Tags

,

 

காலணிகளை அடுக்கிடத் தேவையில்லை

காலுறைகளை

தவ்வக் காத்திருக்கும் தவளைகள் போலச் சுருட்டி

எங்கு வேண்டுமாலும் எறிந்துவைக்கலாம்

ஆடைகள் பற்றி அலட்டிக் கொள்ள வேண்டாம்

உள்ளாடைகள் வவ்வால்கள் என

கதவிடுக்குகளில் காணக்கிடக்கலாம்

குளியலறையின் கால்வைக்கும் இடம் தவிர

மீதமெல்லாம் ஆனந்தமாய் அழுக்காக்கி வைக்கலாம்

நாற்காலிகள் காணாமல் போனவைகள் பற்றிய

அறிவிப்புகளில் இருக்கலாம்

சர்க்கரை உப்பு இன்ன பிற அவசியமற்ற சரக்குகளின்

கையிருப்பு பற்றிக் கவலை வேண்டாம்

முக்கியமாய் காப்பிப் பொடிக்கும் தேநீர்த் துகள்களுக்கும்

ஆறு வித்யாசங்கள் அறிந்து வைக்க அவசியமில்லை

பக்கம் கொள்ளாத அளவு இருக்கவே இருக்கிறது

பிரம்மச்சாரியின் அறையொன்றில் இருப்பதன் அனுகூலங்கள்  

அதன் அவஸ்தைகள் மட்டும் உறைப்பதேயில்லை

எதிர்பார்க்காத நாளொன்றில் அறையுடன்

பெண்பால் அறிமுகம் நடக்கும் வரை …

 

————————————————————–