நன்றி : யூத் புல்.விகடன்.காம்
பரந்து விரிந்த பிரபஞ்சத்திற்கு படியளக்கும் கடவுள் அன்று சோகமாக இருந்தார் . விண்மீன்கள் , நிலாக்கள் , பூமிகள் எதனையுமே பார்க்காமல் வெறுமனே கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருந்தார் . கொஞ்ச நேரம் தன் படைக்கும் தொழிலையும் கூடப் புறக்கணித்திருந்தார் . காரணமே அவர் படைப்பைப் பற்றி எழுந்த சர்ச்சை தானே .
தினமும் காலை எழுந்ததுமே , உலக மக்களின் பிரார்த்தனைகளையும் பிரச்சனைகளையும்
கேட்டு , அவர்களுக்கு ஏதாவது செய்ய முயற்சிப்பது அவர் வழக்கம் . அன்றும் வழக்கம் போலவே அவருக்கிருந்த எட்டு காதுகளிலும் எட்டும் திசைகளில் இருந்தெல்லாம் மக்கள் தங்கள் துயரங்களை சொல்லிக் கொண்டிருந்தனர் . கடவுளும் வழக்கம் போலவே கேட்டுக் கொண்டு கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தார் . சட்டென்று அவர் தூக்கம் மொத்தமும் நிரந்தரமாகத் தொலைந்து போகும் வண்ணம் அந்த இடி சொற்கள் அவர் காதில் விழுந்து தொலைத்தன . அதைக் கேட்டதில் இருந்துதான் கடவுளின் இந்த விசித்திரப் போக்கு …
அவைகள் பிரார்த்தனைகள் கூட அல்ல . தரிசனம் முடிந்ததும் உண்ட புளியோதரை செரிக்காமல் , அஜீரணம் முற்றி இரு பக்த கோடிகள் தூணில் சாய்ந்து கால் நீட்டிக் கொண்டு கடவுளின் படைப்பை விமர்சிக்கத் தொடங்கியிருந்தனர் .
“என்னதான் கடவுள் ஒலகத்தப் படைச்சார் .. மனுஷனைப் படைச்சார்னாலும் மனுஷம் மாதிரி வருமோ .. நீங்களே சொல்லுங்க .. எல்லாத்தையும் படைச்ச கடவுளால கம்ப்யுட்டர படைக்க முடிஞ்சதா .. கம்ப்யுட்டர படச்சது யாரு .. நம்ம தான .. இப்ப சொல்லுங்க கடவுள் பெரியவரா , இல்ல மனுஷனா !”
இந்த கேள்வியையும் இதைத் தொடர்ந்து அவர்கள் விட்ட ஏப்பத்தையும் கடவுளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை . நினைத்து நினைத்து புழுங்கிக் கொண்டிருந்தார் .