“இப்படிக் கூட நடக்குமா ?” அப்பாவின் நாட்குறிப்பேட்டை மூடி வைத்தேன்.
“என்னடா எழுதியிருக்காரு ஒம்ம அய்யா .. இந்த முழி முழிக்கிற ”
இது எங்கள் மறைவிடம். எங்களிடம் இருக்கும் கேள்விக் குறிகள் தான் இந்த ஆலமரத்தில் விழுதுகளாகத் தொங்கிக் கொண்டிருக்கின்றன.எங்கள் ஊர் பெரியவர்களால் மறைத்து வைக்கப் பட்ட விடயங்கள் எங்களுக்கான ருசிகரமான பண்டங்கள். யாருக்கும் தெரியாத, இல்லை தெரியாது என நினைத்துக் கொண்டிருக்கும் எங்களது கும்பல் கொஞ்சம் விவாதத்திற்குரியது. விவாதங்களுக்கே உரியது.
சுருளான் , ஊமையன் , செவலை , மருது இன்றைய கூட்டத்தில் இருப்பவர்கள் . நான் அமுதன். இன்றைய அதிகாலையின் ஒரு பொழுதில் பரண் மேல் கண்டெடுக்கப் பட்ட அப்பாவின் நாட்குறிப்பேடு இன்றைய விவாதப்பொருள் என ஆக்கப் பட்டிருந்தது.
என் அப்பாவிற்கு எழுதத் தெரியும் என்பதே இன்னமும் என்னால் நம்ப முடியவில்லை. அவர் பேசி நான் என்றுமே கேட்டதில்லை. எங்களைப் போல் ஒலி எழுப்ப அவருக்குத் தெரிந்ததில்லை. சதா நேரமும் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருப்பார். வினோதமான சைகைகளுடன் கத்திக் கொண்டே இருப்பார். எரிச்சலுடன் ,எரிச்சல் படுத்திக் கொண்டிருப்பார். ஆனாலும் எப்பொழுதும் எதையோ சொல்ல முயன்று கொண்டிருப்பதாகவே தோன்றும்.
அவர் மட்டுமல்ல. இந்த ஊரில் ,சரியாகச் சொல்லுவதென்றால் வீட்டுக்கு ஒருவராவது திண்ணைக்குச் சொந்தமானவர்களாக இருக்கிறார்கள். பேச முடியாமல் , கேட்க முடியாமல் , பார்வை மங்கிப் போய் , ஒரு புரியாத பொது மொழிக்குச் சொந்தக்காரர்களாய் … அவர்களுக்கு ஏதோ தெரிந்திருக்கிறது. ஆனால் அதைச் சொல்லும் மொழி அவர்களிடம் இல்லை.
ஓரளவேனும் இது புரிய எங்கள் ஊரின் அமைப்பைப் பற்றி நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.