Tags

,

11

This time, this place Misused, Mistakes … Too long, too late, who was I to make you wait?
Just one chance, Just one breath … Just in case there’s just one left
‘Cause you know, you know, you know I love you
I have loved you all along And I miss you … Been far away for far too long
I keep dreaming you’ll be with me and you’ll never go
Stop breathing if I don’t see you anymore
– Nickel back (From the song Far away)

 

எல்லாம் முடிந்து போனது என்று தான் நினைத்திருந்தேன்.

இல்லையென்றது அவள் அழைப்பு.

ஒரு நிமிடத்தில் கண்டுபிடித்திருந்திருக்க முடியும் அவள் எங்கே இருக்கிறாள் என்று. அவளே வேண்டாம் என்று சொல்லிவிட்டுப் போன பின்பு , என்ன இருக்கிறது என்று தான் அத்தனை நாட்கள் சும்மா இருந்தேன்.

அது வெறும் அழைப்பு கிடையாது. என் மூடத்தனதிற்கான  வேக் அப் கால்.

போகிறேன் என்றால் அப்படியே விட்டுவிடுவாயா என்றது ரிஸீவ்டு காலில் இருந்த அவளது எண். அவளது அலைபேசியில் இருந்து அழைத்தால் எண் தெரிந்துவிடுமாம். நல்லவேளை ஏதோ ஒரு பொது தொலைபேசியில் இருந்து அழைத்திருந்ததால் தான் அவள் இருக்கும் இடம் தெரிந்தது.

மொத்தமாக மூன்று நிமிடங்கள் பனிரெண்டு வினாடிகள் அந்த அழைப்பு நீடித்திருந்தது. அதில் இரண்டே முக்கால் நிமிடங்கள் அழுது கொண்டிருந்தாள். ஏன் இப்படிச் செய்தாய் என்று கேட்டாள். வழக்கம் போல முகத்தில் விழிக்காதே என்றாள். வைத்தும் விட்டாள்.

எனக்கு அது “உன்னைப் பார்க்க வேண்டும் சீக்கிரம் வா ” என்றது போல் இருந்தது.

அவளுக்கான கடைசி மடல் எழுதத் துவங்கினேன். ஏனோ அது கடைசி என்று தோன்றியது. கடிதம் எழுதும் தூரம்  இனி அவளை விட்டு போகமாட்டேன் என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.

வெண்ணிலா ,

உனக்கு இரண்டு நாட்கள் அவகாசம் தருகிறேன். வரும் சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு என்னைப் பார்க்க வரும் பொழுது என்ன உடை அணியலாம் எனத் தீர்மானிக்கவும் , என்னை எத்தனை முறை அறையலாம் என முடிவு செய்யவும்.  

போதிய அளவு தண்டனை அனுபவித்தாகிவிட்டது. புத்தரின் முன்பு காத்திருப்பேன். அன்பை எடுத்து வா.

பி.எஸ்

ஐ லவ் யூ.

ஆயிரம் முறை படித்துவிட்டு அனுப்பிவைத்தேன்.

எந்த நம்பிக்கையில் அவள் என்னைப் பார்க்க வருவாள் என நம்பி கடிதம் அனுப்பினேன் எனத் தெரியவில்லை.  அவளும் கடைசியாகப் புன்னகைத்து மூன்று மாதங்கள் இருக்கும் என்ற நம்பிக்கையாக இருக்கலாம். நான் இல்லாமல் அவள் மட்டும் என்ன செய்துவிடப் போகிறாள் என்ற அசட்டுத் தனம் காரணமாக இருக்கலாம்.

காதலில் மன்னிப்புக் கிடையாது, அப்படியே ஏற்றுக்கொள்ளுதல் தானே.

அம்மாவிடம் சொன்னேன் ஹைதராபாத் செல்லப் போவதாக. எதுவுமே சொல்லாமல் புன்னகை மட்டும் பதிலாகத் தந்தாள். முன்பே நீ இதைச் செய்திருக்கவேண்டும் என்பது போல் இருந்ததது.

பயணச்சீட்டு பதிவு செய்கையில் எனது வங்கிக் கணக்கின் கடவுச்சொல் காலாவதி ஆகிவிட்டது என்றது. வந்தனா1 இல் ஆரம்பித்து 56 இல் இருந்தது இப்பொழுது. பழக்கம் போல் வந்தனா57 என்று அடித்தேன் புதிய கடவுச் சொல்லில். புன்னகை வந்தது. சிரித்துக் கொண்டே அதை அழித்துவிட்டு புதிய கடவுச் சொல்லைத் தந்தேன்.

“வெண்ணிலா தான தந்தீங்க ?”

“ஸாரி கார்த்திக் , பாஸ்வோர்ட் ஷேர் பண்ணக் கூடாது .. கார்பரேட் ரூல் .. ” சிரித்தேன்.

அவரும் சிரித்தார். மணி பார்த்தார்.

“ஸோ,  இன்னும் பதினாறு மணி நேரத்துல உங்க வெண்ணிலாவ பார்க்கப் போறீங்க … மணி ரெண்டாச்சு .. கொஞ்ச நேரம் தூங்கலாமே .. ”

எனக்கும் மனது லேசாக இருந்தது. போய் படுத்துக் கொண்டோம். கனவே இல்லாத தூக்கம் நீண்ட நாட்கள் கழித்து.

“அங்கிள் .. ஸ்டேஷன் வரப் போகுது .. சீக்கிரம் எழுந்திரிங்க .. மீதிக் கதை சொல்லவே இல்லை இன்னும் …  ” சின்ன வெண்ணிலா காலையில் எழுப்பினாள்.

“இன்னும் அரை மணில , செகந்திராபாத் வந்திரும் … ” கார்த்திக்.

எழுந்து முகம் கழுவிவிட்டு வந்து உட்கார்ந்துகொண்டேன். குழந்தை பனிக்காக தலையில் ஸ்கார்ப் கட்டியிருந்தது ,இரவு என்னுடன் வண்டியில் வரும் பொழுது எல்லாம் முகமூடி போட்டுக் கொண்டு வெண்ணிலா வருவதை நினைவுபடுத்தியது.

“ஹ்ம்ம் .. எங்க விட்டோம் கதைய ? ” என் உற்சாகம் எனக்கே ஆச்சர்யம் அளித்தது. அவளது வெர்ஷனில் கதையைச் சொல்லிமுடித்தேன்.

“சூப்பர் அங்கிள் … ஆனா அந்த பிரின்சஸ் , பிரின்ஸ பார்க்க வந்தாங்களா இல்லையான்னு சொல்லவே இல்லை நீங்க … ”

“”வருவாங்கன்னு தான் நெனைக்கறேன் .. ” குழந்தை புரியாமல் விழித்தது. கார்த்திக்கும் ஹரிணியும் சிரித்தார்கள்.

செகந்திராபாத் வந்திருந்தது. கார்த்திக் அவரது அட்டையைக் கொடுத்து , கண்டிப்பாக திருமண அழைப்பிதழ் அனுப்பச் சொன்னார்.

ரயில் சிநேகிதங்கள் பெரும்பாலும் இப்படியே முடிகின்றன.

“அங்கிள் , உங்க பிரின்சஸ் கிட்ட என்னைப் பத்தி சொல்லுவீங்களா ? ”

“கண்டிப்பா .. ”

“என்ன பார்க்கனும்ன்னு  சொன்னா என்ன பண்ணுவீங்க ?  ”

“தெரியலையே .. என்ன பண்றது ? ”

“என்ன அங்கிள் நீங்க , செல்போன் ல போட்டோ எடுத்துக்கோங்க .. ” தேவதைகள் குழந்தைகள் வடிவில் தான் நம்மைச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். கிளம்பும் பொழுது என் கன்னத்தில் முத்தம் தந்து, வெண்ணிலாவைப் பார்க்கையில் மறக்காமல் தந்துவிடச் சொன்னாள்.

முத்தங்களின் வரவுப் பதிவேடு மீண்டும் திறக்கப்படுகிறது. சிரித்துக் கொண்டே எனக்குள் சொல்லிக் கொண்டேன்.

பகல் முழுவதும் ஹிசைன் சாகர் ஏரியையே சுற்றிக் கொண்டிருந்தேன். ஐமாக்ஸில் படம் பார்த்தேன். அன்று அவள் உடன் இருந்தாள். என்ன ஒரு நாள் அது என்று தோன்றியது. படம் முடிந்து வெளியே வருகையில் இன்றும் மழைவரும் என்று தோன்றியது.

ஈட் ஸ்ட்ரீட்டில் அதே உணவகத்தின் அதே இருக்கை கிடைத்ததைக் கூட தற்செயல் என்று சொல்வதா எனத் தெரியவில்லை.

ஆறு மணிக்கு, பத்து நிமிடங்கள் இருந்தன. ஆறரைக்காவது வந்து விடுவாள் என்றே தோன்றியது.

சிப்பந்தி என்ன வேண்டும் எனக் கேட்டான். இரண்டு ப்ளூ ப்ரேசர்ஸ் என்றேன். என் எதிரே காலி இருக்கையைப் பார்த்தவனிடம் “ப்ரெண்ட் வராங்க என்றேன் .”

ஒருவேளை  அவள் வராவிட்டால் என்று தோன்றியது. மறுகணமே அந்த எண்ணம் இறந்து போனது.

மனம் முழுக்க அவளிடம் என்ன பேசப் போகிறேன் என்ற கற்பனைகளிலேயே லயித்திருந்தது.

ஒரு கோப்பையைக் கையில் எடுத்துக் கொண்டு  புத்தரைப் பார்த்தபடி நின்றிருந்தேன். மரப்பலகைகளின் அடியில் நீர் மோதும் சப்தம் ஏகாந்தமாக இருந்தது. அந்த நீல நிற திரவம் இன்றும் கன்றாவியாகவே இருந்தது.

“ஏன் இன்னைக்கும் இதையே வாங்கின .. கேவலமா இருக்கு “

திரும்பினேன். இன்னொரு கோப்பையுடன் வெண்ணிலா நின்று கொண்டிருந்தாள்.

அவள் மஞ்சள் நிற புத்தரை விட அழகாக இருந்தாள். என் கண்களை எடுக்கவே முடியவில்லை.

“என்ன பாக்கற ?”

“இந்த ப்ளூ கலர் ஸாரில நீ ரொம்ப அழகா இருக்க .. “

“இதுக்கு நான் என்ன பதில் சொல்லணும்னு எதிர் பாக்கற?”

சிரித்தேன்.

“இப்போ எதுக்கு இங்க வந்த ? ”

“நல்ல கேள்வி .. இப்படித் தான் கேக்கணும் .. கால்வின் அண்ட் ஹாப்ஸ் வந்த சண்டே டைம்ஸ் , மாக்கஸின்ஸ் எல்லாம் கேட்டிருந்தியே .. எல்லாம் கலெக்ட் பண்ணியாச்சுன்னு சொல்ல .. ஹ்ம்ம் அப்பறம் நம்ம ரெண்டாவது பொண்ணுக்கும் பேர் யோசிச்சிட்டேன்னு சொல்ல … ”

“ரெண்டாவது பொண்ணு வேறையா .. இது யார் உன் கூட ஸ்கூல்ல படிச்ச பொண்ணா …?  என்ன பேர் ? ” என் அருகே வந்து நின்று கொண்டாள்.

“பெரிய ஆள் தான் நீ .. சந்தியாஆ ஆ ஆ ஆ .. ” கிள்ளியிருந்தாள். வலி இல்லை . அதில் மொத்தமும் காதலே இருந்தது. மீண்டும் தபூ ஷங்கர் கவிதை.

“ஐ லவ் யூ வெண்ணிலா ..”

என் முன் இரண்டு கைகளை நீட்டினாள். புருவங்களை உயர்த்திச் சுருக்கி என்ன வேண்டும் எனக் கேட்டாள்.

“”ஐ லவ் யூ “ என்றேன்.

“என்னாச்சு சாருக்கு .. முத்தத்து மேல ஆசை போயிருச்சா ? ”

“அது எப்பவும் போகாது .. ஐ லவ் யூ நீ சொல்லு .. முத்தம் நான் தரேன் .. வாங்கறது மட்டும் இல்ல .. முத்தத்துல குடுகறதும் ஸ்பெஷல் தான் ..  ”

“ஐ லவ் யூ டூ … ”

முத்தமிட்டேன். டாள்……..டோம் …………………….

“ஷேவ் பண்ணு மொதல்ல .. குத்துது .. ”

“ஷேவ் பண்ண இப்போ தான் காரணம் கெடச்சிருக்கு .. ”

“ஏன்டா ரேசர் வாங்க ஹைக் குடுத்திடாங்களா ?”

இந்த முறை வாய்விட்டே சிரித்துவிட்டேன். இந்த கற்பனைகளிலும் சுகம் இருக்கவே செய்கிறது.

சிப்பந்தி இரண்டு நீல நிற திரவம் அடங்கிய கோப்பைகளை முன்னே வைத்தான். எனக்கு முன்னால் இன்னமும் காலியாகவே இருக்கும் இருக்கையைப் பார்த்துத் தெலுங்கில் கேட்டான்.

“ இங்க்கன்னு பிரெண்ட் ராலேதா ? ”

“வந்திருவாங்க.”

முற்றும்.

—————————————————————————————————————————–

 

 

வெண்ணிலா – பின் குறிப்பு

நவம்பர் மாத மழையும், நள்ளிரவில் காயும் நிலவும், எனைச் சுற்றிலும் பொழியும் உன்னினைவுகளும் காத்திருப்பதை அசாதாரணமாக்குகின்றன. உறக்கம் கொள்ளாமல் போகின்ற இரவுகளில் எனக்கு நானே கதைகள் சொல்லிக்கொள்கிறேன் என்னைப் பற்றியும் , உன்னைப் பற்றியும் , நம்மைப் பற்றியும் …..  சொல்லிய கதைகளில்  ஒன்று சொல்லிக்கொள்ளாமலேயே உன்னைத் தேடிவந்துவிட, வேறு வழியில்லாமல் நானும் பின்தொடர்ந்திருக்கிறேன்.. ஒருவேளை இந்தக் கதையின் முடிவில் உனைக் கண்டு பிடிக்கவும்  கூடும்.

நான்கு மாதங்களாகிறது கதை எழுத ஆரம்பித்து. எதற்காக எழுத ஆரம்பித்தேனோ அது நடந்துவிட்டதில் எனக்கு மகிழ்ச்சியே. ஒரு கட்டத்திற்குப் பிறகு கதை தன்னைத் தானே எழுதிக் கொண்டது என்றே நினைக்கிறேன். எனக்குத் தான் எது புனைவு , எது நிஜம் என்கிற குழப்பம் அவ்வப்போது வந்து போய்க் கொண்டிருந்தது.

கதை முடிந்து விட்டது.

பூக்களின் சாம்பல் என்றாலும் தகிக்கவே செய்கிறது. போதும்.

இனி வரப் போகும் புதிய அத்யாயங்களுக்காக என்னைத் தயார் படுத்திக் கொள்ள முயற்சியாவது செய்ய போகிறேன்.

பிரிய மனமில்லாமல் விடை கொடுக்கிறேன் வெண்ணிலா.

குட் பை.

 

Love is an ugly, terrible business practiced by fools. It’ll trample your heart and leave you bleeding on the floor. And what does it really get you in the end? Nothing but a few incredible memories that you can’t ever shake. The truth is, there’s gonna be other girls out there. I mean, I hope. But I’m never gonna get another first love. That one is always gonna be her.

                                                                                     – From the Movie “Little Manhattan

———————————————————————————————————————————————–