Tags

, ,

ஏவாள் தோட்டத்து ஆப்பிள்

என் நாட்களில் துயர்மிகு நாள் ஒன்றிற்கான குறியீடுகளை வரையறுத்துக் கொண்டிருக்கிறேன் .

வெகுகாலமாய் உன்னிடம் கேட்டுக் கொண்டிருக்கும் கேள்விக்கு நீ பதிலளிக்க ஒப்புக் கொண்டதற்காக , உடன்பாட்டின் படி குட்டிச் சிறகு கொண்ட தேவதை ஒன்று என் செவிகளையும் கண்களையும் கொய்யும் வினாடியில் அழுதபடி விடியக்கூடும் அந்நாள்.

ஆளில்லாத மேம்பாலமொன்றில் தனியாக நடந்து கொண்டோ , மின் தூக்கியின் பக்கங்களெல்லாம் தனித்து வியாபித்திருக்கும் என் பிம்பங்களில் ஒன்றை, அடுத்த தளத்தில் கதவு திறக்கும்முன் அழிக்க முயன்று கொண்டோ இல்லை இவை எதுவுமில்லாமல் சாளரங்கள் மொத்தமும் இமைகள் மூடிக்கிடக்க, உன் புன்னகை ஒன்றின் நினைவு வெளிச்சத்தில் துயர்மிகு வரிகளை வாசித்துக் கொண்டிருக்கலாம் .

என் உதட்டுச் சுவர்பற்றி எகிறி குதிக்க , மழைக்காலக் குறுந்தவளைகள் போல உனக்கான வார்த்தைகள் ; என் விரல்கள் மொத்தமும் வண்ணத்துப்பூச்சியின் கால்களில் ஒட்டிக்கொண்டோடக் காத்திருக்கும் மகரந்தப் பொடிகளாய் உனக்கான கவிதைகள் ; வார்த்தைகள் வருடவும் , வண்ணத்துப்பூச்சிகள் துரத்தவும் நீயின்றி , வெறுமனே அலைபேசியில் உன் முகவரி கொண்ட எண்களை வெறித்துக் கிடக்கலாம்.

உன் புகைப்படங்கள் முழுவதையும் , ஏவாளின் தடை செய்யப்பட்ட ஆப்பிள் தோட்டத்தில் புதைத்து வைத்த இடம் மறந்து போய்விட்டதாய் நம்பிக்கொண்டிருக்கும் வேளையில் , உலகின் வேறொரு மூலையில் இருந்து மின்னஞ்சலில் வந்து மீண்டும் நீ திரை இறங்கியிருக்கலாம் ஆப்பிள் கடித்தபடி .

அடுத்து வரப்போகின்ற நிறுத்தத்தில் , என்னைப் போலவே நீயும் திட்டியபடி கடிகாரம் பார்த்துக் காத்திருப்பதான கற்பனைகளுடன் , நனைந்திருக்கின்ற கம்பிகள் பற்றிப் பயணித்திருக்கலாம் .

அல்லது அந்தத் துயர் மிகுந்த நாள் , இன்றைப் போலவும் இருக்கலாம் ..

——————————————————————————————————————-