Tags

, , , ,

 

கோடி யுகங்களுக்கு முன்

ஒரு பேருந்து நிலையத்தில்

உன்னைச் சந்தித்திருந்த பதினைந்தாம் நிமிடத்தில்

அனுப்பியிருந்தாய் முதல் குறுஞ்செய்தியை

பார்த்ததில் மகிழ்ச்சி என்றாய்

சிறிய உலகம் என்றாய்

நான்கு தெருக்கள் தள்ளி இருந்தும்

இத்தனை நாட்களாய் சந்திக்கவேயில்லையே

என ஆச்சர்யம் கொண்டாய்

எந்தத் தெரு என நீயும் சொல்லவில்லை

நானும் கேட்கவில்லை

அலைபேசி எண் வாங்கினாய்

தந்தாய்

அடிக்கடி பேசுவோம் என்றாய்

நீயும் அழைக்கவில்லை

நானும் நினைக்கவில்லை

நீ பேருந்தில் ஏறிச்சென்ற பின்பும்

அங்கேயே நின்று கொண்டிருந்தேன்

நீ கூறிய சிறிய உலகத்தில் 

அதே பேருந்து நிலையத்தில்

எத்தனை நாட்கள் காத்திருந்திருப்பேன் என

உனக்குத் தெரிய வாய்ப்பில்லை தானே

இன்னுமொரு யுகம் தாண்டி

அதேபோல் தற்செயலாய்

இம்முறை நாம் சந்தித்துக் கொண்டது

கலங்கரைவிளக்க வணிக வளாகத்தின்

இசைக்கோப்புகளும் பொம்மைகளும்

வாழ்த்து அட்டைகளும் வாசனைகளும்

நிறைந்திருக்கும் கடையொன்றின் புத்தகப் பிரிவில்

மறுபடியும் சிறிய உலகமென்றாய்

இந்தப் புத்தகக்கடை

ஊரிலேயே ப்ரியமான இடமென்றாய்

வெகு நாட்களாய் நீ தேடிக் கொண்டிருந்த புத்தகம்

என் கையில் இருக்க

ஆச்சர்யம் கொண்டாய்

நீ கூறிய சிறிய உலகத்தில்

இந்த ஊரிலேயே

உன் ப்ரியத்துக்குகந்த புத்தகக் கடையில்

இதே புத்தகத்தை

எத்தனை முறை கைகளில் வைத்துக் கொண்டு

நின்றிருந்திருப்பேன் என

உனக்குத் தெரிய வாய்ப்பில்லை தானே

என்னிடமிருந்து அந்தப் புத்தகத்தை

இரவல் வாங்கிக் கொண்டாய்

நான்காவது மாடியின் உணவகம் ஒன்றில்

சுமாரான தேநீர் அருந்தினோம்

பர்கர் கடையின் முன்பு

கான்க்ரீட் கோமாளி அமர்ந்திருந்த இருக்கையில்

அருகருகே அமர்ந்து கொண்டோம்

அவனுடன் புகைப்படம் எடுத்துத்தரச் சொன்னாய்

வார்த்தைகள் தீர்ந்துபோயின

நகரும் ஏணிப்படிகள் வேகமாக இறங்கின

மின்சார ரயில் நிலையத்திற்கு தூரம்

குறைவாக இருந்தது

சரியான நேரத்திற்கு ரயிலும் வந்தது

அடுத்தமுறை சந்திக்கையில்

புத்தகத்தைத் திரும்பத் தருவதாய்

குறுஞ்செய்தி அனுப்பினாய்

நீயும் தரவில்லை

நானும் கேட்கவில்லை

அந்த சுமாரான சுவை கொண்ட தேநீர்

இன்னுமொருமுறை கிடைக்கவேயில்லை

நான் அருகே அமர்கையில்

கோமாளி ஒருபோதும் சிரிக்கவேயில்லை

மின்சார ரயில் கம்பி பற்றி

கையசைத்துச் செல்லும் எல்லாரிடமும்

உனது சாயல் தேடித் தோற்றிருந்த ஒரு நாளில்

காலம் என்னை

உனது சிறிய உலகத்தில் இருந்து

நாடு கடத்த முடிவு செய்திருந்தது

எத்தனை யுகங்கள் தாண்டியும்

இனி நிகழாது நம் சந்திப்பு

கடல்தாண்டிக் காத்திருக்க

ஒருவேளை நீ வரக்கூடும்

என்றொரு இடமுமில்லை

இல்லாத ஒன்றை எப்படி

இழக்கக்கூடும்

உனக்கென முதலும் முடிவுமான 

குறுஞ்செய்தி அனுப்பி

கிளம்பும் விமானத்தைப் பழி சொல்லி

அணைத்து வைத்தேன் அலைபேசியை

இரவும் பகலும்

நிலமும் கடலும்

கடந்த

நீண்ட பயணம் அது

தரை இறங்கியதும்

உயிர் வந்த அலைபேசி

உன் மூன்றாவது குறுஞ்செய்தியை

படிக்கிறாயா என்றது

பதிலை எதிர்பாரா கேளிவியின் பதிலை

எதிர்கொள்ளத் திராணியின்றி

மீண்டும் அணைத்தேன்

பனியும் கனவும்

கண்ணீரும் புன்னகையும்

கடந்த

மூன்று தினங்களுக்குப் பின்

குறுஞ்செய்தியைத் திறந்தேன்

கடித உறை மட்டுமே இருக்க

உனது செய்தி

வரும் வழியில் எங்கோ

அலைக்கற்றைகளில் கரைந்திருந்தது

என்ன அனுப்பியிருந்தாய்

அந்தக் குறுஞ்செய்தியில் ?

மீண்டும் நீ சொல்லப்போவதுமில்லை

நான் கேட்கப் போவதுமில்லை

கடிதங்களில் காதலித்தவர்கள்

பாக்யவான்கள்

***