Tags

, , ,

Anthurium & Grasses Exotic Flowers Pattern Sashiko & Applique Design

ஊதா நிற

துலிப் மலராடையில்

நீ கதவைத் தட்டிய நொடியில்

துவங்குகிறது

இந்த வருட பனிக்காலத்தின்

முதல் நாள்

உள்ளே வரலாமா

என்கிறாய்

உனதாடையில் ஒட்டிக்கொண்டிருக்கும்

நட்சத்திரத் துணுக்குகளின்

மின்னல்களாலும்

உன் கூடுதல் புன்னகையினாலும்

கார் முகப்பொளிக்கு

திடுக்கிட்டு உறைந்து பார்க்கும்

நெடுஞ்சாலை மான் போல் நிற்கிறேன்

வருகிறாய்

தேனீரெல்லாம் கிடையாதா

என்கிறாய்

அடுப்பில் தேனீர் கெண்டி மூடி

நடுங்கிச் சத்தமிடுகிறது

ராணியை எடுத்து

என் சிப்பாய் ஒருவனைக்

கருணையின்றிக் கொலை செய்து

எதிரே இருக்கும்

காலி நாற்காலியில் அமர்கிறாய்

இந்த நாள் இங்குதான்

உன்னுடன் தான்

என்கிறாய்

மது ஊறிய மிட்டாய் ஒன்றை

பாதி கடித்து

மீதம் புகட்டுகிறாய்

இன்னமும் பிடிக்கும் தானே

பின்பே கேட்கிறாய்

இப்படியாக

சட்டென்று பற்றிக் கொள்கிறது

என் சோம்பேறி ஞாயிறு

பரிசாகக் கொண்டு வந்த

புத்தகத்தின்

பக்கங்கள் புரட்டி

உனக்கும் பிடித்த வரிகளை

விரல்களாய் அடிக்கோடிடுகிறாய்

கூடுதல் அடையாளமாய்

உன் நகப்பூச்சினை

கொஞ்சம் உதிர்க்கிறாய்

வாடைக் கூந்தல் வாசத்துடன்

அரை நொடிக்கொருமுறை

புன்னகை செய்கிறாய்

உன் வியர்வை கூடிய

வாசனை திரவியத்தின் பெயரை

முடிந்தால் கண்டுபிடியென

பகடி செய்கிறாய்

படாமலேயே நெருங்கி வந்து

உன் ஸ்பரிசங்கள் கடத்துகிறாய்

தவறி உள்ளே வந்துவிட்ட

பட்டாம்பூச்சியாய்

வீடு மொத்தமும் சுற்றி வருகிறாய்

போகிற போக்கில்

சுவற்றில் உன் பெயர்

எழுதிச் செல்கிறாய்

கலைந்த என் பொம்மைகளை

பிரியம் போல் அடுக்கி

வேறொரு கதை சொல்கிறாய்

நம் பழைய புகைப்படங்களைத்

தரையில் பரப்பி

நம்மைத் தேடுகிறாய்

பின்

இந்த புகைப்படங்கள்

வேறு யாரோ இருவரின்

வாழ்கை போல் இருக்கிறது

எனக்குக் கேட்கா வண்ணம்

முனுமுனுக்கிறாய்

சிரித்துக் கொண்டே

எங்கோ

இதேபோலொரு பிரபஞ்சத்தில்

வாழக்கூடும் என்கிறாய்

படுக்கை அறையின்

ஒரே புகைப்படச் சட்டத்தில்

உன் உதட்டுச்சாயம்

பதியமிடப்பட்ட

கைக்குட்டையென்றைக் கண்டு

பெருமூச்செறிகிறாய்

மீண்டும் பூக்குமாயின்

தொலைத்துவிடாதிருக்கச் சொல்கிறாய்

இத்தனை காலத்திற்கும்

இனிவரும் நாட்களுக்கும்

சேர்த்து

நீ இசைக்கும் சொற்களை

அறைச்சுவர்கள்

கவனமாய் சேகரிக்கின்றன

வார்த்தைகள் தீர்ந்து போய்

கண்கள் மூடி அமர்கிறாய்

இப்படியே

இங்கேயே

இருந்துவிட ஆசையென்கிறாய்

ஜன்னல் திரைசீலையின்

வரிகள் வழி நுழையும் 

நிலா நிழல்

உன் மேல் படர்ந்து

மீன் துண்டுகளைப் போல்

நறுக்குகிறது

இந்த நாள்

முடிவிற்கு வந்துவிட்டது

படபடப்படைகிறாய்

காலையில் நின்ற

அதே கதவருகில்

கிளம்பட்டுமா என்கிறாய்

அதே நெடுஞ்சாலையில்

அதேபோலவே நிற்கிறேன்

என் கண்களை ஆரத்தழுவி

வெகுநேரமாய் பார்த்துக்கொண்டிருக்கும்

உன் உதடுகள் துடிக்கின்றன

வீடெதிரே இருக்கும்

மேப்பிள் மரமொத்தமும்

செஞ்சாந்து இலைகள் பூக்கத் துவங்கும்

வசந்தத்தின் முதல் நாளில்

மீண்டும் சந்திப்போம்

அம்மரத்தின் கடைசி இலை

காற்றில் சுழன்று

கரைந்தது போலே

காணாமல் போகிறாய்

பனிப்பூனையொன்று

கதவு பூட்டும் முன்

காலோடு உரசி

உள்ளே நுழைகிறது

சதுரங்கப் பலகை மேல்

இன்னொரு கைக்குட்டை

இந்தமுறையும்

விட்டுச் சென்றிருக்கிறாய்

உன் உதடுகளை

வாழ்ந்திருப்பதற்கு

சிறிது வெளிச்சம் மட்டுமே

போதுமான

அந்தூரியச் செடிக்கு

இன்றைய நாளின்

நினைவுகளை

உண்ணத் தருகிறேன்

நீ சொல்லியிருக்க வேண்டும்

என்கிறது

நீ தந்திராத முத்தங்களை

மென்று கொண்டு

சொல்லியிருக்க வேண்டும்

கேட்டிருக்க வேண்டும்

கொடுத்திருக்க வேண்டும்

பூத்தொட்டியை ஒட்டிய

சாய்வு நாற்காலியில் சரிந்தபடி 

என் கால்களைக்

கழற்றி எறிகிறேன்

அருகிலெரியத் துவங்கியிருக்கும்

கனப்படுப்பில்.

****