Tags

மருதம் ஊடலும் ஊடல் நிமித்தமும்

சற்று முன்பு பெய்து முடித்திருந்த மழையில் நகரின் பிரதான சாலைகள் மொத்தமாக நனைந்திருந்தன. நகரோடு சேர்ந்து நனைந்திருந்த நதி குளித்து முடித்த பெண் கூந்தல் துவட்டும் சத்ததுடனும் , வாசனையுடனும் இருப்புக் கொள்ளாமல் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தது. நதியொட்டியிருந்த கரையும், கரை தொட்டிருந்த மரமும் அவளுடன் நிறையப் பேச விரும்புவதாய் தெரிந்தது. அடிக்கொருமுறை கரைத்திட்டில் மோதி சில நீர்த் துளிகளை அனுப்பி அவளைத் தொட்டுப்பார்த்து வரச் செய்து கொண்டிருந்தது நதி.

மஞ்சள் நிறப் பூக்களையும், கடன் வாங்கியிருந்த மழையையும் ஒரு சேரத் தூவி அர்ச்சித்துக் கொண்டிருந்தது அவள் அழகை வெகுகாலமாய் சாப விமோசனம் தேடி அங்கேயே நின்று கொண்டிருக்கும் மரம்.சில்லென்ற காற்று முடிந்த மட்டும் அவளை முட்டி மோதி குறைந்த பட்சம் அவள் ஆடையையாவது திருடிக் கொண்டு சென்று விட முயன்று கொண்டிருந்தது. அவள் ரணம் மொத்தத்தையும் குரலில் ஏற்றிக் கூவிக் கொண்டிருந்தது தூர தேசம் தாண்டி வந்திருந்த ஏதோ பறவை ஒன்று. அவள் கண்களின் கீழும் மழை பெய்தாயா என ஓவ்வொரு மேகங்களும் மாற்றி மாற்றி மின்னல்களில் சமிக்ஞை பரிமாறிக் கொண்டன.

எந்த அரவமும் ஏற்படுத்தாமல் வந்து நின்றிருந்தான் அவன். பின்னால் இருந்து பார்க்க அந்த மாலை நேர நதி மரங் காற்று பறவையுடன் அவளும் ஓர் ஓவியம் ஆகிவிட்டதைப் போலவே உணர்ந்தான். சிலர் மட்டுமே அழுகையில் கூட அழகாகத் தெரிகிறார்கள் மழை நின்று போன வானம் போல. அவள் கண்ணீரைத் துடைக்கும் முன் அந்த அழகைக் கூட ரசிக்கத் தோன்றியது அவனுக்கு.

அவள் முன்னே செல்ல தைரியம் இல்லாதவனாய் மரத்தின் பின் சாய்ந்து ஒரு முறை மூச்சை நன்றாக இழுத்து விட்டான். பிரபஞ்சம் மொத்தமும் அவள் சுவாசமே நிறைந்திருப்பதாய் தோன்றியது.

ஒரு முறை பக்கவாட்டில் பார்த்த அவள் கண்கள் மீண்டும் கடல் பக்கம் நிலை குத்தியது. அவன் இருப்பை உணர்ந்தது போலவே இருந்தது அவள் தோரணை.

மீண்டும் ஒருமுறை எட்டிப் பார்த்தான். மரத்தின் பின் மறைந்திருப்பது குறித்து வெட்கமுற்றவனாய் இருந்தான். இதற்கு முன்பும் அவளறியாமல் பல இடங்களில் ஒளிந்து நின்று எதிர்பாராத தருணங்களில் தோன்றி அவளுக்கு ஆச்சர்யம் அளித்திருக்கிறான். ஆனால் இன்று …

ஓரிரு நிமிடங்கள் வாழ்ந்து வீழ்ந்திருந்தன மௌனமாய். மௌனத்தின் கணம் தாங்காமல் புல்லாங்குழல் எடுத்து ஊதத் துவங்கினான். காதல் மொத்தமும் காற்றிலேற்றி அனுப்பத் துவங்கினான். நானா ? அழுகிறேனா ? இல்லையே என்பது போன்ற வரவழைத்துக் கொண்ட தோற்றம் அவள் முகத்தில். கைகளும் முடிந்த அளவு ஒத்துழைத்துக் கொண்டிருந்தன.

இசையில் இளகிக் கொண்டிருந்தது மாலை. நதிகூட சலனமற்றுக் கிடந்தது. கண்கள் மூடி வாசித்துக் கொண்டே இருந்தான் , புல்லாங்குழலின் ஒவ்வொரு ஒட்டையிலும் அடைத்திருந்த காயங்களை வருடியபடி. இசையின் பாரம் தாங்காமல் மரத்திலிருந்த பறவையொன்று பறக்க முயல, உடன் சேர்ந்து சில பூக்களும் பறக்க முயன்று துவக்கத்திலேயே சிறகு தொலைத்து அவன் மேலேயே விழுந்தது. வாசிப்பதை நிறுத்தினான். விழியோரம் நீர் பூத்திருந்தது.

அவள் ஏன் இன்னும் திரும்பிப் பார்க்காமல் தன்னையே பார்த்துக் கொண்டிருக்கிறாள் எனக்கு குழம்பிய நதி ஒரு முறை ஓவென இறைச்சலிட்டது. இதற்கு மேல் முடியாதெனவே அவனுக்குத் தோன்றியது. அருகிலிருந்த ரோஜா செடிகளிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு சில பூக்களைப் பறித்துக் கொண்டான்.

தயங்கித் தயங்கி அவள் அமர்ந்திருந்த இருக்கையின் பின் நின்றான். அவள் நிழல் மொத்தமும் சிதற விடாமல் தன் மேல் பதிய வைத்துக் கொண்டான். அந்நிழல் ஒரே நேரத்தில் ஈரமாகவும் தகிப்பதாகவும் இருந்தது. இன்னமும் தன் பின்னே யாருமில்லை.என்ற பாவனையிலேயே இருந்தாள். முடிந்திருந்தால், அவன் மேல் விழும் நிழலையும் கூட இறுக்கிப் பிடித்திருப்பாள்.

அவனிடம் அழைப்பதற்கு வார்த்தைகள் இல்லாமல் ரோஜாக்களை நீட்டியபடியே தலை கவிழ்ந்து நின்றிருந்தான். ஒரு ரோஜாவின் மேலிருந்த நீர்த்துளி பொறுமை இழந்து இல்லை காம்புகளைக் ஊர்ந்து கடந்து தாவி அவள் ஆடை தொட்டது. ஒரு கணம் சிலிர்த்தாள். பின் தன் இரண்டு கைகளுக்குள்ளும் முகத்தினை ஒளித்து மடியினில் புதைத்துக் கொண்டாள்.

சில சமயங்களில் நீர் சுடக் கூடும். அவள் கண்ணீரின் வெப்பம் அவனை எரித்தது.

அவள் உடல் அதிர்ந்து கொண்டிருந்தது. தன் முன் அழும் அவளைக் காணச் சகிக்காமல் நீர் தொட்ட இடத்தைத் தான் தொட்டான். அழுவதை நிறுத்தியவள் கையைத் தட்டி விட்டாள். இருக்கையின் ஓரத்தில் அமர்ந்தான். எதிர்ப்பு தெரிவிப்பதாய் மறுமுனை நோக்கி நகர்ந்தாள்.

ஒரே ஒரு கணம் , விழியின் ஓரமாவது தன் பக்கம் திரும்பாதா என அவனும் ரோஜாக்களும். எங்கே திரும்பினால் தன் கோபத்தை அனைத்து விடுவானோ என அவளும் பிடிவாதங்களும். என்ன செய்வதென்று தெரியாமல் புல்லாங்குழலைப் பார்த்தான். என்னாலும் இனி பேச முடியாதென்றது.

தோள் உரசும் தூரத்தில் நகர்ந்து கொண்டான். அதற்கு மேல் நகர இடம் இல்லை என்கிற காரணம் போதுமானதாக இருந்தது அவளுக்கு. தாடை தொட்டு நிமிர்த்தினான். துடைப்பதற்கு விரல்கள் இருக்கின்றன எனத் தெரியும் கண்கள் தான் நிறைய அழுகின்றன. துடைத்தான். அவன் தோள்களில் முகம் புதைத்துக் கொண்டு அழத் துவங்கினாள். எல்லா ஊடல்களும் உதடுகளில் ஆரம்பித்து தோளில் சாய்ந்து கொள்வதால் மட்டுமே முடிந்து போவதில்லையே.

அழுது முடித்தது போதுமென தள்ளிவிட்டாள். கைகள் தான் தொடாதே என்றன. கண்கள் முரண்பட்டன. இருவருக்கும் பேச ஆயிரம் வார்த்தைகள் இருந்தும் மௌனத்தைத் தேர்ந்தெடுத்தனர்.

எடுத்துக் கொள்ள யாருமின்றி இருக்கையின் இன்னொரு மூலையில் நனைந்து கிடந்தன ரோஜாப் பூக்கள்.

தொடரும் (குறிஞ்சி)

—————————————————————————————————–