Tags

, , , ,

முல்லை – இருத்தலும் இருத்தல் நிமித்தமும்

எல்லா பயணங்களுமே ஏதாவதொரு தேடலின் நிமித்தமே அமைந்து விடுகின்றன. பயணத்தின் அழகு முடிவில் இல்லை. தனித்துப் பயணிக்கும் பாதைகளிலும் , எப்பொழுதாவது எதிர்ப்பட்டுப் புன்னகைகள் பரிமாறிப் போகும் வழிப்போக்கர்களிடமும் , குறிப்பாக தேடு பொருளிலும் இருக்கிறது.

நான் வெகு தொலைவில் இருந்து வந்திருப்பவன். இந்த மழை தேசத்திற்குப் புதியவன்.  ஒரு குழந்தையின் கண் சிமிட்டலுக்கேற்ப மாறி மாறி நடனமிடும் இந்த தேசத்தின் மழைக்குப் புதியவன். என் நகரத்திலும் மழை உண்டு. அதை ரசிப்பவர்கள் கிடையாது. காதலும் கவிதைகளும் உண்டு. கவிஞர்கள் மொத்தமும் பைத்தியக்கார விடுதியில் இருக்கிறார்கள். சிறு பிள்ளையின் புன்னகைக்கு பதில் கிடைக்காது. புதையல் இருக்குமிடமே எங்கள் புகலிடம். எங்கள் ஊரின் கடிகார முள் கூட அமைதியாகப் பணம் எண்ணிக் கொண்டிருக்கும்.

அப்பொழுதுதான் அவளைச் சந்தித்தேன்.

அவள் கனவுகளை மொத்தமும் இந்த மழை தேசத்தின் ஈரங்களே ஆக்கிரமித்திருந்தன. அவள் இரவுகள் இசையால் நிரம்பியிருந்தன.  அவள் கைகள் எந்நேரமும் காற்றில் கவிதை வருடிக் கொண்டிருந்தன. நகரம் அவளை உள்ளிழுக்க முயன்று கொண்டிருக்கையில் , அவள் நகரத்திற்குள் அவள் பால்யத்தின் சாயலைத் தேடிக் கொண்டிருந்தாள்.

நன்றாக நினைவிருக்கிறது எங்கள் முதல் சந்திப்பு. அந்த மது விடுதிக்கு நான் பழையவன், பழகிப் போனவன். அவள் புதியவள் , பரிமாற வந்தவள். மதுவோடு சேர்த்துக் கவிதை ஒன்றைப் பரிமாறிப் போனாள். அது காதல் பற்றியது.

காதல் பற்றி என் அபிப்ராயம் சுலபமானது. அது மதுவைப் போன்றது.  பணம் கொடுத்ததும் பரிமாறப்படுவது.  சில நிமிட போதை. இரவு கலைந்ததும் கூடவே போய்விடுவது.

அவளுக்குக் காதல் எல்லாமுமாக இருந்தது. காதல் மது என்றால் , அதில் எப்பொழுதும் மயங்கிக் கிடக்கத் தயாராக இருந்தாள் அவள். விடிந்தால் கலைந்து விடும் என்றால் விடியலைக் கொன்று விடத்  தயங்காமல் இருந்தாள்.

மதுவுக்காகவும், அவளுக்காகவும் தினமும் செல்லத் துவங்கினேன் அங்கே. தினம் புதுக் கவிதைகள், மௌனப் பார்வைகள்,  கொஞ்சம் திருட்டுப் புன்னகைகள் , எதிர்பாராத முத்தங்கள், சில முறை திட்டமிடப்பட்ட  தீண்டல்கள்.

காதலைப் பற்றி விடியும் வரை விவாதித்துக் கொண்டிருந்த அந்த மழை இரவில் தான் அவளைக் கடைசியாய் சந்தித்தது. விடிந்த பொழுது தலையணை அருகில் அவள் முகவரி கிறுக்கிய காகிதத் துண்டு மட்டுமே இருந்தது. கொஞ்ச நாட்களில் கவிதைகளை வெறுக்கத் துவங்கி விட்டேன் ஆனால் மது கசந்தது.  இருளின் ஸ்பரிசங்களையும் , அவள் முத்தச் சூட்டையும் தாண்டிய ஏதோ ஒன்று தொலைந்தது போல் இருந்தது.

அவள் முகவரிக் கிறுக்கலைக் கைகளில் பற்றிக் கொண்டு என் பயணத்தைத் தொடங்கியது அன்று தான். நெடுந்தூர கொடிய தனிய பயணத்தின் பின் இதோ வந்தே விட்டேன்.

சற்று முன்பு பெய்து முடித்திருந்த மழையில் நகரின் பிரதான சாலைகள் முழுதும் நனைந்திருந்தன. எதிர்பட்ட தேவாலயத்தில் நுழையும் எண்ணம் துளியும் இல்லை அந்த முடவன் அழைத்திருக்கா விட்டால்.

“ஊருக்குப் புதியவனா ?”

தேவாலயத்தின் ஒரு ஓரத்தில் அவன் தன்னைச் சுற்றி ஒரு சிறையை எழுப்பி அதற்குள் நெடுநாட்களாக வசித்துக் கொண்டிருப்பவனாக இருந்தான். அவன் கையில் கயிறும் , கயிற்றின் மறு கையில் தேவாலயத்தின் மணியும் இருந்தது. தன்னை அந்த மணியின் சப்தத்தில் புதைத்து நெடுநாட்களாகி விட்டதாக சுய அறிமுகப் படுத்தி விட்டு மீண்டும் அதே கேள்வியைக் கேட்டான்.

ஆம் என்றேன்.

“எதைத் தேடி வந்திருக்கிறாய் ?”

எனது வியப்பு அவனுக்குத் தொற்றிக் கொள்ளவில்லை.

“இந்த ஊருக்குப் புதிதாக வருபவர்கள் பெரும்பாலும் எதையாவது தேடிக்கொண்டே வருகிறார்கள் , ஆனால் நிச்சயம் தொலைந்து போவார்கள் .. சொல் ! நீ எதில் தொலைந்து போக வந்திருக்கிறாய் “

அவன் பேச்சு சுவாரசியமாக இருந்தது. “நான் காதலைத் தேடி வந்திருக்கிறேன் …”

அவன் சிரித்தான். ” சரியான இடத்திற்கு தான் வந்திருக்கிறாய் … மழையும் காதலும் வேறல்ல .. இரண்டுமே நீ விரும்பினாலும் , விரும்பாவிட்டாலும் நனைப்பது உறுதி …”

“நிறைய காதலைப் பார்த்திருப்பாய் போல …”

“இன்னும் கொஞ்சம் பொறுத்தால் , நீயே பார்க்கலாம் .. “

“நீயே நான்கு சுவர்களுக்குள் ஒளிந்திருப்பவன் .. நீ என்ன காட்டப் போகிறாய் …”

“ஜன்னல் ஒரு மாயக் கண்ணாடி … உலகத்தை நீ இருக்கும் இடத்திற்குள் காட்டக் கூடியது .. பார்க்கிறாயா எனது உலகத்தை  ?”

அவன் அருகில் அமர்ந்துகொண்டேன். தடுப்புகளுக்கிடையே தெரிந்த இடைவெளியில் உலகத்தைப் பார்க்கக் கற்றுக்கொள்ளத் துவங்கினேன்.

வெறும் கைகளும் , நம்பிக்கையுடன் பற்றிக் கொண்டிருந்த மெழுகுவர்த்திகளும் ஆயிரம் பரிமாணங்களில் கதைகள் சொல்லின. முதலில் பார்த்தது ஒரு பெண்ணின் கைகள். அதைத் தொடர்ந்து சென்றது ஒரு ஒற்றை ரோஜா. முடவன் ஒரு முறை மணி அடித்தான். தேவாலயத்தின் மணி ஒருமுறை தனது மேலிருந்த நீர்த் துளிகளை சிலிர்த்துக் கொண்டு ஒலித்தது.

பிரார்த்தனைகள் பலிக்கட்டும் என  முணுமுணுத்துக் கொண்டான்.

பிரார்த்தனை பலித்ததாகத் தெரியவில்லை. வெறும் கைகளுடன் அவள் மட்டுமே திரும்பியிருந்தாள். ஒற்றை ரோஜாவிற்குச் சொந்தக்காரன் அதை இன்னமும் கைகளிலிருந்து இறக்கி விடாமல் இறுகப் பற்றியபடி தொடர்ந்திருந்தான்.

அவள் முகம் வெளிர் நிறத்தில் அழகுடன் கவிந்த சோகத்தைப் போர்த்தியிருந்தது. 

நான் சிரித்தேன்.

ஏன் என்றான் முடவன்.

இது காதலல்ல .. அவள் அழகின் மேல் அவன் கொண்ட மோகம் என்றேன்.

பின் தொடர்ந்து போய் பார். ஒரு வேளை நீ தேடி வந்தது கிடைக்கக் கூடும் என்றான். கூடவே தொலைந்து விடாதே ஜாக்கிரதை என்றான்.

அவன் அவளைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தான். நான் அவர்களைப் பின் தொடர்ந்தேன். காதல் எங்களைப் பின்தொடர்ந்து கொண்டிருக்கக் கூடும் என்று பைத்தியக்காரத்தனமாகத் தோன்றியது.

நான் மீண்டும் அவனைச் சந்தித்தது ஒரு விபசார விடுதியின் முன். சரிதான் இதுதான் காதல் போல என்று சிரித்தேன்.

அழுது கொண்டிருந்தவன் கண்களைத் துடைத்துக் கொண்டு சிரிப்பதற்கு என்ன இருக்கிறதென்று கேட்டான்.

” இவ்வளவு நேரம் காதலியைத் துரத்திக் கொண்டிருந்தாய் , இப்பொழுது இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்” , என்றேன்.

“இப்பொழுதும் அதைத் தான் செய்து கொண்டிருக்கிறேன் .. அவள் உள்ளே தான் இருக்கிறாள் .. காதலும் மழையும் வேறல்ல ..  சிலருக்கு மட்டுமே குடையிருந்தும் நனையக் கொடுத்துவைக்கிறது .. பலருக்குக் கம்பிகளுக்குப் பின்னால் இருந்து தேநீருடன் ரசிக்க மட்டுமே கொடுத்து வைக்கிறது .. என்னைப் போல … “

எனக்கு அவனது பதில் உறைப்பதற்குக் கொஞ்சம் நேரமெடுத்து.

“எதற்காக இந்தக் காத்திருப்பு .. ? நீ விரும்பினால் அவளை எளிதாக அடையலாமே  .. எனக்குப் புரியவில்லை .. உனக்கு என்ன தான் வேண்டும் ..”

“காதல் ” என்றான் விரக்தியாய்.

“அது என்னவென்று புரியாமல் தான்  தேடி இங்கு வந்திருக்கிறேன் ” இந்தக் கதையின் முன்கதைச் சுருக்கத்தைச் சொல்லி முடிக்கும் முன் மீண்டும் மழை வலுத்திருந்தது.

“நீங்கள் தேடி வந்த பெண் கவிதைகளை நேசிப்பவளாய் இருந்தால் நிச்சயம் , இந்த ஊரின் கவிஞருக்கு அவளைத் தெரிந்திருக்கும் ..” இன்னொரு முகவரியை எனது துண்டுத் தாளில் நிரப்பிக் கொடுத்தான்.

பயணங்கள் எப்பொழுதும் இப்படியே. ஒரு முகவரி தேடித் போகையில்  , புதிய முகவரி ஒன்றைப் பைகளில் சேர்க்கிறது.

கவிஞனின் வீட்டை நெருங்கியிருக்கையில் மழை ஓய்ந்திருந்தது. சாரல் மட்டும் இன்னமும். பலம் கொண்ட மட்டும் காற்று ஜன்னல்களை மூட முயன்று கொண்டிருந்தது . சில கவிதைத் தாள்கள் ஜன்னல் வழி தப்பி ஓடி வந்து கொண்டிருந்தன. சில மூடிய கதவுகள் தட்டப் படக் கூடாது எனப் பார்த்ததும் தெரிந்துவிடும்.  கவிதைகளை மற்றும் காப்பாற்றிக் கொண்டு வேறுபக்கம் ஒதுங்கினேன்.

கவிதைகள் சில சுவாரசியமாகவே இருந்தன. பெரும்பாலும் காதலியின் அழகைப்  பற்றியன. நனைந்த காதலியைக் கண்டு நிலவு நிச்சயம் நனையும் போன்ற பொய்யான வரிகளால் நிரம்பியவைகள் சில.

காதல் அழகு சார்ந்தது. இளமை வேட்கை கொண்டது. அழகும் , இளமையும் இறக்கும் சந்தர்ப்பத்தில் காதலின் விளக்கம் என்னவாயிருக்கும் ? கவிதையும் பொய்களும் எங்கு போய் ஒளியும் ?

ஒ ! பெண்ணே .. உன்னைத் தேடி வந்த பயணம் எப்பொழுது முடியும் என்று தெரியவில்லை. ஆனால் இந்தப் பயணமும் தேடலும் காத்திருப்பும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உன்னைச் சந்திக்கையில்  உன்னிடமே கேட்டுக் கொள்கிறேன் காதல் என்றால் என்னவென்று. இலக்கில்லாமல் நகரத்தின் வீதிகளில் மழையின் பாதையில் நடக்கத் துவங்கினேன்.

நகரம் எப்பொழுதும் விசித்திரமானது. எல்லா விடைகளையும் தனக்குள் ஒளித்து வைத்து விளையாட்டுக் காட்டுவது. நாம் பதில் தேடிச் சலித்துக் கேள்விகளைக் கைவிடுகையில் தூரத்தில் வெளிச்சம் காட்டி ஈர்க்கிறது.

அப்படித் தான் நான் அந்தக் கிழவனைச் சந்தித்தேன். தன் மனைவிக்கு உடல் நிலை சரியில்லை எனவும் , மருந்து வாங்க வந்திருப்பதாகவும் சொன்னார். ஒரு கையில் குடையுடனும் மறு கையில் மருந்துடனும் நடக்கச் சிரமமாயிருப்பதால் , என்னைத் துணைக்கு வரும்படி கேட்டார்.

அந்தக் கிழவனுக்கு எதோ பேசிக்கொண்டேயிருக்க வேண்டும் போல் இருந்தது. நிறையப் பேசினான். அவனைப் பற்றி .. அவளைப் பற்றி .. அவர்களைப் பற்றி ..

“என் மனைவிக்கு உன்னை மிகவும் பிடிக்கும் .. மழை விடும் வரை எங்கள் வீட்டில் தான் இருக்க வேண்டும் .. உன் கவிதையானவளை என் மனைவிக்கு நிச்சயம் தெரிந்திருக்கக் கூடும் … ”

திடீரென்று கிழவன் சிரித்தான்.

என்ன ஆயிற்று என்றேன்.  

“நானும் என் மனைவியும் , நாங்கள் முதலில் பேசிய வார்த்தை என்ன என எப்பொழுதுமே சண்டையிட்டுக் கொண்டிருப்போம் .. இப்பொழுது நினைவுக்கு வந்துவிட்டது .. சீக்கிரம் அவளிடம் சொல்ல வேண்டும் …” 

வீடு நெருங்க நெருங்க கிழவனிடம் ஓட்டம் அதிகமானது. ஜன்னல் வழி பார்த்தபடி அவள் இன்னமும் காத்துக் கொண்டிருப்பது தெரிந்தது. 

“முட்டாள் கிழவி .. எப்பொழுது தான் திருந்தப் போகிறாளோ ..” தான் வந்துவிட்டதாக கையசைத்தார். அவளிடம் எந்தச் சலனமும் இல்லை. 

நடு வீதியில் இருப்பதை மறந்து நின்றார். உற்றுப் பார்த்தார். கடைசியாக பார்த்த புன்னகை அவளிடம் உறைந்து போயிருக்கக் கண்டார், நனைந்து போயிருந்த கம்பிகளைப் பற்றியிருந்த அவள் பிடி போலவே. மருந்தையும் குடையையும் தன்னையும் கீழே விட்டு விட்டு தலையிலடித்தபடி அழத் துவங்கினார்.

வெகு நேரம் அவர்கள் வீட்டில் இருந்தேன். அடங்காத பிரேமத்துடன் அவள் பிரேதத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

சுருக்கங்கள் விழுந்த அவன் மனைவியின் மேல் இவனுக்குத் தான் எவ்வளவு காதல் ? எங்கு ஒளிந்திருக்கிறது அவன் காதல் .. முற்றுப் பெறாத அவன் ஓவியத்திலா ? மௌனப் புன்னைகையில் இருக்கும் அவள் உதட்டுச் சுருக்கங்களிளா .. தெருவெல்லாம் தேவதைகள் நிரம்பி இருக்கையில் இவள் ஒருத்திக்காக ஏன் இவ்வளவு கண்ணீர். ஒருத்திக்காக அழுகிறானே  இந்தக் கண்ணீர் தான் காதலா ?

கிழவியை அடக்கம் செய்த இரவு வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தான் கிழவன். இரண்டு நாட்கள் அவனுடனே இருந்தேன். இரண்டாம் நாள் மாலையில் மழை மீண்டும் துவங்கியிருந்தது.

கை நிறைய ரோஜாப் பூக்களைக்கொடுத்தவன் “மழை மீண்டும் துவங்கி விட்டது .. மழையும் காதலும் வேறல்ல .. மழையின் பாதையில் போ .. பாதையின் முடிவில் நீ தேடி வந்தது கிடைக்கக் கூடும் என்றான் ”  

அந்த வீட்டை விட்டுக் கிளம்புகையில் என் பயணமே அர்த்தமற்றது என்று தோன்றியது. இல்லாத ஒன்றைத் தேடித் தான் கிளம்பினேன். என் பயணம் முழுவதும் அது கூடவே பயணித்திருக்கிறது.  

ஒருவன் கவிதைகளாலேயே தன் காதலியை அர்ச்சிக்கிறான். பார்க்கும் இடங்களெல்லாம் அவனுக்குக் கவிதையாகத் தெரிகிறது. அவன் காதலியாகத் தெரிகிறது. பொய்களை உண்மையக்குகிறான்.

இன்னொருவன் தன் காதலியை அடைய எளிய வழி இருந்தும் , வலிகளைச் சுமந்து திரிகிறான். வியர்வைச் சங்கமம் வேண்டாம், அவள் சின்ன ஸ்பரிசம் போதுமென்கிறான். பொய்கள் வேண்டாம் , அவள் நிழல் சொல்லும் உண்மை போதும் என்கிறான்.

புலன்கள் அடங்கிய பின்பும் கூட , ஒரு பெண்ணின் புன் சிரிப்பில் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு என்கிறான் ஒரு கிழவன். அவளைப் பார்த்துக் கொண்டே , அவளைப் பற்றிப் பேசிக் கொண்டே, அவளை நினைத்துக் கொண்டே  ஒரு இரவு முழுவதும் அல்ல , இனி எல்லா இரவுகளையும் கொல்ல முடியும் என்கிறான்.  இங்கே பொய் , உண்மை என்று எதுவுமில்லை. அவனும் அவளும் மட்டுமே என்கிறான்.

மழையின் பாதையில் சென்றேன். எல்லாப் பாதைகளும் ரோமை அடைகின்றனவாம். நானொரு நதியை அடைந்தேன். இந்த மழைக்குத் தான் என்ன ஒரு தீராக் காதல் இந்த நகரத்தின் மேல்.  நதியில் சேர்ந்தாலும் மீண்டும் மீண்டும் மழையாகப் பொழிகிறது.

மீண்டும் மீண்டும் நடக்கும் இந்த ஒரே பயணத்தை , தேடலை , வலிகளை , நம்பிக்கையை , மோகத்தை எந்த இழை இணைக்கிறது?

நினைவுகள் , சின்னச் சின்ன நினைவுகள் என்றான் நான் அடுத்து சந்தித்தவன். தான் காதலியை சமாதானம் செய்ய என்னிடம் ரோஜாப் பூக்களைக் கடன் வாங்கிப் போனவன்.

தூரத்தின் நதியைப் பார்ப்பது போல பாசாங்கு செய்து கொண்டிருந்தாள் அவள். பின்னால் இருந்து பார்க்க அந்த மாலை நேர நதி மரங் காற்று பறவையுடன் அவளும் ஓர் ஓவியம் ஆகிவிட்டதைப் போலவே இருந்தது. எந்த அரவமும் ஏற்படுத்தாமல் வந்து நின்றிருந்தான் அவன். அவனே ஓவியனாகி அந்த ஓவியத்தைக் களைத்துப்போடத் துவன்கினான்.

இருவரும் ஒரு வார்த்தை பேசிக் கொள்ளவில்லை. சில பொழுதுகளில் வார்த்தைகள் எல்லாம் அர்த்தமில்லாமல் போய் விடுகின்றன. மௌனங்களை எதிர் கொள்ளும் சக்தி எல்லாருக்கும் வாய்த்துவிடுவதில்லை.

அவன் ரோஜாக்களை நீட்டினான். அவள் வாங்கிக்கொள்ளவில்லை. ரோஜாக்களை இருக்கையில் அமர்த்திவிட்டு அவள் தோள் தொட்டான். அவன் தோள்களில் முகம் புதைத்துக் கொண்டு அழத் துவங்கினாள். அழுது முடித்தது போதுமெனத் தள்ளிவிட்டாள். சில பொழுதுகளில் கண்ணீர் மௌனத்தைவிட அர்த்தமுள்ளதாக மாறிவிடுகிறது. இந்த மழையே காதலின் கண்ணீர் தானா !

அவள் ஓடத்  துவங்கினான். நிழல் என்ன செய்யும். அவனும் அவளைப் பின் தொடர்ந்தான். என்னைக் கடக்கையில் புன்னகை செய்தான்.  அதிலிருந்த நம்பிக்கை இன்னமும் எவ்வளவு தூரமும் பயணிக்கலாம் என்றது.

நதியை ஒட்டியிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டேன். காதலைப் பற்றித் தேடித் தெரிந்து கொள்ள முடியாது. காதலித்து தான் தெரிந்து கொள்ளவேண்டும். உண்மைதான் , மழையும் காதலும் வேறல்ல. நான் நனைவதற்குத் தயார். இந்த நகரத்தில் தொலைந்து போவது குறித்து எனக்கு அச்சமில்லை.

மீண்டும் அந்த ரோஜாப் பூக்களைக் கைகளில் எடுத்துக் கொண்டு அவளுக்காகக் காத்திருக்கத் துவங்கினேன்.

 

————————————————————————————————-