Tags

, , ,

Bendición del Oficial del Cielo

இத்தனைக்கும் பிறகு 

எவ்வளவு பிடிக்கும் என்று 

நானும் சொல்லவில்லை

அவளும் கேட்கவில்லை

இன்னமும் எழுதுகிறாயா 

எனக் கேட்டாள்

இன்னமும் நீ படிப்பதில்லை 

என்று மீண்டும் 

உறுதி செய்து கொண்டேன்

என்னிடம் எற்கனவே இருக்கும் 

அவளது எண்ணை 

அவள் சொல்லி 

மீண்டும் பதிந்து கொண்டேன்

பாதுகாக்கப்பட்ட அவளது 

முகப்புத்தகக் பிரதேசத்தில்

அனுமதித்துக் கொண்டாள்

கொஞ்ச நாள்

காலை வணக்கம் இனிய இரவு

அனுப்பலாம்

படித்ததில் பிடித்ததைப் 

பகிரமட்டுமே 

அவளது மின் சாளரப்பக்கம் வந்ததாக

பாசாங்கு செய்யலாம்

பதிலுக்கு மரியாதை நிமித்த 

மெய்நிகர் மஞ்சற் புன்னகைகள் 

கிடைக்கப் பெறலாம்

இனி ரகசியமாகப்  

பின் தொடரத் தேவையில்லை

அதைத் தவிர

வேறொன்றும் மாறவில்லை.

***