டிராகன் இளவரசி

Tags

, , , , , ,

 

நீ வருவதாய் சொன்ன

வாசலின் முன்பு தான்

நின்று கொண்டிருக்கிறேன்

வந்திருப்பது ஏன் என்று

உனக்கும் புரியும்

நீ வரச்சொன்ன காரணமும்

எனக்குத் தெரியும்

இன்னும் எத்தனை காலம்

இதே விளையாட்டு

நான் தட்டப்போவதும் இல்லை

நீ தாழ்பாள் இடவும் இல்லை

பின்னே எதற்கிந்தக் கதவு

நீ வரச்சொல்வதும்

நான் வந்து நிற்பதும்

நீ தள்ளிச் செல்வதும்

நான் தயங்கி நிற்பதும்

நீ மறுத்துப் போவதும்

நான் மரத்துப் போவதும்

மீண்டும்

நீ வரச்சொல்வதும்

நான் வந்து நிற்பதும்

கண்ணீரும் கவிதையும்

வார்த்தை மாறாமல்

நடப்பது தானே

ஏற்கனவே படித்த புத்தகம்

எத்தனை முறை புரட்டினாலும்

மாறியா போய்விடும்

கடைசி வரி

நான் வேறு புத்தகத்தைத்

தொடப்போவதுமில்லை

நீ இந்தப் புத்தகத்திற்குள்

வரப்போவதுமில்லை

பின்னே எதற்காக எழுதப்பட்டது

நமது கதை

இந்தக் கோட்டையின் உச்சியில்

உன்னைச் சிறைவைத்த டிராகனும் நீயும்

வேறில்லை என்பது

நான் மட்டுமே அறிந்த ரகசியம்

இத்தனைக்கும் பிறகு

உன் கூந்தல் ஏணி

கீழே வரக் காத்திருக்கக்

காரணம் ஒன்று தான்

நம் முதல் முத்தத்தைப்

பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பு

நமக்குத் தரப்படவேயில்லை

பின் எப்படித் தீரும்

நம் சாபம்

***

பறவைகளின் ஆலாபனை

Tags

, , , ,

நத்தையின் கூடு போல்

சுருண்டு கிடக்கிறது உன் வனம்

மீளமுடியா சாபம் போல்

நீண்டு நெளிந்து உன் பாதைகள்

கவிந்திருக்கும் இருள் பழகும் முன்பே

கண்களைக் குருடாக்குகின்றன

உன் நட்சத்திரப் பூக்கள்

நாணல்கள் விம்மித் தணியும் சத்தம்

நடுங்கச் செய்கிறது

ஓயாமல் உன்னை மோகித்துப் பாடும்

பறவைகளின் ஆலாபனைகள்

உன்மத்தம் பிடிக்கச் செய்கின்றன

எந்தப் பூமரத்தில் ஒளிந்திருக்கிறாய்

என் யட்சி

சர்ப்பங்கள் விழுங்கியிருக்கின்றன

உன் ரகசியங்களின் சாவியை

தூரத்துப் பாறை ஒன்று

சரிந்து கிடக்கிறது உன் தேகம் போல

காட்டுப் பூக்கள் சிதறிக் கிடக்கின்றன

வழியெங்கும் உன் வாசம் போர்த்தி

தேடித் திரிந்து தேகம் துவண்டு

உன்னிடமே யாசிக்கிறேன்

உன் கருணையின் ஊற்றினை

எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய்

என் யட்சி

தேனீக்கள் போலத் துளைக்கிறது

இந்தப் பனி

உனது ஆயிரம் நாவினால்

தீண்டு

பற்றி எரியட்டும்

இந்தக் காடு

***

நினைவில் வாழும் மீன்கள்

Tags

, , ,

fish1

எப்படி இருந்தது உன் குரல்

அந்த மழையும்

அமர்ந்திருந்த மரமும்

அழகாய் இருந்த நீயும் மட்டுமே

நினைவிருக்கிறது

என்ன பேசிக் கொண்டிருந்தோம்

பேசிக் கொண்டிருந்தோம்

அது நினைவிருக்கிறது

ஈர நெற்றியும் நடுங்கிய உதடுகளும்

அடர்ந்த கண்களும் குளிர்ந்த சுவாசமும்

கைவிரல் மோதிரமும் அதன் கீறலொன்றும்

நினைவிருக்கிறது

வாசனை நினைவிருக்கிறது

அல்லது அப்படி நம்பிக் கொண்டிருக்கிறேன்

வாசனை திரவியத்தின் பெயரை

இன்னொருமுறை கேட்டிருக்கலாமோ

உனது கையெழுத்து மட்டுமே

எஞ்சிவிட்டிருக்கிறது

உள்ளங்கைச்சூட்டைத்

தொலைத்துவிட்டிருக்கிறோம் இருவரும்

எனது மூளைத் தரவுகளைத்

திருடிவிட்டிருக்கும் செயலி ஒன்று

இவளைத் தெரியுமா என

உன் சமீபத்திய புகைப்படத்தை

நீட்டிக் கேட்கிறது

புகைப்படத்தில் இருக்கும் நீ

வேறு யாரோ போல் இருக்கிறாய்

உனது கண்கள்

நான் பழக்கிய மீன்குட்டிகள் அல்ல

இந்தப் புன்னகை

உன் உதடுகளுக்கு ஒட்டவேயில்லை

உனது புத்தக விருப்பப் பட்டியலையும்

பிடித்த இசைத் தொகுப்புகளையும் பார்த்து

இவள் வேறு யாரோ என அலறி

செயலியைத் துண்டிக்கிறேன்

இனி ஒருபோதும்

இந்த உன்னைச் சந்திக்க விருப்பமில்லை

என் நினைவில் இருக்கும் நீயே

நீயாக இருந்துவிட்டுப் போ

***

கடைசிச் சந்திப்பின் தேநீர் கோப்பை

Tags

, , ,

Teacup1-1

எனக்கு பிடித்த பாடல்கள்

இனி உன்னுடையதல்ல

எதற்காக இன்னும்

என் சொற்களின் மேலேறி

பவனி வருகிறாய்

எனது இரவுகள் உனக்கானதில்லை

எதை நினைவுபடுத்த

மீண்டுமென் கதவு தட்டுகிறாய்

நம் கடைசிச் சந்திப்பில்

நீ அருந்திய

தேனீர் கோப்பையின் அடியில்

காய்ந்து போய் கிடக்கின்றன

உன் உதடுகள்

எல்லா பேருந்து ஜன்னல்களிலும்

இன்னமும் நீ

நீ என்பது

நீ மட்டுமல்ல

உன் நினைவுகளும் தான்

உன் நினைவுகளென்பது

நினைவுகள் மட்டும் தான்

நீ அல்ல

***

ஜன்னல் பூனைகள்

Tags

, , , , ,

 

 

வசந்தத்தின் நிறங்கள் உன்னிடம்

யாரும் நுழையா காடு என்னிடம்

வா

உதிர்ந்த நிறங்களை அள்ளி

பூக்களில் தூவுவோம்

 

பிரளயத்தின் நா உன்னிடம்

பெருந்தாகம் என்னிடம்

வா

கொஞ்சம் ஒயின் ஊற்று

இதயங்கள் நனைப்போம்

 

யாமத்தின் வரவேற்பறை உன்னிடம்

காலத்தின் முடிவிலி என்னிடம்

வா

இந்த இரவின் நதியினில்

இரு மீன்களாவோம்

 

மின்மினிகள் உன்னிடம்

காய்ந்த சுள்ளிகள் என்னிடம்

வா

உள்ளங்கைகளுக்குள் வைத்து

ஊதித் தீ மூட்டுவோம்

 

அரூபத்தின் தேகம் உன்னிடம்

ரகசியத்தின் சாவி என்னிடம்

வா

மோனத்தின் பனியிடுக்குகளில்

கஸல்கள் தேடுவோம்

 

சின்னஞ் சிறிய பூனைகள் உன்னிடம்

மழை நெளியும் ஜன்னல்கள் என்னிடம்

வா

நீயும் நானும் மட்டுமே இந்தத் தீவினில்

வேடிக்கை பார்த்திருப்போம்

 

***