Tags
நன்றி : யூத் புல்.விகடன்.காம்
எல்லாப் பேருந்துப் பயணங்களும் இனிமையாக இருப்பதில்லை . குறிப்பாக ஞாயிற்றுக் கிழமையின் இரவு பயணங்கள் அரைகுறை தூக்கத்துடனும் , வயிற்றுப் பிரட்டல்களுடனும் , உயர் அதிகாரியின் ஹிட்லர் முகத்தை கற்பனையில் கண்டு அரைநொடிக் கொருமுறை கடிகார முள்பார்த்துமே நகர்கிறது . கண்ணாடியின் வெளியே புகைந்து கொண்டிருக்கும் பனி அவ்வளவு அழகாக இல்லை . எனக்கு இடப்புற இருக்கையில் அமர்ந்து அழகாக சோம்பல் முறித்துக் கொண்டிருக்கும் பெண் ரசிக்கத்தக்கவளாய் இல்லை . எனக்கு முன்னிருக்கையில் அழுதுகொண்டிருக்கும் குழந்தையை அணைத்து சமாதானப் படுத்தும் அம்மாவிடம் இருந்து அதைப் பிடுங்கி அடிக்க வேண்டும் போல் இருக்கிறது . ஓங்கி ஓட்டுனரை ஒரு உதை விடலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறேன் .
ஆயிற்று மணி ஏழு . இன்னும் தாம்பரமே தாண்டவில்லை . இனி இங்கிருந்து வேளச்சேரி , வீடு, குளிக்க வேறு செய்ய வேண்டும் ..
“ஷிட், ஐ ஹேட் மண்டேஸ் …”
” அப்பா , ஏழரை மணிக்கெல்லாம் ஆபீஸ் ல இருக்கணும் .. ஆறுக்காவது தாம்பரத்தில இருக்கணும் .. போய்டும்ல …” ஆயிரம் முறை கேட்டிருப்பேன் .
” நானாடா வண்டிய ஓட்டப் போறேன் . அமர்நாத் சீக்கிரம் போய்டும் னு தான் சொன்னாய்ங்க … அதான் புக் பண்ணேன் . இவ்ளோ லேட் ஆ வரும்னு எனக்கெப்படித் தெரியும் . கல்லுப்பட்டில இந்த வண்டி தான் கெடைக்கும் …”
வழக்கம் போல் அவர் அர்ச்சனையை ஆரம்பித்ததும் வாயை மூடிக்கொண்டேன் .
ஒருமணி நேரம் வண்டி தாமதாய் வந்து , மதுரைக்கு முன்னமே ஏதோ ஒரு பாழாய்ப் போன ஹோட்டலில் அரைமணி போட்டெடுத்த பின் , பெரிதாக ஏப்பம் விட்டுக்கொண்டே வண்டியை எடுத்தார் டிரைவர் .ஏதோ ஒரு உளுத்த சினிமா ஓடிக்கொண்டிருந்தது . சகிக்காமல் கண்களை மூடி ஒரு வழியாகத் தூங்கி விட்டேன் .