ஆயிரம் முத்தங்கள் அள்ளிச் சூடியவள்

Tags

, , ,

How to Create Personal Affirmations

என்

தசாப்தக் காத்திருப்பினை 

ஓரு புன்னகையால்

கடந்து சென்றவள் நீ 

வழி தவறிய கானகத்தில் 

கடைசி தீக்குச்சியின் 

நடுங்கும் சுடர் நீ

யாக்கையின் விரிசல்களினூடே

கசிந்துருக்கும் பனிக்காலத்தின் 

பசி நீ

நெடுந்தூரப் பயணத்தின்

சட்டென்று கடந்து போகும் 

மீட்கொணரமுடியா

நினைவிலின்றும் அகலா

நட்சத்திரப் பூ மரம் நீ

என் இன்னுமொரு 

அசைவறு மாலையின்

வெயில் எரித்துப் படரும்

காமத்தின் நா நீ

எறும்புகளுக்கும் கொஞ்சமாய் 

மீதமிட்டுச் செல்லும்

சிட்டுக் குருவியொன்றின் 

கருணை நீ

வலியின் நினைவுகளை

வருடப் புதைத்திருக்கும்

அரூபத் தழும்பு நீ

பிரபஞ்சத்தின் ஆசைகளெல்லாம் 

விழுங்கிச் செரித்திருக்கும்

செயற்கை நீரூற்று ஒன்றில்

அசைந்து அமிழும்

தாமிர நாணயம் நீ 

நாட்குறிப்பேட்டில் 

தேதியிட்டுப் பதுக்கி வைக்க

கனவுத் தூண்டிலில்

சிக்கி முறிந்த மின்னல் நீ

துருவேறிப்போன 

ரயில் ஜன்னல் கம்பியின்

மழை வாசம் நீ

ஒரு குறுவாள் தீண்டலில்

உறையச் செய்திடும்

மெடூசாவின் கண்கள் நீ 

அவற்றின் 

ஆயிரம் முத்தங்கள் நீ

****

அரூபனின் பிரார்த்தனைகள்

Tags

, , ,

இன்னும் ஐந்து நிமிடங்கள்

இருக்கின்றன

எரியும் நட்சத்திரமொன்று

என் ஜன்னல் வானத்தில்

உன் பெயர் வெடித்துச் சிதற

அதற்குள் துவங்கிவிடுகின்றேன்

எனது பிரார்த்தனைகளை

நாளையேனும்

மின் தூக்கியின்

கதவு திறக்கக் காத்திருக்கையிலோ

சாலைப் போக்குவரத்தின்

சிகப்பிற்கும் பச்சைக்கும் இடையிலோ

பல்பொருள் அங்காடிக் கடையொன்றில்

கடனட்டை தேய்க்குமிடத்திலோ

இசைக்கருவிகளை

வெயிலில் போட்டு விற்கும்

சாலையோர வியாபாரியைக்

கடக்கையிலோ

தொட்டிகளில் பூக்கள் அடைத்துத் தரும்

விற்பனைத் தோட்டத்திலோ

நீ எதிர்ப்படுகையில்

உனது கண்களைச் சந்தித்துக்

கால்கள் தரையில்

நிற்க வேண்டும்

மௌனத்தினை

மறக்க வேண்டும்

புன்னகை மட்டும்

போதாது

தேநீர் பிடிக்குமா

எனக் கேட்க வேண்டும்

அதைத் தெருமுனைக் கடையில்

என்னுடன் அருந்தப் பிடிக்குமா எனவும்

நான் எழுதிக் கொண்டிருக்கும்

நாவலின் நாயகி

உன்னப்போலவே சிரிக்கிறாள்

எனச் சொல்ல வேண்டும்

குறைந்த பட்சம்

என் பெயரையாவது

****

இன்னமும் நான்கு நிமிடங்கள்

இருக்கின்றன

இந்த நாளுக்கான கடைசிப் பூ

பூக்க

அதற்குள் அறிந்து கொள்கிறேன்

உன்னை

நேற்றைய கனவில் நீ அணிந்திருந்த

ஆடையின் நிறம் தான்

உனது விருப்பத்துக்குகந்ததா

தேவதைக் கதைகளின் சாபத்தில்

உன் சாயல் கண்டதுண்டா

மழை பிடிக்குமா

சமீபத்தில் படித்த புத்தகத்தின்

ஏதேனும் ஒரு பக்கத்தில்

புன்னகை மடித்து வைத்திருக்கிறாயா

எனது கவிதைகள்

எதுவாயினும் என்றாயினும்

உன்னைச் சேர்ந்ததுண்டா

நாட்குறிப்பு எழுதுவாயா

பெயரிலியாகவேணும் அதில்

நானுண்டா

பண்பலையில் இந்த நொடியில்

ஒலிப்பரப்பாகும்

நானுனக்கு அர்பணித்த பாடலை

நீயும் கேட்டுக்கொண்டிருக்கிறாயா

எனக்கான முதல் முத்ததை

எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய்

யாரையேனும் காதலித்திருக்கிறாயா

உனக்கும் கண்ணீர்

வருமா

யோசித்துப் பார்க்கையில்

நான் காதல் கொண்டது

உன்னைப் பற்றி நானே

உருவக்கிக் கொண்ட பிம்பங்ளிலும்

அதன்  பிரதிபலிப்புகளிலுமே

நீ அதன் உருவகம்

அவ்வளவே

இவைகள் எதுவுமே நீ இல்லாமலும்

போகக்கூடும்

எனில்

நான் காதல் கொண்டது

எந்த நீ

****

இன்னும் மூன்று நிமிடங்கள்

இருக்கின்றன

சாம்பற் பூனைகள் கூட்டம்

ராட்சச

பச்சை நிறக் குப்பைத் தொட்டிகளில்

வீணடிக்கப்பட்ட உணவுகள் வழியும்

நெகிழிப் பேழைகளைக்

கிழித்துத் தேடத் தொடங்க

அதற்குள் அறிமுகப்படுத்திக் கொள்கிறேன்

என்னை

கூடவே

எனை நீ எங்கே சந்தித்திருக்கக்கூடும்

என்பதையும்

நகல் எடுக்கும் கடையொன்றில்

காகிதக் குவியல்கள் பற்றியபடியோ

பரிசுக் கடையில்

பிறந்தநாள் வாழ்த்து அட்டைகள்

புரட்டியபடியோ

நீ தொலைபேசிக் கொண்டிருக்கும்

குறுங்கண்ணாடிப் பேழைக்கு

நேர் எதிரே இருக்கும்

மிதிவண்டி பழுதுபார்க்கும் கடையிலோ

செர்ரி நிறப் பூக்கள் பூத்திருக்கும்

மேலாடை போர்த்தியபடி

எப்பொழுதும் பனிக்கட்டிகள் அதிகம்

கலந்து தருபவளின்

பழச்சாறு நிலையத்திலோ

வங்கியின் நீண்ட வரிசை

ஒன்றிலோ

அஞ்சலக சிகப்பு நிறப் பெட்டிக்குள்

உனது முகவரி கொண்ட கடிதத்தைச்

சேர்க்கத் தயங்கி

நின்று கொண்டிருக்கும் பொழுதோ

ஊரின் ஒரே நூலகத்தின்

தரைத்தளத்தில்

இடதுபுறத்தில் இருந்து

உனது பிரியமான சிறுகதை எழுத்தாளரின்

தொகுப்புகள் நிறைந்திருக்கும்

மூன்றாவது வரிசையின்

பின்மூலையில்

கொஞ்சமாய் வெளிச்சம் பரப்பியிருக்கும்

சாளரத்தை ஒட்டிய

புத்தக மேஜையிலோ

உனது மாலை வகுப்பொன்றின்

பின்னிருக்கையிலோ

ஒருவேளை நமது சந்திப்பு

நிகழாமலேயே கூட இருந்திருக்கலாம்

உனது பார்வைக் குவியத்தில்

நான் படாமலே போயிருந்திருக்கலாம்

நீ இருந்த இடங்களுக்கு

நிச்சயம்

என்னைத் தெரிந்திருக்கும்

நாமிருவரும்

அதே கணத்தில் அதே நிலத்தில்

இல்லாமலிருந்திருக்கலாம்

நீ இருந்த இடங்களில்

நானும் இருந்திருக்கிறேன்

******

இன்னும் இரண்டு நிமிடங்கள்

இருக்கின்றன

இன்றைய இரவிற்கான

பனி படற

அதற்குள் கேட்டு விடுகின்றேன்

உன்னிடம்

என் பாவ மன்னிப்பினை

உன் அந்தரங்கம் உதிர்த்த

சருகுப் பூக்களை

எனது கனவுப் புத்தகத்திற்குள்

நீ அறியாவண்ணம்

பத்திரப்படுத்தி வைத்திருப்பதற்காக 

உனது வசந்தத்தின் நிறங்களில்

கொஞ்சத்தை

எனது கவிதைகளுக்கெனத் 

திருடிக் கொண்டதற்காக

நமது படுக்கையறைகளைப்

பகிர்ந்துள்ளது

ஒரே சுவர்தான் என்பதை

நான் மட்டுமே

அறிந்து வைத்திருப்பதற்காக

சமயங்களில்

உன் கருணையின் தானியங்கள்

பொருக்க வரும் சிட்டுகுருவிகள்

ஜன்னல் மாற்றி நுழைந்து

என் அறையின் நிச்சலனம் கண்டு

அலறி ஓடியதற்காக

உதிர்க்க முடியாத

ஒரு வழுவிழந்த சிறகைப் போல

உன் நினைவின் ஓரத்தில்

இன்னமும்

ஒட்டிக் கொண்டிருப்பதற்காக

***

இன்னும் ஒரு நிமிடம் தான்

இருக்கிறது

உன் பாடல் ஒலிபரப்பப் பட

அதற்குள் இன்னுமொருமுறை

நிரப்பிக் கொள்கிறேன்

என் கோப்பையினை

நான் விரும்புவதாலும்

நீ விரும்பாவிட்டாலும்

ஒரே கூரையின் கீழ்தான்

நாமிருவரும்

இரவுக்கு ஒளிய வேண்டியிருக்கிறது

எழுதப்படாத நம் மௌன ஒப்பந்தப்படி

நமக்கிடையே வளர்ந்திருக்கும் சுவரில்

கரம் வைக்கிறேன்

நீ அனுமதித்தால்

அதன் வேர்கள்

உன் படுக்கை அறை வரை

நீளட்டும்

ப்ரியம் இருந்தால்

பற்றிக் கொள்

சொல்லப்படாத அன்பினைப் போலவே

துடைக்கப்படாத கண்ணீருக்கும் தான்

என்ன பயன்.

***

யௌவனத்தில் நடுங்கும் இரவு

Tags

, , , , , ,

மூன்றாம் ஜாமம் முடிவதற்கு

சற்றுமுன்பு

என் இரவினில் இறங்குகிறாய்

சலனமில்லாத் தெப்பம் போல்

என்னைப் புதைத்திருக்கும் இருளுள்

உன்னிச்சை போல் நீந்தித் திரிகிறாய்

முடிவிலா யுத்தமொன்றின் போர்முரசாய்

ஓவென்றரற்றிக் கொண்டிருக்கும்

அறையின் ஏகாந்தத்தை

உன் ஒற்றைச் சிரிப்பில்

ஊதி அணைக்கிறாய்

கூரையிலிருந்து

பெரு மழையாய் பொழிகின்றன

பனியில் உறைந்த உனது செதில்கள்

ஆயிரம் தலைகளுடன்

சுவர் மொத்தமும் நெளிகின்றது

உனது நிழல்

ஆலகாலம் போல்

காற்றை நிறைக்கிறது

உனது சுவாசம்

உனது கிசுகிசுப்பு குரலில் பாடலொன்று

இந்த இரவிற்கென

என்னை ஆயத்தப்படுத்துகிறது

எனது முதல் துளிக் கண்ணீரை

நா நீட்டிச் சுவைக்கிறாய்


மரணத்தின் வேட்கை போல்

எவ்வளவு உறிஞ்சியும்

தீரவேயில்லை உன் தாகம்

உனது யௌவனத்தில்

நடுங்கும் என் இரவு

உன்னை ஆயாசமடையச் செய்கிறது

அருகே படர்கிறாய்

உனது ஆலிங்கனத்தில்

பல நூறு மஞ்சள் பட்டாம்பூச்சிகளின்

படபடப்பு

பற்றி எரிகிறது படுக்கை

உறைபனி விரல்களால்

மார்பினை வருடிக்

கண்களை மூடச் செய்கிறாய்

காலத்திற்கும் கரைந்திராத துயரத்தையும்

நூற்றாண்டுகளின் தனிமையினையும்

என் காதோரமாய் சபிக்கிறாய்

பின்

உனது பற்களை அழுத்தி

என் கனவினை உறிஞ்சத் துவங்குகிறாய்

***

சின்னஞ் சிறிய உலகம்

Tags

, , , ,

 

கோடி யுகங்களுக்கு முன்

ஒரு பேருந்து நிலையத்தில்

உன்னைச் சந்தித்திருந்த பதினைந்தாம் நிமிடத்தில்

அனுப்பியிருந்தாய் முதல் குறுஞ்செய்தியை

பார்த்ததில் மகிழ்ச்சி என்றாய்

சிறிய உலகம் என்றாய்

நான்கு தெருக்கள் தள்ளி இருந்தும்

இத்தனை நாட்களாய் சந்திக்கவேயில்லையே

என ஆச்சர்யம் கொண்டாய்

எந்தத் தெரு என நீயும் சொல்லவில்லை

நானும் கேட்கவில்லை

அலைபேசி எண் வாங்கினாய்

தந்தாய்

அடிக்கடி பேசுவோம் என்றாய்

நீயும் அழைக்கவில்லை

நானும் நினைக்கவில்லை

நீ பேருந்தில் ஏறிச்சென்ற பின்பும்

அங்கேயே நின்று கொண்டிருந்தேன்

நீ கூறிய சிறிய உலகத்தில் 

அதே பேருந்து நிலையத்தில்

எத்தனை நாட்கள் காத்திருந்திருப்பேன் என

உனக்குத் தெரிய வாய்ப்பில்லை தானே

இன்னுமொரு யுகம் தாண்டி

அதேபோல் தற்செயலாய்

இம்முறை நாம் சந்தித்துக் கொண்டது

கலங்கரைவிளக்க வணிக வளாகத்தின்

இசைக்கோப்புகளும் பொம்மைகளும்

வாழ்த்து அட்டைகளும் வாசனைகளும்

நிறைந்திருக்கும் கடையொன்றின் புத்தகப் பிரிவில்

மறுபடியும் சிறிய உலகமென்றாய்

இந்தப் புத்தகக்கடை

ஊரிலேயே ப்ரியமான இடமென்றாய்

வெகு நாட்களாய் நீ தேடிக் கொண்டிருந்த புத்தகம்

என் கையில் இருக்க

ஆச்சர்யம் கொண்டாய்

நீ கூறிய சிறிய உலகத்தில்

இந்த ஊரிலேயே

உன் ப்ரியத்துக்குகந்த புத்தகக் கடையில்

இதே புத்தகத்தை

எத்தனை முறை கைகளில் வைத்துக் கொண்டு

நின்றிருந்திருப்பேன் என

உனக்குத் தெரிய வாய்ப்பில்லை தானே

என்னிடமிருந்து அந்தப் புத்தகத்தை

இரவல் வாங்கிக் கொண்டாய்

நான்காவது மாடியின் உணவகம் ஒன்றில்

சுமாரான தேநீர் அருந்தினோம்

பர்கர் கடையின் முன்பு

கான்க்ரீட் கோமாளி அமர்ந்திருந்த இருக்கையில்

அருகருகே அமர்ந்து கொண்டோம்

அவனுடன் புகைப்படம் எடுத்துத்தரச் சொன்னாய்

வார்த்தைகள் தீர்ந்துபோயின

நகரும் ஏணிப்படிகள் வேகமாக இறங்கின

மின்சார ரயில் நிலையத்திற்கு தூரம்

குறைவாக இருந்தது

சரியான நேரத்திற்கு ரயிலும் வந்தது

அடுத்தமுறை சந்திக்கையில்

புத்தகத்தைத் திரும்பத் தருவதாய்

குறுஞ்செய்தி அனுப்பினாய்

நீயும் தரவில்லை

நானும் கேட்கவில்லை

அந்த சுமாரான சுவை கொண்ட தேநீர்

இன்னுமொருமுறை கிடைக்கவேயில்லை

நான் அருகே அமர்கையில்

கோமாளி ஒருபோதும் சிரிக்கவேயில்லை

மின்சார ரயில் கம்பி பற்றி

கையசைத்துச் செல்லும் எல்லாரிடமும்

உனது சாயல் தேடித் தோற்றிருந்த ஒரு நாளில்

காலம் என்னை

உனது சிறிய உலகத்தில் இருந்து

நாடு கடத்த முடிவு செய்திருந்தது

எத்தனை யுகங்கள் தாண்டியும்

இனி நிகழாது நம் சந்திப்பு

கடல்தாண்டிக் காத்திருக்க

ஒருவேளை நீ வரக்கூடும்

என்றொரு இடமுமில்லை

இல்லாத ஒன்றை எப்படி

இழக்கக்கூடும்

உனக்கென முதலும் முடிவுமான 

குறுஞ்செய்தி அனுப்பி

கிளம்பும் விமானத்தைப் பழி சொல்லி

அணைத்து வைத்தேன் அலைபேசியை

இரவும் பகலும்

நிலமும் கடலும்

கடந்த

நீண்ட பயணம் அது

தரை இறங்கியதும்

உயிர் வந்த அலைபேசி

உன் மூன்றாவது குறுஞ்செய்தியை

படிக்கிறாயா என்றது

பதிலை எதிர்பாரா கேளிவியின் பதிலை

எதிர்கொள்ளத் திராணியின்றி

மீண்டும் அணைத்தேன்

பனியும் கனவும்

கண்ணீரும் புன்னகையும்

கடந்த

மூன்று தினங்களுக்குப் பின்

குறுஞ்செய்தியைத் திறந்தேன்

கடித உறை மட்டுமே இருக்க

உனது செய்தி

வரும் வழியில் எங்கோ

அலைக்கற்றைகளில் கரைந்திருந்தது

என்ன அனுப்பியிருந்தாய்

அந்தக் குறுஞ்செய்தியில் ?

மீண்டும் நீ சொல்லப்போவதுமில்லை

நான் கேட்கப் போவதுமில்லை

கடிதங்களில் காதலித்தவர்கள்

பாக்யவான்கள்

***

சிகப்பு நிற மேப்பிள் வயலின்

Tags

, , , ,

 

உனது பாடல்

இன்றும் நன்றாக இருந்தது

உனக்கும் என்னைத் தெரிந்திருக்கலாம்

இரண்டாவது பின்வரிசை

வலதுபுறக் கடைசியில்

உனது பாடலுக்கு

வயலின் வாசிப்பவன் நான்

ஒரேயொரு முறை

என்னைப் பார்த்துப் புன்னகைத்திருக்கிறாய்

எனது சிகப்பு நிற மேப்பிள் வயலின்

அழகாய் இருப்பதாகச் சொன்னாய்

கற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்தாய்

வசந்தத்தின் உச்சத்தில் மாலை

தெருக்கள் மொத்தமும் வானவில் இலைகள்

வயலினுக்காய் வீணாக வேண்டாம்

கைகள் கோர்த்து நடக்கலாம் வா

எனச் சொல்லியிருந்திருக்கலாம்

கடற்கரை ஒட்டிய

மாலுமிகள் உணவகத்தில்

ஒயின் பருகியிருந்திருக்கலாம்

அங்கிருக்கும் நடனமேடையில்

கால்கள் வலிக்க

ஆடித்தீர்த்திருந்திருக்கலாம்

படகுத்துறை பாலத்தில்

மஞ்சள் விளக்கொன்றின் கீழ்

உனக்காக எழுதிய பாடல்களை

படித்துக் காட்டியிருந்திருக்கலாம்

அதை நீ பாடக் கேட்டிருந்திருக்கலாம்

ஒருவேளை நாம் காதலித்துமிருந்திருக்கலாம்

மாறாக நான் ஒரு கனவானைப் போல்

நடந்து கொண்டேன்

கண்டிப்பாக பிறிதொருமுறை

வயலின் சொல்லித் தருகிறேன் என்றேன்

புன்னகைத்தேன்

பின் ஒருபோதும் நாம்

பேசிக்கொள்ளவயில்லை

நீ உன் பாடலும்

நான் என் வயலினுமாய்

இசை மட்டுமே நமக்கான

பேசு மொழியாயிருந்தது

ஆரஞ்சு நிற ஆஸ்பென் இலைகள்

உதிர்ந்து கொண்டேதானிருந்தன

யார் யாரோ கைகோர்த்து நடந்தனர்

யார் யாரோ ஒயின் பருகினர்

யார் யாரோ நடனமாடினர்

யார் யாரோ மஞ்சள் விளக்கின் கீழ் காதலித்தனர்

வயலினை உடைத்திருந்தேன் நான்

இதே போல நேற்றைய இரவினில்

அடுத்த கோடை விடுமுறையில்

மீண்டும் சந்திக்கலாம் எனச் சொல்லி

வராமலேயே போன

எதிர்வீட்டின் உறவுக்காரப் பெண்ணாய் இருந்தாய்

அதற்கும் முந்தைய இரவுகளில்

பல் மருத்துவனைத் திருமணம் செய்துகொண்டு

நகரத்திற்குச் சென்றுவிட்டிருந்த பால்ய சகியாகவும்

திரையரங்கமொன்றில்

பக்கத்து இருக்கையில் அமர்ந்தவளாகவும்

இரவல் புத்தகம் வாங்க வந்தவளாகவும்

வளர்ப்பு பிராணிகள் விற்பனை பிரதிநிதியாகவும்

இரத்தக்காட்டேரி ஒன்றின் மணப்பெண்ணாகவும்

இன்னபிறவாகவும் இருந்தாய்

எல்லா இரவுகளிலும்

ஒருபோதும் என் விருப்பத்தைச் சொல்லியிராத

கனவானாகவே இருந்தேன்

கார்காலம் ஒரு பேயைப் போல

நகரை விழுங்கிக் கொண்டிருக்கிறது

துறைமுகத்தில் கப்பலொன்று கிளம்பும்

ஆயத்த ஒலி கேட்கிறது

புறாக்கள் சுவர் பொந்துகளில்

பதுங்கத் துவங்கியிருக்கின்றன

சீக்கிரமே வந்துவிட்டிருக்கிறது இன்றைய இரவு

இந்த நகரத்தில்

ஒரேயொரு ஜன்னல் மட்டும் கொண்ட அறையில்

நான்

ஒரு காலி மதுக்கோப்பை

இன்னொரு தழும்பும் கறுப்பு மசிக்கோப்பை

கண்ணாடி மீன் தொட்டி

உன்னுடன் இருந்த பொழுது

என்னுடன் இல்லாமல் போன வார்த்தைகள்

ஏன் இப்பொழுது மட்டும்

அறை மொத்தமும்

ஏன் இந்த இரவு

தவறவிட்ட தருணங்களையும்

அது குறித்தான கற்பனைகளையும்

என்றோ நீ தந்த ஒற்றைப் புன்னகையையும் மட்டுமே

பற்றிக்கொண்டு நீளக் காத்திருக்கிறது

***