அன்புள்ள என ஆரம்பித்திரா
உன் பதில் கடிதம்
கிடைத்தது
குறைந்த பட்சம்
என் பெயரையாவது
குறிப்பிட்டிருந்திருக்கலாம்
பதில் கடிதம் என்பதால்
தேவையில்லை
என நினைத்திருந்திருக்கலாம்
இருந்தும்
அன்புள்ள மட்டுமாவது
இருந்திருக்கலாம்
ஒரு பெயருக்காவது
முடிவில்
நாளும் நேரமுமிட்ட
உன் கையொப்பமில்லாவிடினும்
நிறுத்தற் குறிகளும்
ஒற்றுகளும்
வார்த்தை தேர்வுகளும்
நிச்சயமாய் நீ தான்
நீல நிற
எழுத்துருக்களையே
பயன்படுத்தி இருக்கிறாய்
உன் வாசனைதான்
வழியில் தவறிவிட்டிருக்கிறது
உனது கடைசிக் கடிதத்தைப்
பற்றிக் கொண்டு
மீப்பெரும் முடிவிலியில்
கதவுகள் தேடித் திரியப்போகிறவனுக்கு
உன்னால் அனுப்ப முடிந்தது
வெறும் ஆறு வரிகள் தானா ?
உன் கருணையின்
உடைந்த ஒரு துண்டோ
என் ரகசியக் கனவொன்று
என்றேனும் பலிக்ககூடுமென்ற
பொய் வரமோ
புதிதாக நீ மாற்றியிருக்கும்
தொலைபேசி எண்ணோ
எனக்கு பதில் எழுத
பாதியில் நீ மூடிவைத்திருக்கும்
புத்தகத்தின்
அடிக்கோடிடப்பட்ட வரிகளோ
நீ
நிச்சயாமாய் கிடைக்குமென்ற
எனக்கான காதல்
ஒளிந்திருக்கும் திசை குறித்த
ரகசிய வரைபடமொன்றோ
என் அந்திக்காலத்திற்காய்
உன் அன்பின் குறுவாள்
ஒன்றோ
நம் நிழற்படங்களின் சாம்பற்மேட்டில்
எரியாமற் தப்பித்த
மிச்சங்களில் ப்ரியமானதை
ஊதி உயிர்பித்தோ
ஆறுதல் இணைப்பாக
அனுப்பியிருக்கலாம் தானே !
அருமை அருமை அத்திப் பூ போல எப்பவாவது எழுதினாலும் அற்புதமாக வருகிறது. எப்பொழுது மனம் கனத்தாலும் உங்களின் முகவரி தொலைத்த கடிதங்களை ஓடி வந்து வாசிக்கிறேன், நன்றி
LikeLike