Tags

, ,

 

“அன்பே”

எனத் தொடங்கி

ஒரு காதல் கவிதை எழுதிட

வெகுநேரமாய் முயற்சித்து வருகிறேன்.

 

அபத்தமாய் இருக்கிறது.

 

அந்த நாட்களைக் கடந்துவிட்டேனோ.

 

பத்திரிக்கையின்

ஏதாவதொரு பக்கத்தில் அடைப்புக்குறிக்குள்

சிகப்பு இதயத்தினுள்  அம்பு துளைத்த படத்தையொட்டிய

கவிதையினி

புன்னகை தராதோ !

 

உன் பார்வை ஒன்றின் நினைவு

போதாதோ

என் விரல்களின் வழி

வார்த்தைகள் இறங்கி வர …

 

பார்பதை எல்லாம் வார்த்தைகள் கோர்த்துக்

கவிதைகளென்றிருந்தேனே

எங்கே போயின அந்த மாலை நேரங்களும்

மஞ்சள் வெயில் நாட்களும் …

 

ஒரு கவிதை என்னுள்

ஏற்படுத்தியிருந்த  தாக்கங்களும்

என்னுள்ளான  தாக்கங்களால்

ஏற்பட்டிருந்த கவிதைகளும்

எப்படிப் போயின காணாமல் …

 

கவிதைக்குரிய எல்லா வார்த்தைகளும்

என்று அழிந்து போயின

என் அகராதியில் இருந்து …

 

இப்பொழுதிருக்கும் நானாக

எப்பொழுது மாறிப்போனேன் …

 

இனியுமொரு கவிதை எழுதிட

என் வார்த்தைகளில் உயிரில்லை என

நம்புவதில் எதற்கித்தனை பிடிவாதம் …

 

“அன்பே”

எனத் தொடங்கி

ஒரு காதல் கவிதை எழுதிட

வெகுநேரமாய் முயற்சித்து வருகிறேன்.

 

அபத்தமாய் இருக்கிறது.

 ———————————————————————————————–