாவே சென்றேன். அநேகமாக எல்லா நாட்களும் பெசண்ட் நகர் பீச்சுக்கு செல்ல ஆரம்பித்தேன். ஸ்கேடிங் ஆடும் குழந்தைகளில் எங்களின் நினைவுகளை மீட்டெடுக்க முயன்று கொண்டிருந்தேன்.

எப்படி மறக்க முடியும் இந்த மூன்று மாதங்களை?

இமைகள்  மூடிக் கொண்டு விழித்திருக்கவும் , கண்கள் திறந்து கொண்டு கனாக் காணவும் கற்றுக் கொண்ட நாட்கள் அவை. விழித்திருக்கிறேனா இல்லையா என்பதே புரியாத பொழுது , நான் கனவு கண்டுகொண்டிருக்கிறேனா இல்லைக் கனவைச் செய்து கொண்டிருக்கிறேனா என்பதை மட்டும் புரிந்து கொள்வதெப்படி ? சற்று முன்பு முடிந்து போன கனவு, கனவு தொடர்ந்து அதன் நீட்சியாக நானே நினைத்துக் கொள்வன ; எது கனவு , எது என் ஆள் மன விம்மல் ?.. எது நான் கண்டது , எது காண விரும்புவது ..?  குழம்பிப் புரண்ட நாட்கள்.  இருட்டின் ஊடே காற்றில் உறுமிக் கொண்டிருக்கும் மின்விசிறியின் சத்தத்தை மட்டும் கேட்டுக் கொண்டே இரவைக் கழித்த நாட்கள்.

அவளை நான் எவ்வளவு காதலிக்கிறேன் என நானே புரிந்து கொண்ட நாட்கள். இழந்த சொர்க்கம் மில்டனுக்கு மட்டும் உரியதல்ல போலும். இழந்த பிறகே நானும் புரிந்துகொண்டேன்.

அழுது அழுது கண்ணீர் தீர்ந்து போன ஒரு நாளில் மீண்டும் கடிதம் எழுதத் தொடங்கினேன். இந்த முறை முகவரியைத் தொலைத்துவிட்டல்ல. எழுதிய ஒவ்வொரு கடிதத்தையும் அவளுக்கு அனுப்பி வைத்தேன். கால நேரம் மறந்து போய் கணினி முன்பு , இன்பாக்ஸை மட்டுமே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்திருக்கிறேன். நம்பிக்கை இழந்து மனம் சலித்துப் போகும் பொழுதில் மீண்டும் ஒரு கடிதம். கடிதங்கள்.

ஒரு முறை கூட பதில் வரவே இல்லை. காத்திருப்பது  சுகம் தான். ஆனால் பதில் வராது எனத் தெரிந்தும் காத்திருப்பதில் வலியே அதிகம்.

ஒரே ஒரு வாய்ப்பு. அவளில்லாமல் என் கடிகாரத்தின் முட்கள் நொண்டிக் கொண்டிருப்பதைக் காண்பிக்க. என் இரவுகளுக்கு நட்சத்திரம் வாங்க .. வெறும் சாம்பல் உதிர்த்துக் கொண்டிருக்கும் என் தோட்டத்துப் பூச்செடிகளை மீண்டும் பூக்க வைக்க வா எனக் கெஞ்சிக் கேட்க. என் அர்த்தமுள்ள நாட்களைத் திரும்பப் பெற.

“உங்களுக்கு வெண்ணிலா பத்தித் தெரியாது .. அவளுக்குப் பிடிவாதம் அதிகம் .. வேணாம்ன்னா வேணாம் தான் ” வெகு நாட்கள் கழித்து என் நினைவுக் குப்பைகளின் அடியில் இருந்து மன்சூர் வந்தான்.

கையில் கத்தியை வைத்துக் கொண்டு வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த முறை பயமாக இல்லை. ஒரு பட்டுப் பூச்சியைப் போல அது மிருதுவாக இருந்தது. வலது கையால் அதை இறுகப் பற்றிக் கொண்டேன். இடது கரம் நடுங்கிக் கொண்டிருந்தது. இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கிறேன் நான் ஏன் அப்படிச் செய்து கொண்டேன் என. காரணம் தெரியாத செயல்களை நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொழுதில் செய்து கொண்டே இருக்கிறோம் , அந்தப் பொழுதுகளின் உந்துதல்களுக்குப் பலியாகி.

நரம்பை அறுத்துக் கொள்ளுவது அவ்வளவு எளிது. ஒரு பூவின் இதழ்களைப் புன்னகைத்துக் கொண்டே கிள்ளி எறிய முடிவது போல.

மனதார ஒரு முறை எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன். 

என் மொத்த வாழ்க்கையையும் ஒரு வருடத்தில் காட்டி விட்டுக் காணாமல் போன வெண்ணிலாவிடம் என் மனது முழுக்கவும் அவள் மட்டுமே இருக்கிறாள் என்பதைப் புரிய வைக்க முடியாமல் போனதற்காக .. காதலிக்கக் கற்றுத் தந்த வந்தனாவிடம் , சலனமில்லாத அவள் வாழ்க்கையில் கல் எறிந்ததற்காக .. இரண்டு பெண்களின் அப்பாக்களிடமும் , மகளிகளின் எதிர்காலம் பற்றிய குழப்பம்  தந்ததற்காக .. ஆரம்பம் முதலே சுதந்திரம் தந்து வளர்த்திருந்த என் குடும்பத்திடம் , அவர்கள் வளர்ப்பு  குறித்துச்  சந்தேகம் கொள்ளச் செய்ததற்காக …  அவளது ஒரே தோழியைப் பிரித்துக் கொண்டதற்காக ரம்யாவிடம் , பின் குருவிடமும்.

மரணம் தவறை ஒப்புக்கொள்ளும் தைரியத்தைத் தருகிறது. மன்னிப்புக்காக இறைஞ்சச் செய்கிறது.

மறுநாள் கண் விழித்த பொழுது தம்பியும் குருவும் அருகே இருந்தார்கள். அம்மா வரவே இல்லை. போனில் கூடப் பேசவில்லை. அப்பா ஒரே ஒரு முறை மட்டும் வந்து விட்டுப் போனார். அவரும் எதுவும் பேசவில்லை.

தற்கொலை செய்து கொள்பவன் இறந்து விட வேண்டும். இல்லை அதன் பின் ஒவ்வொரு நொடிகளும் அவன் இறந்து கொண்டே இருக்க வேண்டும். ஒரு புழுவைப் போல அவனை நெளியவிட்டு எல்லோரும் பாவம் எனப் பார்ப்பார்கள்.

வந்தனா , ரம்யா , மன்சூர் என எல்லோரும் வந்து போன பின்பு நானும் தம்பியும் மட்டுமே இருந்தோம். மாலை வீட்டிற்குச் செல்லலாம் எனச் சொல்லியிருந்தார்கள். ஏதோ சொல்ல வந்தவன் , ஒரு பார்சலைக் கையில் கொடுத்து “அம்மா கொடுத்தாங்க என்று சொல்லிவிட்டு ” போய் விட்டான்.

பிரித்தேன்.

உள்ளே ஒரு மில்கி பார் இருந்தது. மருத்துவமனையின் சீதோஷ்ண நிலையில் குழைந்து போய். பிரிக்கையில் காகிதத்துடன் ஒட்டிக கொண்டு வர மறுத்த பிசு பிசுப்பில் தெரிந்தது அவள் அன்பு.

பெற்றவர்கள் நம்மை எப்பொழுதும் குழந்தைகளாகத் தான் பார்க்கிறார்கள். அவர்களின் குழந்தைகளுக்கு வேண்டியது அவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. நாம் தான் குழந்தைகளாக இருக்கப் பிரியமின்றி வளர்ந்துவிடுகிறோம். நமக்கு வேண்டியதைச் சொல்லாமல் மறைத்துவிடுகிறோம்.

அம்மாவை அலைபேசியில் அழைத்தேன். ஒரு வார்த்த கூட பேச முடியவில்லை. அழுது முடிக்கும் வரை பொறுமையாக இருந்தாள்.

“சீக்கிரம் வீட்டுக்கு வா ” வேறெதுவும் சொல்லவில்லை அவள்.

அன்று மாலையே வீட்டுக்குச் சென்றேன். அன்றும் சரி அதன் பிறகும் சரி நடந்ததைப் பற்றி ஒருவார்த்தை கூட அம்மா அப்பா இருவரும் கேட்கவேயில்லை.

அன்றிரவு , ஒரு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்தது, ஹைதராபாத் எஸ் டி டி கோடுடன்.

“ஹலோ ..”

எதிர் முனையில் விசும்பல் சப்தம் மட்டுமே கேட்டது.

மீண்டும் “ஹலோ ” என்றேன்.

பெரும் அழுகையினூடே “ ஏன்டா இப்படிப் பண்ண ..?”

மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வெண்ணிலா. இன்னொரு முறை தற்கொலை செய்து கொள்ளலாம் என்று தோன்றியது.

 

       தொடரும்

——————————————————————————————————————————————