Tags
புதிய முகவரி
சில வருடங்களுக்கொருமுறை நடப்பது தான்.
பொருட்களை எல்லாம் கட்டிவைத்த காலி அறை முதல் நாளை நினைவுபடுத்துகிறது. புதிய இடமென்று அன்று வராத தூக்கம் இன்றும் என்னைத் தொல்லை செய்யாமல் தள்ளியே நிற்கிறது. வெகுகாலம் நடந்து முடிந்த போரொன்றில் திசைகள் தெரியாமல் தனித்து நிற்கும் களைத்துப் போன சாமுராய் ஒருவனின் கதை நினைவுக்கு வருகிறது.
நான்கு சுவர்களும் உதடுகள் பிதுக்கிப் பார்க்கின்றன. ஜன்னல்கள் ஓலமிடுகின்றன. என் ஞாபகங்கள் மொத்தமும் பாலையின் வாசனை.
இதுகாறும் என் அந்தரங்களை மெளனமாக கவனித்துக் கொண்டிருந்த இவ்வீட்டில் அடுத்து குடி வரப்போகிறவர்களுக்கு ஏதேனும் தடையங்களை விட்டு விடுவேனோ என்கிற பயம் அடிவயிற்றில் அழுத்தியபடியே உள்ளது. உனக்காக எழுதிய கடிதங்களையும், கவிதைகளையும் இங்கேயே தவறவிட்டு விடுவேனோவென ஒவ்வொரு மூலைகளிலும் மீண்டும் மீண்டும் தேடித் திரிந்து உறுதி செய்து கொண்டிருக்கிறேன்.
இந்தமுறை அறையின் எந்தப்பக்கத்தையும் புகைப்படம் எடுக்கப் போவதில்லை. இன்னமும் கொஞ்ச நாட்களில் புதிய இடத்திற்குப் பழகிப் போய் இந்த அறையையும் நாட்களையும் வாசனையும் நிச்சயம் மறந்து போவேன். இதுகூட ஒரு பொழுதில் எனக்குப் பிடிக்கவே பிடிக்கதெனக் கருதிய புதிய அறைதான். இடங்களை விடுத்துப் பாதைகளையும் பயணங்களையும் விரும்பப் பழகிக்கொள்ள வேண்டும்.
கொஞ்சம் தேநீர் நிறைய வானத்துடன் மேகம் மொத்தமும் உன் முகம் தேடிக் கிடந்த வீட்டின் முற்றத்தில் எப்பொழுதும் இனி இரவுகளின் நீலம் உதிர்ந்து கிடக்கட்டும். இலைகள் களைந்த மரங்களில் பனிப்பூக்கள் பூக்கட்டும். ஏனென்றே தெரியாமல் நள்ளிரவில் அலறும் வாகனங்களின் அபஸ்வரம் தொலைதூரத்தில் கேட்கும் இசையாகட்டும். எப்பொழுதாவது குளிர்கால உறக்கம் களைந்து என் வீட்டுப் பக்கம் எட்டிப் பார்க்கும் அணில் எனைத் தேடாமல் இருக்கட்டும்.
சாளரத்தின் கீற்று இடைவெளிகளில் இரவு முழுவதும் எனைத் தீண்டிப் பார்க்கும் வெண்ணிலவே … என் ராத்திரி நேரத்து பயங்களே .. உறக்கம் களைவதற்குக் கொஞ்சம் முன்பு வரும் அழகிய கனவுகளே …போய் வருகிறேன்.
நிற்க.
இன்னொரு பைத்தியக்காரத்தனமான கடிதத்தை ஏன் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று முதலிலேயே சொல்லியிருக்க வேண்டும். ஒருவேளை எனது கடிதங்களுக்கு நீ பதிலளிக்க விரும்பினால், இன்றிலிருந்து இந்த முகவரியில் நான் இல்லை.
————————————————