Tags

, , , ,

 

உனது பாடல்

இன்றும் நன்றாக இருந்தது

உனக்கும் என்னைத் தெரிந்திருக்கலாம்

இரண்டாவது பின்வரிசை

வலதுபுறக் கடைசியில்

உனது பாடலுக்கு

வயலின் வாசிப்பவன் நான்

ஒரேயொரு முறை

என்னைப் பார்த்துப் புன்னகைத்திருக்கிறாய்

எனது சிகப்பு நிற மேப்பிள் வயலின்

அழகாய் இருப்பதாகச் சொன்னாய்

கற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்தாய்

வசந்தத்தின் உச்சத்தில் மாலை

தெருக்கள் மொத்தமும் வானவில் இலைகள்

வயலினுக்காய் வீணாக வேண்டாம்

கைகள் கோர்த்து நடக்கலாம் வா

எனச் சொல்லியிருந்திருக்கலாம்

கடற்கரை ஒட்டிய

மாலுமிகள் உணவகத்தில்

ஒயின் பருகியிருந்திருக்கலாம்

அங்கிருக்கும் நடனமேடையில்

கால்கள் வலிக்க

ஆடித்தீர்த்திருந்திருக்கலாம்

படகுத்துறை பாலத்தில்

மஞ்சள் விளக்கொன்றின் கீழ்

உனக்காக எழுதிய பாடல்களை

படித்துக் காட்டியிருந்திருக்கலாம்

அதை நீ பாடக் கேட்டிருந்திருக்கலாம்

ஒருவேளை நாம் காதலித்துமிருந்திருக்கலாம்

மாறாக நான் ஒரு கனவானைப் போல்

நடந்து கொண்டேன்

கண்டிப்பாக பிறிதொருமுறை

வயலின் சொல்லித் தருகிறேன் என்றேன்

புன்னகைத்தேன்

பின் ஒருபோதும் நாம்

பேசிக்கொள்ளவயில்லை

நீ உன் பாடலும்

நான் என் வயலினுமாய்

இசை மட்டுமே நமக்கான

பேசு மொழியாயிருந்தது

ஆரஞ்சு நிற ஆஸ்பென் இலைகள்

உதிர்ந்து கொண்டேதானிருந்தன

யார் யாரோ கைகோர்த்து நடந்தனர்

யார் யாரோ ஒயின் பருகினர்

யார் யாரோ நடனமாடினர்

யார் யாரோ மஞ்சள் விளக்கின் கீழ் காதலித்தனர்

வயலினை உடைத்திருந்தேன் நான்

இதே போல நேற்றைய இரவினில்

அடுத்த கோடை விடுமுறையில்

மீண்டும் சந்திக்கலாம் எனச் சொல்லி

வராமலேயே போன

எதிர்வீட்டின் உறவுக்காரப் பெண்ணாய் இருந்தாய்

அதற்கும் முந்தைய இரவுகளில்

பல் மருத்துவனைத் திருமணம் செய்துகொண்டு

நகரத்திற்குச் சென்றுவிட்டிருந்த பால்ய சகியாகவும்

திரையரங்கமொன்றில்

பக்கத்து இருக்கையில் அமர்ந்தவளாகவும்

இரவல் புத்தகம் வாங்க வந்தவளாகவும்

வளர்ப்பு பிராணிகள் விற்பனை பிரதிநிதியாகவும்

இரத்தக்காட்டேரி ஒன்றின் மணப்பெண்ணாகவும்

இன்னபிறவாகவும் இருந்தாய்

எல்லா இரவுகளிலும்

ஒருபோதும் என் விருப்பத்தைச் சொல்லியிராத

கனவானாகவே இருந்தேன்

கார்காலம் ஒரு பேயைப் போல

நகரை விழுங்கிக் கொண்டிருக்கிறது

துறைமுகத்தில் கப்பலொன்று கிளம்பும்

ஆயத்த ஒலி கேட்கிறது

புறாக்கள் சுவர் பொந்துகளில்

பதுங்கத் துவங்கியிருக்கின்றன

சீக்கிரமே வந்துவிட்டிருக்கிறது இன்றைய இரவு

இந்த நகரத்தில்

ஒரேயொரு ஜன்னல் மட்டும் கொண்ட அறையில்

நான்

ஒரு காலி மதுக்கோப்பை

இன்னொரு தழும்பும் கறுப்பு மசிக்கோப்பை

கண்ணாடி மீன் தொட்டி

உன்னுடன் இருந்த பொழுது

என்னுடன் இல்லாமல் போன வார்த்தைகள்

ஏன் இப்பொழுது மட்டும்

அறை மொத்தமும்

ஏன் இந்த இரவு

தவறவிட்ட தருணங்களையும்

அது குறித்தான கற்பனைகளையும்

என்றோ நீ தந்த ஒற்றைப் புன்னகையையும் மட்டுமே

பற்றிக்கொண்டு நீளக் காத்திருக்கிறது

***