Tags
மழை பெய்து கொண்டிருந்த
ஒரு மாலை நேரம்
நீ தனிமையில் இல்லை
நானிருக்கிறேன் உனக்கு
சத்தம் போட்டபடி
நடந்து கொண்டிருந்தது
கடிகார முள் …
கண்கள் மூடி மௌனமாய்
புன்னகைத்துக் கொண்டிருந்தார்
புத்தர்
எப்பொழுது இருட்டாகும் என
அதன் பின்னாலிருந்து
அடிக்கடி எட்டிப்பார்த்துவிட்டுப்
போனது பல்லி …
சத்தம் பிடிப்பதில்லை எனக்கு
வெளிச்சதிற்குப் பிடிப்பதில்லை
என்னை …
வீட்டுவாசலில்
நாய் கூடக் கட்டப்படவில்லை
எனக்குப் பிடிக்காது என்பதற்காக அல்ல
நாயின் குறைப்பு
வருகிறவர்களுக்கு பிடிக்காது என்பதற்காக
மேலும்
எனக்குக் காவல் தேவையில்லை
திருடுவதற்கோ விற்பதற்கோ
எதுவுமில்லை என்னிடம்
என்னைத்தவிர …
என்னைப் போலவே
கரையாகிப் போயிருந்த
ஜன்னல் வழியே
வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்
என்னை யாரும் பார்த்துவிடாத வண்ணம்
முகத்தில் முத்தமிட்டுக்கொண்டிருந்த
சாரலில் என் நினைவுகள்
கரைந்து அழுக்காக்கிக்கொண்டிருந்தன ….
கட்டில் மெத்தை போர்வைகள்
போல மரத்துப்போகவில்லை
நானும் என்று
நம்ப வைத்துக் கொண்டிருப்பது
இந்தப் பழைய நினைவுகளே …
வரலாற்றில் ப்ரிதிவிராஜனைப்
படித்த பொழுது நான் கூட நம்பினேன்
எனக்கான ராஜகுமாரன் ஒருநாள்
குதிரையேறி வருவான் என்று …
இன்றும் பல ராஜகுமாரர்கள்
வந்து கொண்டுதானிருக்கின்றனர்
நடந்தோ சைக்கிளிலோ
கார்களிலோ
ஆனால் என்னைத்
தூக்கிச் செல்லத்தான் ஆளில்லை …
சுயம்வரத்தை வேடிக்கை பார்க்கத்தான்
பெருங்கூட்டம் …
நிச்சயமாய் திரும்பக் கிடைக்கப்போவதில்லை
மார்கழியில் நான்
கோலம் போட்ட இரவுகள்
இன்று
புள்ளிகள் வைக்க மட்டுமே
எனக்கு நேரம்
கோலம் போட
தினமும் ஒவ்வொருவர்
விடியும் முன்பே அது
வியர்வையில் அழிந்தும் விடும்
நைந்து போன காகிதத்தில்
வரையப்பட்ட
நனைந்து போன கோலம் நான் …
என் வீட்டுப் பூக்கள் மட்டும்
வாடியே பூக்கின்றன ..
வாசம் வீசும் மல்லிகைப்பூ
எனக்கு மட்டும்
சுவாசம் பறித்துக் கொண்டது …
ஆசை அறவே இல்லை
மோகம் மட்டுமே
இங்கே முப்பது நாட்களும்
அச்சம் மடம் நாணம்
பயிற்புடன்
கற்பும் கரைந்து போனது
மறந்தும் போனது …
ஆடைகள் வெறும்
அலங்காரதிற்குத் தான்
நாடகம் நடந்துகொண்டிருக்கும் போதே
ஒப்பனை கலைக்கப்படும் …
விளக்கேற்ற ஆளில்லை
விளக்கணைக்கவே
ஆர்வம் பலருக்கு …
ஆம் என்று
விளக்கணைத்துச் சென்றது
மின்சாரம் …
பலருக்கு
வசதியாய் போயிருந்த இருட்டு
இப்பொழுது எனக்கும் …
தூரத்தில் மின்னலொன்று
வானம் கிழித்துச் சென்றது
கிழிந்த வானத்தின் வழியே
புன்னகைத்தான் அவன் …
தேவகுமாரன்.
என் இரத்தத்தில் ஆக்சிஜனுடன்
ஓடிக்கொண்டிருப்பது
அந்த சந்தியாக்காலச் சந்திப்புகள்
மட்டுமே …
அவனும் இந்த
மழை போலத்தான் …
மின்னலைக் கண்களில் வைத்திருப்பான்.
எவ்வளவோ முயன்றும்
தோற்றுத்தான் போயிருக்கிறேன்
பார்த்ததும் திருடிவிடுவான்
என் புன்னகையை …
புத்தகத்தை மார்போடு அணைக்கும் பழக்கம்
அனிச்சையானது
அவனைப் பார்த்த பின்பு தான் …
அவனுக்கு மழையில் நனைவது
மிகவும் பிடிக்கும்
நவம்பர் மாத மழையை மட்டும்
என்னுடன் சேர்ந்து நனைவதற்காக
விட்டு வைத்திருப்பதாகச் சொல்லுவான் …
இதயம் தொடுபவை
அவன் கூறிய பொய்கள்
உயிர் தொட்டவை அவன் சொன்ன
சில உண்மைகள் …
காதல் பாஷையில் இல்லை
பார்வையில் தான்
என்பது அவன் சித்தாந்தம் …
நிறைய சிரிக்க வைத்தான்
கொஞ்சம் அழவும்
சில நேரங்களில் அழவும் செய்தான் …
ஒருநாள் சாரலோடு வந்தான் …
என் விரல் மோதிரத்தை
அவன் விரல்களால்
முத்தமிட்டபடிச் சொன்னான் …
இது பிரிவல்ல ..
கோடைகாலத் துவக்கம்.
மீண்டுமொரு மழைக்காலத்தில்
நிச்சயம் சந்திப்போம் ….
அதுவரையில் …
நான் தந்த முத்தங்களை
இந்த மழைத்துளிகள் தரும்
எரியும் ஜ்வாலையின் அருகாமையில்
உணர்வாய் என் கதகதப்பை
நமது சாயங்காலச் சந்திப்புகளை
வான வேடிக்கையுடன்
வானம் வேடிக்கை காட்டும்
உன் படுக்கை அறையில்
நான் சொல்லிய பொய்களைச்
சொல்லிக் காற்று உன்னைச்
சீண்டிப் பார்க்கும் …
நீ நடப்பது என் மேலல்ல
ரத்தத்தின் மேல் ..
ஏனெனில் நீ பாதுகாப்பாய் இருப்பது
கொஞ்சம் இம்சையும் நிறையக் காதலும் நிறைந்த
ஒருவனின் இதயத்தில்
என்று இன்னும் சிறிது காலம்
நிஜம் பேசும் இந்த நிலம் …
என் இதயத்தில் வசிப்பது மட்டுமே
உன் வேலை
சுவாசிக்கவும் மறந்துவிடு …
உன் உயிரையும் சுவீகரித்துச் சுமக்க
நானிருக்கிறேன்.
காத்துக் கொண்டிரு …
காதலில் காத்திருத்தல்
சுகமாகிறது
காத்திருத்தலில்
காதல் சுகமாகிறது ..
காத்துக் கொண்டிரு.
ஒருநாள்
தட்டப்படும் கதவின் பின்னாலிருந்து
வெளிப்படுவேன்
ரோஜாக்களை நீட்டியபடி …
அவ்வளவுதான் …!
சொல்லிவிட்டு
பெருமழையோடு போய்விட்டான் …
எங்கிருக்கிறாய் ..
மழையில் நனைந்துகொண்டா ?
இப்பொழுதும் நிறைய
பொய்கள் சொல்கிறாயா ?
உன் விரலில் நான் போட்ட மோதிரம்
இன்னமும் சொல்கிறதா
நம் இறுக்கத்தை ?
உலராமல் இருக்கிறதா
உன் உதட்டின்
நான் சேமித்த முத்தங்கள் ?
இன்னமும் வைத்திருக்கிறாயா
எரிந்த வானவில்லின் எச்சங்கள் என்று
நீ எடுத்துச் சென்ற
என் வளையல் துண்டுகளை ?
தெரியுமா உன் தேவதை
சிறகு தொலைத்த கதை ?
கருப்பாகிப் போனது
என் நிழல் மட்டுமே …
காதலல்ல.
மறந்திருப்பாய் என்று நினைத்திருந்தால்
என்றோ இறந்திருப்பேன்
மறுக்க மாட்டாய்
என்ற நம்பிக்கையில் தானே
மரிக்காமல் இருக்கிறேன் இன்னும் …
ஒவ்வொரு முறை தட்டப்படும்
கதவையும்
உயிரைக் கைகளில் வைத்துக்கொண்டே
திறக்கிறேன் …
நீ வந்தவுடன்
உன் ரோஜாக்களுக்குப் பதில்
காலடியில் சமர்பிக்க …
கதவருகிலேயே காத்திருப்பேன்
கடைசி வரையிலும் …
கல்லறையிலாவது
மறக்காமல் வைத்துவிட்டுப் போ
அந்த ரோஜாக்களை.
——————————————————————————————————————————-
பின்குறிப்பு :
கல்லூரி மூன்றாம் வருடத்தில் எழுதியது. தீவிரமான வைரமுத்து காய்ச்சலில் இருந்த நாட்கள் அவை. ஆறு வருடங்கள் கழித்து ஏன் இந்தக் கவிதையை இன்று படிக்கத் தோன்றியதெனத் தெரியவில்லை. தினமும் சவரம் செய்ய வேண்டிய இந்தச் சூழலில், வளராத தாடியை ஆசையோடு தடவிக்கொண்டிருந்த அந்த நாட்கள் புன்னகையைத் தருகின்றன.
கடலடியில் புதைந்து போனாலும் எப்பொழுதாவது அலைகளில் ஏறி, கரைவந்து பார்க்கும் சிப்பிகள். கல்லூரி நாட்கள் கூட. ஆடைகள் நனைவது பற்றிய கவலையில்லாமல் ஓடி ஓடிப் பொறுக்கும் சிறுவனாய் மாற யாருக்குத் தான் பிடிக்காமல் போகும் !!!
ரெஜோ
08-ஜூன்-2012.
என் வீட்டுப் பூக்கள் மட்டும்
வாடியே பூக்கின்றன ..
வாசம் வீசும் மல்லிகைப்பூ
எனக்கு மட்டும்
சுவாசம் பறித்துக் கொண்டது …
nice da seeni
LikeLike
Thanks da 🙂
LikeLike
nalla iruku machi…
LikeLike
Enna thisayama inthap pakkam ?
LikeLike
kavithai nalla irukku…enaku intha photo pidikala…
LikeLike
Sari appo neeye oru nalla photo vaa anuppu .. maathidalaam …
LikeLike
Good one Rejo! 🙂
LikeLike
As Revathy said, you could have put a better photo..
Kavithai super…super..super..
LikeLike
மாத்தியாச்சு 🙂
LikeLike