Tags

, ,

நெய்தல்  இரங்கலும் இரங்கல் நிமித்தமும்

 

சற்று முன்பு பெய்து முடித்திருந்த மழையில் நகரின் பிரதான சாலைகள் முழுதும் நனைந்திருந்தன . சாலைகளை நனைக்கும் முன்பே  பாதியைப் பிடித்து  வைத்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் , தான் நனைந்தது போக மீதியை,  சொட்டுச் சொட்டாக வீட்டிற்குள் பதுக்கி வைத்துக் கொண்டிருந்தன அந்தச் சிவந்த ஓடுகள் .  தரை முழுவதும் வழி தேடிப் பரவி , வாயில் காண முடியாமல் , மண்ணைச்  சேர முடியாமல் மேலும் அழுது வீடு முழுவதும் ஈரம் பூக்கச் செய்து கொண்டிருந்தது துயரம் கொண்ட மழை . வயோதிகர்கள் என்பதாலேயோ என்னவோ அவர்கள் இருந்த படுக்கை அறைக்குள் மட்டும் நுழையவேயில்லை மழை, மேலிருந்து  கீழாகவோ இல்லை கீழிருந்தும் கீழாகவோ . குளிராலேயோ மெத்தைப் பஞ்சின் கனத்தாலேயோ  மெலிதாகக் கால்கள் ஆடிக்கொண்டிருந்த கட்டிலில் , கழுத்தின் மேற்பகுதி மட்டும் தெரியும் வண்ணம் கம்பளிக்குள் தன்னைப் புதைத்துக் கொண்டிருந்தாள் அவள் .

 

முகத்தின் சுருக்கங்கள் வழி மெல்லப் புகுந்து அவள் சருமத்தை மேலும் உலர வைத்துக் கொண்டிருந்தது குளிர் . மூடியிருந்த இமைகளின் கீழ் அங்குமிங்கும் உருண்டு கொண்டிருந்தன அவள் விழிகள் . சருகு போர்த்தியிருந்த உதடுகள் எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்தன . ஒருமுறை இருமினாள் .

 

                 ஓவியம் தீட்டிக் கொண்டிருந்தவன் இருமல் சத்தம் கேட்டு , மீதி ஓவியத்தை தூரிகையிலேயே விட்டு அதை வண்ணங்களில் மூழ்கடித்து விட்டு அவள் அருகில் வந்தமர்ந்தான் . நெற்றியைத் தொட்டுப் பார்த்தான் . முன்பை விட அதிகம் சுடுவதாய்ச் சொன்னதவன் உள்ளங்கை . கம்பளிக்குள் தேடி அவள் கைகளை எடுத்து தன்னிரு உள்ளங்கை உள்ளடக்கிய இடைவெளிகள் மொத்தமும் நிரப்பிக் கொண்டான் .

 

மிகவும் பிரயாசைப் பட்டு இதழ்கள் பிரித்து , ” இப்பொழுது கூட ஓவியமா ” என்றாள் .

 

எதுவும் பேசாமல் மௌனமாகப் புன்னகைத்தான் .

 

ஓவியம் காணும் ஆர்வம் கொண்டு படுக்கையிலிருந்து எழ முயன்றவள் , முடியாமல் போகவே பெருமூச்சோடு மீண்டும் படுக்கையில் சரிந்தாள் . அவள் மனம் புரிந்து கொண்டவனாய் ஓடிச் சென்று பாதி வரைந்திருந்த ஓவியத்தை பலகையோடு தூக்க முயன்று முடியாமல் வரைதாளை மட்டும் கிழித்துக் கொண்டு வந்தான் .

 

வண்ணத்துப் பூச்சிகள் வான் முழுவது நிறங்கள் சிந்திக் கொண்டிருக்க ,  உடல் தொட்டிருக்கும் பரவசத்தில் ஆடைகள் நெகிழ்ந்து  காற்றில் பறந்திருக்க , ஒரு கையில் புல்லாங்குழலுடன் மிதந்து கொண்டிருந்தாள் தேவதை ஒருத்தி . ஒரு சிறகு  பாதி மட்டுமே முளைத்திருந்தது . வாசமில்லா பல நீல நிறப் பூக்கள் ஏங்கிய படியிருந்தன அவள் இன்னொரு கை பார்த்து . தேவதையின் முகம் பார்த்து அடையாளம் கண்டு கொண்டவள் இதழ்களைக் கவின் செய்தாள்.

 

“ஏய் கிழவா ! யார் இவள் ” ஆர்வமாய் அவள் முகம் பார்த்துக் கொண்டிருந்தவனிடம் கேட்டாள் .

 

ஒரு கணம் வாடிப்போனவன் , பின் பழைய உற்சாகத்துடன் ,”கை தவறிக் கண்ணாடியை உடைத்து விட்டேன் . எழுந்ததும் நீ கண்ணாடி கேட்பாயல்லவா !, உன் கோபத்திலிருந்து தப்பிக்கவே என்னால் முடிந்த அளவு அதற்கு மாற்று செய்து கொண்டிருந்தேன் . கண்ணாடி அளவு தெளிவு இருக்காது தான் . மன்னித்துக்கொள் ” ஓவியத்தையும் அவள் முகத்தையும் மாறி மாறி பார்த்த வண்ணம் , பணிவோடு சொல்வதாக பாவனை செய்தான் .

 

“என் சௌந்தர்யங்கள் ஓடிப்போய்  நாட்களாகி  விட்டது . என் கண்களும் புன்னகையும் புரையேறி விட்டிருக்கின்றன . பூக்களின்  வாசம் தான் என்னிடம் . சருகான பின்னும் அதன் பெயர் பூ தானே “

 

“இருந்தும் நீ என்றும் என் தேவதை தான் ” அவள் உதடு பொத்தி சொன்னான் . உள்ளங்கைகளில் சுடுமுத்தம் ஒன்று தந்து “எங்கே என் சிறகுகள் என்றாள் “

 

“அந்த அழகான சிறகுகள் , இன்னும் வண்ணகளுக்குள்ளேயே உறங்கிக் கொண்டிருக்கின்றன தூரிகைகளைக் கட்டிக் கொண்டு “

 

“வரையாமலேயே அழகென்கிறாயே ” அவன் கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள் .

 

“ஒன்று தெரியுமா , கேட்கப்படாத இசைக் குறிப்புகள் மட்டுமல்ல , வரையப் படாத ஓவியங்களும் கூட அழகுதான் .” இன்னும் இறுக்கமாகப் பற்றிக் கொண்டான் .

 

எதோ சொல்ல வாயெடுத்தவள் , சற்று நேரம் அவள் முகத்தையே பார்த்து விட்டு மௌனாமாகிப் போனாள் .

 

“ஏதாவது விரும்புகிறாயா நான் உனக்கு செய்வதற்கு “

 

“என்ன சொன்னாலும் செய்வாயா ?”

 

“நீ எது சொன்னாலும் இன்று நான் இல்லை என்று சொல்வதாயில்லை “

 

“கடைசி ஆசைகளை நிறை ..”  முடிக்கும் முன்பே மீண்டும் இதழ் பொத்தினான் .

 

“இன்னுமொருமுறை நினைக்கவும் செய்யாதே ..என்ன செய்ய வேண்டும் “

 

” நாம் வாழ்ந்த நாட்களை மீண்டுமொருமுறை வாழ்ந்து பார்க்க விரும்புகிறேன் “

புதைந்திருந்தனர் இருவரும் கம்பளிக்குள் .கட்டிலின் விளிம்பின் சாய்ந்திருந்தவனின் மார்பின் மேல் தலை வைத்திருந்தாள் . இருவரும் புரட்டிக் கொண்டிருந்தனர் வாழ்ந்த நாட்களை , அவன் வரைந்திருந்த ஓவியங்களில் .

 

ஏனோ முதல் சந்திப்பு நினைவில் இருந்தாலும் பேசிய முதல் வார்த்தைகள் மனதின் ஆழத்தினில் புதைந்துபோய் விடுகிறது. ஒவ்வொரு முறை அதை யோசிக்கையிலும் ஒவ்வொரு கதைகள் கிடைக்கின்றன. அவன் சொல்வது அவளுக்கு எதோ ஒரு தேவதைக் கதையின் ஆரம்பம் போல் தோன்றும். அவள் சொல்லும் கதைகளை ஒருபோதும் அவன் மறுத்ததில்லை எனினும் அவன் கண்கள் பொய் சொல்லுவதை அவள் உணரவே செய்திருந்தாள். இந்த முறை பேசிய முதல் வார்த்தை மௌனமாகத் தான் இருக்க வேண்டும் என்று ஒருசேர முடிவு செய்திருந்தனர்.

 

கொஞ்ச நேரத்திற்கு முதன் சந்திப்பின் வார்த்தைகளைப் பேசிக் கொண்டிருந்தனர்.

 

மீண்டும் இருமினாள்.

 

ஓடிச் சென்று மருந்து புட்டியத் திறந்தான். உள்ளிருந்த காற்றும் வெளியேறிச் சென்றது. மேலங்கியையும் தொப்பியையும் மாட்டிக் கொண்டிருப்பவனைப் பார்த்துக் கேட்டாள்.

 

“ஏய் கிழவா , எங்கே செல்கிறாய் ? உன் காதலியைப் பார்க்கவா ?”

 

“மருந்து வாங்க …”

 

“மருந்துக் கடையிலா பார்த்து வைத்திருக்கிறாய் உன் புதிய காதலியை ?”

 

சிரித்தான்.

 

“நீ இப்பொழுது போனால் பிறகு உன்னுடன் நான் பேசவே மாட்டேன் ….எனக்கு எதுவும் வேண்டாம் .. நீ மட்டும் அருகிலேயே இரு .. போதும் ..”

 

அருகில் சென்றவன் நெற்றியில் ஒரு முத்தமிட்டுவிட்டு சீக்கிரம் வந்துவிடுவதாகச் சொல்லி , குடையுடன் படிகளில் இறங்கத் துவங்கினான்.

 

பாதி வீதிக்கு வந்தவன் ஏதோ நியாபகம் வந்தவனாய் திரும்பிப் பார்த்தான். நனைந்திருந்த ஜன்னல் கம்பிகளைப் பிடித்திருந்தவள் சீக்கிரம் வந்துவிடு என்று சைகையால் புன்னகைத்தாள். தொப்பியை உயர்த்திக் காட்டியவன் முடிந்த மட்டும் ஓடத் துவங்கினான்.

 

மருந்துக் கடையில் யாருமில்லை. வாங்கி முடித்திருந்த பொழுது இளைஞன் ஒருவன் கைகள் மொத்தமும் காகிதத்துடன் மழைக்காக ஒதுங்கினான். இருவரும் மரியாதை  நிமித்தம் புன்னகைத்துக் கொண்டார்கள். மழை இன்னமும் வழுத்திருந்தது. ஒரு கையில் குடையுடனும் , இன்னொரு கையில் மருந்துடனும் நடப்பது கடினம் போல் தெரிந்தது கிழவனுக்கு.

 

“என் மனைவிக்கு உடல் நலமில்லை .. இந்த மழையில் மருந்துடன் சீக்கிரம் நடப்பது கடினம் போல் தெரிகிறது …  கூட வர முடியுமா … “

 

அந்தக் கிழவனுக்கு எதோ பேசிக்கொண்டேயிருக்க வேண்டும் போல் இருந்தது. இதில் எனக்கு எந்தத் துன்பமும் இல்லை என்றான் இளைஞன்.

 

“என் மனைவிக்கு உன்னை மிகவும் பிடிக்கும் .. மழை விடும் வரை எங்கள் வீட்டில் தான் இருக்க வேண்டும் ..”

 

இளைஞன் கைகளில் இருந்த காகிதங்களை இறுகப் பிடித்துக் கொண்டு சரி என்றான்.

 

“கைகளில் என்ன ?”

 

“கவிதைகள் …”

 

“ஓ !  நீ கவிதைகள் எழுதுவாயா ? “

 

“கவிதைகள் என்னுடையதல்ல ..  வீதியொன்றில் மழை சப்தமிட்டுப் படித்துக் கொண்டிருந்தது .. கடன் வாங்கி வந்திருக்கிறேன் .. “

 

கிழவன் சிரித்தான்.

 

“நானும் என் மனைவியும் , நாங்கள் முதலில் பேசிய வார்த்தை என்ன என எப்பொழுதுமே சண்டையிட்டுக் கொண்டிருப்போம் .. இப்பொழுது நினைவுக்கு வந்துவிட்டது .. சீக்கிரம் அவளிடம் சொல்ல வேண்டும் …”

 

வீடு நெருங்க நெருங்க கிழவனிடம் ஓட்டம் அதிகமானது. ஜன்னல் வழி பார்த்தபடி அவள் இன்னமும் காத்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

 

“முட்டாள் கிழவி .. எப்பொழுது தான் திருந்தப் போகிறாளோ ..” தான் வந்துவிட்டதாக கையசைத்தார். அவளிடம் எந்தச் சலனமும் இல்லை.

 

நடு வீதியில் இருப்பதை மறந்து நின்றார். உற்றுப் பார்த்தார். கடைசியாக பார்த்த புன்னகை அவளிடம் உறைந்து போயிருக்கக் கண்டார், நனைந்து போயிருந்த கம்பிகளைப் பற்றியிருந்த அவள் பிடி போலவே. மருந்தையும் குடையையும் தன்னையும் கீழே விட்டு விட்டு தலையிலடித்தபடி அழத் துவங்கினார்.

 

மழை நின்று போயிருந்தது.

 

 

– தொடரும் (முல்லை)

 

—————————————————————————————————–