Tags

ஒரு வினோதமான பந்தயத்தில் இருக்கிறேன் .. றோம்.

கல்லூரி இரண்டாம் வருடம் .. மார்ச் மாதமாக இருக்கலாம் .. பாலா வந்து சொன்னான் .. தமிழ் மன்றத்துல சிறுகதைப் போட்டி வச்சிருக்காங்க … தலைப்பு ஊஞ்சல்.

அதற்கு முன்பு வரை சிறுவர் மலர் படித்துக் கொண்டிருந்தவனிடம் சிறுகதை என்றால் ? அப்பொழுது தான் சுஜாதாவும் , தபூ சங்கரும் அறிமுகமாகி இருந்த நேரம்.

இருவரும் கதை எழுதுவது என முடிவு செய்தோம். எந்த பின் விளைவுகள் பற்றியும் கவலைப்படவில்லை. எழுதியும் தொலைத்தோம்.

இப்பொழுது நினைத்தாலும் சிரிப்பாக வருகிறது. எந்த தைரியத்தில் எழுதத் துவங்கினேன் என்று. எவ்வளவு தேடியும் மூலப் பிரதி கிடைக்கவில்லை. முடிந்த அளவு நினைவில் இருப்பதை வைத்து அப்படியே மறுபிரதி செய்யலாம் என்று வெகுநாட்களாக நினைத்துக் கொண்டிருந்தேன். இப்பொழுது தான் அதற்கு நேரம் வந்திருக்கிறது …

போட்டியின் முடிவு தானே. கதையின் முடிவில் ….

ஊஞ்சல்

இந்தப் பனில எங்கடா போற?” அம்மாவின் கேள்விக்குப் ‘பேப்பர்’ என்று ஒரு வார்த்தையில் பதிலளித்து விட்டு வாசலுக்கு ஓடினேன்.

ஈரம் காயாத படியில் உட்கார்ந்து துணி நனைந்ததைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப் படமால் சூடாகக் காபியை உள்ளே தள்ளிக் கொண்டே பேப்பர் படிப்பதைப் போன்ற சுகம் ஏதாவது இருக்கிறதா என்ன ? ஆனால் இன்று என் மனம் இதை எல்லாம் ரசிக்கிற நிலையில் இல்லை .. கண்கள் பேப்பரில் இருந்தாலும் மனது முழுவதும் எதிர் வீட்டையே மேய்ந்து கொண்டிருந்தது.

முந்தா நாள் மாலை தான் அவர்கள் குடி வந்திருந்தார்கள்.

அழகான பெண்ணின் அப்பாவிற்கு எந்த அந்தரங்கமும் இருக்க முடியாது. அலுவலகத்தில் எத்தனை முறை மெமோ வாங்கினார் என்பதில் இருந்து , அவர் முண்டா பனியன் எத்தனை இடங்களில் கிழிந்திருக்கிறது என்பது வரை ஒரே நாள் இரவில் தெருவில் இருக்கும் அத்தனை ஆண்களின் நாட்குறிப்பேடுகளிலும் ரகசியமாய் குறிப்பெடுக்கப்பட்டிருக்கும். அழகான பெண்ணின் அம்மாவிற்குத் தான் எத்தனை சலுகைகள் ! ரேஷன் கடை வரிசையில் நிற்க வேண்டாம் என்பதில் இருந்து , தள்ளுவண்டிக்காரன் கொசுறாகத் தரும் கொத்த மல்லி வரை … கொடுத்து வைத்தது யாரென்றால் அழகான பெண்ணின் தம்பி தான். அவனுக்கு அவுட் தரும் அம்பயர் அந்தத் தெருவில் நிச்சயம் இல்லை.

அந்த அழகான பெண் ஸ்ருதி. பிஎஸ்சி கணிப்பொறியியல் முதலாம் ஆண்டு.

வேனில் இருந்து பொருட்களை இறக்கி வைக்கும் போதே கவனித்தேன். ஏரியா கல்லூரி மாணவர்கள் விழுந்து விழுந்து வேலை செய்துகொண்டிருந்தார்கள். தம்பிக்களா எப்படியும் அவளைக் கலியாணம் செய்து தரப் போவது என்னைப் போன்ற வேலை பார்க்கும் ஒருவனுக்குத் தான். தூக்கிய பெட்டிகளுக்கு ஒரு காப்பி வேண்டுமானால் உங்களுக்குக் கிடைக்கக் கூடும்.

கல்லூரியில் படிப்பவனுக்கும் , வேலை பார்ப்பவனுக்கும் ஒரே ஒரு வித்யாசம் தான். கல்லூரியில் படிப்பவன் , பெண்ணின் அம்மாவிடம் இருந்து துணிகளை வாங்கி இஸ்திரிக் கடையில் ஓடிப் போய் கொடுத்து வருவான். வேலை பார்ப்பவன் அதே இஸ்திரிக்காரனுக்கு ஒரு டீயும் , சிகிரெட்டும் வாங்கித் தந்து மடித்து வைக்கப் படும் துணிகளுக்கிடையில் தன் பெயர் சொல்ல ஒரு கதையையும் ஒளித்து வைப்பான்.

நான் ஒரு ஐ டி அலுவலகத்தில் பணி புரிகிறேன் என்பதை ஒரு டீ , இரண்டு வடைகள் , ஒரு சிகிரெட் செலவு செய்து , முருகன் இஸ்திரிக் கடை முதலாளியிடம் பதிவு செய்து வைத்தேன்.

ஒரு நல்ல மோட்டார் வாகனம் என்பது , லிட்டருக்கு எத்தனை கிலோமீட்டர் தருகிறது என்பதை வைத்து வரையறுக்கப்படுவதில்லை. பழுதாகிவிட்டது போல நாம் நடிக்கும் போது எவ்வளவு ஜோராக நம்முடன் நடிக்கிறது என்பதிலேயே அதன் எஜமான விசுவாசம் நிர்ணயிக்கப் படுகிறது.

நேற்று காலை எனது பைக் அந்த வேலையை நன்றாகவே செய்தது.

ஏன் எல்லா அழகான பெண்களின் அப்பாக்களும் ஓய்வு பெற்ற பின் தோட்ட வேலை செய்கிறேன் பேர்வழி என்று வாசலிலேயே நின்று தொலைக்கிறார்களோ ?

“என்ன தம்பி , வண்டி நின்றுச்சா ? ” நிறுத்தியதே நான் தானே.

ஆமாங்க சார் .. என்ன பிரச்சனைன்னு தெரியல .. ” அதோ தூரத்தில் ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருக்கும் உங்கள் பெண்ணை உள்ளே மட்டும் போகச் சொல்லுங்கள். ஊஞ்சல் ஆடி நிற்பதற்குள் வண்டி கிளம்பியிருக்கும்.

“தள்ளுங்க நான் பாக்கறேன் ..”

“அய்யயோ உங்களுக்கு ஏன் சார் வீண் சிரமம் .. மெக்கானிக் கடை பக்கத்துல தான் இருக்கு .. ”

“அங்க எல்லாம் போனா கொள்ளையடிப்பான் … எங்க ஊர்லே எங்க குடும்பத்துல தான் மொதல்ல வண்டி வாங்கினது … எனக்குப் பேரே ஸ்கூட்டர் சுப்பிரமணி தான் .. “

“என் பேரு வெறும் சீனிவாசன் தான் சார் … ”

சிரித்துக் கொண்டே என்னத்தைச் செய்தார் என்று தெரியவில்லை. கையை மட்டும் கிரீஸ் ஆக்கிக் கொண்டார்.

“இப்போ ஸ்டார்ட் பண்ணிப் பாருங்க ..”

வண்டிக்குத் தான் ஒண்ணுமே இல்லையே … சந்தோசமாக ஸ்டார்ட் ஆனது.

“சார் .. இப்படியே போன இந்த ஊர்ல எந்த மெக்கானிக்குமே பொழைக்க முடியாது .. “

நிச்சயமாக அவரது இந்த சாதனை அவருக்கே சொந்தமான சரித்திரத்தில் இடம் பெறப் போகிறது. சாகிற வரைக்கும் எல்லாரிடமும் பெருமை பீற்றியே சாகப் போகிறார். நமக்கு அதுவா முக்கியம் ..

“அப்புறம் தம்பி .. என்ன பண்றாப்ல ? ” கேள்விக்கு வந்துவிட்டார். உள்ளே போய் உம்ம மனைவிடம் கேளும். நேற்றே எம்பெருமான் முருகன் தகவல் தந்துவிட்டார்.

அலுவலகத்தின் பெயரைச் சொன்னேன்.

“தம்பி , அங்கேயா வேலை பாக்கறீங்க … ஒரு நிமிஷம் ” உள்ளே திரும்பி தனது மகளை வேகமாக வரச் சொன்னார். ஏன் எல்லா அழகான பெண்களின் அப்பாக்களும் ஆர்வக் கோளாராகவே அலைகிறார்களோ …

வந்தவளிடம் அலுவலகத்தில் பெயரைச் சொன்னார்.

திருவிழாவில் பலூன் பார்க்கும் குழந்தையின் ஆச்சர்யம் + ஆர்வம்.

“உங்களுக்கு டாட் நெட் தெரியுமா ? ” அப்டின்னா ?

“டேட்டா ஸ்ட்ரக்சர் ” எனக்குத் தெரிந்த ஒரே ஸ்ட்ரக்சர் 36, 28, 36 தான்.

இன்னும் என்னென்னவோ தெரியுமா கேட்டுக் கொண்டே போனாள். சளைக்காமல் ஆம் என்று தலையசத்துக் கொண்டிருந்தேன். அவளது கடைசிக் கேள்வி எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

“எனக்கு தெனமும் கொஞ்ச நேரம் டியூஷன் எடுக்கறீங்ககளா ? ”

வந்த வேலை முடிந்தது. லா லா லா லலல்லா என்று பாடிக் கொண்டே வண்டியைக் கட்டினேன்.

ஒரு பக்கம் மாலை நேரத்து டியுஷன் லேசாக மயக்கத்தைத் தந்தாலும் இரண்டு விஷயங்கள் அடிவயிற்றைக் கவ்வின.

ஒன்று : எனக்கும் கணிப்பொறியியலுக்கும் யாதொரு ஸ்நானப்ராப்தியும் கிடையாது.

இரண்டு : நான் இருப்பது டெஸ்டிங் இல். அதிலும் சுத்த சைவம். பிளாக் பாக்ஸ் டெஸ்டிங்.

இருந்தும் மனம் தளராமல் அலுவலகத்தில் தெரிந்தவர்கள் காலில் எல்லாம் விழுந்து டாட் நெட் என்றால் ஓட்டை விழுந்த வலை அல்ல என்பது வரை புரிந்துகொண்டேன். ஒரே வாரத்தில் டாட் நெட் கற்றுக் கொள்வது எப்படி ? டேட்டா ஸ்ரக்சரா , நாங்க இருக்கறோம் .. என்பது போன்ற புத்தகங்களை எல்லாம் தரவிறக்கம் செய்து வைத்தேன். மாங்கு மாங்கு என்று படித்தும் ஒன்றும் மண்டையில் ஏறாததால் தூங்கிப் போனேன்.

அதிகாலையில் ஒரு அழகான கனவு வந்தது.

நானும் அவளும் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தோம். பின்னால் இருந்து அவள் அப்பாவும் , தம்பியும் தள்ளி விட்டுக் கொண்டிருந்தார்கள்.

“ டாட் நெட் உன் நெற்றியில் வைத்திருக்கும் பொட்டு .. உன்னிரண்டு கண்களே டேட்டா செட்டு .. ஸ்ட்ரக்சர் பற்றிய கவலையை விட்டு .. சாப்டரியா லட்டு .. “ என அவளுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தேன். அவள் அப்பா கை வலிக்கிறது , கட்டுகிறாயா தாலியை என்றார்.

காட்சிகள் மாறின. கையில் தாலியுடன் அவளைப் பார்த்தேன். தம்பி சீக்கிரம் கட்டுகிறாயா ? எவ்வளவு நேரம் தான் மடியில் உட்கார வைத்திருப்பது .. கால் வலிக்கிறது என்று கத்தினார் ஸ்கூட்டர் சுப்பிரமணி.

டும் டும் டும் …

அலாரம் அடித்து எழுந்திருந்தேன். அழகான கனவினைக் கலைப்பதெற்கெனவே கண்டு பிடிக்கப் பட்டிருக்கின்றன அலாரங்கள்.

காப்பி ஆறிப் போய் நீண்ட நேரம் ஆகியிருந்தது. கண்கள் மொத்தமும் எதிர் வீட்டு ஊஞ்சல், மேலும் அது தாண்டி எப்பொழுதும் திறக்கப் படலாம் என லேசாக காற்றில் ஆடிக் கொண்டிருந்த சொர்க்க வாசல் மேலுமே இருந்தது…

காற்று பலமாக அடித்தது.. ஊஞ்சல் வேகமாக ஆடியது .. மரத்தில் இருந்து பூக்கள் கூட உதிர்ந்தன .. அவள் எந்நேரமும் வெளியே வரப் போகிறாள் .. கதவு திறந்தது .. அவள் ……..

சட் .. குறுக்கே வந்து ஒரு ஆட்டோ நின்றது. வந்திறங்கியது என் தர்ம பத்தினி லதா. இவள் எங்கே இப்பொழுது வந்தாள். அடுத்த வாரம் தானே வருவதாகச் சொல்லியிருந்தாள். கட்டிய மனைவியிடம் இதைக் கேட்கவா முடியும்.

“என்னடா லத்து … இப்படி … ”

“சொல்லாம கொள்ளாம வந்துட்டேன்னு கேக்கறீங்களா ? ”

“இல்ல சொல்லிருந்தா நானே கூப்ட வந்திருப்பனேன்னு சொல்ல வந்தேன் .. ஆட்டோலயா வந்த … ? ”

“இதைப் பார்த்தா ஹெலிகாப்டர் மாதிரி தெரியுதா ? பணம் குடுத்திட்டு வாங்க .. ”

பணம் கொடுத்து விட்டு உள்ளே சென்ற என் முகத்தின் முன் ‘தம்’ என்று படுக்கையறைக் கதவு சாத்தப் பட்டது. கதவு சாத்தப் படும் சப்தத்தைக் கொண்டு மனைவியின் கோபத்தின் அளவைக் கண்டறியும் கருவி ஏன் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை.

வேறென்ன .. பேசாமல் அலுவலகத்திற்கு கிளம்பத் துவங்கினேன்.

கொஞ்ச நேரத்திற்கு வீடே நிசப்தமாக இருந்தது. ஓயாமல் பேசிக் கொண்டே இருக்கும் மனைவியை விட ஆபத்தானது அவள் அமைதி.

வண்டியில் ஏறி உட்கார்ந்ததும் ஓடி அருகே வந்தாள்.

அடிக் குரலில் “ஒரு ரெண்டு நாள் ஊருக்குப் போகக் கூடாதே .. சாயங்காலம் வாங்க .. வச்சுகறேன் ” என்றாள். அம்மாவைப் பார்த்தேன். நமுட்டுச் சிரிப்பு சிரித்தாள். இந்த ஒரு விஷயத்தில் மட்டும் எப்படி இருவரும் ஒன்று சேர்ந்து கொள்கிறார்களோ .. இளித்துக் கொண்டே வண்டியை மிதித்தேன். என்னைப் போலவே பெரு மூச்சுடன் கிளம்பியது …

எதிர் வீட்டைக் கடக்கையில் , ஓரக் கண்களால் பார்த்தேன். ஊஞ்சம் மட்டும் தனியாக காற்றில் ஆடிக் கொண்டிருந்தது.

—————————————————————————————————————————

போட்டியின் முடிவுகள் :

பாலாவிற்கு முதல் பரிசும் , எனக்கு இரண்டாவது பரிசும் கிடைத்தது. போட்டியில் நாங்கள் இருவர் மட்டுமே கலந்து கொண்டோம். பாலாவின் ஊஞ்சலில் ஆட இங்கே ….

கதையை எழுதியதும் முதலில் பாலாவிடம் தான் கொடுத்தேன். படித்து விட்டு அவன் சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது. “இதை பாக்யாவிற்கு அனுப்பலாம் ..” இப்பொழுதும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.