வசந்தகாலக் குறிப்புகள்
இன்னுமொரு குளிர்காலம் கடந்துவிட்டிருக்கிறது. நீரோடைகள் நகரத் தொடங்கியிருக்கின்றன. உறக்கம் தெளிந்து கலைந்து திரிகின்றன உறைந்த மீன்கள். பனியினை உதிர்த்துவிட்டு இலைகளை எழுப்பிக் கொண்டிருகின்றன கிளைகள். திரும்பிவரத் துவங்கியிருக்கின்றன கூடு தேடிப் பறவைகள்.
வெகுதூரம் வந்து விட்டிருக்கிறேன். திரும்பிச் செல்லும் தடங்களை அழித்துவிட்டே வந்திருக்கிறேன். பதில் எழுதியிருப்பாயோ எனத் தேடி இப்பொழுதெல்லாம் செல்வதில்லை என் பழைய முகவரிக்கு.
ஒருவேளை வந்து சேர்வாயோ என்ற காத்திருப்பில் அல்ல. இனி ஒருபோதும் நீ வரப் போவதில்லை என நிச்சயமாய் தெரிந்திருப்பதாலேயே.
கவிதைகளை வீட்டின் வேர்களுக்குக் கீழ் ஆழப் புதைத்த பிறகு, புதிய முகவரியின் தனிமை பழகிவிட்டிருக்கிறது. எப்பொழுதாவது அரிதாக மேற்கூரையில் எட்டிப் பார்க்கும் கவிதையினை வார்தையிலேயே கிள்ளி எறியப் பழகியிருக்கிறேன். என் எழுதுகோலில் மை நிரப்பி நாட்களாகின்றன. காகிதங்கள் பத்திரமாய் இருக்கின்றன கரையான்களின் குளிர்காலச் சேமிப்புக் கிடங்கில். உனக்கும் சேர்த்துப் போட்டிருக்கும் தோட்டத்து நாற்காலியில் தற்காலிகமாய் தங்கியிருக்கின்றன பச்சைப் பாசிகள். உன் தேனீர்க் கோப்பைகளில் பூத்திருக்கின்றன காளான் குடைகள். வாசல் வந்து சேர்ந்திருக்காத உன் காலடித் தடங்கள் தேடி மின்னல் பூச்சுடன் கடந்து போகின்றன நம் பெயர் எழுதிய மேகங்கள்.
எதிர்பாராத தெரு ஒன்றின் திருப்பத்தில் எப்படியும் நம் சந்திப்பு மீண்டும் நிகழக் கூடும் எனத் தெரிந்திருந்தாலும், அது இன்றாக இருக்ககூடும் என எதிர்பார்த்திருக்கவில்லை. முன்னிரவில் என் திண்ணைப் பூக்கள் பூத்திருந்ததன் காரணம் கண்டுகொண்டேன்.
பக்கத்தில் நீ இருந்தாய்.
வருடங்கள் கடந்தும் அத்தனை இருட்டிலும் உன் புன்னகையை அடையாடம் கண்டுகொள்ளத் தவறவில்லை நான். வசந்தகாலத்தின் குறிப்புகள் உன் ஆடையெங்கும். பூத்திருந்தனவா நீ வரக்கூடுமென வழிகளெங்கும் விதைத்து வைத்திருந்த, எழுதப்படாத என் கவிதைகள்?
என்ன தேடுகிறாய் என் கண்களின் ரேகைகளில்? நம் முதல் சந்திப்பின் மிச்சங்களையா? சில தழும்புகளால் காயங்களைப் போர்த்த மட்டுமே முடிகின்றது. நிரந்தரமாய் என் கண்களில் கண்ணீரையும் கன்னங்களில் முத்தங்களையும் உறையச் செய்த உன் இதழ்கள் மெல்ல அசைகின்றன, சுவற்றில் ஆடும், மெழுகுவர்த்தியயின் தலைகோதும் நெருப்பின் நிழலாய்.
“ஏன் இப்பொழுதெல்லாம் கடிதங்கள் எழுதுவதில்லை” என்றாய். “சாலைகள் தொலைந்து போன வழிப்போக்கன் இளைப்பாறவே விரும்புவான்” என்றேன்.
“உன் கால்கள் சுற்றியும் காதலின் சாலைகள். தொலைந்தது பாதைகளா இல்லை நீயா?” என்றாய். “எந்தப் பாதை உன்னைச் சேரும்” என்றேன்.
“அதை முடிவு செய்ய வேண்டியது நீதான்” எனச் சொல்லிப் புன்னகைத்தாய்.
மிச்சமிருக்கின்ற வினாடிகளை வார்த்தைகளால் தின்று தீர்க்காமல் முகம் பார்த்துக் கிடந்தேன்.
ஜன்னல் கொத்தும் பறவையின் சத்தத்திலோ, அதன் திரைச்சீலையை காற்று மோதும் இடைவெளியில் முகத்தில் மோதக் காத்திருக்கும் வெளிச்சத் தொடுகையாலோ, அதிர்ந்து மௌனம் பேசும் அலைபேசியின் அலாரத்திலோ நீ கரைந்து போகக்கூடும் என்ற பயத்திலேயே வினாடிகள் கடக்கின்றன.
இனி இந்தப் பகலை நான், நினைவில் எஞ்சிய கனவின் தடயங்களை வருடியபடிக் கழிக்க வேண்டும்.
***
நல்வரவு ..
LikeLike
அற்புதம் , ஏன் எழுதுவதை நிறுத்திவிட்டீர்கள்? மனம் கனத்து பிரிவுத்துயரில் இருக்கும் மனிதனுக்கு பெரும் ஆறுதலாக இருக்கின்றன உங்களது கவிதைகள்.
இந்த வலைப்பூவில் உள்ள அனைத்தையும் ஒரு தொகுப்பு நூலாக அச்சேற்றுங்கள். முதல் பிரதி எனக்கு
நன்றி.. எழுதுங்கள் நண்பரே
LikeLike
நீண்ட நாட்களுக்குப் பிறகான பின்னூட்டம். எழுதிக் கொண்டிருப்பதை சீக்கிரம் பதிவிடுகிறேன். நன்றி நண்பரே !
புத்தகங்கள் மின்பதிப்புகளாக கிண்டிலில் கிடைக்கின்றன.
LikeLike
நன்றி, வாங்குகிறேன் நண்பரே
LikeLike