Tags

என்ன இருக்கிறது

இருபத்தேழு வயதிற்குப் பின் …

 

எதற்கெடுத்தாலும் எரிச்சல்

சீப்பில் உதிர்ந்தொட்டிக் கொள்ளும்

மயிர் பற்றிய கவலை

மூச்சை உள்ளே இழுத்துக் கொண்டாலும்

ஒளிந்துக் கொள்ளத் தெரியாத தொப்பை

இளமையாய் இருந்ததன் நினைவுகள்

நிறைய கழிவிரக்கம் 

போக்குவரத்து நெரிசலும் புகையும்

ஆறிப் போன உணவை விழுங்க

ஒதுக்கப்பட்ட இரண்டு நிமிடங்கள்

நிறைய வியர்வையும் மூச்சிரைப்பும்

 

திருமண அழைப்பிதல் பார்கையில்

வயிற்றைக் கவ்வுகிறது பயம்

எதிர் பார்க்காத தருணத்தில்

எதிர்பார்க்காத இடமொன்றிலிருந்து

வரப் போகும் அழைப்பிதழில்

எதிர்பார்க்காத பெயரொன்று

இருந்துவிடக் கூடும் என்ற அச்சத்திலேயே

கழிகின்றது நாள் மொத்தமும் …

 

மழையும் , குழந்தைகளும்

சுமைகளாய்த் தெரிகிறார்கள்

கவிதைகள் கழுத்தை

நெரிக்கின்றன

புன்னகைக்க மறந்து போய்

மனம்

நேற்றைய சுகமான நினைவுகளிலோ

நாளை பற்றிய அவநம்பிக்கைகளிலோ

மட்டுமே மையம் கொள்கிறது 

 

எல்லாரும் உற்றுப்பார்ப்பது

நெளியச் செய்கிறது

கண்ணுக்குத் தெரியாத பாரமொன்றை

தலையில் ஏற்றி வைத்து ஓடச் சொல்வது

அவர்கள் பழக்கமாயிருக்கிறது

எல்லாவற்றின் காரணமாயும்

நம்மை நோக்கி நீளக் காத்திருக்கும்

சுட்டுவிரல்கள்

துப்பிக் கொண்டே இருக்கின்றன

தோட்டாக்களை …

 

தத்துவங்கள் பிடிக்கின்றன.

கடவுளைப் பழிப்பதும்

கூடவே

கன்னத்தில் போட்டுக் கொள்வதும்

பழகியிருக்கிறது.

 

சமயங்களில்

 

யாருக்கும் தெரிலாமல்

மறைந்து போவதும் 

 

புகைப்படங்களைக்

கிழித்தெறிவதும்

 

உணவிருந்தும் பசித்திருப்பதும்

 

கொஞ்சமேனும் சிரித்துப் பார்ப்பதும்

 

நிறைய அழுவதும்

 

கோபம் கொள்ளப் பழகிக் கொள்வதும்

 

கவிதைகள் எழுதுவதை

நிறுத்திக் கொள்வதும் கூடச்

 

சாலச் சிறந்ததெனத் தோன்றுகிறது.

 

என்ன இருக்கிறது

உறக்கமில்லா இரவின் பின்னே ..

நீண்ட பகலைப் பற்றிய பயத்தினைத்

தவிர …

 

——————————————————————-