பல்லிடுக்கிலும் நாவிற்கடியிலும்
சேர்ந்து கொண்டே இருக்கின்றன
வார்த்தைகள்
கொடும் நஞ்சைப் போல ..
நானொன்றும் சர்ப்பம் அல்ல
இருப்பினும்
யார்முகத்திலாவது காறி உமிழ்ந்து விடுவேனோ
என்கிற பயம் இயற்கையாய் எழுகிறது …
கண்ணாடி பார்த்துப் பேசியோ
கவிதைகள் மட்டும் எழுதியோ
தீர்க்க முடியாது வார்த்தைகளை
ஒருபோதும் …
உமிழ்நீர் சுரப்பிகள் போல
உதிர்க்கவியலா
வார்த்தைகளின் சுரப்பிகள் அவைகள் ..
அலைபேசியும்
இணையதள அரட்டைகளும்
கனவில் பேசும் வார்த்தைகள் …
எங்கேயோ மறந்து போய்
புதைத்துவிட்ட நினைவுகளின் வடுக்களை
அனிச்சையாய் வருடச் செய்கின்றன
கலைந்து போனதும் …
ஜன்னலுக்கு வெளியே மட்டும்
மாறும் பருவ காலங்கள்
அறைக்குள்ளே பெய்வ தென்னவோ
மௌனப் பனி மட்டும் …
வாரத்தின் நாட்களெல்லாம்
ஒரே போல் இருக்கையில்
எதற்காக
ஏழு வேறு பெயர்கள் ..
வெகுநேரம் கழித்து
எதிர்படும் எவனிடமோ
பதில் வணக்கம் சொல்ல
முற்படுகையில்
நடுங்கிக் கொண்டே வார்த்தைகள்
வராமல் போக
செருமும் தொண்டைக்குள்
சுருண்டிருக்கிறது
தனித்திருப்பதன் பயம் ..
தனித்திருப்பதென்பது
சுதந்திரமல்ல
வெறுமனே தனித்திருப்பது
அவ்வளவே …
———————————————————-