Tags
முல்லை – இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
எல்லா பயணங்களுமே ஏதாவதொரு தேடலின் நிமித்தமே அமைந்து விடுகின்றன. பயணத்தின் அழகு முடிவில் இல்லை. தனித்துப் பயணிக்கும் பாதைகளிலும் , எப்பொழுதாவது எதிர்ப்பட்டுப் புன்னகைகள் பரிமாறிப் போகும் வழிப்போக்கர்களிடமும் , குறிப்பாக தேடு பொருளிலும் இருக்கிறது.
நான் வெகு தொலைவில் இருந்து வந்திருப்பவன். இந்த மழை தேசத்திற்குப் புதியவன். ஒரு குழந்தையின் கண் சிமிட்டலுக்கேற்ப மாறி மாறி நடனமிடும் இந்த தேசத்தின் மழைக்குப் புதியவன். என் நகரத்திலும் மழை உண்டு. அதை ரசிப்பவர்கள் கிடையாது. காதலும் கவிதைகளும் உண்டு. கவிஞர்கள் மொத்தமும் பைத்தியக்கார விடுதியில் இருக்கிறார்கள். சிறு பிள்ளையின் புன்னகைக்கு பதில் கிடைக்காது. புதையல் இருக்குமிடமே எங்கள் புகலிடம். எங்கள் ஊரின் கடிகார முள் கூட அமைதியாகப் பணம் எண்ணிக் கொண்டிருக்கும்.
அப்பொழுதுதான் அவளைச் சந்தித்தேன்.
அவள் கனவுகளை மொத்தமும் இந்த மழை தேசத்தின் ஈரங்களே ஆக்கிரமித்திருந்தன. அவள் இரவுகள் இசையால் நிரம்பியிருந்தன. அவள் கைகள் எந்நேரமும் காற்றில் கவிதை வருடிக் கொண்டிருந்தன. நகரம் அவளை உள்ளிழுக்க முயன்று கொண்டிருக்கையில் , அவள் நகரத்திற்குள் அவள் பால்யத்தின் சாயலைத் தேடிக் கொண்டிருந்தாள்.
நன்றாக நினைவிருக்கிறது எங்கள் முதல் சந்திப்பு. அந்த மது விடுதிக்கு நான் பழையவன், பழகிப் போனவன். அவள் புதியவள் , பரிமாற வந்தவள். மதுவோடு சேர்த்துக் கவிதை ஒன்றைப் பரிமாறிப் போனாள். அது காதல் பற்றியது.
காதல் பற்றி என் அபிப்ராயம் சுலபமானது. அது மதுவைப் போன்றது. பணம் கொடுத்ததும் பரிமாறப்படுவது. சில நிமிட போதை. இரவு கலைந்ததும் கூடவே போய்விடுவது.
அவளுக்குக் காதல் எல்லாமுமாக இருந்தது. காதல் மது என்றால் , அதில் எப்பொழுதும் மயங்கிக் கிடக்கத் தயாராக இருந்தாள் அவள். விடிந்தால் கலைந்து விடும் என்றால் விடியலைக் கொன்று விடத் தயங்காமல் இருந்தாள்.
மதுவுக்காகவும், அவளுக்காகவும் தினமும் செல்லத் துவங்கினேன் அங்கே. தினம் புதுக் கவிதைகள், மௌனப் பார்வைகள், கொஞ்சம் திருட்டுப் புன்னகைகள் , எதிர்பாராத முத்தங்கள், சில முறை திட்டமிடப்பட்ட தீண்டல்கள்.
காதலைப் பற்றி விடியும் வரை விவாதித்துக் கொண்டிருந்த அந்த மழை இரவில் தான் அவளைக் கடைசியாய் சந்தித்தது. விடிந்த பொழுது தலையணை அருகில் அவள் முகவரி கிறுக்கிய காகிதத் துண்டு மட்டுமே இருந்தது. கொஞ்ச நாட்களில் கவிதைகளை வெறுக்கத் துவங்கி விட்டேன் ஆனால் மது கசந்தது. இருளின் ஸ்பரிசங்களையும் , அவள் முத்தச் சூட்டையும் தாண்டிய ஏதோ ஒன்று தொலைந்தது போல் இருந்தது.
அவள் முகவரிக் கிறுக்கலைக் கைகளில் பற்றிக் கொண்டு என் பயணத்தைத் தொடங்கியது அன்று தான். நெடுந்தூர கொடிய தனிய பயணத்தின் பின் இதோ வந்தே விட்டேன். Continue reading