Tags
குறிஞ்சி – கூடலும் கூடல் நிமித்தமும்
சற்று முன்பு பெய்து முடித்திருந்த மழையில் நகரின் பிரதான சாலைகள் முழுதும் நனைந்திருந்தன . நனைந்திருந்த வீதிகளை ஜன்னல் வழி வேடிக்கை பார்த்துக் கொண்டே கவிதை எழுதிக் கொண்டிருந்தான் அவன் . மெல்லிய காற்று ஜன்னல் கம்பிகளை புல்லாங்குழல் என நினைத்து ஊத முயன்று கொண்டிருந்தது . முகத்தில் மோதிய குளிர் காற்றை அனுபவித்து ரசித்தபடி அதைக் காகிதத்தில் வரைந்து கொண்டிருந்தான் . பின்னாலிருந்து அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு சாய்ந்தாள் அவள் . அவன் எதிர்பார்த்திருந்த தருணம் , நிகழ்ந்திருந்தது எதிர் பாராத தருணத்தில் . சாரலில் இருந்து தப்பித்திருந்த காகிதகங்களை நனைத்துக் கொண்டிருந்தாள் தன்னை நனைத்திருந்த மழையைக் கொண்டு, அவனையும் சேர்த்து .
“தீர்ந்ததென் சந்தேகம் ” சொல்லிக் கொண்டே அவளை முன்னிழுத்து தன் மடியில் வீழ்த்தினான் . கிளையில் கட்டப் பட்ட தாயின் சேலையென அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு அவள் உடைகள் , அதிலாடும் குழந்தையென அவள் .
தொட்டில் குனிந்து முத்தமிட எத்தனிக்கும் தாயின் கிட்டத்தில் அவன் .
“என்ன கண்டு பிடித்தீர்கள் புதிதாக என்னிடம் இப்பொழுது “
” மழையில் நனையுமா நிலவு என்ற பழைய சந்தேகம் தான் . என்ன செய்யப் போகிறேன் சொட்டச் சொட்ட என் மடியில் பதிலோடு வந்து நிலவு விழுந்து கிடக்கிறதே இப்பொழுது .. “
“ஆகாகாகா .. போதும் கவிஞரே உம் புழுகு . நான் நிலவா ? அதுவும் நனைந்த நிலவா ?? நிலவு நனைய வாய்ப்பே இல்லை . நிலவில் நீர் இல்லை தெரியுமல்லவா ?? ”
“அப்படியா சொல்கிறாய் .. இரு பார்க்கிறேன் ” என்றவன் மெல்ல குனிந்து அவள் கழுத்துப் பகுதியில் இருந்த ஈர முடிகளை ஒதுக்கி விட்டு முத்தமிட்டான் .
“இல்லையே நீர் இருக்கிறதே . அதுவும் நன்னீர் ”
கண்கள் மூடியிருந்தவள் அவன் காது மட்டும் கேட்கும் வண்ணம் இதழ் பிரித்தாள்.
” கவிதைக்கொன்றும் குறைச்சல் இல்லை .. மழையில் நனைய மட்டும் தான் பயம் போல கவிஞருக்கு ” பதிலாக எதையோ எதிர் பார்த்து கண்கள் திறக்காமலேயே இருந்தாள் .
“நனைதலை வரைய மட்டுமே ஓவியனுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது . நனைவதற்கு நான் எங்கே செல்ல “
“ஓ.. ஓவியம் கூட வரையத் தெரியுமா “ திறந்த கண்களில் ஏமாற்றம் தெரிந்தது .
“ஏதோ கொஞ்சம் .. நம்ப வில்லையா நீ .. வேண்டுமானால் வரைந்து காட்டட்டுமா இப்பொழுதே ”
‘ ம் ‘
அது பதிலா . இல்லை அனுமதியா என்பது அவனுக்கு மட்டுமே புரிந்த ஒன்று.
ஆட்காட்டி விரலை எடுத்து நெற்றியில் வைத்தான் . மெல்ல வரையத் தொடங்கினான் . ” என் ஓவிய முறையில் முக்கியமானதே முடிவில் வரைந்த ஓவியங்களுக்குத் நான் தரும் முத்தம் தான் தெரியுமா ” என்றவன் அவள் மௌனத்திலிருந்து பதில் எடுத்துக் கொண்டான் . வான் அனைய நுதழ் வரைந்து முடித்தவன் , மற்ற வண்ணங்கள் வருந்த இரு வானவில்கள் கறுப்பில் வரைந்து வைத்தான் . வானவில்களின் கீழே மேகம் இழுத்துக் குழைத்து இமைகள் என்றான் . முத்தம் பெற்ற மேகங்கள் வெட்கிக் கரைந்து கலைய இரு நிலவுகள் நேர் நோக்கின இரு சூரியன்களை . ஆழி சூழ் உலகத்தனையும் காணாமல் போயின கிரணத்தில் . கிரணம் மீண்டு , மீண்டும் மேகம் நிலவுகளைச் சூழ இமைகள் விட்டு இம்முறை இதழ்கள் தொட்டான் . ஓவியம் முடிக்கக் குனிந்தவனின் மார்பைக் கைகளால் தள்ளியவள் , “இது என்முறை” சொல்லிவிட்டு அவன் உதட்டில் ஒட்டா முத்தம் ஒன்று இட்டு விட்டு எழுந்து ஓடினாள் .
“சரியல்ல இது .. நான் இட்ட முத்தங்களுக்கு இது போல நூறாவது தரவேண்டும் நீ .. யாருக்கு வேண்டும் உன் முத்தம் .. எடுத்துக் கொண்டு போய் விடு திரும்பவும் ” நாற்காலியில் திரும்பி உட்கார்ந்து பொய் கோபம் காட்டினான் .
“வேண்டாம் என்றால் போ .. நானே எடுத்துக் கொள்கிறேன் ” மீண்டும் அருகில் வந்தாள் , தானே வந்து விரல் தொட்டு குறுக விரும்பும் தொட்டாச் சுருங்கியென . சுருங்கியும் மீண்டாள் . முத்தம் பிடுங்கி ஓடும் அவள் மேலாடை ஓரம் தொட , இங்கேயே இருக்கிறேனே என அவன் கைகளிலேயே மொத்தமும் ஒட்டிக் கொண்டது .
“கவிஞனென்று பார்த்தால் கள்வனாக அல்ல இருக்கிறாய் .. இம்முறை திருப்பிக் கொடுக்க வேண்டியது உன்முறை ” சுவரோடு ஒட்டி நின்றவள் திரும்பாமலேயே உத்தரவிட்டாள் எப்படியும் அவன் மீறப் போகிறான் என அறிந்து .
உடைகளை எடுத்துக் கொண்டு அவள் அருகே வந்து நின்றான் . மேலாடை அவனுக்கும் அவளுக்கும் நடுவே சுருட்டப்பட்ட பந்தாய் இருந்தது . பிடி இன்னும் அவன் கையில் .
“வியாபாரம் பேசுவோமா .. சொல் என்ன தருவாய் எனக்கு நான் உடைகளைத் தந்தாள் ” மெல்ல அவள் முகத்தினைத் தன் பக்கம் திருப்பினான் . தன் அகன்ற பெருவிழிகளால் சிரித்துக் கொண்டவளின் “மழைக்கு பயந்த கவிஞனிடம் எல்லாம் நான் வியாபாரம் பேசுவதாக இல்லை ” வார்த்தைகள் சுவற்றில் மோதி அவனிடம் சென்றன .
“யாருக்கு பயம் .. மழையில் நனைந்து கொண்டு தானே இருக்கிறேன் “ அணைத்தவன் கைகளில் இருந்து திமிறி விழுந்தது அவள் மேலாடை . எடுத்துக் கொள்ள அவளும் முயலவில்லை . விருப்பமுமில்லை .
வெகுநேரம் ஜன்னல் கம்பி மோதிப் பார்த்த காற்று இம்முறை கவிதை தாங்கிய காகிதங்களில் மோதியது . காற்றின் மூர்க்கம் தாங்கா மென் கவிதைகள் நேராக கவிஞனிடம் அடைக்கலம் தேடி வந்தது . கவிஞன் கண்டு கொள்ளாமல் போகவே கவிதையிடமே முட்டி முறையிட்டழுதது .
“விடுங்கள் .. கன்னிக்காக கவிதைகளைக் காற்றில் பறக்கவிட்டவர் என்ற பெயர் வேண்டுமா உங்களுக்கு ” விடுவித்துக் கொண்டவள் காகிதங்களை அணைத்துக் கொண்டு கட்டிலில் சென்று அமர்ந்து வாசிக்கத் துவங்கினாள் . சட்டென்று அவள் விலகி ஓடியதில் சுவரைக் கட்டிக் கொண்டவன் திரும்பிக் கட்டிலை பார்த்தான் .
“எந்தக் கவிதை படிக்கிறது , எந்தக் கவிதை படிக்கப் படுகிறதென்றே தெரியவில்லையே ” தன் மேனியில் நனைந்த பகுதிகள் எண்ணினான் . பின் அவள் அருகே சென்று அமர்ந்து கொண்டான் .
ஆச்சர்ய விழிகளால் கவிதைகளை படித்துக் கொண்டிருந்தாள் அவள் .அவளைப் படித்துக் கொண்டிருந்தான் அவன் .
“கவிஞர்கள் என்றுமே வறியர்களே . புதையல்கள் கூட ஏமாற்றி விடுகின்றன கவிதைகளைப் படித்து விட்டு ” இம்முறை பொய் வெளிப்பட கோபத்திற்கு பதில் அவனிடம் இருந்து சோகத்தை எடுத்துக் கொண்டது .
” வியாபாரம் பேசுவோமா கவிஞரே கவிதைக்குப் பத்து முத்தங்கள் ” கவிதைகளைக் கட்டிலோரம் வைத்துவிட்டு கண் சிமிட்டினாள் .
“அடடா .. தெரிந்திருந்தால் இன்னும் நிறைய எழுதியிருப்பேனே .. காகிதம் ..”
சொல்லி முடிக்கும் முன் அவள் இடைவெளியை நிரப்பியிருந்தாள் .
“காகிதத்தில் மட்டும் தான் கவிதை எழுதுவீரா கவிஞரே !” ஜ்வாலை கொண்ட கண்களினால் நோக்கினாள் .
“இப்பொழுதெல்லாம் கவிஞன் பொய் சொல்வதில் . கவிதைகள் தான் தருவதாகப் பொய் சொல்லி ..” அடுத்த வார்த்தைகள் சொல்லும் நிலையில் அவன் இதழ்கள் இல்லை .
கவிதையெழுதத் துவங்கியிருந்தனர் அவனும் அவளும் .
அறை முழுவதிலும் மிதந்து கொண்டிருந்தன கவிதைகள் .
பலம் கொண்ட மட்டும் காற்று ஜன்னல்களை மூட முயன்று கொண்டிருந்தது .
– தொடரும் (நெய்தல்)
பிரிச்சு மேய்கிறீர்கள் கவிஞரே..! இதை மட்டும் அவள் படித்தால், தானா வந்து “கவிதை”யாலேயே வியாபாரம் பேசுவாள்!
LikeLike
endha kathaikul ayiram kavidhaigal ,kavidayil ena vyabaram!!!!!!!!!!!!!!!!
LikeLike
@ yogapriya ,
🙂
LikeLike
தோழர்..என்ன சொல்லவென்றே தெரியவில்லை….வார்த்தை துளிகளுக்குள் ஆயிரமாயிரம் அர்த்தங்கள்
LikeLike
@ Sathya,
Eppdi irukkeenga ? Romba naala aalaiye kaanom ?
LikeLike
நலம் தான் தோழர் ….
LikeLike
Eppavum pola idhaiyum late aa thaan padichirukken….
தன் மேனியில் நனைந்த பகுதிகள் எண்ணினான் … Aahaa!! Ennaamaa ezhudhirukkaan ya!!!
LikeLike
🙂
LikeLike
storhay yavae kavithai akkiteenga Rejovasan…
My hats off to u!
LikeLike
Thanks 🙂
LikeLike