Tags
எனக்கும் தேரைகளுக்குமான உறவு இருபது வருடக் காலச்சக்கரத்தின் பற்களில் குருதி தோய்ந்த மசி எனப் படிந்திருக்கிறது . ஒரு நண்பனை வஞ்சிக்கையில் ஏற்படுகின்ற சுகம் , எதிரி ஒருவனின் இறந்து போன உடலை ரத்தம் சிதறச் சிதற துண்டு துண்டாக வெட்டுகையில் ஏற்படும் உச்சம் ,நீண்ட நாள் கழித்து கணவனுடன் பார்க்கும் முன்னாள் காதலியின் தளர்ந்த உடல் பற்றிய பரிகாசம் எல்லாமும் சேர்ந்ததது .
இந்த புது வீடு வரும் வரை தேரை பற்றிய எண்ணங்களைக் கொஞ்ச நாட்களாகவே மறந்து விட்டிருந்தேன் . ஜூலியையும் கூட. ஓ ! ஜூலி ! என் அழகிய தேரைப் பெண்ணே …
குளியலறையில் என் நிர்வாணம் பார்த்துக் கொண்டு அசையாமல் இருக்கும் இந்தத் தேரைக்கு எனக்குள் புதைந்து போயிருக்கும் கருப்புப் பக்கங்களை புரட்ட வைக்கத் தெரிந்திருக்கிறது .
தேரை மீதான என் ஆர்வம் அல்லது வெறி எப்பொழுதிருந்து என்று தெரியவில்லை . சிறுவயதில் எல்லாரும் பட்டாம்பூச்சி துரத்திக் கொண்டிருக்கையில் நான் மட்டும் மழையூறிப் போன குறும்பாறைகளைப் புரட்டிப் பொன்னிறத் தேரைகளைத் தேடிக் கொண்டிருந்திருக்கிறேன். ஓடில்லாத ஆமை போலக் குறுகிப் படுத்திருக்கும் தேரையின் பின்புறத்தைக் குச்சியால் தட்டித் தட்டி ஏதேனும் ஒரு இலக்கை நிர்ணயித்துக் கொண்டு அதை, அடையச் செய்வதை ஒரு ரகசிய விளையாட்டாகவே வைத்திருந்திருக்கிறேன் .
என் உலகம் ரகசியமானது . யாருக்கும் சொந்தமானது அல்ல. என்னைத் தவிர யாருக்கும் இடமில்லாதது . என் ஆழ்மனத்தின் அபத்தங்களும் அதைச் செயல்படுத்திப் பார்க்கும் இச்சைகளும் மட்டுமே நிரம்பியது. எப்படியாயினும் எனக்கு சாதகமான விதிகள் கொண்ட விளையாட்டுகளைக் கொண்டது.
என் உலகிற்குள் நான் அனுமதித்த ஒரே ஒரு உயிரி ஜூலி தான். என் ரகசிய விளையாட்டின் துணை அவள் .
ஜூலியை யாருக்கும் பிடிக்காது . அவளது தோல் தேரையினுடையதைக் கடன் வாங்கி இருக்கும். ஒரு மாதிரி வறண்டு போன பளிங்காய் அவள் சட்டையில்லாத முதுகிருக்கும் . உனக்கெப்படித் தெரியும் என்று கேட்பவர்கள் மட்டும் கதையைத் தொடரவும். எனக்குத் தெரியும். அவள் தலைமுடிகளின் எண்ணிக்கை கூட என்னால் நிர்ணயிக்கப்பட்டது தான்.
அந்த இரட்டை குதிரை பின்னல்கள் கூட நான் சொன்னது போல ஆடுபவைகள். அவளது கண்களை உங்களுக்குப் பிடிக்காது. நிச்சயம் பிடிக்காது . வட்டச் சில்லுகள் கொண்ட கண்ணாடிகளுக்குள் அடைபட்டிருக்கும் அவள் கண்கள் காறிக் கொண்டே இருக்கும் . கழுத்திலோ நெற்றியிலோ புறங்கைகளிலோ எனக்கு மட்டுமே காரணம் தெரிந்த காயங்கள் இருக்கும் . பினோஃபார்மில் நடந்து வருகையில் ஒரு பிராணி போலவே இருப்பாள். அந்தப் பிராணியை சரியாக இனம் கண்டு கொண்டவன் நான் மட்டுமே . இரு வார்த்தைகளில் சொல்வதானால் ஜூலி என் அடிமை .