Tags
நெய்தல் – இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
சற்று முன்பு பெய்து முடித்திருந்த மழையில் நகரின் பிரதான சாலைகள் முழுதும் நனைந்திருந்தன . சாலைகளை நனைக்கும் முன்பே பாதியைப் பிடித்து வைத்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் , தான் நனைந்தது போக மீதியை, சொட்டுச் சொட்டாக வீட்டிற்குள் பதுக்கி வைத்துக் கொண்டிருந்தன அந்தச் சிவந்த ஓடுகள் . தரை முழுவதும் வழி தேடிப் பரவி , வாயில் காண முடியாமல் , மண்ணைச் சேர முடியாமல் மேலும் அழுது வீடு முழுவதும் ஈரம் பூக்கச் செய்து கொண்டிருந்தது துயரம் கொண்ட மழை . வயோதிகர்கள் என்பதாலேயோ என்னவோ அவர்கள் இருந்த படுக்கை அறைக்குள் மட்டும் நுழையவேயில்லை மழை, மேலிருந்து கீழாகவோ இல்லை கீழிருந்தும் கீழாகவோ . குளிராலேயோ மெத்தைப் பஞ்சின் கனத்தாலேயோ மெலிதாகக் கால்கள் ஆடிக்கொண்டிருந்த கட்டிலில் , கழுத்தின் மேற்பகுதி மட்டும் தெரியும் வண்ணம் கம்பளிக்குள் தன்னைப் புதைத்துக் கொண்டிருந்தாள் அவள் .
முகத்தின் சுருக்கங்கள் வழி மெல்லப் புகுந்து அவள் சருமத்தை மேலும் உலர வைத்துக் கொண்டிருந்தது குளிர் . மூடியிருந்த இமைகளின் கீழ் அங்குமிங்கும் உருண்டு கொண்டிருந்தன அவள் விழிகள் . சருகு போர்த்தியிருந்த உதடுகள் எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்தன . ஒருமுறை இருமினாள் .
ஓவியம் தீட்டிக் கொண்டிருந்தவன் இருமல் சத்தம் கேட்டு , மீதி ஓவியத்தை தூரிகையிலேயே விட்டு அதை வண்ணங்களில் மூழ்கடித்து விட்டு அவள் அருகில் வந்தமர்ந்தான் . நெற்றியைத் தொட்டுப் பார்த்தான் . முன்பை விட அதிகம் சுடுவதாய்ச் சொன்னதவன் உள்ளங்கை . கம்பளிக்குள் தேடி அவள் கைகளை எடுத்து தன்னிரு உள்ளங்கை உள்ளடக்கிய இடைவெளிகள் மொத்தமும் நிரப்பிக் கொண்டான் .
மிகவும் பிரயாசைப் பட்டு இதழ்கள் பிரித்து , ” இப்பொழுது கூட ஓவியமா ” என்றாள் .
எதுவும் பேசாமல் மௌனமாகப் புன்னகைத்தான் .
ஓவியம் காணும் ஆர்வம் கொண்டு படுக்கையிலிருந்து எழ முயன்றவள் , முடியாமல் போகவே பெருமூச்சோடு மீண்டும் படுக்கையில் சரிந்தாள் . அவள் மனம் புரிந்து கொண்டவனாய் ஓடிச் சென்று பாதி வரைந்திருந்த ஓவியத்தை பலகையோடு தூக்க முயன்று முடியாமல் வரைதாளை மட்டும் கிழித்துக் கொண்டு வந்தான் .
வண்ணத்துப் பூச்சிகள் வான் முழுவது நிறங்கள் சிந்திக் கொண்டிருக்க , உடல் தொட்டிருக்கும் பரவசத்தில் ஆடைகள் நெகிழ்ந்து காற்றில் பறந்திருக்க , ஒரு கையில் புல்லாங்குழலுடன் மிதந்து கொண்டிருந்தாள் தேவதை ஒருத்தி . ஒரு சிறகு பாதி மட்டுமே முளைத்திருந்தது . வாசமில்லா பல நீல நிறப் பூக்கள் ஏங்கிய படியிருந்தன அவள் இன்னொரு கை பார்த்து . தேவதையின் முகம் பார்த்து அடையாளம் கண்டு கொண்டவள் இதழ்களைக் கவின் செய்தாள். Continue reading