Tags

, , ,

இன்னும் ஐந்து நிமிடங்கள்

இருக்கின்றன

எரியும் நட்சத்திரமொன்று

என் ஜன்னல் வானத்தில்

உன் பெயர் வெடித்துச் சிதற

அதற்குள் துவங்கிவிடுகின்றேன்

எனது பிரார்த்தனைகளை

நாளையேனும்

மின் தூக்கியின்

கதவு திறக்கக் காத்திருக்கையிலோ

சாலைப் போக்குவரத்தின்

சிகப்பிற்கும் பச்சைக்கும் இடையிலோ

பல்பொருள் அங்காடிக் கடையொன்றில்

கடனட்டை தேய்க்குமிடத்திலோ

இசைக்கருவிகளை

வெயிலில் போட்டு விற்கும்

சாலையோர வியாபாரியைக்

கடக்கையிலோ

தொட்டிகளில் பூக்கள் அடைத்துத் தரும்

விற்பனைத் தோட்டத்திலோ

நீ எதிர்ப்படுகையில்

உனது கண்களைச் சந்தித்துக்

கால்கள் தரையில்

நிற்க வேண்டும்

மௌனத்தினை

மறக்க வேண்டும்

புன்னகை மட்டும்

போதாது

தேநீர் பிடிக்குமா

எனக் கேட்க வேண்டும்

அதைத் தெருமுனைக் கடையில்

என்னுடன் அருந்தப் பிடிக்குமா எனவும்

நான் எழுதிக் கொண்டிருக்கும்

நாவலின் நாயகி

உன்னப்போலவே சிரிக்கிறாள்

எனச் சொல்ல வேண்டும்

குறைந்த பட்சம்

என் பெயரையாவது

****

இன்னமும் நான்கு நிமிடங்கள்

இருக்கின்றன

இந்த நாளுக்கான கடைசிப் பூ

பூக்க

அதற்குள் அறிந்து கொள்கிறேன்

உன்னை

நேற்றைய கனவில் நீ அணிந்திருந்த

ஆடையின் நிறம் தான்

உனது விருப்பத்துக்குகந்ததா

தேவதைக் கதைகளின் சாபத்தில்

உன் சாயல் கண்டதுண்டா

மழை பிடிக்குமா

சமீபத்தில் படித்த புத்தகத்தின்

ஏதேனும் ஒரு பக்கத்தில்

புன்னகை மடித்து வைத்திருக்கிறாயா

எனது கவிதைகள்

எதுவாயினும் என்றாயினும்

உன்னைச் சேர்ந்ததுண்டா

நாட்குறிப்பு எழுதுவாயா

பெயரிலியாகவேணும் அதில்

நானுண்டா

பண்பலையில் இந்த நொடியில்

ஒலிப்பரப்பாகும்

நானுனக்கு அர்பணித்த பாடலை

நீயும் கேட்டுக்கொண்டிருக்கிறாயா

எனக்கான முதல் முத்ததை

எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய்

யாரையேனும் காதலித்திருக்கிறாயா

உனக்கும் கண்ணீர்

வருமா

யோசித்துப் பார்க்கையில்

நான் காதல் கொண்டது

உன்னைப் பற்றி நானே

உருவக்கிக் கொண்ட பிம்பங்ளிலும்

அதன்  பிரதிபலிப்புகளிலுமே

நீ அதன் உருவகம்

அவ்வளவே

இவைகள் எதுவுமே நீ இல்லாமலும்

போகக்கூடும்

எனில்

நான் காதல் கொண்டது

எந்த நீ

****

இன்னும் மூன்று நிமிடங்கள்

இருக்கின்றன

சாம்பற் பூனைகள் கூட்டம்

ராட்சச

பச்சை நிறக் குப்பைத் தொட்டிகளில்

வீணடிக்கப்பட்ட உணவுகள் வழியும்

நெகிழிப் பேழைகளைக்

கிழித்துத் தேடத் தொடங்க

அதற்குள் அறிமுகப்படுத்திக் கொள்கிறேன்

என்னை

கூடவே

எனை நீ எங்கே சந்தித்திருக்கக்கூடும்

என்பதையும்

நகல் எடுக்கும் கடையொன்றில்

காகிதக் குவியல்கள் பற்றியபடியோ

பரிசுக் கடையில்

பிறந்தநாள் வாழ்த்து அட்டைகள்

புரட்டியபடியோ

நீ தொலைபேசிக் கொண்டிருக்கும்

குறுங்கண்ணாடிப் பேழைக்கு

நேர் எதிரே இருக்கும்

மிதிவண்டி பழுதுபார்க்கும் கடையிலோ

செர்ரி நிறப் பூக்கள் பூத்திருக்கும்

மேலாடை போர்த்தியபடி

எப்பொழுதும் பனிக்கட்டிகள் அதிகம்

கலந்து தருபவளின்

பழச்சாறு நிலையத்திலோ

வங்கியின் நீண்ட வரிசை

ஒன்றிலோ

அஞ்சலக சிகப்பு நிறப் பெட்டிக்குள்

உனது முகவரி கொண்ட கடிதத்தைச்

சேர்க்கத் தயங்கி

நின்று கொண்டிருக்கும் பொழுதோ

ஊரின் ஒரே நூலகத்தின்

தரைத்தளத்தில்

இடதுபுறத்தில் இருந்து

உனது பிரியமான சிறுகதை எழுத்தாளரின்

தொகுப்புகள் நிறைந்திருக்கும்

மூன்றாவது வரிசையின்

பின்மூலையில்

கொஞ்சமாய் வெளிச்சம் பரப்பியிருக்கும்

சாளரத்தை ஒட்டிய

புத்தக மேஜையிலோ

உனது மாலை வகுப்பொன்றின்

பின்னிருக்கையிலோ

ஒருவேளை நமது சந்திப்பு

நிகழாமலேயே கூட இருந்திருக்கலாம்

உனது பார்வைக் குவியத்தில்

நான் படாமலே போயிருந்திருக்கலாம்

நீ இருந்த இடங்களுக்கு

நிச்சயம்

என்னைத் தெரிந்திருக்கும்

நாமிருவரும்

அதே கணத்தில் அதே நிலத்தில்

இல்லாமலிருந்திருக்கலாம்

நீ இருந்த இடங்களில்

நானும் இருந்திருக்கிறேன்

******

இன்னும் இரண்டு நிமிடங்கள்

இருக்கின்றன

இன்றைய இரவிற்கான

பனி படற

அதற்குள் கேட்டு விடுகின்றேன்

உன்னிடம்

என் பாவ மன்னிப்பினை

உன் அந்தரங்கம் உதிர்த்த

சருகுப் பூக்களை

எனது கனவுப் புத்தகத்திற்குள்

நீ அறியாவண்ணம்

பத்திரப்படுத்தி வைத்திருப்பதற்காக 

உனது வசந்தத்தின் நிறங்களில்

கொஞ்சத்தை

எனது கவிதைகளுக்கெனத் 

திருடிக் கொண்டதற்காக

நமது படுக்கையறைகளைப்

பகிர்ந்துள்ளது

ஒரே சுவர்தான் என்பதை

நான் மட்டுமே

அறிந்து வைத்திருப்பதற்காக

சமயங்களில்

உன் கருணையின் தானியங்கள்

பொருக்க வரும் சிட்டுகுருவிகள்

ஜன்னல் மாற்றி நுழைந்து

என் அறையின் நிச்சலனம் கண்டு

அலறி ஓடியதற்காக

உதிர்க்க முடியாத

ஒரு வழுவிழந்த சிறகைப் போல

உன் நினைவின் ஓரத்தில்

இன்னமும்

ஒட்டிக் கொண்டிருப்பதற்காக

***

இன்னும் ஒரு நிமிடம் தான்

இருக்கிறது

உன் பாடல் ஒலிபரப்பப் பட

அதற்குள் இன்னுமொருமுறை

நிரப்பிக் கொள்கிறேன்

என் கோப்பையினை

நான் விரும்புவதாலும்

நீ விரும்பாவிட்டாலும்

ஒரே கூரையின் கீழ்தான்

நாமிருவரும்

இரவுக்கு ஒளிய வேண்டியிருக்கிறது

எழுதப்படாத நம் மௌன ஒப்பந்தப்படி

நமக்கிடையே வளர்ந்திருக்கும் சுவரில்

கரம் வைக்கிறேன்

நீ அனுமதித்தால்

அதன் வேர்கள்

உன் படுக்கை அறை வரை

நீளட்டும்

ப்ரியம் இருந்தால்

பற்றிக் கொள்

சொல்லப்படாத அன்பினைப் போலவே

துடைக்கப்படாத கண்ணீருக்கும் தான்

என்ன பயன்.

***