இந்த நகரத்தின் தெரு முனைகள் எங்கும்

சூன்யத்தின் வாசல் வாய் விரித்திருக்கிறது

வாய் புகுந்து மீண்டால்

இன்னொரு தெரு

இன்னொரு வாசல்

தப்ப முடியாதென்றே தெரிகிறது …

உடலெங்கும் தீ, பற்றி எரிகிறது

மனதெங்கும் வன்மம் சுற்றிப் படர்கிறது

இருந்த அடையாளங்கள் எதுவுமின்றி

தொலைந்து போகத் தோன்றுகிறது

பித்த நிலைக்கும் முக்தி நிலைக்கும்

மத்தியில் மதிலொன்று சிரிக்கின்றது

மதில் மேல் பூனையாய் என் நிழல்

எந்தப் பக்கம் விழும் …

நிழலைத் துரத்திக் கொண்டு நானும்

என்னைத் தொலைக்க நினைக்கும் நிழலும்

ஓடிக் கொண்டேயிருக்கிறோம்

மதிலைச் சிதைத்த படி …

சில ரகசியங்கள் புரிகின்றன

சில புதிர் முடிச்சுகள் அவிழ்கின்றன

அகோரங்கள் அழகாகின்றன

அழகிற்கான வாய்ப்பாடுகள் அழிகின்றன …

எந்தப் பாதையும் இங்கே எனக்கில்லை

எந்த கதவுகளுக்கும் என்னிடம் திறப்பில்லை

வாசல் தேடி வர யாருமில்லை

கதவின் பின்னே காத்திருப்பதில் நியாயமில்லை …

கதைகள் அழிக்கப்பட்ட காகிதத்தில்

புதிய கதைகளுக்கு இடங்களிருந்தாலும்

கசங்கிய ரேகைகள்

கவனமாய் இருக்கச் சொல்லுகின்றன …

மீண்டும் ஒரு முறை, முதலில் இருந்து …

எழுத அமர்கிறேன்

வார்த்தைகள் தடித்து வர மறுக்கின்றன

நடுங்கும் கைகளை நகங்கள் கிழிக்கின்றன ..

தற்செயலாய் காயம் கண்டு

கசிகின்ற ரத்தம் கிளர்ச்சியளிக்கிறது ..

இன்னும் சில காயங்கள்

வலிகளே வரங்களென்கின்றன …

பகலில் தூக்கம் பிடித்திருக்கிறது

கண்களை மூடிக் கொண்டால்

உலகம் இருண்டுதான் போகிறது …

நள்ளிரவில் ஓலமிடுகிறேன்

நாய்களில் சில ஒத்திசைக்கின்றன …

சீக்கிரம் இறந்து போகப் போவதாய்

கற்பனை செய்து கொள்கிறேன் …

கனவில் எல்லாம் குறுவாள் எடுத்துக்

கொலைகள் செய்கிறேன் …

பைகளில் சில்லறை கனக்கிறது

பசிக்கிறது

நினைவில் வருகிறது அம்மாவின் முகம்

பசித்திருப்பதின் நியாயம் பிடித்திருக்கிறது …

வெளியே மழை பெய்கிறது ,

அழத் தோன்றுகிறது .

—————————————————————————————————————-