நினைவில் இருக்கும்
அந்த ஒரே ஒரு முத்தத்தினை
இன்னமும் வருடிக்கொண்டிருக்கிறது மனது
புன்னகை தருகிறது
என் கன்னத்தில் உன் தடுகள்
முளைத்த அந்த இரவு
லேசான நெருப்பு விட்டு விட்டுத் துடித்து
நீ ஊதி உதடுகள் எடுத்ததும்
தேகம் மொத்தமும் பரவியது
நேற்று போலிருக்கிறது
கழுத்திலிருந்து எகிறி குதித்து
உன் உதடுகளோடே
ஒட்டிக் கொண்டோடிவிட
எவ்வளவு முயன்றதென் தலை தெரியுமா
உன் கண்கள் சந்திக்க முடிந்திருந்த
அந்த சிறு வினாடிகளில் இருந்தே
இறகு தொட்டெழுதிக் கொண்டிருக்கிறேன்
இன்னமும்
அந்த இரவினை மீண்டும் எதிர்பார்த்தே
இறங்க எத்தனிக்கிறேன் என் எல்லா
நாளைகளுக்குள்ளும்
உன் ஸ்பரிசத்தின் குளிர்ச்சி
இன்னமும் உறையவைத்திருக்கிறது
எனக்குள் என்னை
அடுத்தமுறை உன்னைச் சந்திக்கையில்
அதேபோல் இல்லாவிட்டாலும்
அதில் துளியாவது தொட்டுக் கொண்டு
உன் கன்னங்கள் நனைப்பேன்
புன்னகைப்பதை நிறுத்திவிட்டு
இப்பொழுது போய் உறங்கு
காத்திருக்கின்றன முத்தங்கள் சுமந்து கொண்டு
ஆயிரம் கனவுகள்.
***