உன்னைத் தின்னும் அந்தூரியப் பூக்கள் 29 Monday Mar 2021 Posted by rejovasan in Uncategorized ≈ Leave a comment Tagsகாதல் கவிதைகள், தமிழ் கவிதைகள், Love poems, tamil Kavithaigal ஊதா நிற துலிப் மலராடையில் நீ கதவைத் தட்டிய நொடியில் துவங்குகிறது இந்த வருட பனிக்காலத்தின் முதல் நாள் உள்ளே வரலாமா என்கிறாய் உனதாடையில் ஒட்டிக்கொண்டிருக்கும் நட்சத்திரத் துணுக்குகளின் மின்னல்களாலும் உன் கூடுதல் புன்னகையினாலும் கார் முகப்பொளிக்கு திடுக்கிட்டு உறைந்து பார்க்கும் நெடுஞ்சாலை மான் போல் நிற்கிறேன் வருகிறாய் தேனீரெல்லாம் கிடையாதா என்கிறாய் அடுப்பில் தேனீர் கெண்டி மூடி நடுங்கிச் சத்தமிடுகிறது ராணியை எடுத்து என் சிப்பாய் ஒருவனைக் கருணையின்றிக் கொலை செய்து எதிரே இருக்கும் காலி நாற்காலியில் அமர்கிறாய் இந்த நாள் இங்குதான் உன்னுடன் தான் என்கிறாய் மது ஊறிய மிட்டாய் ஒன்றை பாதி கடித்து மீதம் புகட்டுகிறாய் இன்னமும் பிடிக்கும் தானே பின்பே கேட்கிறாய் இப்படியாக சட்டென்று பற்றிக் கொள்கிறது என் சோம்பேறி ஞாயிறு பரிசாகக் கொண்டு வந்த புத்தகத்தின் பக்கங்கள் புரட்டி உனக்கும் பிடித்த வரிகளை விரல்களாய் அடிக்கோடிடுகிறாய் கூடுதல் அடையாளமாய் உன் நகப்பூச்சினை கொஞ்சம் உதிர்க்கிறாய் வாடைக் கூந்தல் வாசத்துடன் அரை நொடிக்கொருமுறை புன்னகை செய்கிறாய் உன் வியர்வை கூடிய வாசனை திரவியத்தின் பெயரை முடிந்தால் கண்டுபிடியென பகடி செய்கிறாய் படாமலேயே நெருங்கி வந்து உன் ஸ்பரிசங்கள் கடத்துகிறாய் தவறி உள்ளே வந்துவிட்ட பட்டாம்பூச்சியாய் வீடு மொத்தமும் சுற்றி வருகிறாய் போகிற போக்கில் சுவற்றில் உன் பெயர் எழுதிச் செல்கிறாய் கலைந்த என் பொம்மைகளை பிரியம் போல் அடுக்கி வேறொரு கதை சொல்கிறாய் நம் பழைய புகைப்படங்களைத் தரையில் பரப்பி நம்மைத் தேடுகிறாய் பின் இந்த புகைப்படங்கள் வேறு யாரோ இருவரின் வாழ்கை போல் இருக்கிறது எனக்குக் கேட்கா வண்ணம் முனுமுனுக்கிறாய் சிரித்துக் கொண்டே எங்கோ இதேபோலொரு பிரபஞ்சத்தில் வாழக்கூடும் என்கிறாய் படுக்கை அறையின் ஒரே புகைப்படச் சட்டத்தில் உன் உதட்டுச்சாயம் பதியமிடப்பட்ட கைக்குட்டையென்றைக் கண்டு பெருமூச்செறிகிறாய் மீண்டும் பூக்குமாயின் தொலைத்துவிடாதிருக்கச் சொல்கிறாய் இத்தனை காலத்திற்கும் இனிவரும் நாட்களுக்கும் சேர்த்து நீ இசைக்கும் சொற்களை அறைச்சுவர்கள் கவனமாய் சேகரிக்கின்றன வார்த்தைகள் தீர்ந்து போய் கண்கள் மூடி அமர்கிறாய் இப்படியே இங்கேயே இருந்துவிட ஆசையென்கிறாய் ஜன்னல் திரைசீலையின் வரிகள் வழி நுழையும் நிலா நிழல் உன் மேல் படர்ந்து மீன் துண்டுகளைப் போல் நறுக்குகிறது இந்த நாள் முடிவிற்கு வந்துவிட்டது படபடப்படைகிறாய் காலையில் நின்ற அதே கதவருகில் கிளம்பட்டுமா என்கிறாய் அதே நெடுஞ்சாலையில் அதேபோலவே நிற்கிறேன் என் கண்களை ஆரத்தழுவி வெகுநேரமாய் பார்த்துக்கொண்டிருக்கும் உன் உதடுகள் துடிக்கின்றன வீடெதிரே இருக்கும் மேப்பிள் மரமொத்தமும் செஞ்சாந்து இலைகள் பூக்கத் துவங்கும் வசந்தத்தின் முதல் நாளில் மீண்டும் சந்திப்போம் அம்மரத்தின் கடைசி இலை காற்றில் சுழன்று கரைந்தது போலே காணாமல் போகிறாய் பனிப்பூனையொன்று கதவு பூட்டும் முன் காலோடு உரசி உள்ளே நுழைகிறது சதுரங்கப் பலகை மேல் இன்னொரு கைக்குட்டை இந்தமுறையும் விட்டுச் சென்றிருக்கிறாய் உன் உதடுகளை வாழ்ந்திருப்பதற்கு சிறிது வெளிச்சம் மட்டுமே போதுமான அந்தூரியச் செடிக்கு இன்றைய நாளின் நினைவுகளை உண்ணத் தருகிறேன் நீ சொல்லியிருக்க வேண்டும் என்கிறது நீ தந்திராத முத்தங்களை மென்று கொண்டு சொல்லியிருக்க வேண்டும் கேட்டிருக்க வேண்டும் கொடுத்திருக்க வேண்டும் பூத்தொட்டியை ஒட்டிய சாய்வு நாற்காலியில் சரிந்தபடி என் கால்களைக் கழற்றி எறிகிறேன் அருகிலெரியத் துவங்கியிருக்கும் கனப்படுப்பில். **** Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window)Like this:Like Loading...
ஆயிரம் முத்தங்கள் அள்ளிச் சூடியவள் 21 Sunday Mar 2021 Posted by rejovasan in Uncategorized ≈ 1 Comment Tagsகாதல் கவிதைகள், தமிழ் கவிதைகள், tamil kavithai, tamil poem என் தசாப்தக் காத்திருப்பினை ஓரு புன்னகையால் கடந்து சென்றவள் நீ வழி தவறிய கானகத்தில் கடைசி தீக்குச்சியின் நடுங்கும் சுடர் நீ யாக்கையின் விரிசல்களினூடே கசிந்துருக்கும் பனிக்காலத்தின் பசி நீ நெடுந்தூரப் பயணத்தின் சட்டென்று கடந்து போகும் மீட்கொணரமுடியா நினைவிலின்றும் அகலா நட்சத்திரப் பூ மரம் நீ என் இன்னுமொரு அசைவறு மாலையின் வெயில் எரித்துப் படரும் காமத்தின் நா நீ எறும்புகளுக்கும் கொஞ்சமாய் மீதமிட்டுச் செல்லும் சிட்டுக் குருவியொன்றின் கருணை நீ வலியின் நினைவுகளை வருடப் புதைத்திருக்கும் அரூபத் தழும்பு நீ பிரபஞ்சத்தின் ஆசைகளெல்லாம் விழுங்கிச் செரித்திருக்கும் செயற்கை நீரூற்று ஒன்றில் அசைந்து அமிழும் தாமிர நாணயம் நீ நாட்குறிப்பேட்டில் தேதியிட்டுப் பதுக்கி வைக்க கனவுத் தூண்டிலில் சிக்கி முறிந்த மின்னல் நீ துருவேறிப்போன ரயில் ஜன்னல் கம்பியின் மழை வாசம் நீ ஒரு குறுவாள் தீண்டலில் உறையச் செய்திடும் மெடூசாவின் கண்கள் நீ அவற்றின் ஆயிரம் முத்தங்கள் நீ **** Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window)Like this:Like Loading...
யௌவனத்தில் நடுங்கும் இரவு 17 Monday Aug 2020 Posted by rejovasan in 2.0, கவிதை ≈ Leave a comment Tagsகாதல் கவிதைகள், Kathal Kavithaigal, Love poems, poems, tamil, tamil Kavithaigal, tamil poem மூன்றாம் ஜாமம் முடிவதற்கு சற்றுமுன்பு என் இரவினில் இறங்குகிறாய் சலனமில்லாத் தெப்பம் போல் என்னைப் புதைத்திருக்கும் இருளுள் உன்னிச்சை போல் நீந்தித் திரிகிறாய் முடிவிலா யுத்தமொன்றின் போர்முரசாய் ஓவென்றரற்றிக் கொண்டிருக்கும் அறையின் ஏகாந்தத்தை உன் ஒற்றைச் சிரிப்பில் ஊதி அணைக்கிறாய் கூரையிலிருந்து பெரு மழையாய் பொழிகின்றன பனியில் உறைந்த உனது செதில்கள் ஆயிரம் தலைகளுடன் சுவர் மொத்தமும் நெளிகின்றது உனது நிழல் ஆலகாலம் போல் காற்றை நிறைக்கிறது உனது சுவாசம் உனது கிசுகிசுப்பு குரலில் பாடலொன்று இந்த இரவிற்கென என்னை ஆயத்தப்படுத்துகிறது எனது முதல் துளிக் கண்ணீரை நா நீட்டிச் சுவைக்கிறாய் மரணத்தின் வேட்கை போல் எவ்வளவு உறிஞ்சியும் தீரவேயில்லை உன் தாகம் உனது யௌவனத்தில் நடுங்கும் என் இரவு உன்னை ஆயாசமடையச் செய்கிறது அருகே படர்கிறாய் உனது ஆலிங்கனத்தில் பல நூறு மஞ்சள் பட்டாம்பூச்சிகளின் படபடப்பு பற்றி எரிகிறது படுக்கை உறைபனி விரல்களால் மார்பினை வருடிக் கண்களை மூடச் செய்கிறாய் காலத்திற்கும் கரைந்திராத துயரத்தையும் நூற்றாண்டுகளின் தனிமையினையும் என் காதோரமாய் சபிக்கிறாய் பின் உனது பற்களை அழுத்தி என் கனவினை உறிஞ்சத் துவங்குகிறாய் *** Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window)Like this:Like Loading...