Tags
1:
எனக்கும் இந்தக் கதைக்கும் சம்பந்தம் இருக்கிறதா எனத் தெரியாது . ஆனால் இந்தக் கதையின் அவனைப் பற்றி எனக்கு ஓரளவேனும் தெரியும் என நினைத்துக் கொண்டிருக்கிறேன் . குறைந்த பட்சம் அவனது ஒரு இரவின் பாதியாவது .
இரவு . ஆமாம் .. இரவே தான் . என்னை நானே முதலீடு செய்து கொள்ளும் நேரம் அதுதான் . இதைச் சொல்வதற்காக எனக்கு எந்த வருத்தமோ பச்சாதாபமோ கிடையாது . நான் அப்படித்தான். அதில் எனக்கு ஒரு கர்வம் கூட உண்டு. உங்களுக்காக பாரம் சுமந்து ஓவ்வொரு நாள் காலையும் உயித்தெழ என்னால் மட்டுமே முடியும். நிற்க . இந்தக் கதை என்னைப் பற்றி அல்லவே. கொஞ்சம் கவிதைகள் படித்தாலே நான் யார் என்பதைத் தேடச் சொல்லி , தேடித் தேடி இறுதியில் நான் என்பதே எஞ்சி நிற்கிறது. அவனுக்கு வருகிறேன் .
என் பெயர் .. ஓ .. கதையின் ஆரம்பம் என்றால் பெயர் சொல்ல வேண்டுமல்லவா. இந்தப் பெயரில் அப்படி என்ன இருக்கிறதென்று தெரியவில்லை. தெரிந்து கொள்ளாமல் அநேகம் பேர் விரலைக் கூடத் தொடுவதில்லை. நான் சந்தித்திருக்கும் அநேகம் பேரிடம் முதலில் சந்திக்கும் கேள்வி என் பெயர் பற்றியதாகத் தான் இருக்கிறது . அந்த நமைச்சல் உங்களுக்கும் இருப்பின் தெரிந்து கொள்ளுங்கள் அந்த இரவில் என் பெயர் வைஷ்ணவி.
இந்தப் பெயரும் அவன் வைத்தது தான்.